தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் 

1. தமிழகம் மிக அதிகமாக நகரமயமான மாநிலமாக, தொழில்மயமான மாநிலமாக, ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், நவதாராளவாத கொள்கைகளை, கார்ப்பரேட் முதலாளி ஆதரவு கொள்கைகளை செயல்படுத்துவதிலும் முன்னணியில் இருக்கிறது. அப்படிப்பட்ட வளர்ச்சியால், தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது. மொத்த தனிநபர் வருமானம் அதிகம் என சொல்லப்படுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவ்வளவு வருமானம் வருகிறது என பொருள் கிடையாது. இதர மாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது, தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஓரளவு அதிகம் என்றாலும், மனித வளர்ச்சிக் குறியீடுகளில் சற்று உயர்ந்து இருக்கிற போதும், தமிழக வளர்ச்சி என்பது அதன் கூடவே, அதன் விளைபொருளாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கூட அதிகப்படுத்தி இருக்கிறது.

2. மொத்த மாநில வருமானத்தில் விவசாயத்தின் பங்கு, 2011 கணக்கின் படி, 8 சதவீதமாக குறைந்து போய் விட்டது. சமீபத்தில் அது 13 சதமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது செய்ய அவசியம் பொருளுற்பத்தி துறையின் பங்கு சற்று குறைந்து வந்தாலும் இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அது 7வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், சேவைத் துறையின் பங்கு 60 சதவீதத்திற்கும் மேல் அதிகமாகி இருப்பது கவனிக்கத் தக்கது. விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை 30 சதவீதத்திற்கும் குறைவாக கொண்டிருக்கிறது. 

3.இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கிற போது அறிய வரும் உண்மை என்னவென்றால், விவசாயம் லாபகரமில்லாத தொழில் ஆகிவிவசாயத்தை விட்டு வெளியேறி, இதர தொழில்துறை, நகர்ப்புறம் சார்ந்த வேலைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நகர்தலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டமும் கூட, நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதன் காரணமாகவும், நகர்ப்புற மயமாக்கத்தின் காரணமாகவும், மிகவும் அரிதானதாக மாறி வருகிறது. திமுக அரசு உருவாக்கிய நகர்ப்புற வேலைத்திட்டம் பெயரளவுக்கு இருக்கிறதே தவிர, அதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை சற்றும் தணிக்க முடியவில்லை. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் செயலாக்கப்படவில்லை. கிராமப் புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி நிகழும் நகர்தலை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு நகர்ப்புற தொழில்துறை வளர்வது என்பது மிகப்பெரும் சவாலாக முன்வந்து இருக்கிறது.

கிராமப் புறங்களில், விவசாயத் தொழி லாளர்கள் அல்லாத, அதே நேரத்தில் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத, கிராமப்புற தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆண்டு முழுவதும் விவசாய வேலை இல்லாத காரணத்தினால், அவர்களே கட்டடத் தொழிலாளர்களாகவும், குவாரி தொழிலாளர்க ளாகவும், வேறு பல வேலைகள் செய்யும் தொழிலாளர்களாகவும் பல அவதாரங்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இது போன்ற புதிய பல பிரிவு தொழிலாளர்களை அமைப்பாக்கி, இயக்கமாக்குவது முக்கிய கடமையாக முன்வந்திருக்கிறது.

அதே போல, நகர்ப்புறத்திற்கும் கிராமப் புறத்திற்கும் இடையிலான எல்லைக்கோடுகள் தெளிவற்றதாக மாறி வருகின்றன. அதன் காரணமாகவோ என்னவோ, சாதீய வேறுபாடுகளும், சாதீய ஏற்றத்தாழ்வுகளும், புதிய வடிவங்களிலான ஒடுக்குமுறைகளும் நகர்ப்புறங்களில் முன்னைவிட அதிகமாகி இருக்கின்றன.

4. பெண்கள் மீதான ஒடுக்குமுறை சற்றும் குறையவில்லை என்பது மட்டுமல்ல, அது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உழைப்பில் பென்களின் சதவீதம் 41 சதவீத்திற்கும் மேலாக இருப்பது அகில இந்திய சராசரியை விட அதிகம் ஆகும். விவசாயம் சாராத நவீன தொழில்துறைகளில் பெண்களின் பங்கு 61 சதவீதமாக இருக்கிறது. ஆனால், அதன் கூடவே, பெண்களின் மீதான வன்முறை, தாக்குதல்கள் அதிகமாகி இருக்கின்றன. தேசிய குடும்ப சுகாதார சர்வே 201516, பெண்களின் மீதான வன்முறையை நியாயமே என்று 70 சதவீத பெண்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றும் 63 சதவீத ஆண்கள் அதை நியாயப் படுத்துகிறார்கள் என்றும் சொல்கிறது. என்னதான் வளர்ச்சி என திராவிட இயக்கங்களால் கொண்டாடப் பட்டாலும், பெரியார் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடத்தி இருந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதை இது சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

5. அதேபோல, தலித் மக்கள் மீதான ஒடுக்கு முறையும் கூட மிக அதிகமாகி இருக்கிறது. தலித் மக்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டு வரும் மிகக் குறைந்த சில மேம்பாடுகளும் கூட அதற்குக் காரணமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், சாதீய ஏற்றத்தாழ்வுகள் சிதிலமடையாமல் தொடர்வது, தலித்துக்களுக்கு எதிரான வன்முறைகளும், ஆணவக் கொலைகளும் அதிகரிப்பது என்பன முதலாளித்துவ வளர்ச்சிக்கு அக்கம்பக்கமாகவே நிலப்பிரபுத்துவ மிச்சொச்சங்களும் வலுவாக தொடர்வதைச் சுட்டிக்காட்டுகின்றன. வளர்ச்சி பெற்றதாக சொல்லப்படும் தமிழகமும், வேறுபாடுகள் சில இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழக பொருளாதார வளர்ச்சி, உள்ளடக்கிய (inclusive) வளர்ச்சி என கொண்டாடப்பட்டாலும் அந்த வளர்ச்சி இயக்கப்போக்கிலிருந்து பெண்கள், தலித் மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினர் புறந்தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது என்பதையும்மறுத்திட முடியாது. 

