கிராமப்புர மக்களின் நிலம், வேலை,கூலி, கவுரவம், ஜனநாயகம் கோரிக்கைகளை வலியுறுத்தும் பரப்புரைப் பயணம் தோழர் சந்திரகுமார் பிறந்த ஊரான பெருந் தோட்டத்தி லிருந்து 2023 செப்டம்பர் 2 அன்று தொடங்கியது. தரிசாக கிடக்கும் நிலத்தை உழைக்கும் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மீது உற்சாக மிக்க பெருந்திரள் கிளர்ச்சியால் ஊக்கம் பெற்று முன்னணி தோழர்கள், மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் தியாகிகள் சுடரேந்தி பயணத்தைத் தொடங்கினர். சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் பேரூர்கள் வழியாக மக்கள் சந்திப்பு பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்தி மணலூர் (திருப்பனந்தாள் ஒன்றியம்) தோழர்கள் சந்திரகுமார்-சந்திரசேகர் நினைவிடம் வந்து சேர்ந்தனர். ஊர்மக்கள் கட்சி ஊழியர்கள் திரண்டிருந்த நினைவிடத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வீ சங்கர் கட்சிக் கொடியேற்றி வைத்தார். மணலூர் கிளைச் செயலாளர் தங்கசாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் டி. கண்ணய்யன், மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் மாசிலாமணி, தவச்செல்வம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக் குழு உறுப்பினர் மாதவி, மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். தோழர்கள் குணசேகரன், பாலசுந்தரம் அஞ்சலி உரையாற்றிய பின் பயணம் திருப்பனந்தாள் நோக்கி புறப்பட்டது. செங்கொடிகள் ஒளிர்ந்த இருசக்கர வாகனங்கள் அணிவகுத்துச் செல்ல வழிநெடுக பரப்புரை முழக்கங்களுடன் திருப்பனந்தாள் நகரை சென்றடைந்தது. நன்கு அலங்கரிக்கப் பட்டிருந்த மேடையில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சங்கர், மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் புரட்சிகர முழக்கங்களுக்கிடையே தியாகிகள் சுடரைப் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட பொறுப்பாளர், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ராவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தோழர் சந்திரகுமார்-சந்திரசேகர் போராட்ட வாழ்வை உணர்ச்சி பூர்வமாக மாநிலச் செயலாளர் ஆசைத் தம்பி எடுத்துக் கூற அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் மோடி ஆட்சி வெளியேற்றப் பட எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

அங்கிருந்து அடுத்த நாள் பயணம் தொடர்ந்தது. திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகள், கும்பகோணம் நகரம் உள்ளிட்டப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் அணிவகுத்த பரப்புரை பயணம் செப்டம்பர் 3,4,5 தேதிகள் முழுவதும் மேற்கொண்டது. செப்டம்பர் 6 அன்று கபிஸ்தலத்தில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தஞ்சை மாவட்ட முதல் மாநாட்டை பயணக் குழு வாழ்த்தியது. 11 பேர் கொண்ட மாவட்டக் குழுவையும் தலைவராக தோழர் சசிகலாவையும் செயலாளராக தோழர் விஜயாளையும் தேர்ந்தெடுத்த மாநாடு பரப்புரை பயணத்துக்கு வரவேற்பளித்தது.

மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களில் உள்ள பல பத்து ஊராட்சிகளில், நகர்ப்புர பகுதிகளில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சிகளில் கட்சி, அவிகிதொச மாவட்ட தலைவர்கள், முன்னணி ஊழியர்கள், மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், கும்பகோணம் மாநகரச் செயலாளர் மதியழகன், மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மோடி அரசின் சீர்குலைவு செயல், பாஜக எதிர்ப்பு அரசியல் கருத்துகள் மக்களை வெகுவாக ஈர்த்தன.

செப்டம்பர் 7 அன்று, பயணம் திருச்சியை அடைந்தது. மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்டச் செயலாளர் தேசிகன், மாநிலக் கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார், அவிகிதொச பொறுப்பாளர் கருப்பையா, மணப்பாறை நகரச் செயலாளர் பாலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, தங்கராஜ், இளையராஜா, மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ராமாயி உள்ளிட்டோர் பரப்புரையில் பங்கு பெற்றனர்.

