பெரும்பான்மைவாத விவாதம் முக்காடு அணிந்து வருகிறது
முஸ்லிம் பெண்களின் கல்வி, கௌரவத்திற்கான உரிமையை வலதுசாரிக் குழுக்கள் பிணையாக பிடித்து வைத்திருக்கின்றன
கவிதா கிருஷ்ணன்
கர்நாடகாவின் கடலோர பகுதிகளின் பல்வேறு கல்லூரிகள், பாஜக-வின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் உள்ளிட்ட வலதுசாரி குழுக்களின் கோரிக்கையான முஸ்லிம் பெண்கள் தங்கள் சீருடை வர்ணத்தி லேயே தலை முக்காடு இருந்தால்கூட ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வரக்கூடாது என்று சொல்வதற்கு அடிபணிந்து விட்டன. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவி வண்ண சால்வை அணிந்து வருவோம் என ஏபிவிபி தூண்டுதலால் இந்து மாணவர்கள் அறிவித்திருந்தார்கள். இதற்கு எதிர்வினையாக, கர்நாடக பாஜக அரசாங்கம் கல்வி வளாகங் களில் "சமத்துவத்தை, ஒருமைப்பாட்டை, பொது சட்டம்-&ஒழுங்கை பாதிக்கிற வகையிலான ஆடைகளுக்கு" தடை விதித்தது. இந்த உத்தரவு அரசியல் சாசன சட்டப் பிரிவு 25(1)க்கு உச்சநீதிமன்றம் அளித்த விளக்கத்திலிருந்து சட்ட அங்கீகாரம் பெறுகிறது. (எல்லோரும் மனசாட்சிப் படி நடப்பதற்கு, மதத்தை சுதந்திரமாக தேர்வு செய்யவும் கடைப்பிடிக்கவும் அதை பிரச்சாரம் செய்யவும் சம உரிமை உண்டு) அதாவது அரசால் அமல்படுத்தப்படும் தடைகளிலிருந்து மதத்தின் 'அத்தியாவசிய பழக்கவழக்கம்' பாதுகாப்பு பெற்றுவருகிறது. பொது அமைதி, ஒழுக்கநெறி, சுகாதாரத்தை பராமரிப்பது ஆகியவற்றுக்கு இந்த பாதுகாப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அம்னா பின்ட் பஷீர் எதிர் சிபிஎஸ்இ (2015) வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் 'அத்தியாவசிய' பழக்க வழக்கம் என்றும் அதனால் அது, அரசியல மைப்பு சட்டப்பிரிவு 25(1) ன் கீழ் பாதுகாப்பைப் பெற தகுதியானது என்றும் சொல்லி முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்து இருப்பதால் அவரை தேர்வு எழுத விடாமல் தடுக்க முடியாது என்று சொன்னது. மறுபக்கம் பாத்திமா தன்சீம் எதிர் கேரள அரசு (2018) வழக்கில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறுமிகளை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது என்று தீர்ப்பு சொன்னது. நீதிமன்றம் முஸ்லீம் சிறுமிகள் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை என்பதை ஒத்துக் கொண்டது. ஆனால்,அந்த உரிமையை வெறும் 'தனிநபர் சார்ந்தது' என்றும் அது கல்வி நிறுவனம் தான் விரும்பியபடி நிர்வகிப்பதற்கான அடிப்படை உரிமைக்கு வழிவிட வேண்டும் என்றும் ஏனெனில், அது 'பொதுநலன் சார்ந்த உரிமை' என்றும் இறுதியாக சொல்லிவிட்டது.
அறைக்குள்ளே யானையை மறைத்ததுபோல்!
