விவசாயம், விவசாயிகளைக் காப்பாற்ற, திமுக அரசு வேளாண்கூட்டுறவு சங்கங்களில் களையெடுப்பு நடத்த வேண்டும்; விவசாயிகளைக் காக்க, விவசாயத்தைக் காக்க ஊழல் பெருச்சாளிகளை சிறைகளுக்கு அனுப்ப வேண்டும்!
அகில இந்திய விவசாயிகள் மகாசபையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)ம் சேந்தநாடு கூட்டுறவு சங்க ஊழல், முறைகேடு பற்றி விசாரணைகேட்டு தொடர்ந்து போராடியது. 17-.11.-2021 அன்று, மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் முன் நடந்த பேச்சுவார்த்தையின்படி தகுதி உள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடன்வழங்க ஒப்புக்கொண்டது. உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த முயற்சிகளின் காரணமாக திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராமங் களிலுள்ள ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகளின் பிரச்சனையாக இதை வெற்றிகரமாக மாற்றியுள் ளோம். 17-.11-.2021 அன்று விசாரணைக்கு வந்த அதிகாரிகள் மத்தியில் அஇவிம, இகக(மாலெ) தலைவர்கள் எழுப்பிய கேள்விகளும் வாக்கு வாதமும் வந்திருந்த விவசாயிகளிடம் அதிர்ச்சி யையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த செய்தி பரந்த விவசாயிகள் மத்தியில் வேகமாகப் பரவியது. விவசாய கூட்டுறவு சங்கத்தில் ஊழல், முறை கேடுகளை விசாரிக்க கணக்கு விவரங் களையும் ஆவணங்களையும் மேலதிகாரிகள் எடுத்துச் சென்ற விவரமும் விவசாயிகளை ஊக்கமடையச் செய்துள்ளது. அதுமுதல் நாள் தோறும் விவசாயிகள் சேந்தநாட்டிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் வருவதும் கடன் கேட்டு மனுக்கள் தருவதும் அதிகரித்தது.
நூற்றுக்கணக்கான மனுக்கள் குவிய ஆரம் பித்தன. விவசாயிகளின் எதிர்பார்ப்பும் அதிகரித் தது. அவிமச, மாலெ தலைவர்களின் தலையீட் டைக் கோரி விவசாயிகள் தலைவர்களை அணுகுவதும் அதிகரித்தது. மட்டுமின்றி வேளாண் கடன் பெறும் முயற்சியில் விவசாயிகள் அடைந்த துயரங்களையும் அனுபவங்களையும் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மற்றொருபுறம் தாங்கள் சொன்னதே கட்டளை என்று செயல்பட்டு வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு பெருத்த தலைவலியும் உருவானது. விவசாயிகளின் கோரிக்கைகளையும் கேள்விகளையும் எளிதில் அவர்களால் தட்டிக் கழித்துவிட முடியவில்லை. ஊழல் இருட்டில் பெருத்த பெருச்சாளிகள் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஒரு பக்கம் இறங்கினர்.
விவசாயிகளின் முயற்சிகள் விவசாயக் கடன் சங்க நிர்வாகிகளின் தப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் அதிகாரிகளின் விசாரணை ஆகிய இந்த மும்முனைகள் மூலம் கிடைத்த செய்தி களை உண்மை நிலவரங்களை தீப்பொறி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அதே சமயம் இந்தப் பிரச்சனையில் சங்கம் மேற் கொண்ட தொடர் முயற்சிகளின் அனுபவங் களையும் வாசகர்களின் கவனத்து கொண்டு வருகிறோம்.
