சொத்து வரி உயர்வும் சமத்துவ நாள் அறிவிப்பும்
சம்பந்தமில்லாமல் இருக்கலாமா? 
                                                                                                                

கடந்த ஏப்ரல் 2ம் தேதி தமிழ்நாடு அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தியுள்ளது. 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 25% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50% வரி உயர்த்தப்பட்டுள்ளது.  1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 75% சொத்து வரி விதிக்கப்பட உள்ளது. 1800 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. ஆனால், தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 75% மட்டுமே வரி உயர்வு. கல்வி நிலைய அதிபர்களும் தொழிற்சாலை அதிபர்களும் அதிக பரப்பளவு கொண்ட இடங்களை வைத்துள்ளார்கள் என்றபோதிலும் வணிகர்களைவிட வருமானத்தில்  குறைவா னவர்கள் போலும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னைக்கு தனியாக வரி விதிப்பு. இதர 20 மாநகராட்சிகளுக்கும் தனியாக சொத்து வரி விதிப்பு உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை சென்னையின் மையப் பகுதிகளில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 600 சதுர அடி பரப்பளவிற்கு 50% சொத்து வரி உயர்த்தப் படுகிறது. 2011ல் சென்னையுடன் சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு 25% வரி உயர்வு. அதாவது அடையாரில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50% வரி உயர்வு. ஆலந்தூரில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 600 சதுர அடி பரப்பளவிற்கு 25% வரி உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாரில் 600 சதுர அடி பரப்பு கொண்ட கட்டிடத்திற்கு தற்போது  அரையாண்டிற்கு ரூ.308 என்று உள்ளது இனி ரூ. 462 ஆகும். ஆலந்தூரில் 600 சதுர அடி பரப்பு கொண்ட குடியிருப்புக் கட்டிடத்திற்கு தற்போது அரையாண்டிற்கு ரூ.320 என்பது இனி ரூ.400 ஆகும். அதே வேளை அடையாறில் 1201 சதுர  அடியில் இருந்து 1800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இப்போது அரையாண்டிற்கு ரூ.1461 வரி வசூல் செய்யப்படு கிறது. இனி அது ரூ.2922 ஆகும். ஆலந்தூரில் 1201&1800 சதுர அடி பரப்பளவு குடியிருப்புக் கட்டிடங்களுக்கு அரையாண்டிற்கு ரூ.825 லிருந்து ரூ.1444 ஆகும்.
ஆனால், சென்னை முக்கிய நகரப் பகுதிகளில் உள்ள 601&1200 சதுர அடி உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 75% வரி உயர்வும் 1201&1800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100% வரி உயர்வும் 1800 மேல்  பரப்பு கொண்ட குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 150% வரி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
83% குடியிருப்புக் கட்டிடங்கள் 25% மற்றும் 50% வரி உயர்வு வரையறைக்குள்தான் வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறுகிறார். மேலும் 2018ல் அதிமுக ஆட்சிகாலத்தில் 200% வரி உயர்வு ஒரே வகையில் அறிவித்தார்கள், தேர்தல் வருகிறது என்பதால் முழுமையாக அதை நிறுத்தி வைத்திருந்தார்கள், ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஏழைகளுக்கு கொஞ்சம்  குறைவாகவும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதலாக வரியை உயர்த்தி யிருக்கிறார் என்று கூறுகிறார். மேலும் 
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் கட்டாயத்தின் பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 31க்குள் சொத்து வரியை உயர்த்தவில்லை என்று சொன்னால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய ரூ.15,000 கோடியை விடுவிக்க முடியாது என்று ஒன்றிய அரசு வெளிப்படை யாகவே சொல்லியுள்ளது என்கிறார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. கடந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நிலுவையில் இருந்ததால் சுமார் ரூ.7000 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லையாம். சென்னையைப் பொறுத்தவரை 24 ஆண்டுக ளுக்குப் பின்னரும் பிற பகுதிகளைப் பொறுத்த வரை 14 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்கிறார் அமைச்சர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசின் கீழான திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியைத் தர வேண்டும் என்றால், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிடுகிறது என்றால் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து, மக்கள் வங்கிச் சேமிப்பில் இருந்து அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் சலுகைகளையும் கடன்களையும் அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு, அவர்கள் வங்கியில் வாங்கிய கடனை அடைக்கவில்லை என்றால் அதானிக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, மக்களிடம் வசூலித்த ஜிஎஸ்டியில் இருந்து மாநிலங்களுக்கு அளிக்கும் பங்கைக் கொடுக் காமல் இழுத்தடிக்கும் மோடி அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்க சொத்து வரியை உயர்த்தச் சொல்வது என்பது மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோத கோர முகத்தை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது. அதற்கு எதிராக மாநில அரசு கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமேயொழிய மாறாக ஒன்றிய அரசின் உத்தரவை அமல்படுத்தி, மோடிக்கு எதிராக ஸ்டாலினுக்கு வாக்களித்து அரியணை ஏற்றிய மக்களை வஞ்சிக்கக் கூடாது.
