21 வயதுக்கு குறைவான பெண்களின் திருமணத்தை தடை செய்வதென்பது இந்திய ஏழைகளை சிறையில்தான் தள்ளும்
கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, வறுமை குறையும் போது, பெண்களின் திருமண வயது அதிகரிக்கிறது, ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
21 வயதுக்கு குறைவான பெண்களின் திருமணத்தை தடை செய்வதென்பது இந்திய ஏழைகளை சிறையில்தான் தள்ளும்; ஏனெனில் ஏழைகளின் மகள்கள் 21 வயதுக்குள்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சரவை பெண்கள் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 லிருந்து 21 ஆக மாற்றுவதற்கான திருத்தத்தை முன்வைத் திருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் பற்றி, சமூகத்தில் அறிவுபூர்வமான விவாதத்தையும் விமர்சனத்தையும் முன்னெடுக்கும் நோக்கில்...... அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் (AIPWA) வெளியீடு.
திருமணம் செய்வதற்கு "சரியான" வயது 18 தான் என நாங்கள் நினைக்கவில்லை. கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, திருமணத்திற்கு முன்பாகவே ஒருவர் தனது சொந்தக் காலில் நிற்பது ஆகியவையே சிறந்தது. ஆனால், ஒரு வேளை 18 லிருந்து 21 வயதுக்குள் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வாராயின், அதற்காக, அவளது பெற்றோரும் கணவரும் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படவேண்டுமென்றும் நாங்கள் நினைக்கவில்லை.
திருமணத்திற்கான தற்போதைய குறைந்த பட்ச வயது 18தான், அதற்கு குறைவான வயதுடைய ஒரு பெண்ணின் திருமணம் "குழந்தைத் திருமணம்" எனப்படும். அதற்காக, அந்தப் பெண்ணின் பெற்றோரும் கணவரும் 2 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்படலாம்.
பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் பரிந்துரைக்க வில்லை என்பதை வெளிப்படையாகவேச் சொல்கிறோம். பெரும்பாலான இளம்பெண்கள் தங்களுடைய பெற்றோர்கள் தங்களை 18 வயதிலேயே திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்றே விரும்புகிறார் கள். மேலும், அதற்கு மாறாக, கல்வி கற்கவும் வேலைக்கு செல்லவும் திருமணத்திற்கு முன்பாக தனது சொந்தக் காலில் நிற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
உண்மையான கேள்வி என்னவெனில்: ஒருவேளை ஒரு பெண் 18லிருந்து 21 வயதுக்குள் திருமணம் செய்து கொள்வாரென்றால், அதற்காக, அவளது பெற்றோரும் கணவரும் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படவேண்டுமா? குழந்தைத் திருமணத் தடுப்பு (திருத்த) மசோதா 2021, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதுதான் நடக்கும்.
வாழ்க்கையில் சற்று காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்வது, பெண்களுக்கு நல்லது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்தியச் சமூகத்தில், 21க்கு குறைவான வயதில் திருமணம் செய்வதைக் குற்றச் செயலாக்குவதன் மூலம், பெண்களின் சராசரி திருமண வயதைத் தள்ளிப்போடுவதற்கு இது உதவுமா? அல்லது அவர்களுக்கு, கல்வி கற்கவும் வேலைவாய்ப்பு பெறவுமான வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் இதனைச் சாதிக்க இயலுமா?
கல்வி பெறுவது அதிகரிக்கும் போதும் வறுமையின் அளவு குறையும் போதும் பெண்களின் திருமண வயதும் அதிகரிக்கிறது எனத் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
தேசிய குடும்பநல கணக்கெடுப்புத் தரவுகளின் படி, குழந்தைத் திருமண விகிதங்கள் (18 வயதுக்கு குறைவான திருமணங்கள்) பெண்களிடையே 2005&06 இல் 47 சதவீதத்தில் இருந்து 2015&-16 இல் 26.8 சதவீதமாகக் குறைந்து விட்டது. மேலும், பெண்களின் சராசரித் திருமண வயது 2015&-16 இல் 17 லிருந்து 2015-&16 இல் 19 ஆக அதிகரித்திருக்கிறது என்பதைக் கவனித்த பின்பு, "குறைந்த வயதுத் திருமணங்கள் காலம் செல்லச் செல்ல குறைகின்றன" எனச் சொல்கிறது. இந்தக் குழந்தைத் திருமணங்களும் குறைந்த வயதுத் திருமணங்களும் நிகழும் விகிதம் குறைந்திருப்பது எந்தவொரு புதிய சட்டத்தினாலு மல்ல. கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்த காரணத்தினால்தான் (2009 இல் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது).
