ஏப்ரல் 22, 2022 இகக(மாலெ) துவக்கப் பட்டதன் 53வது ஆண்டைக் குறிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மத்தியக் கமிட்டி, புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது, அனைத்துவித இடர்ப்பாடான நிலைமைகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்திற்கான, மக்களது உரிமைகளுக்கான யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் கட்சியின் உறுதிப்பாட்டை புதுப்பித் துக் கொள்கிறது. ஏப்ரல் 22, தோழர் லெனினது 152வது பிறந்த ஆண்டுமாகும். தோழர் லெனினுக் கும் கட்சியை துவக்கிய தலைவர்கள் அனை வருக்கும் நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர்களுக் கும் தியாகிகளுக்கும் நாம் நமது மரியாதைக்குரிய அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜூலை 28 அன்று தோழர் சாருமஜும்தார் தியாகியானதன் 50வது ஆண்டையும் டிசம்பர் 10 அன்று தோழர்கள் ஜகதீஷ்மாஸ்டர், ராமாயன் ராம் தியாகிகளானதன் 50வது ஆண்டையும் கடைப்பிடிக்க இருக்கி றோம்.

கோவிட் 19 பெருந்தொற்றாலும் அதை எதிர்த்துப்போராடுவது என்ற பேரால் திணிக்கப் பட்ட கொடூரமான பொதுமுடக்கத்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளை இருள் கவ்வியிருந்த்து. ஆனபோதும் இந்திய மக்களும் நமது கட்சியும் நமது அடிப்படை கோரிக்கைகள், உரிமைகள் மீது வெற்றிகரமான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம், பெரும்தொழில் குழும ஆதரவு விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறு மாறு மோடி அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி யிருக்கிறது. இப்போது, அனைத்துவகை பயிர்களுக்கும் வார சாகுபடியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் நியாயமான குறைந்த பட்ச ஆதார விலையைப் பெறுவது, உழைக்கும் மக்களது கடன்களை தள்ளுபடி செய்வது, வேலை பெறுவது, அனைத்து தொழிலாளருக்கும்  வேலை தேடுவோருக்கும் வாழ்க்கை ஊதியம் பெறுவது, விரல் விட்டு எண்ணக்கூடிய பெருங் குழும நிதிறுவனங்களுக்கு நாட்டின் பொதுச் சொத்துகளை விற்பதையும் கைமாற்றி விடுவதை யும் தடுத்து நிறுத்துவது ஆகியவற்றுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு தேர்தல் வெற்றியும் பாஜக வையும் சங் பரிவாரத்தையும் அவர்களது பாசிச தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு துணிச்சல் பெறவைக்கின்றன. 2019 வெற்றிக்குப்பிறகு, மோடி வெகு சீக்கிரமே அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கிவிட்டு ஜம்மு, காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக குறைத்துவிட்டார், அதை அடுத்து குடியுரிமை சட்டத்தையும் திருத்தினார். இப்போது, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்குப் பிறகு, பாஜக அல்லாத அரசாங்கங்களை கவிழ்க்கவும் பீகார் போன்ற மாநிலங்களில், வெகு காலமாக தனது முகமாக அல்லது முகக் கவசமாக நிதிஷ்குமாரை பயன்படுத்தி வந்த அங்கு, தங்கள் கட்டுப் பாட்டை இறுக்கிக் கொள்ளவும் முயன்று வருகிறது. வெறுப்பு, அச்சத்தை ஏற்படுத்தி, மக்களை மதவாத அடிப்படையில் அணிதிரளச் செய்யவும் வன்முறையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, எரிபொருள், உணவு பிற அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளின் விலைகளை பெருமளவு உயர்த்தி மக்கள் மீது பொருளாதாரப் போரையும் தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.

நெருக்கடிகள் தீவிரமடைந்தபோதிலும் தப்பித்துக் கொள்ளமுடியாத இந்தியாவின் தலையெழுத்து என பாஜகவின் ஆட்சியையும் ஆர்எஸ்எஸ் கருத்தியலையும் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக மக்களை மனச் சோர் வடையச் செய்தும் அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆனால், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு, நமது சுதந்திர இயக்கத்தின் சக்திமிக்க முற்போக்கு மரபையும் பகத்சிங், அம்பேத்கர், பெரியார் போன்றோர்களாலும் இவர்களுக்கு முந்தைய காலனிய எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போராளி களாலும் நமக்குள் பற்ற வைக்கப்பட்ட சுதந்திர, முற்போக்கு, சமத்துவ இந்தியா எனும் மாபெரும் கனவையும் நினைவுறுத்துகின்றன. இந்த மரபை முன்னெடுத்துச் செல்வதும் விடுதலை, நீதி, ஜனநாயகத்துக்கான யுத்தத்தை தீவிரப்படுத்தி பாசிசப் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்கும் பொறுப்பு  இப்போது நம் கையில் உள்ளது. இந்த நோக்கத்திற்காக நாம் அனைத்து, இடது, முற்போக்கு, போராடும் சக்திகளின் வலுமிக்க ஒற்றுமையை ஒன்றிணைத்திட வேண்டும், மக்களது நிகழ்ச்சிநிரலையும் போராட்டங் களையும் தேர்தல் அரங்கிலும் சக்திமிக்க அறுதியிடலாவதை நோக்கி வழிநடத்திட வேண்டும்.

இந்த வரலாற்றுக் கடமையை முன்னெ டுத்துச்செல்ல நாம் கட்சியை விரிவுபடுத்தியாக வேண்டும், வலுப்படுத்திட வேண்டும். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கட்சியின் 11வது காங்கிரசை பாட்னாவில் நடத்த உள்ளோம், அனைத்துவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த மக்களவைத் தேர்தலை 2024 துவக்கத்தில் எதிர் கொள்ளவிருக்கிறோம். இந்த கடமைகளுக்காக கட்சி முழுவதும் உள்ளார்வத்துடன் தயாரிப்பு களில் இறங்கியாக வேண்டும். பெரிய அளவில் பரிட்சார்த்த உறுப்பினர்களை சேர்ப்பதன்மூலம் கட்சியை புதிய பகுதிகளுக்கும் மக்களின் புதிய பிரிவினர் மத்தியிலும் விரிவுபடுத்திட வேண்டும்; கட்சிக் கமிட்டிகள், கிளைகளின் முன்னேறிய செயல்பாட்டின் மூலமும் கட்சிக் கட்டுப்பாட்டை கறாராக கடைப்பிடிப்பதன் மூலமும் கட்சி ஒற்றுமையையும் அதன் போராடும் சக்தியையும் வலுப்படுத்திட வேண்டும்; கட்சி ஏடுகள், மார்க்சிய இலக்கியங்களை அக்கறையோடு படிப்பதன்மூலம் கட்சியின் கருத்தியல்-அரசியல் மட்டத்தை உயர்த்தியாக வேண்டும். வெகு மக்களை தொடர்பு கொள்வது, வெகுமக்கள் போராட்டங்கள் நடத்துவதென்ற அடிப்படையில் நம்முடைய அன்றாட அடிப்படையிலான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே மேற்கூறிய கடமைகளை நிறைவேற்றும் திசையில் முன் சென்றாக வேண்டும்.

நமது அன்பிற்குரிய தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் செவ்வணக்கம்!

இந்தியா முழுவதும் இகக(மாலெ)வை, துடிப்புமிக்க, கடப்பாடுகொண்ட சக்திமிக்க பாசிச எதிர்ப்பு போராட்ட சக்தியாக நிறுவிடுவோம்!!

மத்தியக் கமிட்டி,

இகக(மாலெ) லிபரேஷன்