6. கிராமப்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. விவசாய நிலங்கள் துண்டாடப்பட்டு, கிராமப்புற பொருளாதாரம் குறைந்த அளவு நிலங்களைக் கொண்ட சிறுவீதபொருளாதாரமாக மாறிவருகிறது. பல்லாயிரக் கணக்கான நிலங்களைக் கொண்ட பெருநிலப் பிரபுக்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், பழையவகை நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் தணிந்து இருந்தாலும், நவதாராளவாத கொள்கை அமுலாக்கப் பின்னணியில் புதிய வகை ஆதிக்க சக்திகள் கிராமப்புறங்களில் உருவாகி இருப் பதைக் காண்கிறோம். நீராதாரத்தைக் கட்டுப் படுத்துபவர்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்கள் அளிப்பதைக் கட்டுப்படுத்துபவர்கள் போன்ற புதியவகை ஆதிக்க சக்திகள் உதித்திருக்கின்றன. கோவில்கள், மடங்கள், ஆதீனங்களிடம் பெரு நிலக்குவிமானம் நிலவுகிறது. அவையும் கூட புதிய ஆதிக்க சக்திகளாக உருவாகி இருக்கின்றன. குலாக்குகள், அதிகார வர்க்கம், காண்ட்ராக்டர்களின் கூட்டு கிராமப் புறங்களில் சக்திவாய்ந்த ஆதிக்கமாக நிலவுவதையும் காணமுடிகிறது. சட்டப்படி, குத்தகை முறை ஒழிக்கப்பட்டதாக ஆளும் வர்க்கங்களால் சொல்லப்பட்டாலும், கணக்கில் வராத குத்தகைதாரர்கள் இன்னமும் ஒரு பெரிய பிரிவாக இருப்பதும், உரிமைகள் ஏதுமற்றவர் களாக இருப்பதும் மறுக்கப்பட முடியாதது.

7. சில குறிப்பிட்ட தொழில் துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பது உண்மைதான். தேசிய அளவிலான ஆட்டோ மொபைல் உதிரிப் பாக உற்பத்தியில் 35% திருப்பெரும்புதூரில் (சென்னை) நடைபெறுகிறது. கார் உற்பத்தி செய்யும், ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் சென்னையைச் சுற்றி அமைந்துள்ளன. மேற்கு மண்டலம் ஜவுளித் தொழில் மையமாக விளங்குகிறது. இப்போது அது திண்டுக்கல் மாவட்டம் வரை நீண்டுள்ளது. சமீபத்திய பருத்தி, நூல் விலை உயர்வு இந்த தொழில்களிலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் பகுதிகள் தோல் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தி மூலம் அரசுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தரும் பகுதிகளாக உள்ளன.

பொறியியல் துறை தொழிற்பேட்டைகளாக இருந்த அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகள் கூட இன்று தகவல் தொழில்நுட்ப பேட்டை களாக மாறி இருக்கின்றன. பழைய மாமல்லபுரம் சாலை முழுவதும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் பெருகி இருக்கின்றன. சென்னை பெருநகரம், சர்வதேச மூலதனத்தின் மையமாக திகழ்கிறது. அது மட்டுமல்ல, ஸ்விக்கி, ஓலா, ஊபர் இன்ன பிற என புதிய சேவைத் துறைகள்,சேவைத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செலுத்துகின்றன. எல்லா வர்த்தக பரிவர்த்தனைகளும் எண் கணினிமயமாகிவிட்ட சூழலில் அதற்கான தொழில் நுட்ப ஸ்டார்ட் அப் (புதிதாக துவங்கும்) கம்பெனிகளும் கூட சேவைத் துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. ஷாப்பிங் மால்களும், சினிமா மால்களும் சேவைத் துறை வளர்ச்சியின் அடையாளங்களாக திகழ்கின்றன.

சென்னையை தாண்டி கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என்று தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் துவங்கப்பட்டு இரண்டாம் நிலை நகரங்கள், மூன்றாம் நிலை நகரங்கள் என்று பல அடுக்கடுக்கான நகரங்களில் தொழில்நுட்ப கம்பெனிகள் தோன்றி இருக்கின்றன. பல்லாயிரம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டாலும் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மூலதன அடர்த்தி வாய்ந்த தொழில்கள் துவங்கப்படுகின்றனவே தவிர, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்கள் துவங்கப் படுவதில்லை.

