மத்திய கமிட்டி,

                                               இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பற்றிய இகக(மாலெ) அறிக்கை

உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மாற்றம் வேண்டும் என்ற மக்களின் மனநிலையினால் பலன் பெற்ற ஒரே கட்சியான ஆம் ஆத்மி, பஞ்சாப் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றுள்ளதுஆம் ஆத்மியின் வெற்றி காங்கிரசின் இழப்பாலும், குறிப்பிடத்தக்க வகையில் அகாலி தளத்தின் இழப்பாலும் பெறப்பட்ட வெற்றியாகும். பஞ்சாப் விவசாய இயக்கத்தால் மறுஆற்றலுக் குள்ளாக்கப்பட்ட  மாற்றம் வேண்டும் என்ற பஞ்சாப் மக்களின் ஆழ்ந்த விருப்பத்தைக் காட்டுவதாக இருக்கின்றன.

உத்தர்காண்டில், தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு பாஜக  தன் முதலமைச்சரை மாற்றியது. அப்படி அமர்த்தப்பட்ட புதிய முதலமைச்சர் இந்த தேர்தலில் தோற்றுப்போனார். இருந்தபோதும் குழுவாதத்தில் சவாரி செய்த காங்கிரசால் பலன் தரும் தேர்தல் தாக்குதலைத் தொடுக்க முடியவில்லை. எனவே, சில இடங்களை இழந்த பாஜக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கோவாவில் பாஜகபாதி இடங்களுக்கும் சற்று குறைவான, 20 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்ட்ரவாதி கோமன்தக் கட்சி மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசு அமைக்கும் நிலையில் உள்ளது.

மாநில அரசு அதிகாரத்தை மிகுந்த ஆணவத்துடன் துஷ்பிரயோகம் செய்தும், கொடும்காயங்கள் ஏற்படுத்தும் அமிலத்தன்மைகொண்ட வெறுப்புப் பிரச்சாரம் செய்தும், வாக்களர்களுக்கு மிரட்டல் விடுவது வரை சென்றும் பாஜகவின் தலைவர்களும், தொண்டர்களும் உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் நடத்தை விதிகளைக் கேலிக்கூத்தாக்கினர். தேர்தல் ஆணையமோ வாய்பேசாத பார்வையாளராகவே இருந்தது. இதுபோன்ற பாதகமான நிலைமையில் சமாஜ்வாடி- ராஷ்டிரிய லோக் தளம் பெற்ற வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளதும், சீட்டுகளின் எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளதும்மாநில மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை, முழுமையாக இல்லை என்றாலும்கூட, காட்டுபவையாக உள்ளன. மேலும் எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டதாலும், மாநிலம் முழுமையிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள், பாஜக பக்கம் திரும்பியதாலும் பாஜக தெளிவாக பலன் பெற்றிருக்கிறது.

விவசாய சட்டங்களைத் திரும்பப்பெற்றதன் மூலம், விவசாயிகள் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை  பாஜகவால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது; என்றாலும், முசாபர்நகர் கலவரத்துக்குக் காரணமான பல குற்றவாளிகள் தோற்கடிக்கப்பட்டது நெஞ்சுக்கு ஆறுதலாக உள்ளது.

 கடந்த அய்ந்தாண்டுகளில், குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் செயல்துடிப்புள்ள, போராடுகின்ற எதிர் கட்சி இல்லாது இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள், விவசாயிகளின் இயக்கம், வேலையும் நீதியும்  கோரிய இளைஞர்கள், திட்டத் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவைதான் உண்மையான எதிர்க்கட்சி பாத்திரம் வகித்தன. இந்த தேர்தலின் முடிவுகள், உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்குள் கூடுதல் செயலூக்கமுள்ள, துடிப்பான எதிர்க்கட்சி உருவாக வழிவகுக்கும் என்றும், அதைவிடவும் ஆற்றல்கொண்ட மாநிலத்தின் மக்கள், தெருக்களில் இறங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.  

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் காரணமாக துணிச்சல் பெற்றுள்ள மோடி அரசும் சங்கப் படைகளும் தங்களின் பாசிச தாக்குதல்களை தீவிரப்படுத்தியே தீரும். கூடுதல் ஒற்றுமையுடனும், தீர்மானகரமான  வகையிலும் ஜனநாயகத்துக்கான சக்திகள் அவற்றை எதிர்த்து நின்றாக வேண்டும்.