மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம்

ஏஐசிசிடியு உட்பட 10 மைய தொழிற் சங்கங்களும் துறைவாரி சம்மேளனங்களும்  இணைந்து ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அழைப்பு விடுத்திருந்த 2022 மார்ச் 28, 29 தேதிகளில், 48 மணி நேர 2 நாள் வேலை நிறுத்தம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத் திலும் பெரு வெற்றி பெற்றுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் அரசு ஊழியர்களும் துறைமுக தொழிலாளர்களும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நிகழ்விலும் மைய தொழிற்சங்கங்களின் அகில இந்திய தலைவர்கள் பங்குபெற்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நடைபெற்ற இரண்டு நாள் வேலை நிறுத்தம் நாடாளுமன்றத்துக்குள்ளும் ஒலித்தது. இகக (மாலெ), மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ்,திமுக, விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடத்திய சம்யுக்த் கிஸான் மோர்ச்சா தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கிராமப்புற பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

தமிழகத்தில் மார்ச் 28 வேலை நிறுத்த முதல் நாளன்று அரசு பேருந்துகளும் ஆட்டோவும் கிட்டத்தட்ட முழுமையாக இயங்கவில்லை. தமிழகத்தில் பெருநகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை தொழிற்சங்கத்தினரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்க அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அமைப்பு கள் என பலரும் ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் அணி திரண்டு கைதாகினர். காவல் துறையினர் திணறிப் போயினர்.

ஏஐசிசிடியு, சிஐடியு, ஏஐடியுசி ஆகிய சங்கங்கள் இணைந்து பீடி தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்ய கூட்டாக அறிவிப்பு கொடுத்து இருந்தன. அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலும் ஏஐசிசிடியு உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து கூட்டாக வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்து இருந்தன. மார்ச் 28 அன்று நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை அலுவலகம் முன்பு ஏஐசிசிடியு சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பல நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பேருந்து, வேன்களில் சென்று கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி,தஞ்சாவூர், புதுக் கோட்டை, திண்டுக்கல், தர்மபுரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட தலைநகர்களில் மார்ச் 28 அன்று நடைபெற்ற கூட்டு மறியல் போராட்டங்களில் ஏஐசிசிடியு மாநில, மாவட்ட தலைவர்கள் உட்பட பலரும் கைதாகினர். அதேபோல் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழி லாளர்கள் சங்க,அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில, மாவட்ட நிர்வாகிகளும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இகக(மாலெ) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் சந்திரமோகன் தோழர் ஆசைத்தம்பி, ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன், மாநில பொதுச்செயலாளர் தோழர் ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர்கள் தோழர் ரமேஷ், தோழர் பால்ராஜ், மாநிலச் செயலாளர்கள் தோழர் வேல்முருகன், தோழர் திருநாவுக்கரசு, அயர்லா மாநில பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன், ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், தோழர் ராஜன், தோழர் சிவராஜ், டாஸ்மாக் தொழிற் சங்க மாநில நிர்வாகி தோழர் பொன்னுத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

திட்டமிட்டபடி மார்ச் 29 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்திருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மணப்பாறையில் ஏஐசிசிடியு ஆர்ப்பாட்டத்தை கட்டமைத்தது. கூடுவாஞ்சேரியில் ஏஐசிசிடியு தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்களிலும் நூற்றுக் கணக்கானோர் பங்குபெற்ற மறியல் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரியில் மார்ச் 28 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஏஐசிசிடியு மின்வாரிய சங்க தலைவர் தோழர் முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமையில் இகக (மாலெ) மற்றும் இதர வெகுஜன அமைப்புகளின் தோழர்கள் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மார்ச் 28 அன்றும் கம்பத்தில் மார்ச் 29 அன்றும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா கலந்து கொண்டு கைதாகினர். மார்ச் 28 அன்று தஞ்சாவூர் ரயிலடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நகர செயலாளர் தோழர் ராஜேந்திரன் உட்பட பலர் கைது செய்யப் பட்டனர். தருமபுரி, கரூர் மாவட்டங்களில் ஏஐசிசிடியு சங்க மின்வாரிய தொழிலாளர்களும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங் களில் ஏஐசிசிடியு சங்க போக்குவரத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கோவையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் தாமோதரன் டாஸ்மாக் சங்க மாநில நிர்வாகி தோழர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.                  

மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா,பஞ்சாப், டெல்லி, ஜம்மு காஷ்மீர், சட்டிஸ்கர், பீகார், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரகாண்ட், புதுச்சேரி மாநிலங்களில் தேயிலைத் தோட்ட தொழி லாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், ஆஷா,அங்கன்வாடி பணியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், எஃகு ஆலை தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள், ரயில்வே தொழிலாளர் கள், தூய்மைப் பணியாளர்கள், சணல் ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் என பல பிரிவினரும் ஏஐசிசிடியு பதாகையின் கீழ் அணிதிரண்டு வேலைநிறுத்தத்தை பெரும் வெற்றி அடைய செய்திருக்கின்றனர்.

- தொகுப்பு: தேசிகன்