கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 22 அன்று கிளைகள் தோறும் கட்சிக் கொடி ஏற்றுவது, ஏப்ரல் 22 உறுதிமொழி ஏற்பதற்கான அழைப்பை, கட்சி மத்தியக் கமிட்டி விடுத்திருந்தது. கட்சி மாநிலச் செயலாளர், ஆசைத்தம்பி, புதுக்கோட்டை பொறுப்பாளர் பாலசுந்தரம் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டக்கமிட்டிக் கூட்டத்தில், ஏப்ரல் 17 அன்று மத்தியக் கமிட்டி அழைப்பை செயல் படுத்துவது குறித்து விரிவாக திட்டமிடப் பட்டது. கட்சி வேலைகள் உள்ள 7 ஒன்றியங் களில் மொத்தம் 57 கிளைகளில் கட்சிக் கொடியேற்றம் உறுதி மொழி ஏற்பது என்று திட்டமிடப்பட்டது.

இந்த "உறுதிமொழி ஏற்பு" நடவடிக்கை பற்றி பின்னர் பரிசீலிக்கப்பட்டது. மொத்தம் 33 கிளைகளில் மட்டுமே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 450 பேர் கலந்து கொண்டனர். அதிலும் உறுதி ஏற்பு நடவடிக்கையை விட, கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளே தூக்கலாக இருந்தன. குறைவான நாட்களில் செய்யப்பட்டது ஒரு முக்கிய குறைபாடாக உணரப்பட்டது. ஆனாலும் இது கிளைகள் செயல்பாட்டில் உள்ள வலுவற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் உணரப்பட்டது.

இந்தக் குறைபாட்டை சரிசெய்யும் வகையில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு, மே 25 முதல் ஜூலை 28 வரை கிளைகளை செயலூக்கப்படுத்துவது, உள்ளூர் கமிட்டிகளை புனரமைத்து வலுப்படுத்தும் இயக்கத்தை தொடருமாறு அழைப்பு விடுத்தது. இதன்மூலம் கிளைகள் முழுவதையும் செயலுக்கு கொண்டுவருவது உள்ளூர் கமிட்டிகளை வலுப்படுத்துவது என்பதை உறுதி செய்திட வேண்டுமென வழிகாட்டியுள்ளது.

மே 25 ஜுலை 28 இயக்கத்தை தொடங்கும் விதமாக, மே 26 அன்று கந்தர்வக்கோட்டையில் மாநில ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர், மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, அவிகிதொச மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் குணசேகரன் உள்ளிட்ட முன்னணித் தோழர்கள் கலந்து கொண்டனர். ஜோதி, ஈஸ்வரி, ராஜ சங்கர், கண்ணய்யன், மாசிலாமணி, மல்லிகா ராணி, நாராயணன், முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் வழிநடத்திய கூட்டத்தில் ஜூன்15-30 ல் பரப்புரை பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஜுன் 3 அன்று, மாவட்ட நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் மாநில நிலைக் குழு உறுப்பினர் தோழர் சிம்சன் கலந்து கொண்டு பரப்புரை பயணத் திட்டமிடுதலுக்கு வழிகாட்டினார். அதோடு, ஜூன் 9 அன்று முடிவுகள் செயலாக்கம் பற்றி நிலைக்குழு கூடி பரிசீலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில், ஜூன் 9 அன்று வீரடிப்பட்டியில் மாவட்ட நிலைக்குழு கூடியது. ஜூன் 3, முடிவுகள் செயலாக்கம் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. முடிவுகள் முடிவுகளாகவே இருந்தன. செயலுக்கு வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஊழியர்களது சொந்த வேலைகள், மழை, மரணம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் அமுலாக்கத்திற்கு தடையாகிவிட்டன என்ற கருத்துகள் முன்வந்தன. இதுபோன்ற தடைகளைத் தாண்டி செயல்படுவதற்காகவே "திட்டமிடுதல்" தேவைப்படுகிறது. "திட்டமிடுதல் செயலுக்கு செல்லவில்லை என்றால், திட்ட மிடுதலும் செயலாக்கமும் "உணர்வுபூர்வமாக" இல்லை என்பது உணரவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல் தவணையாக 21 தீப்பொறி சந்தா முகவரிகளும் பணம் அனுப்பி வைப்பது (ஜூன்12 அன்று 22 சந்தாக்களும் பணமும் அனுப்பப் பட்டுவிட்டது), 15 ம் தேதி 135 சந்தாக்களை ஒப்படைப்பது, 16 ம் தேதி தீப்பொறி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பாஸ்கர், தீப்பொறி ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி தீப்பொறி வருகையை புகாரின்றி உறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஜூன் 30க்குள் மாவட்ட இலக்கை (610) அடைவது; ஜூன் 15 தேதிக்குள் ஒன்றிய கமிட்டிக் கூட்டங்களை நடத்தி 15-30 திட்டமிடுதலை முடித்துவிட வேண்டும். இதுவரை, கறம்பக்குடி தெற்கு, வடக்கு, ஆலங்குடி ஒன்றிய கூட்டங்கள் முடிந்து விட்டன. கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட மற்ற ஒன்றிய கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம், 63 ஊராட்சிகளில் வேலை செய்வது, 63 ஊராட்சிகளிலும் குறைந்த பட்சம் 63 ஆயிரம் பேரை சந்திப்பது, ரூ 63000 நிதி வசூலிப்பது, 31,500 கையெழுத்துகள் பெறுவது, தீப்பொறி 610 சந்தா சேர்ப்பது, ஒன்றிய அணி திரட்டல்களில் கந்தர்வக்கோட்டை 2000, கறம்பக்குடி 1500, குன்றாண்டார் கோவில் 1000 உள்ளிட்டு ஏழு ஒன்றியங்களில் 5200 பேர் திரட்டுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மிகமுக்கியமாக, இந்த வேலைத்திட்டத்தை அனைத்து கட்சிக் கிளைகள், உள்ளூர் கமிட்டிகள் மூலம் செய்திட வேண்டும். கட்சி உறுப்பினர்கள், விதொச முன்னணி ஊழியர்கள் உள்ளிட்டு 57 வரை எண்ணிக்கை கொண்ட பல குழுக்களை அமைத்து இந்த வேலைகளை செய்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி பரப்புரை இயக்கத்தின் போது, ஊக்கமாக முன் வரும் கட்டுமான தொழிலாளர், மாணவர், இளம் பெண்களை அடையாளம் காணவேண்டும். அந்த பட்டியலை அந்தந்த மாவட்ட பொறுப்பாளரிடம் வழங்கி அமைப்பில் கொண்டுவர உதவிட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் வேலைகள் செய்யப்படுவதை உத்திரவாதம் செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

100 % உறுப்பினர்களை 100% கிளைகளில் கொண்டுவருவது, 100% உள்ளூர் கமிட்டிகளை செயல்படுத்துவதன் மூலம் அதிகபட்ச வெகுமக்களை திரட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எண்ணிக்கைகளை இயக்கமாக்கிட மாவட்டக் கமிட்டி உறுதி பூண்டுள்ளது. கட்சிக் கிளைகள், உள்ளூர் கமிட்டிகளை செயலூக்கப் படுத்துவது அதன்மூலம் வெகுமக்களிடம் செல்வது வெகுமக்களை வென்றெடுப்பது என்பது மய்யக் கடமையாக உணரப்பட்டது.