தோழர் செ.கணேசலிங்கனுக்கு செவ்வணக்கம்!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஈழத் தமிழ் மார்க்சிய எழுத்தாளர்  செ.கணேசலிங்கன். வர்க்கப்போர், உலகமயமாக்கம், முதலாளித்துவம், பெண்ணுரிமை, அடித்தட்டு மக்கள் வாழ்க்கை, சாதியாதிக்கம், சாதி ஒழிப்பு, சமத்துவம் எல்லாவற்றைப் பற்றியும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எல்லாரிடமும் கொண்டு சென்றவர் செ.கணேசலிங்கன். 1928 மார்ச் 9 அன்று இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்த கணேசலிங்கன் தனது 93வது வயதில் 2021 டிசம்பர் 4 அன்று சென்னையில் காலமானார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1949 ஆம் ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப் பட்டது. அப்போது  தோழர் .ஜீவானந்தம் தோணி மூலம் கோடியக்கரை வழியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். செ.கணேசலிங்கனும் குலவீர சிங்கமும் தோழர் . ஜீவானந்தத்தை அழைத்துக் கொண்டு உரும்பிராய் கிராமத்திற்குச் சென்று அக்கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் தோழர் . ஜீவானந்தம் உரையாற்றினார்அவருடைய முதல் நாவல் நீண்ட பயணம். 71 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுப்புகள், 22 கட்டுரைத் தொகுப்புகள் எழுதி யுள்ளார். ஓர் அரசியலின் கதை, அன்னிய மனிதர்கள், அடைப்புகள், சடங்கு, போர்க் கோலம், மண்ணும் மக்களும், இரண்டாவது சாதி, கோடையும் பனியும் அவர் நாவல்களில் சில. மான்விழிக்கு எழுதிய கடிதம், குந்தவிக்கு எழுதிய கடிதம்நல்லவன், சங்கமம், ஊமைகள், காதல் உறவல்ல பகைமை உறவு, ஒரே இனம், கொடுமைகள் தாமே அழிவதில்லை இவைசெ.கணேசலிங்கன் சிறுகதைகளில் சில. பெண்ணடிமை தீர, கலையும் சமுதாயமும், அழகியலும் அறமும், பல்சுவைக் கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் நவீனத்துவமும் தமிழகமும், பகவத் கீதையும் திருக்குறளும், கனவுகளின் விளக்கம், குறள் கூறும் பாலியல் கோட்பாடு, மாக்கியவல்லியும் வள்ளுவரும், பெண்ணியப் பார்வையில் திருக்குறள், சித்தர் சித்தாந்தமும் சூபிசமும், அர்த்த சாஸ்திரமும் திருக்குறளும்- முதலிய ஆய்வு நூல்களையும்  தமிழுலகிற்குத் தந்துள்ளார். ‘திரும்பிப் பார்க்கிறேன்என்ற சுயசரிதை நூலையும், சில பயணக் குறிப்புகள் -அமெரிக்கா, இங்கிலாந்து என்ற பயண நூலையும் எழுதியுள்ளார். செ.கணேசலிங்கனின் இறப்பு மார்க்சிய உலகிற்கும் தமிழ் உலகிற்கும் பேரிழப் பாகும். தோழர் செ.கணேசலிங்கனுக்கு மாலெ தீப்பொறி செவ்வணக்கம் செலுத்துகிறது.