8. பொலிவுறு நகர் திட்டங்களினால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரும் உள்கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பாலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி இந்த திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தின் இன்னொரு முக்கிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் உள்ளது. அதனை மூடுவதாக திமுக அரசு கொடுத்த பழைய வாக்குறுதியை காப்பாற்றவில்லை. தமிழக மக்களின் ஏகோபித்த அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு தங்கள் விவசாய நிலங்களை கொடுத்த மக்களுக்கு இதுவரை அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை மட்டுமல்ல, அகில இந்திய என்பது அளவில் அன்மையில் அங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் போது பொறியியல் பட்டதாரி பிரிவில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை என்ற கோரிக்கை புறக்கணிக்கப் படுகிறது. திருச்சியில் பி ஹெச் இ எல் நிறுவனத்திலும் பெரும்பாலும் வட மாநிலத்தினரே நிரந்தர வேலையில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மத்திய அரசு துறையான ரயில்வேயில் இதே நிலை தொடர்கிறது. பிஎச்இஎல் நிறுவனத்தை நம்பி துவங்கப்பட்ட துணை நிறுவனங்கள் இன்று நலிந்து போய்விட்டன. அகில இந்திய அளவில் டெண்டர் விடப்பட்டு, பிற மாநிலங்களுக்கு ஆர்டர்கள் செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

9. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான காற்றாலைகள் நிறுவுவதற்கு உகந்த இடமாக இருப்பதால் அவை காற்றாலைகள் மண்டலமாக மாறி வருகின்றன. பிரமாண்டமான நான்கு வழிச் சாலைகள் பயண நேரத்தை குறைக்கின்ற அதே வேளை, மற்ற மாநிலங்களை விட வரிவசூல் மையங்கள் அதிகமாக இருப்பதாலும் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதாலும் பயணிப்போருக்கு பெரும் சுமையாக உள்ளது. நான்கு வழி, எட்டு வழிச் சாலைகள் எல்லாம் பெருமூலதனத்திற்கு உதவுவதற்காகத்தானே தவிர, கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கத்தானே தவிர, மக்கள் நலன் சார்ந்தவை அல்ல. கொரோனாவுக்கு பிறகு சுற்றுலாத்துறையில் மீட்சியை காண முடிகிறது. சேவை துறையின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தலைநகர் சென்னையில் சினிமாத் தொழிலும், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பஸ், லாரி பாடி பில்டிங் தொழிலும் தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதிய மோதல்களை தவிர்ப்பதற்கென்றே அறிவிக்கப்பட்ட நாங்குநேரி தொழிற் பூங்கா துவங்கப்படவேயில்லை.

10.வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரும் பிரச்சனையாக முன்வந்திருக்கிறது. அதோடு கூடவே, தரமான வேலை என்பது இன்னும் அரிதாகி வருகிறது. முறைசார் தொழில்களில் முறை சாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக, 90 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. அமைப்பாக்கப்பட்ட துறை தொழில்களில் பணியாற்றும் முறைசார் தொழிலாளர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு எழுத்துப் பூர்வமான பணிநியமன ஆணைகள் கிடையாது என கூட ஒரு ஆய்வு கூறுகிறது. அவர்களில் பெரும்பாலோருக்கு குறைந்தபட்ச ஊதியமும் கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

11.வீடு மற்றும் வீட்டுமனை சார்ந்த கோரிக்கைகள் பற்றியெரியும் கோரிக்கைகளாக, தமிழகம் முழுவதும், நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஏதுமின்றி, மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. நகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்கள் காலங்காலமாக வாழும் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

12.நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக, சுற்றுச் சூழல் குறித்த பிரச்சனைகளும் கூட, பூதாகரமாக வளர்ந்து வருகின்றன. தண்ணீர் முதல் காற்று வரை அனைத்தும் மாசு பட்டு வருகின்றன. நவீன சந்தைப் பண்டங்களாக உருவெடுத்து வருகின்றன. அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கு கேடான தொழில்மயமாக்கம் நிகழ்ந்து வருகிறது.

13.கல்வியில், குறிப்பாக உயர் கல்வியில், சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை அதிகம் என்றாலும், அதில் பெரும்பான்மை தனியார் கல்வி நிறுவனங்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை. தமிழகத்தில் உயர்கல்வி முழுக்க முழுக்க தனியார் ஆதிக்கத்தில், கல்வி மாபியாக்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அதன் காரணமாக, கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தனியார் கல்விக் கூடங்களில் பெண் மாணவர்கள் மீதான பாலியல் வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

14.பொது சுகாதார கட்டமைப்பு தமிழகத்தில் விரிவாக உருவாக்கப் பட்டிருந்தாலும், மருத்துவ மனைகள் கார்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. கார்ப்பரேட் மருத்துவமனைகளை தமிழகம் தான் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டு மருத்துவ படிப்பின் ஆதாயங்களை கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டன. கார்ப்பரேட் முதலாளிகள் சார் வளர்ச்சியே மருத்துவத் துறையின் மேலோங்கிய அம்சமாக இருக்கிறது.

 

15.குலாக்குகள் சார்ந்த விவசாயம், கார்ப்பரேட்டுகள் தலைமை தாங்கும் முதலாளித்துவ வளர்ச்சி என்பதுதான் தமிழகத்தின் வளர்ச்சி போர்த்தந்திரமாக இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பாதையில் மாற்றம் ஏதுமில்லை.