முந்தைய அதிமுக அரசு போல், இப்போது இருக்கும் திமுக அரசு, ஒன்றிய அரசு சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறதா? இல்லையே. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. அதை ரத்து செய்ய அனுப்பிய தீர்மானத்தினை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இழுத்தடிப்பதைக் கண்டித்து, அவரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது. எழுவர் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைப்பாடு வேறு மாதிரி இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தொடர் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அவையெல்லாம் உண்மை யானதா? அல்லது ஒப்புக்கானதா? 
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகக் குரல் எழுப்பி மக்கள் வாழ்வு சிறக்க வழி செய்வதே மக்கள் நல அரசாக இருக்க முடியும். மாறாக சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய முடியாது, உயர்த்தப்பட்டதை திரும்பப் பெறவோ, குறைக்கவோ கூட முடியாது என்று  முதல்வர் ஸ்டாலின் அவர்களே கூறுவது, திமுக ஆட்சி யாருக்கானது? மக்களுக்கானதுதானா? என்கிற கேள்வி எழுகிறது. சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிற எதிர்க் கட்சியினரையும் தன் கூட்டணிக் கட்சியி னரையும் பார்த்து, ‘மாநில வளர்ச்சியில் அரசியல் செய்யாதீர்கள்’ என்கிறார் ஸ்டாலின். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன, அதைச் சரி செய்ய வேண்டும் என்று சொன்னால் சொத்து வரியை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை, ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்காமல்தான் சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது என்கிறார் ஸ்டாலின்.
இந்த சொத்து வரி விதிப்பு ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்காது என்று எந்த அடிப் படையில் கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின்? ஒரு கணக்கு சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 78 லட்சம் வீடுகள் உள்ளனவாம். அவற்றில் 600 சதுர அடி பரப்பளவுக்குள் வரும் வீடுகள், அதாவது 25% வரி உயர்வுக்குள் வரும் வீடுகள்  45.54 லட்சம், 50% வரி உயர்வுக்குள் வரும் வீடுகள் அதாவது 601-1200 சதுர அடிக்குள் வரும் வீடுகள் 19.23 லட்சம். 100% முதல் 150% வரி உயர்வுக்குள் வரும் வீடுகள் அதாவது 1201-1800 மற்றும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளின் எண்ணிக்கை வெறும் 7%தான் என்று கணக்கு சொல்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். 
தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களும் சொந்த வீடுகளில் குடியிருக்கவில்லை. பெரும் பான்மையான ஏழை, நடுத்தர மக்கள் வாடகை வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள். மேல் நடுத்தர மக்கள்தான் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். மட்டுமின்றி பல வீடுகளைக் கட்டிப் போட்டு வாடகைக்கு விட்டுள்ளார்கள். இந்த சொத்து வரி உயர்வால் வாடகை வீட்டில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு வாடகை உயர்த்தப்படும். சொத்து வரியின் உயர்வு வாடக்கைக்கு குடியிருப்போரின் தலையில் கட்டப்படும். மாசச் சம்பளக்காரர்கள் பலர் தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று கடன் பட்டு கட்டிய வீட்டில் குடியிருக்க முடிவதில்லை. வேலை நிமித்தம் வெளியூர்களில் வாடகைக்குத் தான் குடியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தலையில் கட்டப்படும் வரி உயர்வை தான் கட்டியிருக்கும் வீட்டில் குடியிருப்பவர் தலையில் இரட்டிப்பாக கட்டிவிடுவார்கள்.