'பொதுநலம்', 'பொது அமைதி', 'அத்தியாவ சியப் பழக்கவழக்கங்கள்' ஆகியவை பற்றிய வியாக்கியானங்கள் இப்போ துள்ள சூழலில் சிறந்த வழிகாட்டுதல் தர முடியாது. ஏனென்றால் அறைக்குள் இருக்கும் யானை பற்றி அவை கண்ணை மூடிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை இந்து மேலாதிக்கவாத மிரட்டல், முஸ்லிம் பெண்களின் கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை பிணையாக பிடித்து வைத்திருக்கிறது. முஸ்லிம் பெண்கள் தங்களை 'முஸ்லிம்களாக காட்டிக் கொள்ளும்' அந்த தோற்றத்தை அழித்துக் கொள்ளும் போது மட்டும் தான் தன் சகாக் களுடன் சேர்ந்து பயில முடியும் என்ற கோரிக்கையில் இந்து மேலாதிக்கவாதிகள் வெற்றி கண்டு வருகிறார்கள்.அப்படி முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய விரும்பினால், அவர்கள் முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்லூரிகளில் படித்துக் கொள்ளட்டும் என்று பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் மாணவர் பட்டாளமும் சொல்கின்றனர். அப்படிப்பட்ட முடிவு எப்படி பொது நலன் சார்ந்ததாக இருக்க முடியும்? அது முஸ்லிம்களை பிரித்தெடுத்து தனிமைப்படுத்தவும் இந்துக்களை தீவிரத் தன்மையாளர்களாக்கவுமான நிகழ்ச்சி நிரலுக்கே பயன்படும். இதைத்தான் இந்து மேலாதிக்க வாத குழுக்கள் கடற்கரையோர கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வகுப்பில் படிக்கும் இந்து-&முஸ்லிம் சக மாணவர்கள், நண்பர்கள் காதலர்களிடையிலான ஊடாடல்கள் மீது வன்முறையான தாக்குதல் தொடுப்பதன் மூலம் செய்து வருகிறார்கள். கல்வி நிலையங் களில் பன்மைத் தன்மையை வளர்த்தெடுப்பதன் மூலம்தான் பொது நலனை பாவிக்க முடியும். அது போல் இந்து, முஸ்லிம், கிருத்துவ மாணவர்கள் தங்களது மேம்போக்கான வித்தி யாசங்களைக் கடந்து மேல் நோக்கி பார்த்து நீடித்த நட்பை உருவாக்கிக் கொள்ளும் போதுதான் பொதுநலன் பாவிக்கப்படும்.
பெரும்பான்மையினரின் வற்புறுத்தலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறையும் 'ஆணாதிக்க' ஹிஜாப் மீது 'விவாதம்' என்ற முக்காடு அணிந்து வருகின்றன. ஹிஜாப் மீது மட்டும் விரலை சுட்டி இது ஆணாதிக்கத்தின் குறியீடு என்று சொல்வது எவ்வளவு பாசாங்குத்தனமானது?இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியும் ஒரே பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டேலும் பொதுவெளியில் தங்கள் தலைகளை மூடிக் கொண்டிருந்தார்கள். அதை இந்தியாவில் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் பற்றிய ஆணாதிக்க எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகிற வகையில் அவர்கள் நடந்து கொண்டதாகக் கூட அனுமானிக்கலாம்.அப்படி இருக்கையில் இந்தியாவின் கற்பனைவளம் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இந்தியாவின் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ ஏற்றுக்கொள்ளாதா? அதேபோல் நாமும் ஹிஜாபை துன்புறுத்தி கழட்ட வைக்கவேண்டும் என்பதாக இல்லாமல் முஸ்லிம் பெண்களின் கல்வி கற்கும் உரிமையை ஐயத்திற்கும் இடமில்லாமல் பாதுகாக்க மாட்டோமா?
இஸ்லாமுக்கு ஹிஜாப் அத்தியாவசிய மானதா இல்லையா என்பது பற்றிய கவலை எங்களுக்கு தேவை இல்லை. உண்மை நிலை என்னவென்றால், இந்தியாவின் முஸ்லிம் சிறுமிகளும் பெண்களும் பரவலாக ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். அதை ஒருவர் களங்கப்படுத்தவோ, தடை செய்யவோ கூடாது என்பதுதான். ஏபிவிபி காரர்கள் காவி சால்வைகளையும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாபையும் தவறாக சமமாக பாவித்து பார்ப்பது என்பது அபாயகரமானது.முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து எந்த கல்லூரியிலும் தொல்லை கொடுக்கவில்லை அல்லது இதர குழு மாணவர்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்றோ அல்லது இப்படிப்பட்ட ஆடைகளை கைவிடவேண்டும் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சீக்கியர்கள் எப்படி டர்பன் அணிகிறார்கள்? அல்லது இந்துக்கள் எப்படி சீருடையுடன் பொட்டு, குங்குமம்,விபூதி, நெற்றித் திலகம் அணிகிறார்களோ அதேபோல் சீருடையோடு இவர்கள் ஹிஜாப் அணிகிறார்கள். ஏ பி வி பி ஒரு காலத்திலும் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கு எதிராக காவி டர்பன் அணிந்து போராடியதில்லை. அவர்கள் முஸ்லிம்களின் ஹிஜாபைதான் தனித்து குறிவைக்கிறார்கள். இந்தியா முழுவதும் அவர்கள் அணிந்து வரும் காவி சால்வை மதநம்பிக்கை தொடர்புடைய ஆடை அல்ல. மாறாக, அது ஒரு அரசியல் ஆடை அது இஸ்லாமிய பூச்சாண்டி காட்டுவது என்ற நோக்கிலிருந்து தெளிவாக முடுக்கி விடப்பட்டது.
மதத்தைத் தழுவுவதற்கான அரசியல் சாசன உரிமை என்பது பெண்கள் தங்கள் சொந்த மனசாட்சிப்படி தனக்கு சொந்தமான மதத்தை வியாக்கியானம் செய்து கொள்ளவும், அதை பின்பற்றவுமான சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாகும்.
"தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம்" என்ற பெயரில் மதவாத நிறுவனங்கள் தனிப்பட்ட குடிமக்களின் அரசியல் சாசன உரிமை மற்றும் சுதந்திரத்தை மீறக்கூடாது. (சபரிமலை மற்றும் உடனடி முத்தலாக் தீர்ப்புகளை பார்க்க) பள்ளி அல்லது கல்லூரியை நிர்வகிக்கும் தங்களது உரிமை என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் தனிப்பட்ட மாணவர்களின் உரிமைகளை மீற முடியாது.
ஆணாதிக்கத்தின் அழுத்தம்
தினந்தோறும் சமூக வேறுபாடின்றி அனைத்து சிறுமிகளும் பெண்களும் தங்கள் குடும்பத்தின் ஆணாதிக்க கரிசனங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டு பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்கள். "ஹிஜாப் அணிந்து கொள்" என்பது, "ஆண் மாணவர்களுடன் ஒன்று கலங்காதே", "சாதி சமூகத்துக்கு வெளியே காதலில் விழாதே", "அடக்கமாக ஆடை அணி" என்பதிலிருந்து ஒன்றும் மாறுபட்டதல்ல. இது போன்ற தடைகளை இளம்பெண்கள் அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தங்கள் பெற்றோர்களிடமிருந்து கேட்க வேண்டியுள்ளது. ஹிஜாப் அணிந்த பெண்களை கல்வி கற்க வருவதிலிருந்து தள்ளி வைப்பது என்பது அவர்களுக்கு "அதிகாரம்" அளிக்காது. ஏற்கனவே உள்ள முட்கள் நிறைந்த பாதையில் கூடுதல் தடைகளையே ஏற்படுத்தும்.
எல்லா பெண்களுமே ஆடை தேர்வுகளில் அது ஹிஜாபாக இருக்கலாம், ஹைகீல் செருப்பாக இருக்கலாம் அல்லது அலங்கார மேலாடையாக இருக்கலாம் ஆணாதிக்கத்தின் அழுத்தத்தை உணர்கிறார்கள். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்களின் போராட்டத் திற்கான ஆதரவை ஹிஜாப் அல்லது பல்லு எனப்படும் ஆடைதான் அடக்க ஒடுக்கமானது மற்றவை 'அடக்க ஒடுக்கமானதல்ல' என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.தர்க்கம் என்ன வென்றால் நாங்கள் அணியும் ஆடையை வைத்து எந்த ஒரு நிறுவனமும் எங்களை கேவலப்படுத் துவதையோ அல்லது பாரபட்சமாக நடத்து வதையோ அனுமதிக்கக் கூடாது என்பதுதான். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புர்கா அணியுமாறு நிர்ப்பந்திப்பதற்கும் "மேலைநாட்டு உடைகளை" தடை செய்வதற்கும் எதிரான பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்.இந்தியாவில் ஹிஜாப் மீதான தடைக்கு, "மேலைநாட்டு உடைகள்" மீதான இந்து மேலாதிக்க தடைக்கு எதிரான பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்.
பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கும் ஜீன்ஸ் பேண்ட் போட தடை விதிக்கும் காதலர் தினத்தன்று இணையர்களைத் துன்புறுத்தி வன்முறையில் ஈடுபடும் நீண்ட வரலாறு ஏபிவிபி அமைப்புக்கு உண்டு என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம். 2009 ல் 'மேலைநாட்டு உடை அணிந்து' பப்பில் (நடனமாடும் கிளப்) நடனமாடியதற்காக சக பயணியான பெண் இந்து மேலாதிக்கவாதிகளால் தாக்கப்பட்டார்.
சென்ற வருடம் இணையதளத்தில் முஸ்லிம் பெண்களை ஏலம் விட்டார்கள். 'இந்து தேசம் கருத்தரங்கங்களில்' முஸ்லிம் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கவும் அவர்களை பாலியல் வல்லுறவு கொள்ளவும் அழைப்பு விடுத்தனர். "பொது அமைதி" அல்லது "பொதுநலன்" என்பதை பிரயோகித்து பெண்கள் எம்மாதிரியான உடை அணிய வேண்டும் என்று குண்டர்களை கொண்டு சொல்ல வைப்பது அரசியலமைப்பு சட்ட விவாதங்களை பரிகாசம் செய்வதாகும்.இன்று ஹிஜாப் மீதான தடையை அவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். நாளை பப்பில் பெண்கள் நடனம் ஆடுவதை அல்லது பாவாடை அணிவதை கூட காவி சால்வை போராட்டத்தோடு தவறாக சமனப்படுத்தி பொது அமைதியை காப்பதற்காக "இரண்டையுமே தடை" செய்யலாம். தமிழாக்கம் - தேசிகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)