பெட்ரோல், டீசல், எரி வாயு விலை உயர்வு கண்டித்து நாடு தழுவிய இயக்கம் 
5 மாநில தேர்தல்களை தொடர்ந்து, ஒன்றிய அரசாங்கம் டீசல், பெட்ரோல் விலைகளை அடுத்தடுத்து 12வது முறையாக உயர்த்தியிருக்கிறது. பெருந்தொற்று, பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. எரிபொருள் விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளதால் உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்து, அதன் காரணமாக வேலையில்லாதோரும் ஏழைகளும் இன்னும் பெரிய துன்பத்துக்கு ஆளாக்கப்படுவது நடக்கும். எனவே, எரிபொருள் விலைகளை குறைக்க வேண்டுமெனக் கோரி ஏப்ரல் 7 முதல் 13 வரை பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்துமாறு இகக(மாலெ) அழைப்பு விடுத்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரையும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்  இகக(மாலெ) சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.