ஈரானில் ஆடை நெறிமுறையை மீறினார் என்று 'கலாச்சாரக் காவல்துறையினர்' எடுத்த நடவடிக்கையின் காரணமாக 22 வயது மாஷா அம்னி மரணமடைந்தார். இதை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் டெக்ரானிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்து, கடந்த செப் 13, 2022 முதல் சிறைப்படுத்தி வைத்திருந்தனர் ஈரானின் ஒழுக்க நெறி காவல்துறையினர். அவரைக் கொடூரமாக அடித்து, ஹிஜாப் பற்றிய நீதியையும் கல்வியையும் கற்றுக் கொடுப்பதற்காக, அவப்புகழ் பெற்ற 'ஒஷாரா' சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். செப் 16, 2022 அன்று அவர் மரணமடைந்துவிட்டார். அவர் உடலெங்கும் வீக்கமும் காயங்களும் இருந்ததாக அவரது சகோதரர் கூறுகிறார். ஆனால், அவர் போலீஸ் காவலில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது.

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நடந்த 1979 முதல் கடும் 'ஆடை கட்டுப்பாடு நெறிமுறை' அமலில் உள்ளது. எல்லா பெண்களும், அவர் எந்த தேசத்தவராக இருந்தாலும் மத நம்பிக்கையுடையவராக இருந்தாலும், தலை, கழுத்து மற்றும் தலைமுடியை மறைத்து முக்காடு அணிய வேண்டும். ஈரானின் ஆடை நெறிமுறைப்படி ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் கால் முட்டியை மறைக்காத கோட், நெருக்கிப் பிடிக்கும் கால் சட்டை, கிழிந்த ஜீன்ஸ், பிரகாசமான கலர் ஆடைகள் போன்றவை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் துவக்கத்திலிருந்தே பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றார்கள். ஹிஜாப் மற்றும் கற்பு தேசிய நாளான ஜூலை 12 அன்று ஈரான் பெண்கள் தங்கள் தலை முக்காடை அகற்றியும் சிலர் தங்கள் தலை முடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். இம் மாதிரியான எதிர்ப்பாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று 'அறம் போதிக்கும் தீமைகள் தடுக்கும்' துறையின் அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தினார்கள். மேல்நாட்டு சதி என்று முத்திரை குத்தப்பட்டு, எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் தீவிரமான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். அரசாங்கம் பெண்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை போலீஸ் வன்முறை நடவடிக்கைகள் மூலம் ஒடுக்குவதற்குப் பதிலாக அதை நிறைவேற்ற வேண்டும். ஈரானில் போராடும் பெண்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கிறது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்.