களச் செய்திகள்:

ஊராட்சி, பகுதி மட்ட அணிதிரட்டல்கள்

மறுசீரமைப்பு இயக்கத்தின் டிசம்பர், ஜனவரி மாத வேலைத் திட்டமாக ஊராட்சி மட்ட அணிதிரட்டல்கள், தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டுமென மாநிலக் கமிட்டி ஒட்டுமொத்த கட்சி அமைப்புக்கு வழிகாட்டியிருந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக ஊராட்சி அளவிலான அணிதிரட்டல்கள் பற்றியதொரு சித்திரத்தை  தீப்பொறி வாசகர்ளுக்கு வழங்குகிறோம்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஒன்றியங் களுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அடிப்படை மக்கள் கோரிக்கை களின் மீது அணிதிரட்டல் செய்வது திட்டம். நடந்து வரும் வேலைகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் ஜனவரி 1 அன்று முன்னணி ஊழியர்களது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் என.கே, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விரிவாக திட்டமிட்டதுபோல, கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தம்புரான்பட்டி, சங்கம்விடுதி, வீரடிபட்டி, பெரியகோட்டை ஊராட்சிகளிலும் புதுக்கோட்டை ஒன்றியம் சோத்துப்பாறை, ஆலங்குடி வட்டம் புதுக் கோட்டை விடுதி, கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு, துவார்புதுப்பட்டி, கணபதிபுரம், கருப்புடையான்பட்டி, நடுப்பட்டி ஆகிய 11 ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கில் அணிதிரட்ட முடிந்துஇருக்கிறது. ஊராட்சி அளவிலான முன்னணிகள் ஊக்கமுடன் கலந்து கொண்டனர். மேலும் பல ஊராட்சிகளில் அணிதிரட்டல் வேலைத்திட்டம் தொடர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் மங்களநாடு கிராம மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமைக்காகநூற்றுக்கணக்கில் இகக மாலெ தலைமையில் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். தோழர் ஆசைத்தம்பி வழிநடத்தி உள்ளார்.

