மாநாட்டு தலைமைக் குழு தோழர்களே!பிரதிநிதி தோழர்களே! பார்வையாளர்களே! 

இரண்டு நாட்களாக மாநாட்டில் வைக்கப் பட்ட நகல் அறிக்கையின் மீது விவாதம் நடத்தி இருக்கிறீர்கள் அதன் பின்பு அறிக்கை அவையால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதை நடை முறையில் அமலாக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழக கட்சியில் பலர் புதிதாக இணைந்தி ருக்கிறார்கள். ஆகவே, கட்சி வரலாறு பற்றி சுருக்கமாக திரும்பிப் பார்த்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். 1967-ல் நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக நமது கட்சி உதயமானது. மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் அந்த எழுச்சி நடந்தது. கம்யூனிச இயக்கத்தில் புரட்சிகர நீரோட் டத்திற்கும் சீர்திருத்தவாத நீரோட்டத் திற்கும் டையிலான போராட்டம் இருந்து வந்தது. 1960-70 காலகட்டம் கொந்தளிப்பு மிக்கதாக இருந்தது. தமிழ்நாட்டிலும் அந்த கால கட்டத்தில் கிளர்ச்சிகள், எழுச்சிகள் நடை பெற்றன. அந்த இயக்கங்கள் புரட்சிகர சக்திகளின் கற்பனை வளத்தைப் பற்றி கொண்டன. 1971-ல் மேற்குவங்க செயலாளராக இருந்த தோழர் சரோஜ் தாத்தாவும் 1972 ஜூலை 28-ல் தோழர் சாரு மஜும்தாரும் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அடக்குமுறை ஏவப்பட்டது. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப் பட்டனர். மேற்கு வங்கத்தில் துவங்கிய அந்த எழுச்சி, நாடெங்கும் பரவியது. பின்னர் அது பீகாரில் வேரூன்றியது. மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி தேசிய அளவில் தன்னு டைய இருத்தலை வெளிப்படுத்தியது.

1974 ஜூலை 28, தோழர் சாரு மஜும்தாரின் இரண்டாவது நினைவு நாளில் பின்னடைவுக்குப் பிறகு மூன்று பேர் கொண்ட மத்திய கமிட்டி உருவாக்கப்பட்டு கட்சி புனரமைக்கப்பட்டது. நாடு முழுக்க புரட்சிகர சக்திகளுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. ஒரு நாடு தழுவிய கட்சியாக நமது கட்சி உதயமானது. அப்போ தெல்லாம் நமது கட்சி தலைமறைவு கட்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நமது அரசியல் செய்திகளை வெளிப்படையாக எடுத்துச் செல்ல இந்திய மக்கள் முன்னணி என்ற வெகுஜன அரசியல் மேடை உருவாக்கப்பட்டது.

பின்னர் 1992-ல் நடைபெற்ற ஐந்தாவது கட்சி காங்கிரஸில் கட்சி வெளிப்படையாக இயங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கான காரணம் இருந்தது. அப்போது சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடைந்திருந்தது.அதனால் கம்யூனிஸ்டு கள் பலரும் துயரமடைந்து இருந்தனர். அந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு கம்யூனிச தத்துவம் காலாவதியாகிவிட்டது என்றும் அது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது என்றும் பலரும் அறிவித்து கம்யூனிச தத்துவத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கருத்துக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள ஒரு வெளிப்படையான இயக்கத்தின், அமைப்பின் தேவை வந்தது. அத்தகைய சூழலில் கட்சி வெளிப்படையாக செயல்பட துவங்கியது. அதன் பின்னர் 30 ஆண்டு காலமாக வெளிப்படை கட்சியாக செயல்படுகிறது.

கட்சி வெளிப்படையாக இயங்க வேண்டும் என்று முடிவெடுத்ததற்கான இன்னொரு காரணம், அப்போது அத்வானி ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாஜக தனக்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அது அரசியல் அமைப்புச் சட்டத்தை மறு வடிவமைப்பு செய்ய வேண்டும் என்ற திட்டமாகும். அது இந்தியாவை புதிதாக மறு வரையறை செய்யும் திட்டத்தையும் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பாஜகவின் கருத்துக்களுக்கு சவால் விட்டு எழ வேண்டிய அவசியமும் கட்சிக்கு இருந்தது.

