ஜுலை 04, 2022 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) CPIML சின்னசேலம் ஒன்றிய செயலாளர் தோழர் K.ஜான்பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் T. கலியமூர்த்தி உரையாற்றினார். தோழர்கள் K.ஜான்பாட்ஷா, T ராஜேந்திரன், அம்மாசி, ஏழுமலை, கோலமுத்து, கொளஞ்சிநாதன், கலாமணி உள்ளிட்ட தோழர்கள் மற்றும் திமிரெட்டிப்பாளையம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள்:-

  • கூட்டடி கிராமத்தில் வீட்டுமனை இல்லாதவர்கள் அரசு வழங்கும் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காததால் 2018 ஆம் ஆண்டிலிருந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிக்கூட்டம் நடத்தியும் இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை. விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் வீட்டுமனை வழங்கவேண்டும். 

 

  • கூட்டடி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 7/2-ல் 4 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தை வட்டாட்சியர் பார்வையிட்டு, யாரும் அத்துமீறி பிரவேசிக்கவோ அனுபவிக்கவோ கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது . இந்த இடத்தில் வட்டாட்சியர் பட்டா வழங்குவதாக உறுதியளித்ததின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.

 

  • கூட்டடி கிராம சர்வே எண் 6/4-ல் 3.40 ஏக்கரில் 1 ஏக்கர் சுற்றளவில் நல்லதண்ணி குளம் உள்ளது . இக்குளத்தின் நீரை குடிநீராக பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர், பிறகு ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.மீதம் உள்ள குளத்துப்புறம்போக்கு தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை பார்வையிட்ட வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறிவிட்டு தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

  • கூட்டடி கிராமத்தில் 50 குடும்பங்கள் பட்டா இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணமானவர்கள் இரண்டு மூன்று குடும்பங்கள் உள்ளார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும்.

 

  • திமிரெட்டிப்பாளையம் கிராமத்தில் மந்தைவெளி புறம்போக்கில் 60 ஆண்டுகளாக 30குடும்பங்கள் வீடு கட்டி குடியிருக்கும் மக்கள் பலமுறை மனுகொடுத்தும் (வீட்டுவரி ரசீது, மின்சார இணைப்பு ரசீது, குடிநீர் ரசீது உள்ளிடவை இருந்தும்) வட்டாட்சியர் பார்வையிட்டும் இதுவரை மனைட்டா வழங்கப்படவில்லை உடனே மனைப்பட்டா வழங்கிட வேண்டும்.

 

  • மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், அரசு பொறம்போக்கு பல இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும்.