இரண்டு வாரமாக எரியும் எரிமலை அலட்சியம் காட்டும் நிர்வாகம்... ஆணையிட மறுக்கும் என்.ஆர் காங்கிரஸ்---&பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி...
கடந்த மார்ச் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரோலிங் மில், டிஎல்டி, மெடிகல் ஷாப் என்ற 3 ஆலைகளில், 25 ஆண்டுகளாக நீடிக்கும் சட்டவிரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறையை தடை செய்திடக் கோரியும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தியும் எல் அண்ட் டி ஜனநாயக தொழிலாளர் சங்கம் (ஏஐசிசிடியு) தொழிலாளர்கள் உற்பத்தி கூடங்களிலேயே தங்கி 360 மணி நேரத்தைக் கடந்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 15 நாட்களாக முழு உற்பத்தி நின்றுவிட்டது. ஆலை உற்பத்தி கூடங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு மூடப்பட்டுள்ள டிம்பர் ஷாப் ஆலைத் தொழிலாளர்கள் ஆலைக்கு வெளியே உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். தொழிலாளர் குடும்பத்தினர் ஆலை வளாகத் திற்கு வந்து தொழிலாளர்களைச் சந்தித்து உற்சாகம் கொடுத்து வருகின்றனர்.
போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை களை தீர்க்க வேண்டி 21-.3-.2022 சட்டமன்றம் எதிரில் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்பு, முறைப்படுத்துதல் சட்டம் 1970 பிரிவு 10ன் கீழ் உள்ள விதிகளின்படி, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எல் அண்ட் டி ஆலைகளில் தடை செய்திட வலியுறுத்தி ஏஐசிசிடியு ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தொழிலாளர் அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோரை ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சோ.மோதிலால், பொதுச்செயலர் எஸ்.புருஷோத் தமன், எல் அண்ட் டி ஜனநாயக தொழிலாளர் சங்க பொதுச்செயலர் எஸ்.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அலகு தொழிலாளர்களை அலகு நிர்வாகிகளான விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழி நடத்துகின்றனர்.
நேரடி பேச்சு வார்த்தைக்கு எல் அண்ட் டி நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதால், 24.03.2022 அன்று தொழிலாளர் குடும்பத்தினர் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்துடன் இணைந்து பெரும் எண்ணிக்கையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் பொதுச்செயலர் விஜயா தலைமையில் தர்ணா போராட்டம், தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எதிரில் நடத்தி துணை ஆணையருக்கு நேரில் மனு அளித்தனர். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏஐசிசிடியு தேசியத் தலைவர் வீ.சங்கர், இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் பாலசுந்தரம், சந்திரமோகன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், ஏஐசிசிடியு துணைத் தலைவர் கோ.பழனி, ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கம் துணைத்தலைவர் முருகன், சேதராப்பட்டு தொழிற்பேட்டை தொழிற்சங்க செயலர் ரமேஷ், புஜதொமு நிர்வாகிகள் பங்கேற்றது போராடும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
போராடும் தொழிலாளர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் மெட்டல் ஷாப் நிர்வாகம் இடையிடையே உரிமம் இல்லாத ஒப்பந்தகாரர் மூலம் உற்பத்தியில் ஈடுபட முயற்சி செய்வதை தொழிலாளர்கள் முறியடித்து வருகின்றனர். நிர்வாகத்தின் இந்த சீர்குலைவு முயற்சியால் ஆத்திரமடைந்த தொழிலாளர் குடும்பத்துப் பெண்கள் ஆலை வாயிலை சுற்றி போராட்டம் நடத்தியதற்கு பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகம் ஏப்ரல் முதல் தேதி ஊதிய உயர்வுக்கான திட்டத்துடன் வருவதாக வாக்குறுதி அளித்தது. தொழிலாளர் குடும்பத்துப் பெண்கள் ஆலை வாயிலுக்கு, தொழிலாளர் துறை அலுவலகம் வரை வந்தது நிர்வாகத்திற்கும் அரசிற்கும் அழுத்தம் தருவதாக இருந்தது. போராடும் தொழிலாளர்களுக்கு புதுவை சமையல் வாயு விநியோக தொழிலாளர் சங்கம் ரூ.10,000/&, சுஜா ஷோயி சங்க நிர்வாகி ராணி உள்ளிட்ட பலரும் பொதுமக்கள், தொழிற் பேட்டை தொழிலாளர்கள், ஆதரவாளர்களும் உதவி வருகின்றனர். தமிழ்நாடு ஏஐசிசிடியு ஒருமைப்பாட்டை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29 தேதிகளிலும் போராட்டம் தொடர்ந்தது. பல நாடுகள், பல இலட்சம் கோடி சொத்துக்கள் உள்ள எல் அண்ட் டி ஆலைகளில் இது போன்ற போராட்டம் நடைபெற்றது இல்லை. கடந்த பல பத்தாண்டுகளில் இதுபோன்றதொரு போராட் டத்தை புதுச்சேரி மாநிலம் கண்டதில்லை. சமீப காலங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் புதுச்சேரியை உலுக்கினாலும் பல இழப்புகளோடு ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. புரட்சிகர தொழிற்சங்கத்தால் திட்டமிட்டு வழிநடத்தப்ப பெறுவதால் தொழிலாளரது உறுதிபாட்டுடனும் ஒற்றுமையுடனும் 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக போராட்டம் நடைபெறுகிறது. இனி போராட்டங்கள் சாத்தியம் இல்லை என்று கூறுவோர்க்கு போரட்டங்கள் சாத்தியமே எனக் காட்டியுள்ளது. பொருளுள்ள தீர்வு வரும்வரை போராட்டம் தொடரும் என்பதில் தொழிலாளர்களும் சங்கத் தினரும் உறுதியாக உள்ளனர். எல்அண்ட்டி நிர்வாகம் போராட் டத்தை ஒடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. போராட்டம் தொடர்கிறது.
- சோ.பா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)