வறிய மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் தி.மு. அரசு!

 

கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்திரவுகளை பின்பற்றி நீர்நிலையைக் காரணம் காட்டி குடியிருப்பாளர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று காரணம் சொல்லி திமுக அரசு வெளியேற்றி வருகிறது.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்கள் குடியிருப்புகளை அகற்றி அவர்களின் வாழ்வாதரத்திற்கு சம்மந்த மில்லாத பகுதிகளில் குடியமர்த்தியுள்ளது. குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் போது  வசதி படைத்தவர்களின் கட்டிடங்கள் கண்டு கொள் ளாமல் விடப்படுகிறது. சென்னை அருகில் உள்ள பெத்தேல் நகரும் அப்புறப்படுத்தும் பட்டியலில் உள்ளது.

சட்ட விரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமித்த வர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் என்று சொல்லும் நீதிமன்றம் 40, 50 ஆண்டுகளாக அவர்கள் குடியிருப்பதற்கு சாலை வசதி, தெரு மின் விளக்கு வசதி, ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் பட்டியல் போன்ற இருப்பிட வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்ததற்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் பொறுப்பாவார்கள் என்பதை சுட்டிக் காட்டவில்லைமேலும் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் ஆக்கும் அரசின் திட்டத்தை கண்டிக்கவில்லை முதலாலித்துவ அரசியல் கட்சியைச் சார்ந்த வர்கள் ஏழை எளிய மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு  நிலங்களை விற்பனை செய்ததையும் அவர்களுக்கு பட்டா வாங்கி கொடுப்பதாக பணம் பறித்ததையும் நீதிமன்றம் பார்க்க தவறியுள்ளது. நகர்மயமாதலில் வீட்டுமனை விலை (பட்டா நிலத்தில்) கொடுத்து வாங்க முடியாத உயரத்தில் உள்ளதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் சிறுக, சிறுகச் சேமித்த பணத்தைக் கொண்டு இடத்தை வாங்கி, கடன் பெற்று கட்டிடம் கட்டியுள்ளனர். 40, 50 ஆண்டு காலம் திமுக, அதிமுகதான் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சி களின் குற்றச் செயலை கண்டிக்காமல் நீதிமன்றம் மக்களை குற்றவாளியாக்கி அவர்களுக்கு நிவாரணம் தருவதையும் தடுத்து நிறுத்தும் நீதிபதிகள் நியாயவான்களாக இருக்கமுடியாதுபொது இடங்களை கடவுள் பெயரால், கடவுளே ஆக்கிரமித்து இருந்தாலும் சட்டப்படி இடித்து தள்ளுவோம் என்று மற்றுமொரு நீதிபதி சொல்கிறார்.

மூன்று செங்கலை வைத்து பூசை செய்கி றார்கள், ஒரு புற்றுக் கோவிலை வைத்து பூசை செய்கிறார்கள், அரசு கண்டு கொள்ள வில்லை என்றவுடன் பொது மக்களிடமே வசூல் செய்து கோவில் கட்டுகிறார்கள். நீதிமன்றமும் கண்டுகொள்வதில்லை அரசியல் பிரமுகர்களை வைத்து கும்பாகிசேகம் செய்யும் வரை கண்டு கொள்வதில்லை. நீதிமன்றம் தும்பை விட்டு வாலை பிடிக்கிறது. குதிரை போன பின்பு லாயத்தை பூட்டுகிறது. நீதிமன்றம் உத்திரவிட்டு இடிக்க வரும்போது. இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அதற்கும் போராட்டம் நடக்கிறது. சில இடங்களில் கடவுளுக்கும் மாற்று இடம் கொடுக்கப்படுகிறது.

செங்கற்பட்டு மாவட்டத்தில் வல்லாஞ் சேரி, பொத்தேரி மக்களின் குடியிருப்புகளை 21 நாட்களில் அகற்றப்போவதாக 10.03.2022 அன்று 211 குடியிருப்புகளுக்கு நீர்வள ஆதாரத் துறையினர் அறிவிப்பு கொடுத்துள்ளனர். குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது என்று 21.03.2022 அன்று செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குடியிருப்பாளர் களுடன் குறைதீர் கூட்டத்தில் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கிளை செயலாளர் ஹமீத் தலைமையில் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன் மனு கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் மனுவைப் பெற்றுக்கொண்டு குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிடுவதாக உறுதியளித்தார். குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரின் வருகையை எதிர் நோக்கியுள்ளனர். இதே பகுதியில் உள்ள SRM பல்கலைகழகத்தின் ஆக்கிரமிப்புகள் மீது அரசும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்கிறது. மறைமலை நகரில் நின்னக்கரை பகுதியில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு மேய்க்கால் என்று காரணம் காட்டி குடியிருப்பை அகற்ற நோட்டிஸ் கொடுத்துள்ளனர். மேல் மருவத்தூரில் உள்ள கீழ் மருவத்தூர் மக்களுக்கு குடியிருப்பை ஒரு மாதத்தில் அகற்ற நோட்டிஸ் கொடுத்துள்ளனர். மதுராந்தகம் ஏரி நீர்பிடிப்பில் உள்ள 76 வீடுகளுக்கு நோட்டிஸ் கொடுத்து முதல்கட்டமாக 59 வீடுகளை அதிரடியாக அகற்றி யுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் குடிமனை கேட்டு போராடி வருகின்றனர். ஸ்டாலின் தான் வராரு! விடியல் தரப் போராரு! என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வறிய மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி இருட்டில் தள்ளி வருகிறது.

நிலம் அற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்று அறிவித்த திமுக பிறகு மனம் இருக்கிறது நிலம் இல்லை என்று கைவிரித்தது. இப்போது மக்கள் குடியிருக்கும் நிலத்தையும் ஈவிரக்கம் இல்லாமல் அகற்றி வருகிறது. ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலத்தையும் மீட்க திமுக அரசு தயாராக இல்லை.

-சொ.இரணியப்பன்