எட்டு வழிச்சாலைக் கொண்டு வரவிடமாட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அமைச்சர் எ.வ.வேலு, எல்லார் வீட்டிலும் கார் இருக்கிறது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் கார் வைத்துள்ளார்கள், வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சாலைகள் விரிவுபடுத்தத்தான் வேண்டும், அதைச் செய்யும் போது நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஒரு கார் அல்ல மூன்று கார்கள் கூட வைத்திருக்கலாம். அவர் தலைவர் வீட்டில் அதைவிடக் கூடுதலாகக் கூட வைத்திருக்கலாம். ஆனால் அன்றாடங்காய்ச்சிகள் பொதுப் பேருந்தைத்தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அதனால்தான் மகளிர் இலவசப் பேருந்தில் இருக்க இடம் இல்லாமல் மகளிர் பயணிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும். விவசாய நிலம் வைத்திருப்பவர்தான் விவசாயத்தைப் பற்றி பேச வேண்டுமா? விவசாயி சேற்றில் கை வைக்கவில்லை என்றால் மற்றவர்கள் சோத்தில் கை வைக்க முடியாது என்று அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைவர்களே அடிக்கடிச் சொல்வார்கள். அப்படி என்றால் விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது உணவுக்குப் பஞ்சம் ஏற்படும். காடுகள் அழிக்கப்படும்போது வனவிலங்குகள் வாழ்க்கை பாதிக்கும் என்பது மட்டுமல்ல, மழைக்குக்கூட வழியில்லாமல் போகும். இன்று இந்திய நாட்டை அதானியும் அம்பானியும் அவர்கள் போன்ற வேறு சில கார்ப்பரேட்டுகளும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காடுகளை, மலைகளை, கடற்கரைகளை, வயல்வெளிகளை என எல்லாவற்றையும் தங்களுக்கு அடிமாட்டு விலைக்கு அரசிடமிருந்து வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கி றார்கள். அந்தக் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகச் சட்டங்கள் திட்டங்களை பாசிச பாஜக அமல்படுத்துகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்தது. ஆனால், அந்த பாசிச பாஜகவை எதிர்க்கும் திமுக ஆட்சி, எட்டு வழிச்சாலையை அமல்படுத்த முனைவதும், போக்குவரத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதும் ஒன்றிய அரசின் 4 தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளுக்கு விதிகளை உருவாக்குவதும் காவிப் பாசிச பாஜக, தேசியக் கொடியைச் சிறுமைப்படுத்த வீடுதோறும் மூவண்ணக் கொடி என்று சொன்னதை இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் மாதம் வெறும் 1000 ரூபாய்க்கு பணிபுரிபவர்களிடம் கொடுத்து விற்கக் கட்டாயப்படுத்துவதும் திராவிட மாடல் ஆட்சியும் கூட கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதான் என்று சொல்லாமல் சொல்வதாக உள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அந்தத் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தக் காலத்தை மூன்று ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது திமுக. இதுபோன்ற நடவடிக்கைளால் திமுக அரசு உங்கள் அரசு என்று மக்களிடம் சொல்வது வெளியே என்றால் உள்ளே கார்ப்பரேட்களிடம் இது உங்கள் அரசு என்று சொல்வதாகவேத் தெரிகிறது.