மோடி அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக்க முயற்சிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த 08-.01.-22 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் ரேவதி, மாநிலக் குழு உறுப்பினர் மணிமேகலை மற்றும் பல தோழர்கள் ஆலங்குடியில் கூடினர். கொரோனாக்கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் தோழர்கள் குடியிருப்பிலுள்ள பெண்களை சந்தித்து துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரம் செய்துவிட்டுத் திரும்பினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கொடுக்கும் போராட்டம் ஜனவரி 3ந் தேதி முதல் 10ந்தேதி வரை நடைபெற்றது. வண்டலூர், மண்ணிவாக்கம், நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சி, அகரம் தென் ஊராட்சி, கீரப்பாக்கம், குமிழி, காரணைப் புதுச்சேரி, ஊரப்பாக்கம், பெருமாட்டு நல்லூர் ஆகிய 9 ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர்கள் துணைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்களிடம் பலநூற்றுக்கணக்கான மனுக்கள் கொடுக்கப் பட்டன. பல ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட ஊராட்சித்திலைவர்கள் உற்சாகத் துடன் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கோரிக்கைகளின் மீது நூற்றுக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். மணப்பாறை நகரம், சமுத்திரம் ஊராட்சி, வேங்கைகுறிச்சி ஊராட்சி அயன் ரெட்டிபட்டி ஆகிய ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் அடிப்படை கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்து மனுக்கொடுத்துள்ளனர். நியாயமான கோரிக்கைகளில் மனுக் கொடுத்தற்காக மாவட்ட அளவிலான முன்னணி ஊழியர்கள் மீதும் இகக(மாலெ) செயல்வீரர்கள் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி, நாள்தோறும் போராட்டம் நடக்கும் மாவட்டமாகும். மறுசீரமைப்பு இயக்க ஆய்விற்கு பிறகு ஊராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றில் 45 வார்டுகளில் அணிதிரட்டல் திட்டமிடப்பட்டது. இதில் 15 வார்டுகளை கொண்ட ரீத்தாபுரம் பேரூராட்சியில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த அனுபவம், உற்சாகத்தின் அடிப்படையில் தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 4 வார்டுகளை மய்யமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மதுரையில் கிழக்கு, மேற்கு மற்றும் வாடிப்பட்டி ஒன்றியங்களில் ஆய்வுகள் நடைபெற்றன.கிராம நிலைமைகள் பற்றிய ஆய்வும், பள்ளி- கல்லூரி நிலைமைகள் பற்றிய மற்றொரு ஆய்வும் நடைபெற்றது. மாணவர்கள் மத்தியிலான ஆய்வு மதுரை மாநகரின் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர் கழக உறுப்பினர் சேர்ப்பு இயக்கமும் நடைபெற்றது. கிராமப்புற ஆய்வு முயற்சிகளின் தொடர்ச்சியாக வாடிப்பட்டியின் கச்சைகட்டி, இராமையன்பட்டி, பூச்சம்பட்டியில் உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட்டன. ஆய்வின்போது முன் வந்த விதவைகளின் கையறு நிலையை  மையப்படுத்தியதாக கோரிக்கைகள் இருந்தன. தேசிய ஊரக வேலைத்திட்டம்நுண்நிதி கடன் ஒழிப்பு உள்ளிட்ட பிற  பிரச்சனைகளும் கோரிக்கைகளில் இடம் பெற்றிருந்தன. பூச்சம்பட்டி பஞ்சாயத்தில் தலித் மக்களை நமக்கு  எதிராகத் திருப்பி  அணி திரட்டலைக்  குறைக்க  உள்ளூர் சக்திகள் முயற்சியெடுத்தன. .முயற்சி பலிக்கவில்லை. கிழக்கு ஒன்றியத்தின் பொய்கைகரைப்பட்டியில் 10.01.22 அன்று மனுக் கொடுக்கும்  போராட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தலைவரின் கணவர் மற்றும் ஆதிக்க சக்திகளின் நெருக்கடியை முறியடிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பஞ்சமர் நிலம், தலித்துகளுக்கான வீட்டுமனை கோரிக்கைகள் தொடர்பான போராட்டங்களின் அதிர்வு மதுரையின் உசிலம்பட்டி கிராமங் களையும் எட்டியது. நக்கலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் முன்னணிகள் கூட்டம் நக்கலம் பட்டியில் நடைபெற்றது. தேனி மாவட்டக் குழு உறுப்பினர் கோபாலும், அந்த மாவட்டத்து தோழர்கள் சிலரும் வந்திருந்தனர். மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மதிவாணன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரி மூத்த தோழர் சண்முகம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 50க்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கடந்த 11.01.22 அன்று உசிலம்பட்டி தாசில் தாரிடம் வீட்டுமனை கோரும் விண்ணப் பங்களை உசிலம்பட்டி அமைப்புக்குழுத் தோழர் கள் முருகேஸ்வரி, வேண்டாமணி மற்றும் பல தோழர்கள் அளித்தனர். தேனி மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் கோபால் உடனிருந்தார்.

சிபிஐ(எம்எல்) கட்சியை நோக்கி போராடும் மக்கள்:   