காவிப்பாசிச அபாயம்

16.பாராளுமன்றத்தில் ஒரு எம்பி கூட இல்லாததாலும், மாநில சட்டமன்றத்தில் நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாலும், பிஜேபிக்கு மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு இருக்கிறது என பார்த்த மாத்திரத்திலேயே சொல்ல முடியும். தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆழமான வேர்கள் காரணமாகவும், முற்போக்கு சமூக விழுமியங்களின் ஆற்றல் வாய்ந்த செல்வாக்கு காரணமாகவும், பிஜேபி, அதன் பிற்போக்கு சமூகப் பார்வை மற்றும் இந்தி ஆதிக்கம் கொண்ட இந்துத்துவா கருத்தியல் காரணமாக தமிழ்நாட்டு மண்ணில் அது ஒருபோதும் கால் பதிக்க முடியாது என கருதப்பட்டது. தேச விடுதலைப் போராட்ட மரபு, போர்க்குணமிக்க விவசாய, தொழிலாளர் போராட்டங்களை அடிப்படையாக கொண்ட இடதுசாரி மரபு, நவதாராளவாத எதிர்ப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்ட மரபு ஆகியனவும் அதற்குக் காரணமாக அமைந்தன எனலாம். ஆனால், தமிழ் நாட்டில் பிஜேபியின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் கருத்தியல் செல்வாக்கை காணத் தவறுவோமேயானால் அது மிகப் பெரும் பிழையாகி விடும். குழுக்களாக பிளவுண்டு கிடக்கும் அஇஅதிமுக, மற்றும் இதர பல திமுக எதிர்ப்பு கட்சிகளின் மீது சவாரி செய்து கொண்டு, காவி பாசிச முகாம் தமிழக மண்ணில், சத்தமின்றி ஆனால் உறுதியாக, தனது கால்களைப் பதித்து வருகிறது.

17.அரசியல் கூட்டணிகள் மட்டத்தில் பல்வேறு தந்திரங்களை கையாள முயற்சிக்கும் அதே வேளையில், சங்கப் பரிவாரத்தின் தற்போதைய கவனம் என்பது தனது இருத்தலுக்கு ஒரு நியாயம் தேடுவதாகவும், தமிழ்ச் சமுதாயத்தின் கருத்தியல் சூழலை மாற்ற முயற்சிப்பதாகவும் உள்ளது. அதனை நோக்கமாக கொண்டு, அவர்கள் காந்தியோடு வேறுபாடு கொண்ட காங்கிரஸ் தலைவர் வஉசி (வஉ சிதம்பரனார்) முதல் மிகப் பெரும் கவிஞனும் சுதந்தரப் போராட்ட வீரருமான பாரதியார் வரை அனைத்து தமிழ் நாயகர்களையும் தனதாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனாலும், மதவாத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுவாதத்தையும், பிராமனீயத்திற்கு எதிராக சமூக நீதியையும், ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்னுரிமையையும், மனுஸ்மிருதியின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் நின்ற பெரியாரும் அவரது முற்போக்கு மரபுகளும் அவர்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றன. தமிழகத்தில் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் மிக வலுவாகவும் ஆழமாகவும் இருந்த ஒரு பின்னணியில், அதற்கு எதிரான ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் ஒரு அங்கமாக,பெயர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்தசாதிய அடைமொழிகளை வீசி எறிந்த முதல்மாநிலம் தமிழ்நாடுதான். 

18.காலப்போக்கில், பகுத்தறிவுவாத, சமூக நீதி இயக்கத்தின் தீவிரத் தன்மை குறைந்து வருவதைக் காண்கிறோம். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆர் எஸ் எஸ் தனது எதிர்ச் சொல்லாடல்களைக் கொண்டு தலையிட எத்தனிக்கிறது. விநாயக சதுர்த்தி மற்றும் அது போன்ற திருவிழாக்களை கொண்டாடுவதை ஊக்கப்படுத்திட முயற்சிக்கிறது. கோவில் கமிட்டிகளைக் கைப்பற்றிடவும், தனது சொந்த நலன்களுக்கு, வெறுப்பு அரசியல் நலன்களுக்கு பயன்படுத்திடவும் முயற்சிக்கிறது. தனியார் கல்விக் கூடங்களை ஆர்எஸ்எஸ்சின் மதவெறி பாசிச பயிற்சிக் (ஷாகா) கூடங்களாகப் பயன்படுத்திட முயற்சிக்கிறது. உணர்ச்சிப் பிழம்பான அணிதிரட்டல் மையமான வட இந்திய நாயகன் ராமரைப் போல தமிழகத்தின் பழம்பெரும் கடவுள் முருகனைப் பயன்படுத்திட முயற்சிக்கிறது. இத்தகைய எதிர்க் கருத்தியல் சொல்லாடல்களையும், அதனோடு மூர்க்கமான சமூக அணிதிரட்டலையும் (சமூகப் பொறியியலையும்), அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதையும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தனது சூத்திரமாக கொண்டிருப்பது போல தெரிகிறது. காந்தி ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் பேரணிகள் நடத்திட திட்டமிட்டி ருந்தது ஆர் எஸ் எஸ். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை, உளவுப் பிரிவு அறிக்கைகளை காரணம் காட்டி மாநில அரசு அனுமதி மறுத்தது. இப்போது,ஆர் எஸ் எஸ் பேரணிகளை நவம்பர் 6 அன்று நடத்திட அனுமதி அளிக்க வேண்டுமென மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், இந்தி இந்து இந்துஸ்தான் உருவாக்குவதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி, மொழிவாரி மாநிலம் உருவாவதை எதிர்த்த சங்கப் பரிவாரம், தமிழகத்தின் மீது இந்தித் திணிப்பை ஆதரித்த, இன்றும் சமஸ்கிருதத்தை, இந்தியைத் திணித்திட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சங்கப் பரிவாரம், அதற்கு எதிரான மரபும், போராட்டமும் கொண்ட தமிழ் மண்ணில் காலூன்றத் தொடங்கி விட்டது என்பதுதான்.

