போஜ்பூர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்! ராம்நரேஷ்ராம் 12-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!
1970 களில் துவங்கி பீகாரின், போஜ்பூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக திகழ்ந்தவர், தோழர்.ராம் நரேஷ் ராம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராகவும் அவர் திகழ்ந்தவர். பரஸ்ஜி என்றும் கட்சி வட்டாரத்தில் அறியப்பட்டவர்.
1924 ல் ஏக்வாரி கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ராம் நரேஷ் ராம், கம்யூனிச இயக்கத்தின் ஊழியராக செயல்பட்டு, இலட்சக்கணக்கான பீகார் மக்களின் அன்பை பெற்றவர். எழுச்சியுற்ற பீகார் நிலமற்ற ஏழை தலித்துகளின் இயக்கத்தின் சிற்பி, தலைவர் தோழர். ராம் நரேஷ்ராம். 1967 வரை CPI மற்றும் CPIM கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 'புரட்சிகர கம்யூனிஸ்ட் கடசி இல்லாமல், நிலபிரபுத்துவ வன்கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது' எனத் தெரிந்து கொண்ட பிறகு, அவரும் மாஸ்டர் ஜெகதீஷ் இருவரும் இணைந்து 1967 ல், பீகாரில் CPIML கட்சியை உருவாக்கினார்.
செங்கொடி இயக்கம், வர்க்கப் போராட்டம்
பற்றி எரிந்த பீகாரின் போஜ்பூர் சமவெளிகளில், நிலப்பிரபுக்களின் படையான ரண்வீர் சேனாவை நக்சல்பாரிகள் நிர்மூலமாக்கிய காலகட்டத்தில், ராம் நரேஷ்ராம் CPIML ன் முகமாக திகழ்ந்தார். சுதந்திரத்திற்கு முந்திய பீகாரில், பிரபலமான விவசாயிகள் தலைவராக திகழ்ந்த சுவாமி சகஜானந்தா சுவாமிகள் போன்றதொரு சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தவர்,
1995 முதல் 2010 வரையில், இகக(மாலெ) விடுதலை CPIML Liberation கட்சியின் பீகார் சட்டமன்ற குழுவின் தலைவராக திகழ்ந்தார்.
பீகார் சட்டமன்ற அரசியலில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை 'தொங்கும் சட்டமன்றம்" என்ற நிலை உருவான போது, "ஜெகஜீவன் ராமுக்கு பிந்தைய சிறந்த தலித் தலைவர் நீங்கள் தான், வாருங்கள்! " என முதலமைச்சர் பதவி ஏற்குமாறு முதலாளித்துவ கட்சி ஒன்று அழைப்பு விடுத்த போது, புரட்சிகர கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டில் நின்று, "இத்தகைய அழைப்புகள் எல்லாம் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழித்துக் கட்டவே செய்யும்!" எனத் தெள்ளத் தெளிவாக ஒதுக்கித் தள்ளியவர். சட்டமன்றத்திற்கு வெளியே பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்; அதற்கு ஆதரவாக சட்டமன்றத்திற்குள் போராட்டங்களில் ஈடுபட்டவர்.
தன் வாழ் நாளின் இறுதி நாட்கள் வரை, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பீகார் சட்டமன்றத்திற்கு வழக்கமாக சைக்கிள் ரிக்சாவில் மட்டுமே பயணம் செய்தவர், தோழர். ராம் நரேஷ்ராம்.
கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களுக்கு ஊழியர்களுக்கு முன் மாதிரி ராம்நரேஷ்ராம் !
தோழருக்கு புகழஞ்சலி! செவ்வணக்கம் !