"ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்ற இந்தக் கருத்தரங்கத் தலைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதாரமான ஊதியத்தில் கை வைக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அமைப்பைக் கூட்டவே இல்லை. சமீபத்தில் திருப்பதியில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எந்த தொழிற்சங்கமும் அழைக்கப் படவில்லை. பதிலாக அவர்கள் எல்லா தொழிலுக்கும் பொதுவான தேசிய தரைமட்டக் கூலி என அறிவித்திருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான ரூபாய் 176 என்ற சொற்பத்தொகையை கொடுத்தால் போதும் என்கிறார்கள். நிரந்தர வேலை என்பது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தடையாக இருக்கிறது, நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த முதலாளிகள் முன் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. உற்பத்திக் கான ஆர்டர் இருந்தால் பணிக்கு ஆட்களை வைத்துக் கொள்வார்கள், இல்லை என்றால் அனுப்பி விடுவார்கள். இன்று திருப்பூரில் கரூரில் இதுதான் நடக்கிறது. வேலை நேர கணக்கெல்லாம் கிடையாது. பணி நிரந்தரமும் கிடையாது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கௌரவமான வேலை என்றால் பணி நிரந்தரம், கௌரவமான ஊதியம், தொழிலாளிக்கு பணி உயர்வு இருக்க வேண்டும், அவர்களுக்கு தன் பணியில் கருத்துச் சொல்ல உரிமை இருக்க வேண்டும், ஓய்வூதிய பலன், சமூக பாதுகாப்பு திட்டம் எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்திய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட இந்தியாவில் அத்தக்கூலி நிலை தான் தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறது.

ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சி மாதிரியை முன் வைக்கிறார்கள். அரசுத் துறைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றுகிறார்கள். பிஎஸ்என்எல், அடுத்து ராணுவ தளவாட உற்பத்தியில் கொண்டு வந்து விட்டார்கள். மோடி அரசு மாநில உரிமைகளுக்கு, கூட்டாட்சிக்கு எதிரானது. அது இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுகிறது. இ-ஸ்ரம் கொண்டு வந்து தமிழக நல வாரியங்களை ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள்.

ஒன்றிய ஆட்சி கார்ப்பரேட் மதவாத பாசிச ஆட்சியாக இருக்கிறது. ஆள் தூக்கி சட்டங்களை பயன்படுத்துகிறார்கள். மும்பை ரிலையன்ஸ் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்ற கம்பெனியில் தொழிற்சங்க கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவரை உபா சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள். மின்சாரத்துறை தனியார் மயத்தை எதிர்த்து புதுச்சேரி யூனியன் பிரதேச மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவப் படையை அனுப்பியது. தொழிற் சங்கங்கள் தொழிலாளர் நலனை உயர்த்தி பிடித்து ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது அவசர அவசியமாக உள்ளது. ஏஐடியுசி மாநாடு சரியான தருணத்தில் சரியான தலைப்பான "ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்று இந்த கருத்தரங்கை கட்டமைத்திருக்கிறது. மாநில மாநாடு வெற்றி பெற ஏஐசிசிடியு சார்பாக வாழ்த்துகள்.