 19.இதர கட்சிகளின் நிலவரமும், சமூக சக்திகளின் அணிசேர்க்கையும், அரசியல் சூழலும் கூட பிஜேபிக்கு ஒரளவு சாதகமாகவே இருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் க்கு இடையிலான சண்டையில் மூழ்கிக் கிடக்கிறது அஇஅதிமுக. அதன் விளைவாக, தமக்கு பொருத்தமான பதவி கிடைக்கும் என்று நம்பி அஇஅதிமுக தலைவர்கள் பலர் பிஜேபியை நோக்கி சென்று கொண்டிருக் கிறார்கள். ஊடகங்களில் ஒரு பிரிவினரின் ஆதரவோடு தான், கண்ணுக்கு காணத்தக்க ஒரு எதிர்க் கட்சியாக பங்காற்றிட பிஜேபி முயற்சிக்கிறது. பாமகவும் கூட ஒரு நல்ல எதிர்காலக் கனவோடு பிஜேபி அஇஅதிமுக முகாமிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியின் காரணமாக சில தொகுதிகளை வென்றிருந்தாலும் கூட காங்கிரஸ், ஒரு வலுவான மாநிலத் தலைவர் யாருமில்லாத, பிளவுண்டு கிடக்கும் கட்சியாக இருக்கிறது. இத்தகைய ஒரு பின்னணியில், காங்கிரசின் சமூக அடித்தளத்தை வென்றிடுவதையும் கூட தனது குறியாக சேர்த்துக் கொண்டிருக்கிறது பிஜேபி. காந்தி ஜெயந்தி அன்று, காந்தியைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், மாநிலம் முழுவதும் 52 இடங்களில் பேரணிகளை நடத்திடும் ஆர்எஸ்எஸ்சின் முயற்சி கூட, காங்கிரசின், மிச்சமிருக்கும் கொஞ்சநஞ்ச அடித்தளத்தை, பிராமண மற்றும் பிராமணர் அல்லாத மேல் சாதி அடித்தளத்தை வென்றெடுப்பதற்கான ஒரு முயற்சியும் ஆகும் எனலாம். சங்கப் பரிவாரத்தால் உந்தித் தள்ளப்பட்டு, மதுரையில் ஆதீனங்கள் நடத்திய மாநாடும் கூட, திமுகவை இந்து விரோத அரசு என சித்தரிக்க முயற்சிக்கும் அதே வேளையில், திமுகவின் பிராமணர் அல்லாத மேல் சாதி அடித்தளத்தை, பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது.

பல ஆண்டுகள் முயற்சி செய்து, தலித் மக்களின் ஒரு உட்பிரிவான, தென் தமிழ் நாட்டில் எண்னிக்கையில் அதிகமான, மல்லர்கள் (முன்னாள் பள்ளர்கள்) என அழைக்கப்படும் ஒரு பிரிவினரின் மேடுக்குடியினர் மத்தியில் சங்கப் பரிவாரமும் பிஜேபியும் செல்வாக்கு பெற்றிருக்கின்றன. சொல்லப் போனால், அந்த சாதியினர் கடந்த கால அரச பரம்பரை என்று கூறி, எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என சில தலித் அமைப்புக்களை அறிவிக்கச் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சத்திரிய குலத் தோன்றல்களாகவும், கடவுள் இந்திரன் வழி வந்தவர்களாகவும் உரிமை கொண்டாடும் 'தேவேந்திர குல வேளாளர்' எனும் பெயரில் ஏழு தலித் சாதிகளை சேர்த்து, அவர்களுக்கு சட்டரீதியான வழங்குவதில் மோடி அரசும் அங்கீகாரம் முன்னள் அஇஅதிமுக மாநில அரசும் உதவின. ஆனால், புத்திசாலித் தனமாக, தேவேந்திர குல வேளாளர் என இப்போது அழைக்கப்படும் அந்த 7 சாதிகளையும் பட்டியலினத்திலிருந்து நீக்கிடவில்லை.

தமிழகத்தின் வர்த்தக சமூகமான, நாடார் சமூகத்தின் மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சங்கப் பரிவாரத்துக்கு ஒரு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அஇஅதிமுகவின் உதவியுடன், மேற்கு தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தியான, எழுந்துவரும் முதலாளித்துவ சக்தியான, பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள, முன்னாள் முதல்வர் எடப்பாடி சார்ந்த சாதியுமான, கவுண்டர்கள் மத்தியிலும் சங்கப் பரிவாரம் பிஜேபி செல்வாக்கு பெற்று வருகிறது. மேற்கு தமிழ்நாட்டில், கிராம நகரப் பகுதிகளில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மத்தியிலான செல்வாக்கை உறுதிப்படுத்தும் நோக்குடன் பிஜேபி, சிறுதொழில் முனைவோர் கடன் வசதியையும் தேர்ந்தெடுத்து,  தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த மண்டலத்தின் தலித் மக்களில் எண்ணிக்கை அளவில் கணிசமான, தூய்மைப்பணி செய்யும் சாதியான, அருந்ததியர் மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் பிஜேபி தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தனது சமூக அணிசேர்க்கையை தீவிரப்படுத்துவதை நோக்கமாக கொண்டுதான் அதே சமூகப் பின்னணி கொண்ட எல் முருகனை பிஜேபியின் மாநிலத் தலைவராகவும், தற்போதைய ஒன்றிய அமைச்சராகவும் வைத்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