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் விவசாயக் கடன் சங்கங்களின் எண்ணிக்கை 20. அவற்றுள் சேந்தநாடு கடன் சங்கமும் ஒன்று. பல ஊராட்சிகளைக் கொண்ட 17 கிராமங்களிலுள்ள சுமார் 16 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த சங்கம் கடன் வழங்கிட வேண்டும். ஒரு சராசரி கணக்குப்படி இந்த சங்கம் ஆண்டுக்கு ரூ. 32 கோடி அளவுக்கு கடன் வழங்க வேண் டும். விசாரணை அதிகாரிகள் மூலம் கிடைத்த தகவல்படி இந்த சங்கத்தில் 3000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். (அப்போது கிடைத்த தகவல்படி சென்ற முறை இந்த சங்கத்தில் 700 உறுப்பினர் என்று குறிப்பிட்டிருந்தோம்). இந்த 3 ஆயிரம் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏக்கருக்கு ரூ.500 வீதம் பங்கு பணம் கட்ட வேண்டும். இதன்படி ரூ15 லட்சம் விவசாயி களிடமிருந்து வங்கிக்கு கிடைத்துள்ளது. (ஒவ்வொரு விவசாயியும் மொத்தம் எத்தனை ஏக்கர் காட்டுகிறாரோ அத்தனை 500 கூடுதலாக சேரும்). வங்கியில் கணக்கு துவக்க ஒவ்வொரு விவசாயியும் ரூ 1000 கட்ட வேண்டும். அந்த வகையில் ரூ. 50 லட்சம் வங்கியில் சேர்ந்திருக் கிறது.
முந்திரிக்காடு நெல்வயலான கதை!
நெல்விளையும் நஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ 27 ஆயிரம் கடன் அனுமதிக்கப் படுகிறது. இந்தப் பகுதியில் சரிசமமான நஞ்சையும் புஞ்சையும் உள்ளன. கணிசமான முந்திரிக்காடுகளும் உள்ளன. முந்திரிக்காட்டுக்கு கடன் அளவு ஏக்கருக்கு ரூ14 ஆயிரம்தான். எனவே முந்திரிக்காடுகளை நஞ்சையாக்கி விட்டனர். முந்திரிக்காடுகளுக்கு நஞ்சை நிலம் என சிட்டா, அடங்கல் பெற்று கடன் பெற்றுள்ளனர். இவ்வாறு 1000 ஏக்கர் வரை உள்ள முந்திரிக் காடுகளுக்கு கடன் பெற்றுள்ளனர். ஏக்கருக்கு 27 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ 2கோடியே 70 லட்சம்வரை கடன் பெற்றுள்ளனர்! கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 20 சுருட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூப்பர் மோசடிகளை யார் முடியும்? கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி வேளாண் கடன்சங்கம் வரை போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் இத்தனை கோடிகளில் கடன் பெற வேண்டுமானால் பெரிய அரசியல் செல்வாக்கு கொண்டவர்களால்தான் முடியும். இந்தப் பகுதியில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் செல்வாக்கு கொண்ட ‘அபூர்வசகோதரர்கள்’தான் இவ்வாறு கடன் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் இவ்வளவுபெரிய ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தத் தேர்தலில், அதிமுக தோற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவின் இந்த மெகா மோசடிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளாரா? ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை?
வெங்கடாசலபதி வெறும் சலபதியான கதை!
எழுபது வயதை நெருங்கும் கூ.கள்ளக் குரிச்சியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலபதி. இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவார்கள். இவர் 2011ல் 18 பவுன் அடமானம் வைத்திருக்கிறார். பவுனுக்கு அப்போதைய மதிப்புப்படி 18 பவுனுக்கும் ரூ 1.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு இதுவரை ரூ 2 லடசம் கட்டியுள்ளார். கடனைத் திருப்பச் சென்றவருக்கு பேரதிர்ச்சி! நகை மூழ்கிவிட்டது என்கிறார்கள் கடன்சங்க நிர்வாகிகள். முறையாக வட்டிகட்டி வரும் போது நகை எப்படி மூழ்கும்? நகை ஏலம் விடவேண்டுமானால் வெங்கடாச லபதிக்கு ஏல நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அப்படி எந்த நோட்டீசும் வர வில்லை. பின் எப்படி நகை மூழ்கும்? ஏலம் போகும்? சேந்தநாடு வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் விவசாயி வெங்கடாசலபதி கட்டிய 2 லட்சம் வட்டியையும் விழுங்கிவிட்டார்கள்! 18 பவுன் நகையையும் விழுங்கி விட்டார்கள்! அதுமட்டுமல்ல, பெண்ணாடம் அருணா சக்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய வெங்கடாசலபதிக்கு ஆலை ரூ 1லட்சம் அனுப்பியிருக்கிறது. அந்தப் பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. கேட்டால் கட்டவேண்டிய கடனுக்கு எடுத்துக் கொண் டோம் என்கிறார்கள் என்று மனம் உடைந்து பேசுகிறார் விவசாயி வெங்கடாசலபதி.
அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் பயிர்க் கடன் கேட்டு வங்கிக்கு நடையாய் நடக்கும் அவருக்கு ஏதேதோ காரணம் கூறி லோன் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். சிலகாலம் கழித்து வெங்கடாசலபதிக்கு மற்றொரு அதிர்ச்சி. அவரது பெயரில் கடனை அனுமதித்து அவர்களே எடுத்துக்கொண்டு விட்டார்கள். வாங்காத கடனுக்கு வட்டியும் கட்டி அழுகிறார். விவசாயி பணத்தை திருடியவர்கள் திருப்பதி வெங்கடாசல பதியாக ஜொலிக்கிறார்கள்! விவசாயி வெங்க டாசலபதி, வெறும் சலபதியாகி ஓட்டாண்டியாகி நிற்கிறார். இந்த வேளாண் கடன் சங்கத்தில் மொத்தம் 90 விவசாயிகள் நகைக் கடன் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இப்படித்தான ஓட்டாண்டிகளாக ஆகியிருப்பார் களோ? இதில் ஒன்றும் வியப்பில்லை. கூட்டுறவுத்துறை அமைச்சர் அய். பெரியசாமி சமீபத்தில் ஒரு உண்மையைச் சொன்னார். ஒருவர் ஒரே ஆதார் அட்டை ஒரே தொலைபேசி எண்ணை வைத்து 272 முறை நகைக்கடன் பெற்றிருக்கும் அதிசயத்தைச் சொன்னார்!
அமைச்சர் வேறு ஒரு தகவலையும் சொன்னார். மொத்தம் 48,84,726 நகைக்கடன்கள் உள்ளன. அவற்றுள் 35,37,693 (72%) தகுதியற்ற நகைக் கடன் என்று சொல்லியிருக்கிறார்! அப்படியென்றால் ஊழல், முறைகேடு 72% அளவுக்கு இருக்கிறது என்று பொருள். ஆனால் இவ்வளவு படுமோசமான ஊழல், முறைகேடு கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தி ருந்தும் திமுக ஆட்சி ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாகவும் இருக்கிறது. அச்சமாகவும் இருக்கிறது. கடன்கள் கட்சி மாறிவிட்டனவோ என்று கேட்கத் தோன்றுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் கதை
சேந்தநாடு வேளாண் கூட்டுறவு வங்கியின் மோசடிக் கதை தொடர்கிறது. இந்த வங்கியில் 133 மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரவு செலவு செய்கின்றன. தலா 15 முதல் 20 பேர் வரை கொண்ட ஒவ்வொரு குழுவும் மாதம் ரூ 300 வீதம் பணம் சேர்க்கிறது. இவ்வாறு 133 குழுவும் 10 மாதங்களுக்கு ரூ 79,லட்சத்து 80 ஆயிரம் செலுத்தியிருக்க வேண்டும். (குழுவிலுள்ள உறுப்பினர் எண்ணிக்கை, உறுப்பினர்கள் செலுத்தும் பங்கு பணம் சற்றே மாறுபடலாம்). இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் 3 லட்சம் வரை கடன் பெற முடியும். ஆனால் கடந்த 14 வருடங்களாக தங்களுக்கு ஒருமுறை கூட கடன் கிடைக்கவில்லை என்று சேந்தநாட்டை சேர்ந்த சில குழுக்களின் தலைவிகள் கூறுகிறார்கள. அதுமட்டுமல்ல, சில குழுக்கள் கட்டும் வட்டிக்கு முறையாக வரவு வைக்கப்படு வதில்லை. வாங்கும் பணத்துக்கு போலி ரசீது வழங்கப்படுகின்றன. இப்படி சங்கத்தில் செலுத்தும் பணத்தை