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  ஒன்றியத்திற்கு உட்பட்ட மானம்பாடிகிராமத்தைச் சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட்-&லெனினிஸ்ட் கட்சியின் பின்னால் அணிதிரண்டு வந்துள்ளனர். நீண்ட காலமாக வீட்டுமனைக்காகப்போராடி வருகிறார்கள். வீட்டுமனைக்காக சிறை சென்றவர்கள். தங்களது விடாமுயற்சியினால் மாலெ கட்சியை நோக்கி வந்த மக்களை தோழர்கள் கண்ணையன், தஞ்சை மாவட்ட முன்னணி தோழர்களுடன் இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி திரளான மக்களோடு வருவாய் துறை அலுவலர்களை அணுகி வீட்டுமனை கோருவோர் பட்டியலைக் கொடுத்தனர். அதனையடுத்து வருவாய்த்துறை நிலம் கையகப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளதுதத்துவாச்சேரி பகுதியில் கோவில் நிலத்தில் விவசாயம் செய்யும் குத்தகை விவாசயி களை வெளியேற்ற இந்து  சமய அறநிலையத் துறை குத்தகை கெடுபிடிகளை ஏவி விட்டிருக் கிறது. இதைஅடுத்து தங்கள் கோரிக்கை களுக்காகப் போராட பல தரப்பட்ட விவசாயிகளும் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் பின்னால் அணிதிரண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத் தலைமைக் குழு ஊராட்சி அணி திரட்டல் இயக்கத்தில் முதல் கட்டமாக 12 ஊராட்சிகளில் திரட்டுவது என முடிவுசெய்தது. ஜனவரி 3 முதல் நடைபெற்ற இந்த அணி திரட்டல் நிகழ்ச்சிகளில் இதுவரை 6 ஊராட்சி களில் அணிதிரட்டல் வேலை முடிந்துள்ளது. திருமுல்லைவாசல், சித்தர்க்காடு, மறையூர், அரசூர், தெற்கிருப்பு, பெரம்பூர் ஆகிய ஊராட்சி களில் நடத்தப்பட்ட அணிதிரட்டல் களில் வீட்டுமனை வீடு, தேசிய ஊரகத்திட்ட வேலை, முதியோர் ஓய்வூதியம், குழுக் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகள் முதன்மையாக இடம் பெற்றன. இந்த வேலைகளில் ஏறத்தாழ 50 உள்ளூர் முன்னணிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் குணசேகரன், ஏங்கல்ஸ், பெண்கள் கழக மாநிலக் குழு உறுப்பினர் மாதவி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் போராடும் மக்கள் இககமாலெ பின்னால் அணிதிரண்டு வருகின்றனர். இதன் நீட்சியாக சேலம் அருகில் நாமக்கல் மாவட்டம் அத்த னூரில் , சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மோகன சுந்தரம் மற்றும் முன்னணி தோழர்களின் முன்முயற்சி காரணமாக போராட்ட முன்னணிகள் கட்சியில் இணைந்துள்ளனர்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனிமாவட்டமான தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், செங்கோட்டை வட்டம் எழுச்சி, அச்சம்புத்தூர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கு மேலானவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். கள்ளக்குரிச்சி மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் திட்டமிடப்பட்டு 4 ஊராட்சிகளில் அணி திரட்டல் நடைபெற்றுள்ளது. மேலும் 2 ஊராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. சேந்த நாடு வேளாண் கடன் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப் பட்ட கிளர்ச்சி முயற்சிகளின் காரணமாக அஇவிம ஏழை, நடுத்தர விவசாயிகள் மத்தியில் அறிமுகமாகி வட்டார அளவில் அவிமசவை அமைப்பாக்கும் வாய்ப்பு உறுதிப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல புதிய ஊராட்சிளில் அமைப்பு விரிவடைவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. 11-.01.-22 அன்று கூடிய கட்சி மாவட்டக் குழு வரும் பிப்ரவரி 21 அன்று, திருநாவலூர் ஒன்றியத்தில் ஒன்றிய அளவில் மக்களைத்திரட்டுவது என்று முடிவு செய்தது. ஆயிரம் பேருக்கு குறையாமல் அணிதிரட்டுவது, மக்கள் கோரிக்கை பேரணி என்ற பெயரில் அணதிரட்டல் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளது. ஏற்றத்தாழ்வான முயற்சிகளுடன் தொடங்கியுள்ள ஊராட்சி அணிதிரட்டல்கள், கட்சியின் உள்ளூர்மட்ட மக்கள் செல்வாக்கின் அவசரத்தேவையை உணரச்செய்துள்ளது. ஒன்றிய, மாவட்ட அணிதிரட்டல் திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டிய கட்சி அமைப்புகள் இப்போதைய வேலைகள், அனுபவங்களிலிருந்து தெளிந்து ஊக்கமான, பெருந்திரள் அணி திரட்டலை சாதிக்கும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெகுமக்கள் அமைப்புகளின் வளர்ச்சியை அதற்கே உரிய வெகுமக்கள் தன்மையுடன் முன்னெடுத்துச்  செல்ல வேண்டி யதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியிருக் கிறது.

