கேரள கே-&ரயில் சில்வர் லைன் திட்டம்: வளர்ச்சியா அல்லது பேரழிவா?

-சந்திரமோகன்

வளர்ச்சி என்ற பெயரில், கேரளாவில் இடது சனாயக முன்னணி அரசால் ஒரு பேரழிவு திட்டம் முன்மொழியப்படுகிறது. இது செயல் படுத்தப்பட்டால், 3000 ஏக்கருக்கும் கூடுதலான விவசாய, வன, கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிலங்கள் அழிக்கப்படும் எனவும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வாழ்வாதா ரத்தை இழக்க நேரிடும். இதற்கும் மேலாக,

ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எல்லாம் எதற்காகதிருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே உள்ள  பயண நேரத்தை ஒரு சிலருக் காக குறைக்க வேண்டும் என்பதற்காக!  "புல்லட் ரயில்" என்ற பெயரில் இதேபோன்ற திட்டத்தை மோடி அரசாங்கம் கற்பனை செய்தபோது, மகாராஷ்டிராவில் உள்ள இடது சனநாயக முன்னணியில் அங்கமாக உள்ள அமைப்புகள் உட்பட, அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் அதை முழு மூச்சாக எதிர்த்தன. அதே கட்சிகள் இப்போது கேரளாவில் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதில் தீர்மானகரமாக இருப்பது எதிர்பாராததுஉண்மையில் இந்தத் திட்டத்தின் மீது பாஜகவுக்கு உண்மையான சண்டை எதுவும் இல்லை; அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே இதை எதிர்க்கிறது. மாநிலத்தில் ஆளும் இடதுசாரி மற்றும் பாஜகவின் சந்திப்புப் புள்ளியாக கே-ரயில் மாறியுள்ளது.

கே&-ரயில் என்பது கேரளாவின் ஒரு குறிப்பிட்ட திட்டம் பற்றியது மட்டுமல்ல. இது மிகவும் பாராட்டப்பட்ட கேரள மாதிரி வளர்ச்சியிலிருந்து ஒரு திட்டவட்டமான விலகலைக் குறித்துக் காட்டுகிறது. கடந்த கால மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பினராயி தலைமையிலான இடது சனநாயக முன்னணி அரசாங்கம்  நவ தாராளவாத வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

இந்தத் திட்டம் பற்றி பரப்பப்படும் சில மாயைகளை அகற்றுவோம்.

மாயை: 1 கட்டுமானப் பணியின் போது 50,000 பேருக்கு வேலை கிடைக்கும், திட்டம் முடிவடைந்தவுடன் 10,000 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

உண்மை:  கார்ப்பரேட் ஒப்பந்தக் கட்டுமான நிறுவ னங்கள் கேரள இளைஞர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உள்ளதா? இல்லை. அவர்கள் கட்டுமானப் பணிகளுக்கு முன்மொழியப்படுகிற 5 ஆண்டு காலத்திலும்  குறைந்த கூலியில் புலம்பெயர் தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவார்கள்.

11 ரயில் நிலையங்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், 10,000 பேருக்கு வேலை வழங்க ஒவ்வொரு நிலையமும் சராசரியாக குறைந்த பட்சம் 909 பேருக்கு பணியமர்த்த வாய்ப்புள்ள தாக இருக்க வேண்டும். உண்மை நிலைக்கு இது வெகு தொலைவில் உள்ளது. மேலும், வேலைக்கு ஆளெடுப்பது என்பது தனியார் கார்ப்பரேட் ஒப்பந்த நிறுவனங்களின் வேலை யாகும்; இது கேரள மாநில அரசைச் சார்ந்து இல்லை. இப்படிப்பட்ட பின்னணியில், 50,000, 10,000 போன்ற எண்களைச் சொல்லி கேரள இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே ஆகும். இது வேறு ஒன்றுமில்லை,

மாயை: 2  இந்த கே-&ரயில் சில்வர் லைன் திட்ட வருகையால், முதல் ஆண்டில் மட்டும்  தினசரி 43,000 சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அதற்கு மாறுவார்கள், இதனால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் மற்றும் இறப்புகள் (ஆண்டுக்கு 4,000 பேர்தவிர்க்கப்படலாம்.