பலவகையிலும் சுருட்டிக் கொள்வது ஒரு வகை மோசடி. சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க வேண்டிய கடனை குழுவிடம் வழங்காமல் போலிச் சான்றுகளை வைத்து தாங்களே எடுத்துக்கொள்வது மற்றொரு வகை மோசடி. இந்த சங்கத்திலுள்ள 133 குழுக்களும் சுமார் 4 கோடி கடன் பெறும் தகுதி பெற்றவை. இந்த தொகையும் அதற்குண்டான குழுக்களுக்கு வழங்காமல் வேளாண் கடன்சங்க நிர்வாகிகளால் மோசடி செய்யப்பட்டு பங்குபோட்டுக் கொள்வதுதான் வாடிக்கை என்று விவசாயிகளும் விவசாயி வீட்டுப்பெண்களும் கூறுவதை கேட்கமுடிகிறது.
10 ஆண்டுகளாக இந்த வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த ஒருவரே தலைவர். அவரும் அவரது பினாமிகளும் ஆட்சியிலிருந்த அவரது கட்சியும் வைத்ததே சட்டம். வேறு எந்த சட்டமும் இங்கே வேலை செய்யாது. விவசாயிகள் கேள்வி கேட்டால் மிரட்டப்படுவார்கள், தாக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள்.
விவசாயிகள் கூறுவது உண்மையோ?
அவிமச, மாலெ கட்சி முயற்சியால் ஊழல், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பேசுபொருளாகி விட்டது. கட்சிகளும் கூட களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மாலெ கட்சியை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி 10-.12-.2021 அன்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு முயற்சி எடுத்தது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்குபெற்றனர். அவிமச, மாலெ கட்சி, விடுதலை சிறுத்தை கட்சிகள் திரளாக பங்குபெற்றனர். விழுப்புரத்திலுள்ள அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போராட்டக் காரர்கள் மறுத்துவிட்டார்கள். அதிகாரிகள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முறைகேடுகள் பற்றி விசாரணை நடந்து வருகிறது, உரிய நடவடிக்கை இருக்கும் என்று மீண்டும் கூறினர்.
போராட்டத்தின் விளைவாக, புதிதாக 220 தகுதியுள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்கப் பட்டிருப்பது ஒரு முக்கியமான மாற்றம். இந்த புதிய பட்டியலோடு சேர்த்து இதுவரை மொத்தம் 600 பேர்களுக்கு ரூ 3.5 கோடி கடன் வழங்கப்பட்டி ருக்கிறது. (இது மொத்த உறுப்பினர்களுள் 5ல் 1பங்கு மட்டுமே.). பொருந்தாத காரணங்களைக்கூறி கடன்மறுக்கப்பட்ட அவிமச மாவட்டத் தலைவர் வீரனுக்கும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கடன் வழங்குவதோடு இப்போதைய பல கோடி அளவுக்கு நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குற்ற வாளிகள் தண்டிக்கப் பட்டால்மட்டுமே விவசாயிகளுக்கு உண்மை யான பயன்கிடைக்கும். விவசாயத்திலும் ஓரளவு முன்னேற்றம் வரும்.