u12 அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் பள்ளி சென்ற பெண்கள் மற்ற பெண்களைவிடத் தாமதமான வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
u படிக்கும் ஆண்டுகள் மற்றும் குடும்ப வருமானம் அதிகரிக்கும் போது திருமணத்திற்கான வயதும் அதிகரிக்கிறது.
u மிக ஏழை வீட்டுப் பெண்களை விட, பணக்கார வீட்டுப் பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கின்றனர்.
u கிராமப்புறப் பெண்களைவிட, நகர்ப்புறப் பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
u இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 21 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும், இவர்களுள் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள், சமூகரீதியாக இழப்புக்கு ஆளான குடும்பத்தவர்.
ஆக, வறுமையும் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதுமே குறைந்த வயதுத் திருமணங்களுக்கான முதலாவது காரணமாக இருக்கும் போது, அரசாங்கம் இந்தப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு மாறாக ஏன் ஏழைப் பெண்களின் பெற்றோர்களை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறது?
25லிருந்து 49 வயது வரையிலான பள்ளி செல்லமுடியாத பெண்கள், 17 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள். அதே வேளை யில், 12 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் படித்தவர்கள், 23 வயதில் திருமணம் செய்திருக்கிறார்கள். படித்த ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, திருமணம் செய்துகொள்ளும் வயதும் அதிகரித்து வருகிறது.
25லிருந்து 49 வயது வரை உள்ள மிகவும் ஏழை வீட்டுப் பெண்கள், 17 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள். அதே வேளை யில், வசதிபடைத்த வீட்டுப் பெண்கள், 23 வயதில் திருமணம் செய்திருக்கிறார்கள். வீட்டின் செல்வம் அதிகரிக்க அதிகரிக்க, திருமணம் செய்துகொள்ளும் வயதும் அதிகரிக்கிறது.
21 வயதுக்கு குறைவான திருமணங்களைத் தடை செய்வதனால் அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணமும் தவறானதாகும். இதற்கு எதிராக நடப்பதே உண்மை: படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக் கும் போது திருமணம் செய்துகொள்ளும் வயதும் அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு, தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் போது, உதாரணமாக, அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரைப்படிப்பதற்கு அவர்களையும் உள்ளடக்கும் விதத்தில், கல்வி உரிமைச் சட்டம் விரிவுபடுத்தப்படும் போது; மேலும், மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கான கல்வி இலவசமாக வழங்கப்படும்போது, திருமணம் செய்துகொள்ளும் வயதும் தானாகவே அதிகரிக்கும்.
இந்தியப் பெண்களில் 56% அதிகமானோர் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள் கிறார்கள். மேலும் இந்த பெண்கள் பெரும்பாலும் மிக ஏழைக் குடும்பத்தினரும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவரும், வறியவர்களாகவுமே உள்ளனர். நமது மக்கள் தொகையில் மிகவும் ஏழைகளாக உள்ள 20 சதவீதத்தினரில், 21 வயதுக்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்பவர்களின் சதவீதம் 75 ஆக அதிகரித் துள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கான வயதை 21 ஆக உயர்த்துவதென்பது, ஏழை மற்றும் வறிய குடும்பங்களின் பெற்றோர்களும் கணவன்மார்களும் சிறைக்கு அனுப்படுவார்கள் என்பதே பொருளாகும்.
முடக்கத்தின் காரணமாகவும், பல லட்சக்கணக்கான கோவிட் 19 மரணத்தினாலும், வறுமை, கைவிடப்பட்ட நிலமை, வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகியவை தீவிரமாக அதிகரித்தது. மேலும், ஏழை வீட்டுக் குழந்தை களின் படிப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, மீண்டும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மிகவும் ஏழைக் குடும்பத்தினர் தங்களுடைய மகள் களுக்கு, திருமணம் செய்து வைப்பது மட்டுமே மிச்சமிருக்கிற ஒரே வாய்ப்பு என நினைத்தனர். மேலும், அப்படி பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதனால், அவருக்கு உணவு அளிக்க வேண்டிய நெருக்கடியிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் எனவும் எண்ணினர்.
ஆக, வறுமையும், படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதுமே இளவயது திருமணத்திற்கான முதலாவது காரணமாக இருக்கும் போது, அரசாங்கம் ஏன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை? மாறாக, ஏழைப் பெண்களின் பெற்றோர்களை சிறைக்கு அனுப்ப முயற்சிக் கிறது?
