அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் அன்று ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. சென்னை உயர்நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட்டது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதி கோரியது. அது அனுமதி கோரிய நாள்தான் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே அக்டோபர் 2 அன்றுதான் காந்தியைக் கொன்றார். அந்த அக்டோபர் 2ஐ திட்டமிட்டு காந்தியை சிறுமைப்படுத்தும் வகையில் அந்த நாளைத் தேர்வு செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி அந்த பேரணியை முப்பெரும் நிகழ்ச்சியாக நடத்தப் போகிறார்களாம். அதாவது விஜயதசமி, அம்பேத்கர் நூற்றாண்டு மற்றும் விடுதலையின் 75ம் ஆண்டு. விஜயதசமி அக்டோபர் 5தான் வருகிறது. அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்கனவே முடிந்து விட்டது. இந்திய விடுதலைப் போருக்கும் ஆர்எஸ்எஸ்ஸூக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர்கள் திட்டமிட்டு மதவெறிக் கலவரத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்டோபர் 2ஐத் தேர்வு செய்துள்ளார்கள். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த திமுக அரசும் தமிழ்நாடு காவல்துறையும் இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள், விசிக மற்றும் முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் அக்டோபர் 2 அன்று சமூக நீதி நல்லிணக்க மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடத்தப் போவதாகச் சொன்னதற்குப் பிறகு, உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 2 எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டம், மனிதச் சங்கிலி நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ்ஸுக்கு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி உத்தரவு வழங்கிய உடனேயே தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மாறாக சமூகநீதிப் பேரணி அன்றைய தினம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்தபின்னர், அதனைத் தொடர்ந்து இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து சமூகநீதி நல்லிணக்க மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்த பிறகு, நாடெங்கும் இஸ்லாமியர்களை சாத்தான்களாக சித்தரிக்கும் வகையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அதன் இணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு இப்போது நீதிமன்றம் சென்றுள்ளது தமிழ்நாடு அரசு. இதில் இன்னும் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், காவிப் பாசிச ஆர்எஸ்எஸ்ஸையும் இடதுசாரிக்கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகளையும் ஒன்றுபோல் தமிழ்நாடு காவல்துறை கருதுவதுதான் இன்னும் ஆபத்தானது. காந்தி பிறந்தநாள் அன்று மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் எப்போதும் நடத்தப்படும். அப்படி இருக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்ததுபோல் இடதுசாரிக்கட்சிகள்-விசிக நிகழ்ச்சிக்கும் தடை விதித்துள்ளது பொருத்தமற்றது. சமூக நல்லிணக்க நிகழ்ச்சிக்கும் வழங்கியிருக்கும் தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் காலூன்றவும் அராஜகச் செயல்களில் ஈடுபடவும் வழிவகுக்கும்.