மார்ச் 20 ல் தொடங்கிய சட்டப்பேரவை தொடர்ந்து நடந்து வருகிறது. பல துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடந்து வருகின்றன. ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து கூறுவதானால், நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை ஆட்சியாளர்களின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. விவசாய அமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நிதியமைச்சர் காட்டிய பாதையிலேயே உள்ளது.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம், அம்பேத்கர் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட நிதி போன்ற வரவேற்கத் தக்க அறிவிப்புகள் உள்ளன. மகளிர் உரிமைத் தொகை, வாக்குறுதியை நிறைவேற்றுவதென்பதைவிட பல முனையிலிருந்து எழுந்த கேள்விகளும் பெண்களிடம் பெரும் எதிர்பார்ப்பு காரணமாக உருவாகி வந்த அதிருப்தியும் பட்ஜெட்டில் அறிவிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிதிநிலை அறிக்கையையும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் ஒரு சேர பார்த்தால், விவசாயம், விவசாய தொழிலாளர் உள்ளிட்ட விவசாய சமூகம், கிராமப்புற ஏழைகளது வீட்டுமனை, வீடு பிரச்சனை, தொழிலாளர் நலன், இளைஞர் வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழ்நாட்டில் தோழர் சிங்காரவேலர் மே நாளை கொண்டாடியதன் 100வது ஆண்டு இது. இந்த ஆண்டில், முன்வைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் 'தொழிலாளர்' என்ற சொல் கூட இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபற்றி இதுவரை எவரும் கேள்வி எழுப்பாதது பேரதிர்ச்சி அளிக்கிறது.

கோவில், மடம், அறக்கட்டளை நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு அவர்கள் குடியிருக்கும் நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரிகள் இதற்காக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கை பற்றி திமுக உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்(செயல்) பாபு, 40 ஆண்டுகளுக்கு மேலான அந்த கோரிக்கையை 'ஏற்கமுடியாது' என்று ஓங்கி மறுத்துவிட்டார். அறநிலையத் துறை அமைச்சர், கோவில்களை காப்பாற்றவில்லை; மாறாக கோவில், மடத்து நிலப்பிரபுத்துவத்தை "வீழாத கதையாக்க" முக்காலமும் பணியாற்றுகிறார்.

ஆண்டு துவக்கத்தில், சட்டப்பேரவையில் அடாவடியாகப்பேசிய ஆளுநர் ரவி முதல்வரின் இடித்துரையை பொறுக்க முடியாமல் அவராகவே வெளிநடப்பு செய்து கொண்டார். இப்போது சட்டப் பேரவைக்கு வெளியே இருந்து கொண்டு, ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக்கிக் கொண்டிருக்கிறார். அது கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞரை விடவும் ஆவேசமாக சீறி எழுந்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதைக் காட்டிக் கொண்டார். ஆளுநர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக எண்ணிக் கொள்ளக் கூடாது என்று கூறி சரியாகவே சூடு வைத்தார். பிரதமர் பக்கத்தில் ஆளுநர் இருக்கவே இன்முகம் காட்டி நடந்து கொண்ட முதலமைச்சர், அடுத்த நாளே ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுக் கொண்டார்.

அந்த அளவு 'ஆளுமை' காட்டிய முதலமைச்சர் மேலே குறிப்பிட்ட மக்கள் பிரச்சனைகளை புறக்கணிப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் போது, மானியக் கோரிக்கை விவாதங்கள் நடக்கும் சமயத்தில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், இடதுசாரி கட்சிகள், அரசின் கவனத்தை ஈர்க்க கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவது வழக்கம். துறைசார்ந்த அமைச்சர்கள், பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார்கள். கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று சட்டப்பேரவை அறிவிப்பதும் வழக்கம். ஆனால், போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். கோரிக்கைகள் பற்றி இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மிகக் குறைந்த சம்பளத்தில் எவ்வித பணிப்பாதுகாப்பும் இன்றி இரவு பகலாக உழைத்து அரசு கஜானாவை நிரப்பும் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்புச் செய்திருந்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம், அவரைச் சென்று பார்க்காமலேயே போராட்டத்தை அறிவித்து விட்டதாக செல்லமாக கோபித்துக் கொண்டார் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனாலும் நீண்டநேர பேச்சு வார்த்தைக்குப் பிறகும் முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.சங்கங்கள் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டன. மது விற்பனையில் எந்த இழப்பும் வந்துவிடக் கூடாது என்பது ஒருபுறம் இருந்தாலும் போராட்டங்கள் தேவை இல்லை என்பதே அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. எனவே போராட்டங்கள் தேவை என்பதே மக்கள் இயக்கங்களின் அணுகுமுறையாக இருக்க முடியும். 

