கள்ளக்குரிச்சி 4வது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 20, 2022 அன்று கெடிலத்திலுள்ள தோழர் சம்மனசு மேரி அரங்கின் முன் கட்சிக் கொடியை மாநிலச் செயலாளர் என் கே ஏற்றி வைக்க தியாகிகள் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி தொடங்கியது. தோழர்கள் ஜெயந்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட தலைமைக்குழு தோழர்கள் மாநாட்டை வழி நடத்தினர்.

250 கட்சி உறுப்பினர்கள், 26 கட்சிக் கிளைகள், 7 உள்ளூர் கமிட்டிகள், 3200 வெகு மக்கள் உறுப்பினர்கள், உறுப்பினர் கட்டணம் முழுவதும் செலுத்தியது உள்ளிட்ட தகுதிகளை சரிபார்த்த மாநிலக் கமிட்டி பார்வையாளர் தோழர் ஜி. தனவேல் மாநாட்டை தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

பதவிப் பொறுப்பு முடிந்து செல்லும் மாவட்ட தலைமைக் குழுவின் நகலறிக்கையை அதன் செயலாளர் தோழர் டி. கலியமூர்த்தி முன்வைத்தார். கட்சிக் காங்கிரஸ் நிதி முதல் தவணை ரூ. 20,000, தீப்பொறி நிதி ரூ.14,000,உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவைகளை தோழர் கலியமூர்த்தி வழங்க, பலத்த கரவொலிக் கிடையே பெற்றுக் கொண்ட மாநிலச் செயலாளர் என் கே நடராஜன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

சூடான விவாதங்கள் இல்லாமல் ஒன்றிரண்டு ஆலோசனைகளுடன் அறிக்கையை மாநாடு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.

கடலூர் மாவட்ட தலைமைக் குழு உறுப்பினர் சி.ராஜ சங்கர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். கள்ளக்குரிச்சி மாவட்டத்துக்கான மாநிலக் கமிட்டி பொறுப்பாளர் பாலசுந்தரம் உடனிருந்தார்.

20 பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட 57 பிரதிகளும் 2 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். எண்பதுகளில் கட்சி யோடு இருந்த ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீண்டும் கட்சியுடன் இணைந்த தோழர்களையும் மாநாடு வரவேற்றது. மாநாட்டில், டி.கலியமூர்த்தி, கந்தசாமி, ஆறுமுகம், கொளஞ்சி நாதன், கல்யாணி, லோகநாதன், தணிகாசலம், ஏழுமலை, கோலமுத்து, தட்சிணா மூர்த்தி, கலாமணி ஆகிய 11 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் டி. கலியமூர்த்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"மத்திய,மாநிலக் கமிட்டிகள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று 11வது கட்சிக் காங்கிரசையும் 11வது மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக்க மாநாடு உறுதி ஏற்கிறது. மாவட்டத்தில் வெகுமக்கள் அரசியல் சக்திகொண்ட உறுதியான, பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியாக இகக(மாலெ)வை வலுப்படுத்திட, மாவட்டக் கமிட்டி தன்னிடம் உள்ள வலுவற்ற அம்சங்களை நீக்கி, வலுவான அம்சங்களை உறுதிப்படுத்தி முன்னேற உறுதி ஏற்கிறது" என்ற உறுதிப் பாட்டை வெளிப்படுத்துகிற வகையில் புரட்சிகர முழக்கங்களுடன் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே மாநாடு இனிதே முடிந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. கனியாமூர் பள்ளி மாணவியின் மர்ம மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எவரும்
தப்பிக்கவிடப்படக் கூடாது, கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த குடும்பத்துக்கு பள்ளி நிர்வாகம் ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். 2003 முதல் இப்பள்ளியில் நடை பெற்ற 7 சம்பவங்கள் குறித்தும் முழுவதுமாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு, தனிஅதிகாரியை நியமித்து பள்ளியை ஏற்று நடத்திட வேண்டும். 17ம் தேதி வன்மு றையைக் காரணம் காட்டி, குற்றமற்ற தலித் இளைஞர்களும் ஏழைகளும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். உண்மைக் குற்ற வாளிகள் வெளியில் உலவிக் கொண்டிருக்க, குற்றமற்றவர் சிறையில் வைக்கப்படுவது கண்டனத்துக்குரியது. குற்ற மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதோடு, அவர் களது கல்வி, வேலைவாய்ப்பு இழப்புக்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கண்மூடித் தனமான கைதுகள், சித்திரவதைக்கு காரணமான காவல் அதிகாரிகள், காவலர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள தனியார், சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அரசே ஏற்று
நடத்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 13 அன்று கள்ளக்குரிச்சியில் பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது.

திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து நிதியை வலியுறுத்திப்பெற்று தாமதமின்றி உடனுக்குடன் கூலியை வழங்கிட வேண்டும்.

2. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன், மோடி அரசு திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வேலை நாட்களை சுருக்கி, வேலை செய்வோரது எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. மோடி அரசின் இந்த தொழிலாளர் விரோத செயலை மாநாடு கண்டிக்கிறது. 200 நாள் வேலை, நாள்கூலி 500. குடும்பத்துக்கு பெண், ஆண் இருவருக்கு வேலை வழங்கப்படுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். விவசாயத்துக்கும் திட்டத்தை விரிவுபடுத்து வதோடு பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். தொழிலாளரை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும்.


திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து நிதியை வலியுறுத்திப்பெற்று தாமதமின்றி உடனுக்குடன் கூலியை வழங்கிட வேண்டும்.

 

மாநாட்டில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராஜன் ஆற்றிய உரை

"கள்ளக்குரிச்சி மாவட்ட மாநாட்டை மாவட்ட கட்சி அமைப்பை ஒரு முறையல்ல, பல முறை வாழ்த்த வேண்டும். பலகாரணங் களுக்காக வாழ்த்தியாக வேண்டும். கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் உண்டான நெருக்கடியிலிருந்து கட்சியை மீட்டு நிலை நிறுத்தியதற்கு முதலாவதாக உங்களை வாழ்த்துகிறேன். கட்சி மறுசீரமைப்பு இயக்க முடிவின்படி முதலாவதாக ஒன்றிய அணிதிரட்டலை சிறப்பாக நடத்திக் காட்டியமைக்காக வாழ்த்துகிறேன். மாநிலக் கமிட்டி முடிவின்படி, தஞ்சை பாசிச எதிர்ப்பு மாநாட்டு நிதியையும் தீப்பொறி நிதியாக ரூ10,000மும் அளித்ததற்காக வாழ்த்துகிறேன். கட்சிக் காங்கிரஸ் நிதி, முதல் தவணையாக ரூ.20,000 அளித்ததற்காக வாழ்த்துகிறேன். மாவட்ட மாநாடுகள் நடத்தும் மாவட்டங்கள், தீப்பொறி நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற மாநிலக் கமிட்டி முடிவை முதலில் செயல்படுத்தியமைக்காக உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் மாவட்ட மாநாட்டு முடிவுகளையும் மாநிலக் கமிட்டியின் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி முன்னேற வாழ்த்துகள் கூறி விடைபெறுகிறேன்"