20.மோடி அரசாங்கம் அதிகார மையப்படுத்துதல் என்பதை, கூட்டமைப்பு வரையறையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு கருவியாக, தமிழகத்தில் தனது தலையீட்டை அதிகரித்திடவும் செல்வாக்கை அதிகப் படுத்திடவுமான ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. ஜிஎஸ்டி மூலம் நிதி கூட்டமைப்புவாத தத்துவத்திற்கு எதிராக தாக்குதல் தொடுப்பது முதல் நீட், க்யூட், தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற நடவடிக்கைகள் மூலம் கலாச்சார மற்றும் மொழி கூட்டமைப்புவாத தத்துவத்துக்கு எதிராக தாக்குதல் தொடுப்பது வரை, பிஜேபி அனைத்து விதங்களிலும் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அதிகாரிகளை நியமிப்பது கூட கடுமையாக அரசியல்மயப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்சின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரிகள் மாநில அரசு நிர்வாகத்தினுள் திட்டமிட்டு புகுத்தப் படுகின்றனர். துணிச்சலான, தலைவணங்காத அதிகாரிகள் மத்திய பணிகளுக்கென மாநிலத்துக்கு வெளியில் அனுப்பப்படுகிறார்கள். கவர்னரும் கூட ஒன்றிய பிஜேபி அரசின் ஏஜெண்டு போலவே செயல்படுகிறார். அரசியலமைப்பு ரீதியாக வழங்க வேண்டிய ஒப்புகைகளை நிறுத்தி வைக்கிறார். சமஸ்கிருதத்தையும் பிற்போக்கு இந்துத்துவா கருத்துக்களையும் பரப்பி வருகிறார். சமீபத்தில் கூட சங்கப் பரிவாரத்தின் சமூக பொறியியல் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக தலித் மக்களின் தாழ்த்தப்பட்ட நிலை பற்றி நீலிக்கண்ணீர் வடித்து இருக்கிறார். 

திமுக அரசு நமது அணுகுமுறை

21.கூட்டமைப்புவாத தத்துவத்தை காப்பதில் திமுக செயலூக்கம் மிக்கதாக இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட்டுகள் முன்னால் பணிந்து போவதில் பிஜேபியோடு போட்டி போடுகிறது. இன்றைய தினம், இதர பல எதிர்க் கட்சிகளிடம் காணப்படுவது போலவே, தான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என காட்டிக் கொள்ளும் முயற்சியின் போக்கில், அத்தகைய உணர்வுகளோடு சரிக்கட்டிக் கொள்ள (சமரசம் செய்து கொள்ள) முயற்சிக்கும் அணுகுமுறை திமுகவிடமும் காணப்படுகிறது. பிஜேபியை நேருக்கு நேராக எதிர்த்தால் அது மேலும் வளர்ந்திட இடம் கொடுத்தது போல ஆகிவிடும் என்கிற பெயரில் தற்காப்பு நிலையை கடைபிடிக்கிறது. உதாரணத்திற்கு, கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்கிற பெயரில் குத்தகைதாரர்களை அகற்றி வருகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிரான முனைப்பு என்பது ஏழை மற்றும் வலுவற்ற மக்களின் குடிசைப் பகுதிகளை அகற்றுவது என்பதாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், பணம் படைத்தவர் களும், செல்வாக்கு படைத்தவர்களும் பல்வேறு வழிகளில் தப்பித்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கோவை, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் காவல் துறை நிர்வாகம் கூட காவிமயமாகி இருப்பதைக் காண முடிகிறது. காந்தி நினைவு நாளில் கோட்சேயை விமர்சித்ததற்காக, ஆர்எஸ்எஸ் பயிற்சிகளை கல்வி நிலையங்களில் நடத்தி உள்ளங்களில் நச்சை விதைக்கக் கூடாது பிஞ்சு என கூறி போராடியதற்காக முற்போக்காளர்கள் கைது செய்யப் படுகிறார்கள். சமீப காலங்களில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து இருப்பது அனைவரும் அறிந்ததுதான். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தயாராக இல்லை.

22.தனது கார்ப்பரேட் ஆதரவு முன்மாதிரி யோடு நலத்திட்டக் கூறுகளை கலப்பதன் மூலம் திமுக, கார்ப்பரேட் மாதிரியின் எதிர்விளைவு களை குறைத்திட அல்லது சரிக்கட்டிட நிச்சயமாக முயல்கிறது. ஆனால், நலத் திட்டங்களை, தனியார்மயமாக்கம் மற்றும் இதர கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிரான காப்பீடுகளாக பயன்படுத்த விரும்புகிறது. பொருளாதார அர்த்தத்தில், நவதாராளவாதத் தையும் சேமநலவாதத்தையும் இணைக்கிற பொருளாதார அணுகுமுறையைத் தான் திராவிட மாடல் என பரப்புரை செய்கிறது. அரசியல் பொருளில், அதனை சுயமரியாதை, சமூக நீதி, கூட்டமைப்பு வாத தத்துவம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்கிற சொல்லாடலுடன் இணைத்திட முயற்சிக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தனது சொந்த கல்விக் கொள்கை மூலம் எதிர்க்கிறது. சமஸ்கிருதம் மற்றும் இந்தியைத் திணிப்பதற்கான பிஜேபியின் முயற்சிகளுக்கு எதிராக, மொழிகலாச்சார ரீதியில் பன்முகப்பட்ட தன்மையை ஆதரிக்கிறது. ஒட்டு மொத்த பொருளில், மோடி அரசை, அதன் பாசிச தாக்குதலை, மூர்க்கத்தனமான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எதிர்ப்பதில் இதர மாநில மற்றும் எதிர்க் கட்சிகளோடு ஒப்பிடுகையில் திமுக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

பாசிச மோடி அரசு எதிர்ப்பு, தமிழக உரிமைகள் பாதுகாப்பு போன்ற விசயங்களில் திமுக நிலைப்பாடுகளோடு நாம் உடன் பட்டாலும், சேர்ந்து செயல்படத் தக்க வாய்ப்பு களைப் பரிசீலித்தாலும், கார்ப்பரேட் ஆதரவு, நவதாராளவாத கொள்கை செயலாக்கம் போன்றவற்றை நாம் தீவிரமாக எதிர்த்திட வேண்டும். உண்மையில், கார்ப்பரேட் எதிர்ப்பு, ஒன்றிய மோடி அரசு எதிர்ப்பு அலையின் காரணமாகவே திமுக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த மக்கள் தீர்ப்புக்கு புறம்பாக அது செல்லும் போது நாம் எதிர்க் கட்சி பாத்திரத்தை ஆற்றிட வேண்டும். இதுவே திமுக அரசு குறித்த நமது அணுகுமுறையாக இருக்கும். 

