பெங்களூரு இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் (ஐடிஐ)

தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனமான பெங்களூருவின் டி நிறுவனத்தில் 5 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய 80 தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் 1, 2021 முதல் வேலை மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்கி தங்கள் உரிமைகளை கோரியதே இந்தப் பணிநீக்கத்திற்கான காரணமாகும். 2020 முழு அடைப்புக்குப் பிறகு தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஏஐசிசிடியு மைய சங்கத்துடன் இணைக்கப்பட்ட கர்நாடகா பொதுத் தொழிலாளர் சங்கம் (ஐடிஐ யூனிட்) என்பதை உருவாக்கினார்கள்.

ஐடிஐ லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு துறையின் நிறுவனமாகும். இந்நிறுவனம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை திட்டங்கள் உட்பட பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றோடு கூடவே, தங்கள் உற்பத்தி சாதனங்களை நாட்டின் பாதுகாப்பு கருதி, நாட்டின் எல்லைகளில் போய் நிறுவிவரும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள். கோவிட்&19 பெருந்தொற்றின் முதல் அலையில் இந்தத் தொழிலாளர்கள் 3000 சுவாசக் கருவிகளை தயார் செய்திருக்கிறார்கள். முகக் கவசங்களையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.

பல்லாண்டு காலமாக பணிபுரிந்தாலும் கூட அவர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ற போர்வையின் கீழ் உரிமை மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெருவாரியான பெண் தொழிலாளர்களும் அடங்குவர். மண்டல தொழிலாளர் ஆணையர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆணையர் அவர்கள் ஐடிஐ நிறுவனத்திற்கு தொழிலாளர்களை திரும்ப பணிக்கு எடுத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கி இருந்தார்கள். தொழிலாளர்கள் சங்கமாக அமைப்பாகி தங்களை நிரந்தரப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் மனிதத் தன்மை கொண்ட பணி நிலைமைகளை கோரியதாலும் அதை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம், ஆணையர் அறிவுரையை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. ஆகவே, தொழிலாளர்கள் ஆலை வாயிலில் முகாமிட்டு திரும்ப வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தெள்ளத்தெளிவாக தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுப்பதற்காக நிர்வாகம் வைத்துக் கொண்டுள்ள கடும் சுரண்டல் முறையான காண்ட்ராக்ட் முறையாகும். காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை என்பது கொத்தடிமை முறையே அன்றி வேறல்ல. அம்முறை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.

சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 80 தொழிலாளர்களுக்கு உடனே வேலை வழங்கு!

தொழிலாளர்கள் இல்லாத "இந்தியாவில் தயாரிப்போம்" என்னும் முழக்கம் வெற்று வாய்வீச்சே! ஐடிஐ தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம். அவர்கள் போராட்டம் வெல்லட்டும்!