கள்ளக்குரிச்சி மாவட்டத்தில் இதுபோன்ற வங்கிகள் 234 உள்ளன. இவற்றுள் 9 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். 1709 கோடி பங்குத் தொகையும் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி வரை புழங்கும் இந்த வங்கிகளில் எந்தளவு முறை கேடுகளும் மோசடி களும் இருக்குமென்பதை சேந்தசாடு வேளாண் கூட்டுறவு சங்க ஊழல், முறைகேடுகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. இவ்வளவு பெரிய முறைகேடுகளை மாவட்ட அதிகாரிகள் மட்டுமே விசாரித்து நடவடிக்கை எடுக்கமுடியமென்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். பெரும்பாலும் அதிகாரிகளுக்கு எதிராக செயல் படுவதில்லை. எனவே உயர்மட்ட விசாரணை வேண்டும், கடும் களையெடுப்பு நடவடிக்கை வேண்டுமென்று தொடக்கம் முதலே அவிமச, மாலெ கட்சி எழுப்பி வருகின்றன. மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், முதலமைச்சர் உள்ளிட்ட இடங்களுக்கு புகார் அனுப்பியிருக் கிறோம். கள்ளக்குரிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீரப்பு கூட்டத்திலும் இந்த பிரச்சனையை எழுப்பியிருக்கிறோம். ஆயினும் விசாரணை தேவையான அளவுக்கு சூடுபிடிக்க வில்லை. போய்ச்சேரவேண்டிய இடத்துக்கு போவதாகத் தெரியவில்லை.
போராட்டம் தொடர்கிறது!
எனவேதான் விவசாயிகள்,பொதுமக்கள் மத்தியில் பிரச்சனையை எடுத்துச்செல்வது, அவர்களை திரட்டுவது என்ற அடிப்படையில் பிரச்சார இயக்கம் ஒன்றை அவிமச, ஜனவரி 9 தொடங்கி நடத்திவருகிறது. கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை துண்டறிக்கையோடு 10க்கும் மேற்பட்ட தோழர்கள் சந்தித்து வருகின்றனர். பிரச்சாரம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்றடைந்துள்ளது. விவசாயிகள் உற்சாகத்துடன் பலவகையிலும் ஆதரவு தந்து வருகின்றனர். தொர்ந்து இந்தப் பிரச்சனையில் அவிமசவும் மா லெ கட்சியும் விடாப்பிடியாக இருந்து வருவதை விவசாயிகள் பாராட்டிப்பேசினர். போராட்டம் தொடர்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,400க்கும் மேற்பட்ட வேளாண் வங்கிகளில் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி புழங்குகிறது. இந்த வங்கிகளில் விண்ணை முட்டும் ஊழல், முறைகேடுகளை அவிமச, மாலெ கட்சி, பலதரப்பட்ட விவசாய சங்கங்கள், அமைச்சர் ஆகியோர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இப்போது அரசுதரப்பிலிருந்து உறுதியான நடவடிக்கை தேவை. கூட்டுறவு அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் 31ல் முடிவடைவதால் அனைத்தும் அனைத்தும் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, மூடி மறைக்கப்பட்டு, சற்று காலத்தில் அதிமுக பாணியில் கூட்டுறவு அமைப்புகளை தேர்தல் என்ற பெயரில் கைப்பற்றிக்கொள்ளும் முயற்சியாக முடிந்து விடக்கூடாது. வேளாண் வங்கிகளில் ஆணிவேர் தொடங்கி சல்லிவேர் வரை பரவியுள்ள முறைகேடுகளை முழுமுற்றாக களைந்திட வேண்டும். ஒரு சிறப்புநீதிமன்ற ஆணையம் போர்க்கால அடிப்படையில் முழுமுற்றாக விசாரித்து குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களை சிறைக்கு அனுப்பி கூட்டுறவுத் துறை, வேளாண் வங்கிகள் உண்மையான ஜனநாயக வழியில் இயங்கு வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கச்செய்ய வேண்டும். கூட்டுறவு அமைப்பை, வேளாண் வங்கி அமைப்பை காப்பாற்றுவது, விவசாயிகளை காக்கும், விவசாயத்தைக் காக்கும் நடவடிக்கையாகும். இது விவசாயிகளுக்கு நீதிவழங்குகிற மிகப்பெரிய நடவடிக்கையாகும். சமூகநீதி அரசுக்கு இது உண்மையிலேயே ஒரு சவால்தான்! - பாலசுந்தரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)