பாசிச எதிர்ப்பு போராட்டம்

23.மாநிலத்தில் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தை வளர்த்தெடுப்பது என்பது அவசியமான ஒன்றாக, பாசிச சக்திகள் வளர்ந்து வரும் புறநிலை அரசியல் யதார்த்தத்தின் பின்னணியில் மிகமிகத் தேவையான ஒன்றாக முன்வந்து இருக்கிறது. இந்தப் பின்னணியில், எல்லா அரசியல் சக்திகளையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும், அவற்றின் செயல்களில் இருக்கும் வேறுபாடுகளையும் கணக்கில் கொண்டு, முதன்மையான மக்கள் விரோத அரசியல் சக்தியைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்துவதற்காக, வலுப் படுத்துவதற்காக, மக்கள் நலனை உயர்த்திப் பிடிப்பதற்காக, இதர ஒத்த கருத்துள்ள சனநாயக, முற்போக்கு சக்திகளையும் திரட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. முதன்மை முரண்பாடு, இரண்டாம் நிலை முரண்பாடு போன்றவற்றையும் கூட கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது.

நாம் ஒரு வலுவான சக்தியாக உருப்பெறும் போதுதான் எந்த ஒரு சிறந்த செயல்தந்திரமும் வெற்றி பெற முடியும். அத்தகைய வெற்றிக்கு நமது வெகுமக்கள் செல்வாக்கை விரிவாக்குவது, குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டிருப்பது, தீவிர செயலூக்கத்தைக் கொண்டிருப்பது என்பது முன்நிபந்தனை ஆகும். அதே போல, மாறி வரும் சூழலுக்குப் பொருத்தமாக தகவமைத்துக் கொள்கிற விதத்திலான துடிப்புமிக்க செயல் தந்திரமும் அவசியமானது ஆகும்.

நமது வெகுமக்கள் செல்வாக்கை விரிவு படுத்துவது என்பது இரண்டு மட்டங்களில் கண்ணுக்குத் தெரிகிறவாறு இருக்க வேண்டும். ஒன்று நமது வெகுமக்கள் உறுப்பினர் பலத்தை லட்சக் கணக்கிலும், கட்சி உறுப்பினர் பலத்தை ஆயிரக் கணக்கிலும் அதிகரித்திட வேண்டும். மாவட்ட மட்ட அணிதிரட்டல் பலத்தை சில ஆயிரங்களாக உயர்த்திட வேண்டும். இரண்டாவதாக, வெகுமக்கள் செல்வாக்கு என்பது அரசியல் செல்வாக்காக, சட்டமன்றத் தொகுதி வாக்குகளாக மாற வேண்டும். அப்போதுதான் இதர அரசியல் சக்திகளின் கவனத்தை நாம்ஈர்க்க முடியும். அப்போதுதான் நமது அரசியல் செயல்தந்திரம் பொருள் உள்ளதாகவும், வெல்லக்கூடிய பலம் பெற்றதாகவும் மாறும்.

24. திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஅய்எம் போன்ற கட்சிகள், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் அரசில் பங்கேற்க வில்லை. பிஜேபி நிகழ்ச்சிநிரலுக்கு, பாசிச அபாயத்திற்கு எதிராக எதிராக இடதுசாரி, முற்போக்கு முகாமின் சுதந்தர பாத்திரத்தை அதிகரித்திடுவதற்கான தேவை இருக்கிறது. அதே நேரத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடவும், உழைக்கும் மக்களின் விருப்பங்கள், தேவைகளுக்கு செவிசாய்த்திடவும் திமுக அரசைப் பொறுப்பாக்கிட வேண்டும்.

25.இந்த திசையில், பல்வேறு முனைகளிலான தனது முன்முயற்சிகளையும் அமைப்பையும் சிபிஅய்எம்எல் விரிவுபடுத்தி வருகிறது.அந்த திசையில், விடுதலைச் சிறுத்தைகள்,சிபிஅய், சிபிஅய்எம், மக்கள் அதிகாரம்,அம்பேத்கரிய, பெரியாரிய நீரோட்டங்கள்,பல்வேறு சனநாயக சக்திகள் மற்றும் மக்கள் போராட்டங்களின் ஆதரவைத் திரட்ட விழைகிறது.

26.தமிழகத்தில், திமுக ஆட்சியிலிருக்கிற பின்னணியில், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளாக இருக்கிற பின்னணியில், எதிர்க் கட்சிக்கான வெளி வெற்றி டமாக இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பிட, தனது கூட்டாளிகளான, அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கரம் கோர்த்துக் கொண்டு, மூர்க்கத்தனமாக முயற்சித்து வருகிறது சங்கப் பரிவாரம். இத்தகைய பின்னணியில், ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி, இடதுசாரி எதிர்க் கட்சி பாத்திரத்தை ஆற்ற வேண்டிய கடமை, நமது கடமையாக, சிபிஅய்எம்எல் கட்சியின் கடமையாக முன்வந்து இருக்கிறது.