இந்த சொத்து வரி உயர்வு ஏதோ குடியிருப்புகளுக்கு மட்டும்தான் என்பதுபோல் பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரி உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி பணம் புழக்கம் இல்லாமல் இருக்கிற நிலையில், வணிகர்கள் பல பேர் வியாபாரம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டால் அவர்கள் நுகர்வோர் அதாவது பொதுமக்கள்  தலையில்தான் அதைக் கட்டுவார்கள். அது மட்டுமல்ல, பெரும்பாலான சிறு வணிகர்கள் வாடகைக் கட்டிடங்களில்தான் தங்கள் வியா பாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வாடகையை கட்டிட உரிமை யாளர்கள் உயர்த்திவிடுவார்கள். பாதிக்கப்படப் போது ஏழைகள், அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நடுத்தர மக்கள்தான் இந்த சொத்து வரி உயர்வால் அதிகம் பாதிப்படைவார்கள். வாடகை உயரும், பொருள்களின் விலை உயரும், ஏற்கனவே பெட்ரோல், டீசல், எரி வாயு விலை உயர்வால் டீ, காபி விலையைக்கூட ஏற்றப்போகிறார்கள். சொத்து வரி உயர்வின் காரணமாக கடைகளில் வாடகை அதிகரிக்கும் போது அதையும் கஸ்டமர்கள் தலையிலே கட்டுவார்கள். அது மட்டுமல்ல தண்ணீர் வரியும் அடுத்து இதனால் உயரும் அபாயம் உள்ளது. குடியிருப்பு வீடுகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு ஏழை, நடுத்த மக்களைப் பாதிக்காத வரி உயர்வு என்பதெல்லாம் பம்மாத்து வேலையல்லவா? 
முதலில் ஒன்றிய அரசின் கட்டாயத்தினால் தான் இந்த சொத்து வரி உயர்வு என்று ஊராட்சிகள் அமைச்சர் நேரு சொன்னார். இப்போது ஊராட்சிகளில் நிதி இல்லை அதனால் வேறு வழியில்லை என்று முதல்வர் சொல்கிறார். ஒன்றிய அரசு நிதி வழங்குவதற்காக சொத்து வரியை உயர்த்தச் சொல்வது மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளில் தலையிடும் அடாவடிச் செயல் ஆகும். இதை மாநில சுயாட்சி பேசும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு கண்டிக்க வேண்டும். அதற்கு எதிராக மற்ற மாநிலங்களை யும் சமூகநீதிக்காக ஒன்றிணைப்பதுபோல் ஒன்று சேர்த்து குரலெழுப்பி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதியை வழங்கச் செய்ய வேண்டும். மாநில உரிமை பற்றி பேசிக் கொண்டு உள்ளாட்சி அமைப்பு களின் உரிமையில் மாநில அரசு தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் பிரிவு 78ன் படி வரிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உரியதாகும். அதற்கு மாறாக தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920 பிரிவு 81ஏ&ன் கீழ் ஆளுநர் மூலம் சொத்து வரி விகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நீட் எதிர்ப்பு’ என்று ஆளுநரின் தேநீர் விருந்தை மறுக்கும் திமுக அரசு, தினக்கூலி தொழிலாளி தேநீர் குடிக்கக் கூட வசதியில்லாத நிலையை உருவாக்கப்போகும் சொத்து வரி உயர்வை, சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதே ஆளுநர் மூலம் அறிவிப்பதுதான் திராவிட மாதிரி பொருளாதார நடவடிக்கையா?
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அமேசான் நிறுவனக் கட்டிடத்தினை திறந்து வைத்து பெரு மகிழ்ச்சியடைந்தார். அமேசான் வந்தால் அன்றாடம் சம்பாதிக்கும் சிறுவணிகர்கள் சின்னாபின்னமாகிப் போவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்போது அந்த அமேசான் துவங்கும் முன்னேயே சிறுவணிகர்களை இல்லாமல் செய்வதற்கா இந்தச் சொத்து வரி உயர்வு? வரும் காலத்தில் தொழில் முனைவோர்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்திக்க உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. நிச்சயமாக அவர்கள் தொழில் துவங்க ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும். அதில் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படலாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக! வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வு, வந்திறங்கும் முதலாளி களுக்கு வரிச் சலுகை என்றால், இதுதான் திராவிட மாதிரி என்று மக்கள் தப்பாகப் புரிந்து கொள்ள மாட்டார்களா? 
திமுக அரசு, அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஐ சமத்துவ நாளாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஐ சமூகநீதி நாளாக அறிவித்துள்ளது. சமத்துவமும் சமூகநீதியும் அனைவருக்கும் எல்லாருடைய வாழ்க்கையிலும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பது தானே. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் தலையில் மேலும் மேலும் சுமை ஏற்றப்பட்டால் சமத்துவ நாளும் சமூகநீதி நாளும் பொருளற்றுப் போகாதா? சமத்துவ நாள் அறிவிப்பிற்குச் சம்பந்தமே இல்லாமல் சொத்து வரி உயர்த்தி சொந்த மக்களை நோகடிக்கலாமா? சொத்து வரி உயர்வு உடன் ரத்து செய்யப்பட வேண்டும்.