இதற்கான பதில் மிகமிகத் தெளிவானது: ஏனென்றால், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை அதிகரிப்பதன் மூலம் ஏழைகளை குற்றவாளிகளாக்குவது அரசாங்கத்திற்கு செலவற்றதும், சிரமமற்றதுமாகும். வேலை யில்லாத் திண்டாட்டத்தையும், வறுமையையும் எதிர்த்துப் போராட வேண்டுமெனில், மலிவான பள்ளிப் படிப்பையும், உயர்கல்வியையும் உறுதி செய்ய வேண்டும், அதற்கு அரசாங்கம் செலவு செய்ய வேண்டி வரும். இதற்குமாறாக, இந்த அரசாங்கம், வரி செலுத்துபவர்களின் பணத்தை, அம்பானி--அதானி வகையறாக்களுக்கு மானியமாக வழங்கவே விரும்புகிறது.
அதிக வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு சிறப்பான அளவுகளில் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் இருக்கின்றன, எனவேதான், 21 வயதுக்கு குறைவான திருமணங்களைத் தடை செய்கிறோம் என இந்த அரசாங்கம் கூறுகிறது. இது உண்மை தானா?
ஏழைக் குடும்பத்துப் பெண்கள், குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்; அதேநேரத்தில், நல்ல பொருளாதார வசதியுடைய குடும்பத்துப் பெண்கள், அதிக வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள், என நாம் மேலே பார்த்தோம். இயல்பாகவே, ஏழைப் பெண்கள் அதிக ஊட்டச்சத்து குறைபாடும் குறைவான ஆரோக்கியமும் உடையவர்களாகவே இருக்கிறார் கள். ஆக, பெண்களின் ஆரோக்கியத்திற்கான அளவுகள், அவர்கள் எவ்வளவு தாமதமாக அல்லது விரைவாக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதோடு தொடர்புடையதாக இல்லை. மாறாக, அவர்களின் வறுமையோடு தொடர்புடையதாகவே உள்ளது.
இந்தியாவில் தாயின் இறப்புக்கு மிகஅதிக காரணமான ரத்தசோகையின் அளவு ஏழைக் குடும்பத்துப் பெண்களுள் 25 வயதில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் கூட அதே நிலையிலேயே உள்ளதையே தேசிய குடும்பநல கணக்கெடுப்பு-&4ன் தரவுகள் காட்டுகின்றன.
அதேபோன்று, மருத்துவ வசதிகள் கிடைப்பது அதிகரிக்கும் போது, தாய் சேய் மரணங்கள் குறைகின்றன. ஆக, பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமென்றால், இந்த அரசாங்கம் மருத்துவம் மற்றும் உணவிற்கு முதலீடு செய்ய வேண்டும். சிறந்த ஊதியங்க ளுடன் நிரந்தர வேலைகளை உருவாக்கிட வேண்டும். மாறாக, இந்த அரசாங்கம், ‘’செலவற்ற’’, ‘’சிரமமற்ற’’, 21 வயதுக்கு குறைவான திருமணங்களைக் குற்றமயமாக்கும் பயனற்ற பாதையையே தேர்ந்தெடுத்திருக்கிறது.
"மக்கள் தொகை கட்டுப்பாடு" என்னவாகும்? 21 வயதுக்கு குறைவான திருமணங்களைத் தடை செய்வதால் தாய்மையடையும் விகிதம் குறையாதா? இந்துக்களை விட முஸ்லிம்களிடம் இள வயதுத் திருமணங்கள் அதிகமில்லையா?
இந்தியாவில் "கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பெருக்கம்" என்பது ஒரு கட்டுக்கதை. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் சீராக குறைந்து கொண்டே வருகிறது. 2005-&06 இல் ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் என்பதிலிருந்து 2015-&16 இல் ஒரு பெண்ணுக்கு 2.2 ஆகவும் சமீபத்திய 2019-&20 ஆய்வின்படி, மைல்கல் அளவான 2ஐ (ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை எனும் மாற்றீடு அளவிற்கும் குறைவாக) எட்டிவிட்டது.
கருவுறுதல் விகிதம் திருமணம் செய்து கொண்ட வருடத்தினாலல்ல, மாறாக, வறுமை யுடனும் கல்வியுடனுமே இணைக்கப்பட் டுள்ளன. எந்த சமூகங்களில், செல்வமும், கல்வியும் உயர்நிலையில் உள்ளதோ, அந்தச் சமூகங்களில் கருவுறுதல் விகிதம் குறைவாக உள்ளன. இதனால்தான் கருவுறுதல் விகிதம் இந்திய கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் குறைவாக உள்ளது. மதவெறி பரப்புரைகளுக்கு மாறாக, முஸ்லிம்களிடையே கருவுறுதல் விகிதம், இந்துக்களை ஒப்பிடும் போது விரைவான விகிதத்தில் குறைந்து வருகிறது. மேலும் இன்றைய இந்தியாவில், இந்து மற்றும் முஸ்லிம் பெண்களின் சராசரி திருமண வயது 19 தான். உயர் சராசரி திருமண வயதினை (25 வயது), முன்னாள் ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களும், அதனைத் தொடர்ந்து கேரளா (22 வயது), டில்லி (23 வயது) ஆகிய மாநிலங் கள் கொண்டிருக்கின்றன.
ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதையும் 21ஆக நிர்ணயித்தால், அது பாலின சமத்து வத்தை எட்ட துணை புரியாதா?
குடிமக்கள் ஒவ்வொருவரும் 18 வயதில் வயதுக்கு வந்தவராகிறார்கள். அரசாங்கங்களைத் தேர்வு செய்யும் தகுதி பெறும் குடிமக்கள் ஒவ்வொருவரும், தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு போதுமான வயதினை எட்டாமலா இருப்பார் கள்? ஒருவருக்கு, நாட்டின் எதிர்காலத்தை தீர்மா னிக்கும் உரிமையுள்ளது எனில் தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லையா?
குடும்ப சட்டத்தை சீர்திருத்தம் பற்றிய சட்ட ஆணைய அறிக்கை 2008, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவாக, குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 21 என பரிந்துரைக்க வில்லை. "கணவன், மனைவிக்கான வயது தகுதியில் உள்ள வயது வேறுபாட்டிற்கு எந்த சட்ட அடிப்படையும் கிடையாது. ஒரு திருமணத் திற்குள் நுழையும் இணையர்கள் அனைத்து வகையிலும் சமமானவர்களே. மேலும் அவர்க ளுடைய இணை ஒப்பந்தமும் சமமானவர்களுக் குள்ளேயே இருக்கவேண்டும்" என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டது. இந்திய வயது வந்தோர் சட்டம் 1875, ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் சமமானது. மேலும், 18 வயதை எட்டும் எவரும் ஒப்பந்தத்திற்குள் நுழைவதற்கான உரிமையை வழங்கியது. பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சர்வதேச ஒப்பந்தமும் கூட திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக 18 ஐயே பரிந்துரைத்தது.
ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டுமென நாம் கோர வேண்டும்.
21 வயதுக்கு குறைவான திருமணங்களைத் தடை செய்தால் பெண்களின் சுயாட்சியையும் விருப்பத் தேர்வையும் தாக்கும் சக்திகளுக்கே அதிகாரமளிக்கும்.
விசாரணை நீதிமன்றங்களை வந்தடையும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 40 சதவீம்வரையிலான வழக்குகள் உண்மையிலேயே 'பாலியல் வல்லுறவு' வழக்குகளல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன: இவைகளெல்லாம் இருதரப்பு ஒப்புதலின் பேரில், ஓடிப்போன வர்கள். இந்தச் சம்பவங்களில் பெண்ணின் பெற்றோர்கள், பெண்ணின் இணையர் மீது பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த வழக்குகளில், பெண்ணின் பெற்றோர் தங்களுடைய வயதுக்கு வந்த மகளை, வயதுக்கு வராதவர் எனத் தவறாகச் சொல்கின்றனர். இவ்வாறு சொல்வதனால், அப்பெண் அரசு காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார். வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்தக் காலகட்டத்தில், அப்பெண், அவருடைய பெற்றோரின் குடும்பத் தாரை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். தன்னுடைய காதலனையோ அல்லது கணவனையோ சந்திக்க அனுமதிக்கப்படுவ தில்லை. இந்த பெற்றோரின் பலவந்தங்கள் (வன்முறைகள்) இப்போதெல்லாம், சாதி மறுப்பு, மதமறுப்பு உறவுகளைப் பிரிக்க அடிதடி, வன்முறையை பயன்படுத்தும் அமைப்பாக்கப் பட்ட அரசியல் பின்புலமுள்ள இயக்கங்களோடு ஒன்றிணைகிறது.
21வயதுக்கு குறைவான பெண்களின் திருமணத்திற்கான தடை காரணமாக வயதுக்கு வந்த பெண்கள் (18 முதல் 21 வரையிலான வயதுள்ள பெண்கள்) தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தனக்குப் பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து மணமுடிக்கும் சட்ட உரிமை மறுக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு மாறாக, பெண்களின் சுயாட்சிக்கு எதிராக ஆணாதிக்க வன்முறைக்கு அதிகாரம் வழங்குகிறது. தங்களின் சொந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்த பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு மாறாக, வயதுக்கு வந்த பெண்களின் விருப்பத்தைத் தடைசெய்து அவர்களை இது குற்றவாளியாக்குகிறது.