27.தமிழகத்தில் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முதன்மையான போராட்டமாக சிபிஅய்எம்எல் கட்சி கருதுகிறது. இந்தி பேசும் மக்கள் வாழ் பகுதிகளில் பிஜேபிக்கு எதிரான பெரும் சவாலாக எழுந்து, போராட்டங்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் சிபிஅய் எம்எல் கட்சி, தமிழகத்திலும் காவிப் பாசிசத்திற்கு சவால் விடுப்பதை தனது கடமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் திசையில் தனது அரசியல் கடமைகளை வகுத்து வருகிறது.

2024 தேர்தலில் காவிப் பாசிசத்தை தோற்கடித்திட, ஆட்சியை விட்டு அகற்றிட சிபிஅய்எம்எல் கட்சி உறுதி ஏற்கிறது. தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமல்லாமல், தமிழ் மண்ணிலிருந்தும், இந்திய மண்ணிலிருந்தும் காவிப் பாசிசத்தை ஓடஓட விரட்டி அடிக்கும் வரை காவிப் பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள் ஓயாது, ஓய விட மாட்டோம் என சூளுரைக்கிறது சிபிஅய்எம்எல் கட்சி. 

அத்தகைய ஒரு அரசியல் கடமையை, பாசிச எதிர்ப்புக் கடமையை நிறைவேற்றிட, பாசிச எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு அரசியல் சக்திகள் அனைத்தோடும் கரம் கோர்ப்போம். 

அதே வேளையில், அத்தகைய கடமையை நிறைவேற்றிடத் தக்க ஆற்றல் பெற்ற கட்சியாக சிபிஅய்எம்எல் கட்சியை வளர்த்திட உறுதி ஏற்போம். 

மேற்கண்ட கடமையை நிறைவேற்றிடும் நோக்கில் கீழ்க்காணும் போராட்ட திட்டத்தையும் சிபிஅய்எம்எல் கட்சி முன்வைக்கிறது.

மக்கள் போராட்டத் திட்டம்

1.மாநிலத்தில் காவிப் பாசிச சக்திகளை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்திட போராடுவோம்!

2.தமிழ்நாட்டின், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு,முற்போக்கு மாண்புகளை, மரபுகளைக் காத்திட, அதற்கு எதிரான பார்ப்பனிய பாஜக கும்பலை முறியடித்திட போராடுவோம்!

3.கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக, கிராமப்புற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடுவோம்! கார்ப்பரேட் வழி வளர்ச்சிக்கு மாறாக மக்கள் சார் வளர்ச்சிக்காக, வேலைவாய்ப்பை உருவாக்கும், சுற்றுச் சூழல் காக்கும், மக்கள் சார் தொழில்மயமாக்கத்திற்காகப் போராடு வோம்!

4.அதிகார வர்க்க நலன் சார்ந்த, பணம் படைத் தோர் நலன் சார்ந்த, ஆதிக்க சக்திகள் நலன் சார்ந்த நகரமயமாக்கத்திற்கு எதிராக, மக்கள் நலம் பேணும் நகரமயத்திற்காக, நகர் மீதான மக்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக, உழைக்கும் மக்கள் வாழுமிடங்களை, குடிசைகளை அகற்றுவதற்கு எதிராகப் போராடுவோம்!

5.நிலங்களை பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் கொள்கைகளுக்கு மாறாக, நிலக் குவிமானத்துக்கு எதிராக, முற்போக்கு நிலச் சீர்திருத்தத்துக்காக, நில மறுவிநியோகத் திற்காக, பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக போராடுவோம்!

6.தொழிலாளர்கள், விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் உரிமை, கவுரவம், அதிக கூலி, வாழ்க்கை மேம்பாட்டுக்காக போராடு வோம்!

7.தலித் மக்கள், பெண்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதலுக்கு எதிராக, சாதி ஒழிப்புக்காக போராடுவோம்! பெண்களை அடிமைப் படுத்துவதற்கு எதிராக, ஆணாதிக்கத்திற்கு எதிராக, ஆண்பெண் சமத்துவம், பெண் விடுதலைக்காகப் போராடுவோம்!

8.மூடத்தனத்தை வளர்க்கும், முடை நாற்ற மெடுக்கும், பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக, பகுத்தறிவை வளர்க்கும், படைப் பாற்றலை வளர்க்கும், முற்போக்கு மக்கள் கலாச்சாரம் படைத்திட போராடுவோம்!

9.பொதுத் துறை தனியார்மயத்திற்கு எதிராக, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக போராடுவோம்! சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட போராடுவோம்! 

10.தமிழக மக்கள் சார் கல்விக் கொள்கை, தமிழககலாச்சார, மொழி கூட்டமைப்பு வாதத்திற்காக, இருமொழிக் கொள்கையைக் (தமிழ் ஆங்கிலம்) காப்பதற்காக, இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடுவோம்!

11.இலவச கல்வி, பொதுச் சுகாதாரம், இலவச வீடு, வீட்டுமனைப் பட்டா கேட்டுப் போராடு வோம்!

12.அனைவருக்கும் வேலை, தரமான வேலை, தமிழகத்தில் தமிழருக்கே வேலை கோரி போராடுவோம்!

13.கல்வி, வேலை, நிலம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்துக்காகப் போராடுவோம்!

14.நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக, சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கிட, கந்து வட்டியை முற்றாக ஒழித்திட போராடுவோம்!

15.சிபிஅய்எம்எல் கட்சியின் மக்கள் அடித் தளத்தை விரிவுபடுத்துவோம்!

16.சிபிஅய்எம்எல் கட்சியை வலுவான கட்சியாக வளர்த்திடுவோம்!

17.தமிழக அரசியலின் முக்கிய எதிர்க் கட்சியாக, புரட்சிகர எதிர்க் கட்சியாக சிபிஅய்எம்எல் கட்சியை வளர்த்திடுவோம் என சூளுரைப்போம்!