மோடி ஆட்சியின் தவறான கொள்கைகளால் விளைந்த விவசாய நெருக்கடி, செல்லாத பணம் ஏற்படுத்திய கொடும் துன்பம், கொரோனா பெருந்துயர், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த விலை உயர்வு, அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்ட வேலை வாய்ப்பு உள்ளிட்ட நெருக்கடிகளால் ஊரக மக்களின் வாழ்வு சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியதைப் போல தேசிய ஊரக வேலைத்திட்டத்தை மோடி ஆட்சி கொன்று வருகிறது. பல்லாயிரம் கோடிகள் நிதி ஒதுக்கீடு வெட்டு, பல மாதங்கள் ஊதியம் பாக்கி என ஊரக மக்களின் உயிர்பிழைக்கும் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பாஜக அரசு விளையாடுகிறது. டிஜிட்டல் வருகைப் பதிவேடு என்ற சுருக்கு கயிறு கொண்டு வேலைக்கு வருபவர்களை தடுத்து விடுகிறது. கள்ளக்குரிச்சி மாவட்டத்தில் வேலை செய்பவர் விவரங்களைப் பார்த்தால் பேரதிர்ச்சி ஏற்படுகிறது. ஒரு வேலையில் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். மற்றொரு இடத்தில் (பெரும்பட்டு ஊராட்சி) இருவர் மட்டுமே வேலை செய்வதாக வருகைப்பதிவேடு கூறுகிறது. நவீன வருகைப்பதிவேடு போன்றவை இருந்தாலும் ஊழல், முறைகேடுகள் ஒழிந்த பாடில்லை. உச்ச கட்ட துயரமாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அய்ந்து குழந்தைகளின் தாய் ஓடும் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வேலை வழங்கவில்லை என்பதுதான் காரணம். அதிகாரிகள் ஊராட்சி செயலரை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த மரணத்துக்கு ஊராட்சி செயலர் மட்டுமா பொறுப்பு? மாவட்ட அதிகாரிகள் தொடங்கி, மோடி ஆட்சிவரை பொறுப்பு. இது பற்றி திமுக அரசு அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய ஊரக வேலைத்திட்டம் பற்றி, நிதிநிலை அறிக்கை (பத்தி75) சில வரிகளில் கடந்து சென்று விடுகிறது. நடப்பு ஆண்டில் ரூ.10,914 கோடியில், 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப் பட்டு இருப்பதாகவும் 2023-24ல் ரூ. 22,562 கோடியில் 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்படும் என்பதோடு முடிந்து விடுகிறது. கடந்த ஆண்டை விட ரூ.11,648 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்து, வெறும் 4 கோடி வேலை நாட்கள்தான் உருவாக்க முடியும் என்றால் இது என்ன கணக்கு? இதற்கு எந்த விளக்கமும் அறிக்கையில் இல்லை. தேர்தல் வாக்குறுதியாக 50 நாள் கூடுதலாக வேலை அளிக்கப்படும் என்று திமுக சொன்னது. ஆனால் இரண்டாண்டுகளாகி விட்டன. இதுபற்றி எந்த விளக்கமும் இல்லை. பாக்கி ஊதியம் பல நூறு கோடி ரூபாய் பாக்கி இருப்பதை சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இந்த திட்டம் அணு அணுவாக மோடி ஆட்சியில் கொல்லப்படுவது பற்றி பிரதமரிடம் பேசியிருக்க வேண்டும். அது ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊரக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது தெரியாதா?

இந்த ஊரகப் பகுதி மக்களின் துயரத்தை மோடி ஆட்சிக்கு எடுத்துக் காட்டும் வகையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கம் ஏப்ரல் 27 அன்று ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது. அகில இந்திய அளவில் நடைபெற உள்ள கிளர்ச்சியின் வாயிலாக இந்திய குடியரசுத் தலைவரின் கவனத்தை ஈர்க்கும் விதம் கோரிக்கை மனுக்கள் அனுப்புவதென்றும் முடிவு செய்துள்ளது.

கிராமப்புர தொழிலாளர் வீட்டுமனை, வீடு தொடர்பாக மத்திய சட்டம் இயற்ற வேண்டும், நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மீது இயக்கம் நடத்த உள்ளது. இதன் தொடர்ச்சியாக மே மாதத்தில் ஒரு பரப்புரை பயணத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த பயணம், தேவகோட்டை தொடங்கி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் வழியாக சென்னையில் முடிகிற வகையில் திட்டமிடப்படுகிறது.

"மோடி ஆட்சியை வெளியேற்றுவோம்; தேசிய ஊரக வேலைத்திட்டத்தை பாதுகாப்போம்' எனும் இந்த பரப்புரை பயணம் ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தேசத்தை காக்கும் போராட்டமாகவும் இருக்கும்.

ஆளுநரை மண்டியிடச் செய்தது மக்களது எதிர்ப்புக் குரல்தான். ஆளுநருக்கெதிரான சட்டப் பேரவை தீர்மானம் மக்களது குரலால் சக்தி பெற்றது. அதைப்போல ஊரக வறிய மக்களது, கிராமப்புர தொழிலாளரது வலுவான தொடர் இயக்கம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும். இது, மாநில அரசு தொழிலாளர் பக்கம் நிற்க வேண்டும் என்று அழுத்தம் தரும் இயக்கமாகவும் இருக்கும். கிராமப்புர தொழிலாளரைத் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கம் இந்த மே நாளின் 100வது ஆண்டில் குமரி தொடங்கி சென்னை வரை ஒரு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளது. விரிந்து பரந்த ஆழமான வெகுமக்கள் அரசியல் இயக்கம் தான் இப்போதைய தேவை. ஊராட்சி தொடங்கி, ஒன்றியம் மாவட்டங்கள் வழியாக சுதந்திரமாக இயங்கும் துடிப்புமிக்க பெரும் திரள் வெகுமக்கள் இயக்கத்தின் மூலமே அரசியல் செல்வாக்கு செலுத்தமுடியும். வெகுமக்கள் பக்கம் திமுக ஆட்சி நின்றால் மோடி எதிர்ப்பு பொருத்தமுள்ளதாக இருக்கும். மட்டுமின்றி, மாநிலங்களுக்கு அதிகாரம், உண்மையான கூட்டாட்சி, மதச்சார்பின்மை இவற்றை வென்றெடுக்க ஒரே ஆயுதமும் மக்கள் இயக்கம்தான். ஊர் தோறும் ஊராட்சி தோறும் மக்களைத் திரட்ட மக்களிடம் செல்வோம். கிராமப்புர தொழிலாளர் இயக்கத்தை ஆற்றல்மிக்க மக்கள் இயக்கமாக்குவோம்!