திண்டுக்கல்:

சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடிய தஞ்சை, திருவைக்காவூர் தோழர்கள் இரண்டு மாத சிறைவாசத் துக்குப் பிறகு நீதிமன்றம் விதித்த கண்மூடித்தனமான நிபந்தனை பிணை காரணமாக திண்டுக்கல் மாவட்டக் கட்சி பராமரிப்பில் கட்சி அலுவலகத்தில் தங்கி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டுவருகின்றனர். திண்டுக்கல் தோழர்கள் மிகுந்த அக்கறையுடன் தோழர்களின் பெரும் பராமரிப்புத் தேவைகளை சுணக்கமின்றி செய்துவருகின்றனர் தோழர்கள் சுப்புராமன், முருகேசன், ரவிக்குமார், ஜெகதீசன் உள்ளிட்ட தோழர்கள் முன்னணிப் பங்காற்றி வருகின்றனர்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் நிக்கோலஸ், கட்சியின் முன்னாள் ஊழியர் பாஸ்டின் ஆகியோரது பேருதவியும் குறிப்பி டத்தக்கது. மாவட்டத்தில், ஊராட்சி அணி திரட்டல் வேலைகள் திட்டமிட வேண்டியுள்ளது. தோழர்கள் நிக்கோலஸ், அசோகன் தலைமையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கம் தீப்பொறி நிதியாக ரூ.3000 கொடுத்துள்ளதும் பாராட்டத்தக்கது.

புதுச்சேரியில் ஆய்வுக் குழுக்களின் கூட்டம்: 

மறுசீரமைப்பு இயக்கத்தின் ஒரு முக்கிய கூறான ஆய்வு, படிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட 3 ஆய்வுக்குழுக்களின் கூட்டுக் கூட்டம் டிசம்பர் 26, 27 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை புதிய போக்குகள், திராவிட இயக்க அரசியல், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகள் ஆகிய பொருட்களின் மீது ஆய்வு செய்ய ஏற்படுத்தப் பட்ட தனித்தனிக் குழுக்களின் கூட்டுக் கூட்டத் தில் 23 தோழர்கள் கலந்துகொண்டனர். புதுச்சேரி மாநிலக் கமிட்டித் தோழர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பொருளின் மீதும் தோழர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து கருத்துக்களை முன் வைத்தனர். ஆர்வமிக்க கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டு நாள் கூட்டமும் கட்சிக்குள் திட்டமிட்ட வகையில் ஆய்வு, படிப்பு பணிகளை முறைப்படுத்தி செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக இருந்தது.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் மோதிலால், விஜயா, புருஷோத்தமன், மல்லிகா மற்றும் பல முன்னணித் தோழர்கள் மிகச்சிறப்பாக உற்சாகத்துடன் செய்தனர். கூட்ட பராமரிப்பு வேலைகளில் தொழிலாளர் முன்னோடி தோழர்களுடன் விழுப்புரம் மாவட்டம் வானுர் பகுதியிலிருந்து கட்சியில் புதிதாக தங்களை இணைத்துக்கொண்ட இளம்  தோழர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபடுத்திக் கொண்டனர்.              

-தொகுப்புஎன்.கே.என்