தமிழக  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்

சிபிஐ(எம்எல்) லிபரேஷன்

நீண்ட இடைவேளைக்குப்பின் தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இறங்கி உள்ளது. அஇஅதிமுக தனது கூட்டாளியான பாஜகவுடன் சீட்டு பேரம் படியாமல் தனித்துப் போட்டியிடுகிறது. இவை அல்லாமல் நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.

எல்லா கட்சிகளும் நகர்புறத் தேர்தலில் உள்ளாட்சியில்நல்லாட்சி தருகிறோம்என்ற முழக்கத்தைத்தான் முன்வைத்துள்ளன. சிபிஐ(எம்எல்) கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம் ஆகிய மூன்று அடுக்குகளில் உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. மோடியின் ஒன்றிய அரசு மாநிலத்தின் அதிகாரத்தையே பறித்து வரும் நிலையில் மிகவும் அடிப்படையான உள்ளாட்சி மன்றத்தின் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறியுள்ளது.

 அதனால், சிபிஐ(எம்எல்) கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் களத்தை போராட்டக் களமாக, மூன்று நட்சத்திரக் கொடிச் சின்னத்தில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியாளருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்

நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தலைவர்களின் தேர்தல் மறைமுக தேர்தலாக நடத்தப்படுகிறது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். அத்தோடு மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒன்றிய அரசு 50 சத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஊராட்சி மன்றங்கள் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

 மேற்கண்ட விஷயங்களுடன் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை வலியுறுத்தி சிபிஐ(எம்எல்) கட்சி தமது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

 கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை நாமக்கல், திருவள்ளுவர் ஆகிய மாவட்டங்களில் 41 வார்டுகளில் போட்டியிடுகிறது. மதுரை சிவகாசி ஆகிய மாநகராட்சிகள் 2 வார்டுகளிலும் 5 நகராட்சிகள் வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 34 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர். இவர்களில் பாதிக்கு மேலான வேட்பாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பேர் இளைஞர்கள். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 22 வயது உடைய தோழர் மோனிஷாவும் மதுரை மாநகராட்சியில் சட்டக்கல்லூரி மாணவரும் அகில இந்திய மாணவர் கழகத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளருமான தோழர் காளீஸ்வரனும் களத்திலுள்ளார்கள்.