செப்டம்பர் 8 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பயணம் தொடங்கியது. லக்கணாப்பட்டியில் கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சி, கீரனூர் காந்தி சிலை அருகே பரப்புரையை துவக் கியது. கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வளத்தான், குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் சத்தியமூர்த்தி, பெண்கள் கழக மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி, பாலதண்டாயுதம், மாவட்டக் குழு உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்டோர் பயணத்தில் கலந்து கொண்டனர். குன்றாண்டார் கோவில் அண்டக்குளம் வழியிலுள்ள பல சிற்றூர், பேரூர்களில் பரப்புரை செய்து, 'பயணம்' மாலை ஆலங்குடியை சென்றடைந்தது. ஆலங்குடி கடைத்தெருவில் பெண்கள் கழகத்தின் முதல் மாநாடு சார்பில் பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 100 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பெண்கள் மாநாடு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக்குழு, மாவட்ட தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் மணிமேகலை, மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாநில அமைப்பாளர் ரேவதி உள்ளிட்ட தோழர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி மாவட்டக்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்டச் செயலாளர் வளத்தான், பாலசுந்தரம் ஆகியோர் மாநாட்டு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். செப் 9 அன்று கறம்பக்குடி ஒன்றியப் பகுதியிலுள்ள ஊராட்சி, நகர்ப்புரப் பகுதிகளில் பரப்புரை பயணம் மக்களை சந்தித்தது. மாநிலக் கமிட்டி உறுப்பினர் ரங்கசாமி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் விஜயன்,மாதவன், ராஜரத்தினம், ஒன்றியக் கமிட்டி தோழர்கள் மதி, புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10ம் தேதி, கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டது. மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் சின்னதுரை, புண்ணியமூர்த்தி, கோவிந்தராஜ், பெரமயன், தங்கராஜ், சிவராஜ் மேலும் ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இடங்களில் பொதுமக்கள் பல ஆர்வத்துடன் நிதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் பரப்புரை பயணத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்ட சின்னதுரை சிறிய விபத்தொன்றுக்கு ஆளாகி பயணத்தில் தொடரமுடியாமலாகிவிட்டது. 11 தேதி அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் பயணக் குழு பயணம் செய்தது. மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் ஜீவா, மதிமுருகன் இவர்களோடு கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் ராஜசங்கர், பாலமுருகன், வீரப்பன் இன்னும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஆறு ஒன்றியங்களில் நடைபெற்ற பரப்புரை பயணத்தை மாவட்டச் செயலாளர் வளத்தான் வழி நடத்தினார்.

தோழர் சுப்பு நினைவு நாளான செப்டம்பர் 13 அன்று காலை அவருடைய சமாதிக்கு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சங்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் பால சுந்தரம்,ஆசைத்தம்பி, பாலசுப்பிரமணியன், மாநில நிலைக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ஞானதேசிகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், நாராயணன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சிம்சன் உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் பாசிச பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற உறுதி ஏற்றுக் கொண்டனர். தோழர் சுப்புவின் இல்லத்திற்குச் சென்று அவர் துணைவியார் காளியம்மாளையும் மகள் ராதிகாவையும் சந்தித்தனர்.

அன்று மாலை தேவகோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு சிபிஐஎம்எல் பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து குறிப்பாக பெரும் எண்ணிக்கையில் பெண்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இகக(மாலெ) சிவகங்கை மாவட்டச் செயலாளர் சிம்சன், மாநிலச் செயலாளர் ஆசைத் தம்பி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளைய கௌதமன், பேராசிரியர் கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பேராசிரியர் அரச முருகபாண்டியன், தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் சந்தன மேரி, உழைக்கும் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் எஸ்.பி. துரைராஜ், அயர்லா மாநில பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன், ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் ஞான தேசிகன் ஆகியோர் உரையாற்றினர். மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பாலசுந்தரம், பாலசுப்ரமணியம், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வளர்த்தான் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். தீர்மானத்தை புரட்சிகர இளைஞர் கழகத்தின் ரஞ்சித் முன்வைத்தார். புஇக ராமச்சந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் பேசிய பலரும் சனாதனத்தையும் சாதியாதிக்கத்தையும் கண்டனம் செய்தனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்பவர்கள் நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே கூலி தருவார்களா? என்று கேள்வி எழுப்பினார். மக்களுக்காக குப்பைத்தொட்டி தேவை என்ற பிரச்சினையில் கூட நாம் போராடலாம். ஆனால் உழைக்கும் மக்களின் அதிகாரம் என்பது தான் சிபிஐ எம்எல் கட்சியின் முக்கிய இலக்காக இருக்கும் என்றார்.

பாஜகவுக்கு செல்வாக்கு ஏற்படுத்தும் முயற்சியாக அண்ணாமலை நடத்திய பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில், ஜனநாயகம் காக்க, இந்தியாவைக் காக்க மோடி ஆட்சி வெளியேற்றப்பட வேண்டுமென்ற முழக்கத்துடன் நடைபெற்ற இகக(மாலெ), அவிகிதொச பரப்புரை பயணத்தை மக்கள் வெகுவாக ஆதரித்தனர். பாஜக எதிர்ப்பு மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதை பரப்புரை பயணம் உணர்த்திய அரசியல் பயணமாக அமைந்தது. அமைப்பு ரீதியான அணிதிரட்டலில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் பயணம் சுட்டிக்காட்டியுள்ளது.