இப்போதைய தேவை நாம் பெரிய கட்சியாகவும் வலுவான கட்சியாகவும் வளர வேண்டியதுதான். இந்த அரசாங்கம் பலரை சிறையில் அடைத்திருக்கிறது. பல்லாண்டு காலமாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அறிவு ஜீவிகள் கொல்லப்படுகிறார்கள். எதிர்ப்பவர்கள் மத்தியில் பயத்தை விதைக்கிறார்கள். முஸ்லிம் களுக்கு எதிராக கும்பல் படுகொலை நடத்து கிறார்கள். இந்த ஆட்சியை எதிர்க்கவோ, இந்த ஆட்சியிடம் கோரிக்கை வைக்கவோ, இந்த ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தவோ யாரும் பயப்படும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். நாம் கம்யூனிஸ்டுகள். நம்மிடம் பயம் கிடையாது. இவர்கள் யார்? இவர்கள் என்ன செய்வார்கள்? என்பது நமக்குத் தெரியும். நாம் வலுவான கட்சியாக உருவாக வேண்டுமானால் நமக்கு முதலில் கருத்தியல் கடப்பாடு தேவை. கருத்தியல் துணிவு தேவை. கூடவே நமக்கு அரசியல் பற்றிய தெளிவும் வேண்டும். இந்த அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிவித்து வருகிறது, செயல் படுத்தி வருகிறது. அவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? நமது பதில் வினை என்ன? அது தேசிய கல்விக் கொள்கையாக இருக்கட்டும், பொருளாதா ரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதிகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடாக இருக்கட்டும், தொழிலாளர்க ளுக்கு விரோதமான தொழிலாளர்கள் சட்ட தொகுப்பு களாக அல்லது விவசாயச் சட்டத் திருத்தங்க ளாகவும் இருக்கட்டும் இவற்றிற்கான நமது பதில் வினை என்ன? அவர்கள் தங்கள் கொள்கைகளை முலாம் பூசி நூதனமாக கொண்டு வருகிறார்கள். அவர்கள் வளர்ச்சி என்பார்கள், தேசியவாதம், தேசத்துக்கு ஆபத்து என்கிறார்கள். சுயசார்பு, தேச ஒற்றுமை என்றெல்லாம் சொல்லி தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்து கிறார்கள். அதை எதிர்ப்பதற்கு, எதிர்கொள்வதற்கு நமக்கு மூன்று அம்சங்கள் தேவை. 1) கருத்தியல் கடப்பாடு 2) அரசியல் தெளிவு 3) அமைப்பு ஒற்றுமை/பலம்.

நாடு ஒரு மாறுபட்ட சூழலில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை கண்டிராத அளவு பெரிய சவால் நம் முன்னே நிற்கிறது. அப்படிப்பட்ட சூழலில் இந்த மூன்று அம்சங்களையும் கடைப் பிடிக்கிற பெரிய கட்சி, வலுவான கட்சி நமக்குத் தேவை. ஒரு வலுவற்ற கட்சியை வைத்துக் கொண்டு புதிய சூழலை நாம் எதிர்கொள்ள முடியாது.

நாம் பரந்த விரிவாக்கத்துக்கு செல்ல வேண்டும். புதிய புதிய பகுதிகளுக்கு, புதிய புதிய மக்கள் பிரிவினர் மத்தியில் செல்ல வேண்டும். ஆனால், எங்கு சென்றாலும் மேலே சொன்ன மூன்று முக்கிய விசயங்களான கருத்தியல் கடப்பாடு, அரசியல் தெளிவு, அமைப்பு ஒற்றுமை என்பதை கடைப் பிடித்தாக வேண்டும். அவற்றை விட்டு விடக்கூடாது.

