வேங்கை வயலில் குடி தண்ணீரில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாறாக, எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கிறது. வேங்கை வயல் பிரச்சினை வெளியில் வந்தபோது அங்குள்ள கோயிலுக்குள் தலித் மக்கள் செல்வதற்கு மறுக்கப்பட்ட விசயமும் வெளியே வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அந்த மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது அதைத் தடுக்க சாமியாடினார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டார். கடையில் சாதியப் பாகுபாடுடன் இரட்டை டம்ளர் பயன்படுத்தப்படுகிறது என்று கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீதிபதி அவர்களை உடனடியாக பிணையில் விடுவித்தார். ஆனால், இந்த இரட்டை டம்ளர் முறையும் கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைவதற்குத் தடையும் வேங்கை வயலைத் தாண்டியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றன என்கிற அவமானகரமான செய்திகள் இப்போது ஊடகங்களில் பத்திரிகைளில் வந்து கொண்டிருக்கின்றன. வேங்கை வயலில் மலம் கலக்கப்பட்ட தொட்டி இன்னும் இடிக்கப்பட வில்லை. தலித் மக்களுக்கு தனி தண்ணீர் தொட்டி என்கிற பாகுபாடு எதற்கு? சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சினை வந்தவுடன் உடனடியாக அந்தத் தொட்டியை அதிகாரிகள் பார்வையிட்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த அவமானகரமானச் செயல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார். ஆனால், தீண்டாமைச் சுவர் மாதிரி, தலித் மக்களுக்கு என தனியாக தண்ணீர் தொட்டி இனி இருக்காது என்று அவர் அறிவிக்க வில்லை. கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சேலம், திருமலைகிரி கோயிலில் தலித் இளைஞர் பிரவீண்குமார் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் வெளியே வந்துவிட்டார். அவர் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டும் என்று சொன்னதற்காகவே அவரை பொது இடத்தில் வைத்து இழிவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம். அவர் கைது செய்யப்பட்டார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்றெல்லாம் செய்தி வருகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் ஆற்றில் குளித்தார் என்பதற்காகவே அவரை சங்கி ஆண்கள் மிருகத்தனமாகத் தாக்கும் வீடியோ வெளியானது. வட மாநிலங்களில் அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த வன்கொடுமைகள் அப்பட்டமாக நடைபெறுகின்றன. ஆனால், பெரியார் பூமி என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருப் பதுதான் வேதனைக்குரியதாகும். சங்கிகள் மட்டுமல்ல, எல்லா கட்சிகளுக்குள்ளும் சாதியாதிக்க வெறியுடன் செயல்படுபவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் கள ஆய்வு மேற் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் வேங்கை வயலுக்கு முதலில் செல்ல வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்பட வேண்டும். படிக்கும் மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவைக் கொண்டு செல்ல அந்தத் திட்டத்தைப் பயன்படுத்தப்பட வேண்டும். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் ஆதிக்க சாதிவெறி உணர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மாணவர்கள் மத்தியில் பெரியாரும் அம்பேத்கரும் கொண்டு செல்லப்பட வேண்டும்.