தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதத்திற்குள் சுமார் 10 கொலைகள் நடந்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் பஞ்சாயத்து ஊழியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார். புளியங்குடி தங்கசாமி கைது செய்யப்பட்டு சிறையில் மர்ம மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முத்தையா என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கடந்த ஜூலை 23 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இவர் நாடார் சமூகத்தைச் சேரந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு பின்னர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு வெறும் கொலை வழக்காக மாற்றியுள்ளார்கள். இது சாதியாதிக்கப்படுகொலை அல்ல என்றும் வன்கொடுமையும் இல்லை என்றும் காட்டும் வகையில் கொலைக்கு சம்பந்தமே இல்லாத பட்டியல் சாதியைச் சேர்ந்த மூவரை வழக்கில் சேர்த்துள்ளார்கள். மூவரில் இருவருக்கு முத்தையாவை யார் என்றே தெரியாதாம். அதில் சுரேஷ் என்பவரின் தங்கையைக் கேலி செய்ததால் முத்தையாவைக் கொலை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்தக் கொலை நடந்து சில நாட்களுக்குள் நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் சின்னதுரையை அவரோடு படிக்கும் (மறவர்) ஆதிக்க சாதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சின்னதுரையின் வீடுபுகுந்து, சாதியைச் சொல்லி அவதூறாகப் பேசி, தாயார் கண் முன்னேயே சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னதுரையை தலை முதல் கால் வரை வெட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு சாவகாசமாகச் சென்றுள்ளார்கள். தடுக்கப்போன அவரது தங்கை 14 வயது சந்திரா செல்வியையும் வெட்டியுள்ளனர். இச் சம்பவத்தைப் பார்த்த சின்னதுரையின் தாத்தா, சின்னதுரை தாயாரின் சித்தப்பா அவ்விடத்திலேயே மரணமடைந் துள்ளார். சின்னதுரை படிப்பு மற்றும் விளையாட்டில் முதலாவதாக வந்துள்ளார். அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர் சின்னதுரையை தங்களுடைய கையாள் மாதிரி நடத்தியுள்ளார்கள். தங்களுடைய பையைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்வது, பீடி, டீ வாங்கி வரச் சொல்வது என இழக்காரமாக நடத்தியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த சின்னதுரை, வள்ளியூரில் தான் படித்த கண்கார்டியா மெட்ரிக் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அதனால் அவரது தாத்தாவும் தாயாரும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்ல, அந்த ஆதிக்க சாதி மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்ததைத் தொடர்ந்து, இந்த கொலை வெறித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார்கள்.

சின்னதுரை அதிர்ஷ்டவசமாக மரணமடைய வில்லை என்பதால் உண்மை வெளியே வந்துள்ளது. ஒரு வேளை அவர் மரணமடைந் திருந்தால், முத்தையா வழக்கைப் போல, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து, கதையை மாற்றியிருப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலேயே சாதியாதிக்க வெறி ஆழமாக வேரூன்றியுள்ளது. தலையில் சாதி அடையாள ரிப்பன் கட்டுவது, கையில் சாதி அடையாளக் கயிறு கட்டுவது என்பதெல்லாம் வீட்டில் இருந்தும் சாதியத் தலைவர்களிடத்தில் இருந்தும் ஆரம்பமாகிறது.