உண்மை: டிபிஆர் -விரிவான திட்ட அறிக்கையின்படி, கே&ரயிலின் ஒவ்வொரு பயணமும் 675 பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு நாளும் 43,000 பேர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் - ஒரு வழியில் 64 முறைப் பயணங்கள், இரண்டு வழிகளில் (செல்லவும், திரும்பவும்) 128 முறைப் பயணங்கள்  செல்ல வேண்டும். 12 மணி நேரத்திற்குள் 64 முறைப் பயணங்கள் (720 நிமிடங்கள்) என்றால் 11.25 நிமிடங்களுக்கு ஒருமுறை பயணம்  இருக்க வேண்டும். சில்வர்லைன் கம்பெனி இத்தகையதொரு முறையில் ரயில்களை இயக்குமா? மேலும், காலை 10 மணிக்கு காசர்கோட்டை அடைய அனைத்து 43,000 பேரும் காலை 6 மணிக்குப் புறப்பட இயலுமா?

இவ்வளவு குறுகிய நிமிடங்களுக்குள் பலமுறை பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமா? இது சுற்றுலாப் பயணிகளுக்கானது என்று நாம் கருதினாலும் திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம், அல்லது எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடு போன்ற அருகிலுள்ள சில ரயில் நிலையங்களுக்கு மட்டுமே மக்கள் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், தற்போதுள்ள ரயில் நெட்வொர்க் சேவைகளோடு ஒப்பிடும் போதும், சில்வர் லைன் கே&-ரயில் திட்டத்தில் உள்ள 11 ரயில் நிறுத்தங்களை ஒப்பிடும்போது திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை ஏற்கனவே 40 ரயில் நிலையங்கள் உள்ளன.

பேருந்து வசதிகளோடு ஒப்பிடும்போதும் அது பொருளாதார ரீதியாக  அர்த்தமுள்ளதாக இருக்காது. தற்போதுள்ள 530 கிமீ தொலைவு ரயில்வே நெட்வொர்க்கிலேயே பயண நேரத்தை 30 முதல் 40 சதவீதம் வரை எளிதாகக் குறைக்க முடியும். சில்வர்லைன் நிறுவனம் 50 முதல் 60 சதவிகிதக் குறைப்பு (சில மணி பயண நேரம்) மட்டுமே முன்மொழிகிறது, இதற்காக ஒரு லட்சம் கோடி செலவாகும் என்பது மக்களின் பணத்தை குற்றமயமாக வீணடிப்பதே தவிர வேறில்லை.

ஆண்டுதோறும் கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகையில் 48% என்றும் கே-ரயிலில் பயணம் செய்வார்கள் என்றும் டிபிஆர்- விரிவான திட்ட அறிக்கை கூறுகிறது. சுற்றுலாப் பயணிகள், உண்மையில், அவசரமாக செல்வதை விட, ஓய்வான பயண நேரத்தையே விரும்பு வார்கள் ; ஏனெனில் ஒப்பீட்டளவில் மெதுவான ரயில் பயணம் கேரளாவின் இயற்கை அழகை ரசிக்க வாய்ப்பளிக்கிறது. அனுமதிக்கிறது. யாராவது அவசரமாக செல்வதாக இருந்தால், எல்லா முக்கிய நகரங்களும் கேரளாவில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களால் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் எப்போதும் விமானத்தில் செல்ல வாய்ப்புள்ளது. தேவைப் பட்டால், மலிவான கட்டண விமான பயணத் திட்டம் உருவாக்கப்படலாம்; விமான எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்படலாம்.

மாயை :3  கே-&ரயில் சில்வர் லைன் திட்டம் முற்றிலும் பசுமையான திட்டமாகும். சுற்றுச்சூழலியல் ரீதியாக பதட்டமான பகுதிகள் வழியாகவோ அல்லது வனவிலங்கு நடமாட்டப் பகுதிகள் வழியாகவோ  இந்த திட்டம் செல்லாது. இது ஆறுகள் அல்லது நீரோடைகளின் ஓட்டத்தைத் தடுக்காது.

உண்மை:  விரிவான திட்ட அறிக்கையே கூறுகிறது, "பூகம்பம், சுனாமி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட ஆபத்துகளுடன் நில அதிர்வு மண்டலம் மிமிமி இல் இந்த முழுத் திட்டமும் அமைகிறது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் வெள்ளம்வெள்ளக் காடாக மாறுதல்நிலச்சரிவு, சூறாவளி, புயல் அலைகள் மற்றும் கனமழைகள் ஆகியவற்றிற் கான வாய்ப்பு  ஓரளவு  உள்ளது."