எல்லா வகையிலும் கட்சியை வலுப்படுத்துகிற அதே வேளையில், இந்த ஆட்சிக்கு நாம் எதிரான பரந்த எதிர்ப்பியக்கத்தையும் நாம் கட்டியமைக்க வேண்டும். டெல்லியில் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. நாம் அதில் முக்கிய பங்காற்றினோம். அங்கம் வகித்தோம். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் அமைப்புகள் அதில் கலந்து கொண்டன. அதேபோல அரசாங்கத்தின் தொழிலாளர்கள் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு மையத் தொழிற்சங்கங்களைக் கொண்ட தொழிற்சங்க மேடை உருவாக்கப்பட்டிருக்கிறது அந்த மேடையில் நாமும் அங்கம் வகிக்கிறோம். புதிய சூழலை கணக்கில் கொண்டுதான் தஞ்சாவூரில் நாம் நடத்திய பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை அழைத்தோம். நேற்று நடந்த துவக்க மாநாட்டில் இவர்களோடு மனித நேய மக்கள் கட்சியும் மக்கள் அதிகாரம் அமைப்புகளும் கலந்து கொண்டன.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்த வித்தியாசமான மாறுபட்ட அரசியல் சூழலில் இரண்டு தளங்களில் நாம் பரந்த எதிர்ப்பை கட்ட மைத்து வருகிறோம். ஒன்று வெகுஜன அமைப்பு களோடு கூட்டியக்கம் அது விவசாய சங்கம் தொழிற்சங்கம் போன்ற அமைப்புகளாக இருக்கலாம். இரண்டாவது எதிர்க்கட்சிகளோடு அணிச்சேர்க்கைக்கான வாய்ப்புகளை கண்டறிந்து வருகிறோம். இரு வேறு நடவடிக்கைகள் இன்றைக்கு காலத்தின் தேவையாக உள்ளது. இன்று திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, மமக கட்சிகள் இருக்கிறார்கள். நாமும் காலத்தின் சூழல் கருதி இந்த கூட்டணியில் இணைய வேண்டி வரலாம். அது நாம் பெரிய வலுவான கட்சியாக வளர்வதோடு சம்பந்தப் பட்டது. ஆனால் அப்படி முடிவு எடுக்கும் போது நமக்கும் மற்ற கட்சிகளுக்கும் அதில் வித்தியாசம் உண்டு. மற்ற கட்சிகள் தங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இதைச் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்ற கட்டளை களை அவர்கள் ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை நமது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதே சமயம் பெரிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்ற முகாந்திரத்திலிருந்து நம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல் கூட்டு இயக்கங்கள், கூட்டணிகள் அமைத்துக் கொள்வது தேவையாக உள்ளது.

தமிழக கட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகள் அந்த அளவு சுமூகமாக இல்லை. 2018 மார்ச்சில் பஞ்சாபில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி 4 உறுப்பினர்களில் 3 பேர் கட்சியை விட்டு விலகி விட்டார்கள். அரசியல் காரணங்களோ அல்லது அரசியல் கருத்தியல் காரணங்கள் அடிப்படையிலோ இல்லை. வெறும் அமைப்பு பிரச்சினைகள் மட்டுமே இருந்தன. கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது, மாறுபாடு கொண்டிருப்பது மிகவும் இயல் பானதுதான். மாறுபட்ட கருத்துக்களை விவாதிக் கலாம். ஆனால், கமிட்டியில் ஒன்றுபட்ட முடிவுகள் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு அதை அமல்படுத்த வேண்டுமே தவிர அதற்கு எதிராக குழுவாக நின்று செயல்பட முடியாது.

கட்சியை விட்டு வெளியேறிய அந்தத் தோழர் களோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தோழர்கள் நெருக்கமான நட்பு கொண்டிருந்ததை பார்த்திருக் கிறேன். தனிப்பட்ட முறையில் நட்பும் நெருக்கமும் அவர்களுக்கிடையே உண்டு. ஆனால், அப்படி நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் நட்புக்காக அவருடன் வெளியேறி விட்டார்கள். ஆனால் பெரும்பாலான தோழர்கள் தங்களது தனிப்பட்ட பழக்க வழக்கங்களைத் தாண்டி, அமைப்பு ரீதியாக சரியான நிலைப்பாடு எடுத்து கட்சியுடன் நின்றார்கள். புதுக்கோட்டை தோழர்கள் அது போல் ஒரு நிலை எடுத்து கட்சியுடன் உறுதியாக நின்றார்கள். வெகு சிலரே கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறியதால் தமிழ்நாட்டில் அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கோவை, நாமக்கல் வேலைகளில் சேதாரம் ஏற்பட்டது. அது ஒரு மிகச் சிறிய அளவிலான சேதாரமேயாகும்.