சின்னதுரை மீதான கொலை வெறித் தாக்குதல் நடந்து நான்கு நாட்களுக்குள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள கீழ நத்தத்தில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அவரது தந்தை கண் முன்னேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவர் அந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் குடித்து விட்டு வரும் வழியில், அவர்களைப் பார்த்தவுடன் எழுந்திருக்காமல் வாய்க்கால் பாலத்தில் உட்கார்ந்து இருந்தாராம். உடனே என்னடா எங்களைப் பார்த்து முறைக்கிறாய் என்று சாதியைச் சொல்லி திட்டியிருக்கிறார்கள்.நான் சும்மாதானே உட்கார்ந்திருக்கிறேன் என்று கூற, வெட்டிக் கொன்றுள்ளார்கள். அவரது மனைவி 25 வயதுதான் ஆகிறது, ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் காரணம் மாரிசெல்வராஜின் மாமன்னன் படம்தான் என்றும் எப்போதோ நடந்தவற்றை இப்போது காட்டி சாதி வெறியை தூண்டுகிறார்கள் மாரி செல்வராஜும் ரஞ்சித்தும் என்கிறார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. ஆர்எஸ்எஸ்  சங்கிகளுடன் சனாதன ஜோதியில் ஐக்கியமாகி விட்ட கிருஷ்ணசாமியும் எஸ்சி எஸ்டி பட்டியலில் எங்களை வெளியேற்றுங்கள் என்று சொல்லும் சிலரும் மாஞ்சோலை போராட்டத்தின் போதும் கொடியன்குளம் சாதியாதிக்கத் தாக்குதல்போதும் இருந்த அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது என்பதை தங்களின் பிழைப்புக்காக மறைக்கப் பார்க்கிறார்கள் என்பது மட்டுமின்றி, பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜகவிடம் சரணடைந்து ஜால்ரா போட்டு தங்களைத் தலைவர்களாக்கிய மக்களுக்குத் துரோகமிழைக் கிறார்கள். கிருஷ்ணசாமி போன்றவர்கள் கவுண்டர், தேவர், நாயக்கர் என்று ஆதிக்க சாதி பெருமை பேசி சினிமா எடுக்கும்போது அதைக் கண்டு கொள்ளவில்லை. கொடியங்குளம் சம்பவங்களின் போது, அதை சாதிக் கலவரம் என்று எல்லாரும் சொன்னபோது, இது சாதிக் கலவரம் அல்ல, பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் சாதியாதிக்க வெறித் தாக்குதல் என்றும் காலங்காலமாக ஒடுக்கப் பட்டவர்களின் தற்காப்புக்கான பதில் வினை என்றும் சொன்னது இகக(மாலெ).

பாஜகவினர் சின்னதுரை மீதான தாக்குதல் சாதியாதிக்கத் தாக்குதல் இல்லை, மாணவர்க ளுக்குள் ஏற்பட்ட ‘ஈகோ பிரச்சனை' என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள். இதை நிலை நிறுத்தும் விதமாக சின்னதுரையின் தாயாரிடம் எல்லாரும் ஒன்றாக வீட்டிற்கு வந்து சாப்பிட்டவர்கள்தான் என்று புதிதாக சொல்லச் சொல்லிக் கொடுத் துள்ளார்கள். இதற்கு சில சொந்த சாதி இடைத் தரகர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் களுமே துணை போகிறார்கள் என்பதுதான் வேதனையான விசயம்.

ஆகஸ்டு 17ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் 11ம் வகுப்பு படிக்கும் பட்டியல் சாதி மாணவர் மீது ஆதிக்க சாதியினர் 10 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு மாணவர்களுக்கிடையே பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஏற்பட்ட தகராறை இந்த மாணவர் சமாதானப்படுத்தினார் என்பதற்காக, எங்களைச் சமாதானப்படுத்த நீ யார் என்று சொல்லி தாக்கியுள்ளார்கள். சாதியாதிக்க கொலை வெறித் தாக்குதலும் படுகொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 

நான்குநேரி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத் துள்ளது. இந்த ஆணையம் நிச்சயம் சரியான ஒரு தீர்வைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், ஆணையத்தின் முடிவுகளை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிடம் இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து போடப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முடிவுகளும் பரிந்துரைகளும் இதுவரை அமல்படுத்தப்படாமல்தான் இருக் கின்றன. குற்றவாளிகளான காவல்துறையினர் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சனாதன நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துபவர்களாக சாதியச் சங்கங்களும் முதலாளித்துவக் கட்சிகளில் உள்ள சில தலைவர்களும் காவல்துறையில் உள்ள அதிகாரிகளுமே இருந்து கொண்டிருக்கிறார்கள். புளியங்குடி தங்கசாமி மரணத்தை வன்கொ டுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏவே பார்த்துக் கொண்டார். சாதியாதிக்க வெறியானது கட்சி சார்பின்றி எல்லா கட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இப்போது சாதியாதிக்கம் செய்பவர்கள் ஒரு காலத்தில் தங்கள் சாதிப் பெயரைச் சொல்வ தற்குக் கூட கூச்சப்பட்டார்கள். ஆனால், இப்போதே ஆண்ட பரம்பரை என்று ஆதிக்க சாதி பெருமை பேசிக் கொண்டு, காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை எழுந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் களைத் தாக்குவது மட்டுமின்றி, ஊரைக் தீயிட்டுக் கொழுத்திஅவர்களின் பொருளா தாரத்தை அழிக்க வேண்டும் என்றும் வெளிப்ப டையாகவே பேசுகிறார்கள். இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது? ஒருபுறம் ஆர்எஸ்எஸ் சங்கிகளின் வளர்ச்சி என்றால் மறுபுறம் இதுபோன்ற கயவர்களை உடனடி யாகக் களையெடுக்கத் தயங்கும் திராவிடக் கட்சி ஆட்சியாளர்கள்தான் இதற்குக் காரணம்.