"வெள்ளம் மற்றும் சூறாவளி காலநிலை தாக்கம் தவிர, நிலச்சரிவுகள், நீரோடைகளின் இயற்கை ஓட்டத்தில் தொந்தரவு மற்றும் சாலைகள் இடிந்து விழுதல் போன்றவையும் நிகழலாம் என கணிக்கப்படுகின்றன."

"சுரங்கப்பாதைகள் மற்றும் குழாய்கள், 292 கி.மீ. நீளம் நெடுக அமைக்கப்படும் நீர் தடுப்ப ணைகள், மலைகள், குன்றுகள் போன்றவற்றை சமன் செய்யும் கட்டுமான நடவடிக்கைகள் கேரளாவின் சுற்றுச்சூழல் மற்றும் புவிச்சூழல் அமைப்பை மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்பதையும் திட்ட அறிக்கை  வெளிப்படுத்துகிறது.

மாயை: 4:  ஒருவர் கேரளாவின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு பயணம் செய்து ஒரே நாளில் திரும்ப முடியும். இதனால் மனித பயண நேரம் மிச்சமாகும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் டிக்கெட் கட்டணம் சாமானியர் களுக்கு கட்டுப்படியாகும்.

உண்மை :  மக்களை மையப்படுத்திய மற்றும்  நிலைத்த நீடித்த வளர்ச்சிக்குப் பதிலாக, ஒரு விரைவான பயணத்தின் வழியாக 'வளர்ச்சி' என்று  இடது சனநாயக முன்னணி  அரசு பேசுவது வேடிக்கை யானதாகும்பயண வேகத்தை மேம்படுத்து வதில், விமானப் பயணத்தை மேம்படுத்துவது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கே&ரயில் டிக்கெட் அதீதக் கட்டணங்களுடன் ஒப்பிடு கையில், மலிவுக் கட்டண விமானங்களை அறிமுகப்படுத்துவதன் வழியாக, விமானக் கட்டணத்தை மிகவும் மலிவு விலையில் (ரூ.1000 முதல் 2000 வரை) வழங்கலாம்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், கேரளாவின் புவிச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலின் வளமையை ஏன் அழிக்க வேண்டும்? பாதிக்கப் பட்ட பகுதியில் வாழும் மக்கள் மீது ஏன் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும்?

மாயை: 5   இந்தத் திட்டம் மாநிலப் பொருளாதார நிலையைக் கெடுக்கும் என்று கூறுவது ஆதாரமற்றதாகும். மாநிலத்திற்குள் பயண நேரத்தை 4 மணி நேரமாகக் குறைப்பது வணிகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தும். இதன் மூலம் நமது பொருளாதாரம் மாபெரும் முன்னேற்றம் அடையும்.

உண்மை:  கே&ரயில் சில்வர் லைனின் இரண்டு (பூர்வாங்க மற்றும் இறுதி) சாத்தியக்கூறு அறிக்கைகள் மற்றும் DPR (விரிவான திட்ட அறிக்கை) ஆகியவற்றில் பெரியளவு பொருத்த மின்மைகள் உள்ளன. இது திட்டத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த அனைத்து அறிக்கைகளும் சந்தை பகுப்பாய்வு களும் அதே ஒரே ஆலோசகரால்சிஸ்டாஆல் தயாரிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக, டிக்கெட் விற்பனையின் வருவாய் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 2026 முதல் 2053 ஆண்டுகள் வரை, 9 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு 675 பயணிகளின் திறன், 2042 முதல் 15 பெட்டிகள் கொண்ட  ரயில்களுக்கு 1125 பயணிகள் வரை உயரலாம். அத்தகைய பயணிகள் உயர்வு மூலமாக டிக்கெட் விற்பனை வருமானம் ரூ. 2025-&26ல் ரூ. 2,276 கோடி,  2032&-33ல் ரூ.4,504 கோடியும் 2042&-43ல் ரூ.10,361 கோடியும் கிடைக்கும். அதாவதுடிக்கெட் விற்பனை வருவாய் ஒவ்வொரு 10 ஆண்டுக ளுக்கும் 100% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் டிக்கெட் கட்டணம் இன்னும் தெரிய வில்லை. இரண்டு முனைகளுக்கு இடையிலான, ரெயில் நிலையங்களுக்கு இடையிலான வணிக மற்றும் சுற்றுலா பயணிகள் பற்றிய ஆய்வு, படிப்பு எதையும் DPR  விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்கவில்லை.