பெண்களுக்கான கல்வி, ஆரோக்கியம், பெண்களது சுயாட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த இந்த அரசாங்கத்திடம் நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1) 21 வயதுக்கு குறைந்த பெண்கள் திருமணம் செய்வதற்கான தடை என்னும் அமைச்சரவையின் முன்வைப்பை திரும்பப் பெறவேண்டும். மாறாக, அனைவருக்கும் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதாக 18 என உறுதி செய்ய வேண்டும்.
2) ஒவ்வொரு வரவு செலவு அறிக்கை யிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத் திட்டத்திற்கான (அங்கன்வாடி திட்டம்) நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மாறாக, இத்திட்டத்தை அனைத்து மட்டங்களிலும் பரவலாக்க வேண்டும்; மேலும், இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பருவ வயதுப் பெண்ணும் அவளுக்குத் தேவையான தினசரி பங்கு கலோரிகளும், புரோட்டீனும் பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்.
3) ஒவ்வொரு வட்டங்களிலும், பாதுகாப் பான மகப்பேறு நிகழ்வதற்கான, போதுமான வசதிகளுடைய ஆரம்ப சுகாதார நிலையகளை அமைத்திட வேண்டும்; சமூக மருத்துவ மையங் களில் மகப்பேறு மருத்துவர்களுக்கான காலி இடங்களை நிரப்பிட வேண்டும்; ஒவ்வொரு மகப்பேறு நிகழ்விற்கும் எந்த ஒரு தகுதி நீக்கும் காரணங்களைச் சொல்லாமல், பேறுகால உதவித்தொகை ரூ.18,000 முழுத் தொகையையும் வழங்கிட வேண்டும்.
4) அங்கன்வாடி மற்றும் ஆஷா (கிஷிபிகி) பணியாளர்களையும், மதிய உணவு சமையல் பணியாளர்களையும் அங்கீகரித்து அனைத்து பலன்களும் கிடைத்திட அவர்களை அரசாங்கப் பணியாளர்களாக நிரந்தரம் செய்.
5) நடுநிலைப் பள்ளிகளில் பெண் குழந்தை கள் இடைநிற்றலைக் குறைத்திட, குழந்தைகள் 18 வயதை அடையும் வரை, அவர்களையும் உள்ளடக்கியதாக, கல்வி உரிமைச் சட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.
6) மழலையர் பள்ளி முதல் பட்ட மேற் படிப்பு வரையிலும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இலவசமான, தரமான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும்.
7) ஊக்கத்தொகையை அதிகமாக்க வேண்டும்; மாணவிகளுக்கு இலவச உயர்கல்வி வழங்கிட வேண்டும்.
8) எந்த ஒரு வயதிலும் பெற்றோரால் விருப்பமற்ற திருமணத்திற்கு கட்டாயப் படுத்தப்படும் பெண்களுக்கும் நபர்களுக்கும்; (எல்ஜிபிடிக்யு) தன்பாலின ஈர்ப்புள்ள பெண், தன்பாலின ஈர்ப்புள்ள ஆண், இருபாலீர்ப்புள்ள ஆண் அல்லது பெண், திருநங்கை, திருநம்பி, பால் புதுமை விரும்பிகள் ஆகியோரைக் காத்திடவும்; சாதிமறுப்பு, மதமறுப்பு, ஒரே கோத்திர, தன் பாலின உறவுக்குள் இருக்கும் நபர்களுக்கும் உடனடி சட்ட உதவி வழங்கிடும் அரசாங்க உதவி எண்ணை ஏற்படுத்திட வேண்டும்.
முடிவாக; பல மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் குழந்தை திருமணங்கள் பற்றியும் பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும், இந்த அரசாங்கம் உண்மையிலேயே கரிசனம் கொள்கிறதென்றால், வறுமையை ஒழிக்கவும், ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அது கவனம் செலுத்த வேண்டும். ஒரு பெண், அது 18 வயதாக இருந்தாலும் அல்லது 21வயதாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வயதாக இருந்தாலும், காதலிப்பதா? வேண்டாமா? திருமணம் செய்துகொள்வதா? வேண்டாமா? எப்போது, யாரைக் காதலிப்பது; திருமணம் செய்து கொள்வது என்பதை முடிவு செய்யும் கேள்விக்கிடமற்ற உரிமை பெண்ணுக்கு இருக்க வேண்டும்.
தமிழாக்கம் - செந்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)