பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பாசிச தாக்குதல்
புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகமான பாண்டிச்சேரி பல்கலைகழகம் வளாக, இணைப்பு கல்லூரிகள் கொண்ட பல்கலைக்கழகமாகும். புதுச்சேரி. அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளன.
1985ல் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்ட இப்பல்கலையில் சுமார் 74,000 மாணவர்கள் பயில்கின்றனர். 35,000 இளங்கலை மாணவர்களும், 4650 முதுகலைமாணவர்களும், 1600 ஆய்வு மாணவர்களும் பயில்கின்றனர். மாணவர் சேர்க்கைகள் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது. வளாகத்தில் மட்டும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுமார் 5,500 மாணவர்கள் பயில்கின்னர். 65க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்பல்கலையில் கல்விக் கட்டணம் ஒன்றிய அரசின் இதர பல்கலைக் கழகங்கள், மாநிலப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது மிகக் கூடுதலாகவே உள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
2020-&2021 ஆண்டில் கடுமையாக உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள், விடுதி கட்டணங்கள், பொறுத்துக் கொள்ள முடியாத கட்டுப்பாடுகள், இவைகளை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்த்து மாணவர் சங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பல்கலைக்கழகம் நிர்வாக அலுவலகத்தை சுற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவாக இணைப்புக் கல்லூரிகளின் மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன.
போராட்டத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியபடுத்தியது. மாணவர் சங்கங்களை அழைத்து பேச மறுத்தது. தவிர்க்க இயலாமல் போராட்டம் நீடித்தது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் பதட்டமும் ஏற்பட்டன. போராடும் மாணவர் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்&-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் பழிவாங்கப் படமாட்டார்கள் என்ற உறுதி மொழியுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட பல்கலை நிர்வாகம் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய 11 மாணவர்களை 2020-&2021 கல்வி ஆண்டில் இருந்து வரும் 5 ஆண்டுகளுக்கு பல்கலைக்கழத்தில் சேர்ந்து படிக்கவும் வளாகத்தில் நுழையவும் தடைவிதித்து 17-.12.-2021ல் ஆணையிட்டுள்ளது. மேலும் தனித்தனியே ரூ10,000 அபராதமும் விதித்துள்ளது. இந்த கொடுந் தண்டனைகளை ரத்து செய்ய வலியுறுத்தி 27.12.-2021 அன்று பல்கலைக்கழகம் எதிரில் மாணவர் சங்கங்கள், இடதுசாரி அரசியல் அமைப்புக்கள், விசிக, திமுக, காங்கிரஸ் கட்சி பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
30.-12.-2021 அன்று இகக(மா-லெ), இகக(மா), இகக, விசிக, திமுக, காங்கிரஸ், மதிமுக, திக, மாணவர் அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது, ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் பேரவையை துவக்கி வைக்க புதுச்சேரி வரும் பிரதமர் மோடியிடம் மாணவர்களின் தண்டனையை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே துணைவேந்தர், துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரை சந்தித்து மனுக்கள் அளிப்பது எனவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்ற போராட்டத்தை மாணவர் சங்கங்கள் தொடர வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக நின்றனர். ஆலோசனை கூட்டத்தில் இகக(மாலெ) புதுச்சேரி மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)