ஊதிப் பெருக்கி காண்பிக்கப்பட்ட வருமான கணக்கு மற்றும் பொருத்தமற்ற மிகப்பெரிய முதலீடு ஆகியவை கேரளாவை பெரும் கடன் பொறிக்குள் இட்டுச் செல்லும். வெளிநாட்டு நிதி ஆதாரங்களும் கொண்ட ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு மற்றும் குறைவான வருவாய் ஆகியவை பொருளாதாரத்தை நிச்சயமாக பாதிக்கும். ஏற்கனவே கடன் சுமையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கேரளப் பொருளாதாரத்தில் ஜப்பானிய கடன்களின் தாக்கம் வெறுமனே புறக்கணிக்கப்படுகிறது. எந்தவித லாப நோக்க வாய்ப்பும் இல்லாத வெள்ளை யானை திட்டம் போல் இது தெரிகிறது. இது ஒரு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறும்.

எந்தவொரு பெரும் திட்டத்திற்கும், திட்ட முன்மொழிவு, நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்குச் செல்லும் முன்னர்,

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் சமூக தாக்க மதிப்பீடு (SIA) ஆய்வுகள்  முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய மாதவ் காட்கில் அறிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குட்டநாடு நெற்களஞ்சியத்தில் வந்த பொறியியல் திட்டங்கள், விழிஞ்சம் பன்னாட்டுத் துறைமுகப் பிரச்சனைகள் போன்றவற்றால் விளைந்த கசப்பான அனுபவங்களையும் முறையாகவும் கவனமாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.

மாயை: 6   கேரளாவில் முதலீடுகளை ஈர்க்கத் தவறியதற்கு வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பு என்பது ஒரு முக்கிய காரணமாகும்.

உண்மை:  நிலைத்த நீடித்த வளர்ச்சிப் பாதையும் மக்களை மையமாகக் கொண்ட திட்டங்களுமே காலத்தின் தேவையாகும். எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் கேரள மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் மற்றும் புவிச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக் கப்பட வேண்டும்.

மாயை: 7:  எதிர்க்கட்சிகள் கேரளாவின் வளர்ச்சித் திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கின்றன.

உண்மை:  சிபிஎம் மற்றும் இடது சனநாயக முன்னணி ஆகியவை கேரள மக்களின் பல்வேறு பிரிவுகளின் உண்மையான கேள்விகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை அதற்கு எதிரான சதி என்று கூறுகின்றன. இது மேற்கு வங்காளத்தின் சிபிஎம் தலைமையிலான இடது அரசாங்கத்திற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்திய சிங்கூர் மற்றும் நந்திகிராம் நில அபகரிப்பை நினைவூட்டுகிறது.

மக்கள் விரோத இத்திட்டத்திற்கு விமர்சன மற்ற ஆதரவை வழங்காத கேரள மற்றும்  வெளியிலுள்ள பல கல்வியாளர்கள், விஞ்ஞானி கள், அறிஞர்கள் மற்றும் முக்கிய குடிமக்கள்,  'வளர்ச்சி மற்றும் கே-ரயில் திட்டத்திற்கு எதிரானவர்கள்' என்று முத்திரை குத்தப்படுவது, முற்றிலும் ஜனநாயகமற்ற மற்றும் எதேச்சதிகார மானது. எழுப்பப்பட்ட உண்மையான கேள்வி களுக்கு அரசாங்கம் எந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான  பதிலையும் வழங்க வில்லை.

பெருமளவு சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக இழப்புகள் இல்லாமல், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பிற நிலையான நீடித்த போக்குவரத்துத் திட்டங்களுக்கு ஆதரவாக நின்று, கே-&ரயில் திட்டத்தை நிறுத்துமாறு சிபிஐ(எம்எல்) கோரியுள்ளது.

(லிபரேஷன், ஏப்ரல்- 2022ல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)