தோழர் ஆர்.சுகுந்தன் எனும் கீர்த்தி வல்லபன் (வயது 75), தோழர் சாருமஜூம்தார் அவர்களின் அழைப்பை ஏற்று நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தனது குடும்ப உறவுகளை துறந்து.. மக்கள் நலனே..! கட்சியின் நலன்..! என்று நாற்பது ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1970களின் பிற்பகுதியில் தோழர் சுகுந்தன் சென்னை சிம்சன் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட முன்னணியாக செயலாற்றிய காலத்தில் சிபிஐஎம்எல் (லிபரேசன்) கட்சியில் முழுநேர ஊழியராக தனது புரட்சிப் பணியைத் துவக்கியவர். ஒருங்கிணைந்த தஞ்சை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் கிராமபுற ஏழைகள் மத்தியில் பணியாற்றியவர், 1990களின் துவக்கத்தில் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி பகுதியை மையமாக கொண்டு, கட்சி அலுவலகத்தில் இருந்து தோல் மற்றும் தோல் பொருட்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியில் இயக்க பணியாற்றி வந்தவர். திருச்சியில் நடைபெற்ற சிபிஐஎம்எல் கட்சி மாநில மாநாட்டிலும், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற 11 ஆவது கட்சி காங்கிரஸிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தவர், மேற்கண்ட பல்வேறு சிறப்புகளுக்குரிய தோழர் சுகுந்தன் அவர்கள் உடல்நல குறைவால் ஒரு வார காலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 06, 2023 அன்று மதியம் 2.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

தோழரின் உடல், ஜூலை 07,2023 ஆம்பூர் AICCTU - LLGDLU தோல் மற்றும் தோல் பொருட்கள் ஜனநாயக தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில், திரளாக தொழிலாளர்கள் அணிதிரண்டு இருக்க தோழர் சுகுந்தன் அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. LLGDLU செயலாளர் தோழர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், இகக(மாலெ)

மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம் மற்றும் தோழர் சந்திரமோகன், கட்சி மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் தோழர் கிருஷ்ணவேணி, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தனவேல், ராஜசங்கர், ஜெகதீஸ், சுப்புராமன், வேலூர் மாவட்ட சிம்புதேவன், திண்டுக்கல் முருகேசன், திருவண் ணாமலை ஆறுமுகம் மற்றும் மாந்தநேயன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க முன்னணிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள் பலரும் அஞ்சலி செலுத்தி உரை ஆற்றினர். தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் படுத்த வேண்டும்!" என்ற அவர் விட்டுச் சென்ற கடமையை முன்னெடுத்து செல்வோம்! தோழர் சுகுந்தனுக்குச் செவ்வணக்கம்!!