அந்தக் காலகட்டம் கட்சிக்கு மிகுந்த சவால் மிக்க காலகட்டமாக இருந்தது. மத்திய கமிட்டி உறுப்பினர்களின் நான்கில் மூன்று பேர் கட்சியை விட்டு விலகிய ஒரு சூழல் வேறு கட்சிகளில் நடந்திருந்தால் இந்நேரம் கட்சி இரண்டாக பிளவு பட்டிருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அது போல் நடக்காதது தமிழக கட்சி தோழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அது மாத்திரம் அல்ல அந்த சவாலை எதிர்கொண்டு இன்று கட்சியை பல்வேறு புதிய பகுதிகளுக்கும் புதிய மக்கள் பிரிவினர் மத்தியிலும் விரிவாக்கிக் காட்டி இருக்கிறீர்கள். இக்கட்டான சூழலில் சரியான முடிவு எடுத்து உறுதியாக நின்று கட்சியை விரிவாக்கம் செய்து காட்டியிருக்கும் தமிழக தோழர்களை கட்சியின் மத்திய கமிட்டி பாராட்டு கிறது. மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது. நடைபெற்ற இந்த சம்பவம் தமிழக கட்சி அமைப்புக்கும் அகில இந்திய கட்சி அமைப்புக்குமே கூட ஒரு பாடமாகும். 

தமிழ்நாட்டில் கட்சி அமைப்பு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் பல மாவட்டங்களில் மாவட்ட மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அமைப்பு ரீதியான செயல்பாடு முக்கியமானதாகும். தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின்செயல்பாடு முறையாக உள்ளது. அந்தக் கமிட்டி முறையாகக் கூடுகிறது. அதுபோல் அடுத்தடுத்த கீழ் நிலை அமைப்புகளும் செயல்பட வேண்டும். அப்படி செயல் படும் போதுதான் பொருளுள்ள விளைவுகள் நமக்குக் கிடைக்கும். திட்டமிடுதல், வேலை பரிசீலனை என்ற விவாதங்கள் கமிட்டிகளில் நடந்தால் நம் வேலைகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.

இரண்டாவது முக்கியமான விசயம் நாம் ஒரு அனைத்தும் தழுவிய கட்சியாக வளர்வது. அப்படி வளர வேண்டுமானால் எல்லா வெகுஜன அரங்கங்களிலும் நமது வேலைகள் இருக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் எல்லா வெகுஜன அரங்குகளும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அனைத்தும் தழுவிய கட்சியாக வளர வேண்டுமானால் மாணவர், இளைஞர், பெண்கள் அரங்கம் என வெகுஜன மக்கள் பிரிவு வேலைகளை முன்னெடுப்பது அவசியமானதாகும். கிளைகள் முதல் மாநிலக் கமிட்டி வரை, கமிட்டி செயல்பாடு செயல் துடிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் அனைத்து ஆற்றலையும் கட்டவிழ்த்து விடுவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு அனைத்தும் தழுவிய கட்சியாக நாம் வளர முடியும். மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவை எல்லாம் இருக்கும் என நினைக்கிறேன். அயர்லா, ஏஐசிசிடியு போன்ற வெகுஜன அமைப்புகளை உயிர் துடிப்புள்ளதாக வளர்த்தெடுக்க வேண்டும். எல்லா கட்சி உறுப்பினர்களும் அமைப்புகளில் கமிட்டிகளில் அமைப்பாக்கப்பட வேண்டும்.

கமிட்டிகள் முறையாக கூட வேண்டும். வேலைகள் பற்றி திட்டமிட வேண்டும். திட்டமிட்ட வேலைகளை பரிசீலனை செய்ய வேண்டும். விமர்சனம் சுய விமர்சனத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். கமிட்டிதான் முதல் என்பதாக கமிட்டி முடிவுகளை அமல்படுத்துவதாக கட்சி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு பரந்த ஊழியர் வலைப்பின்னல் உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும். கட்சி பத்திரிக்கை விநியோகம் சமூக ஊடகத் தள பரப்புரை ஆகியவையும் கமிட்டி செயல்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இறுதியாக நீங்கள் மாநாட்டு அறிக்கையில் பல்வேறு இலக்குகளை நிர்ணயம் செய்திருக் கிறீர்கள். வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது, கட்சி கமிட்டிகளின் அமைப்பு ரீதியான செயல்பாட்டை உத்திரவாதம் செய்வது என முடிவெடுத்திருக்கிறீர்கள். நீங்கள் 2023 பிப்ரவரியில் பாட்னாவில் நடைபெறும் கட்சி காங்கிரசுக்கு வரும்போது தமிழ்நாட்டில் கட்சியின் விரிவாக்கம், போராட்டம், கமிட்டி செயல்பாடு பற்றிய புதிய அனுபவங்களோடு நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.