நகர்மயமாதல் அதிகமாகிவருகிறது. அதன் தாக்கம் கிராமப்புற பகுதிகளுக்கும் பரவுகிறது. பெருநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப் பட்டுள்ள பேரூராட்சிகளின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராமங்களில், தங்கள் தங்கள் சாதி வளைகளில் சிக்குண்ட மக்கள் குடியிருப்புகள் போதாமல் விழிபிதுங்குகின்றன. அவர்கள் தங்களுக்கான புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ளாதபடி, நிலத்தின் விலை அதிகரிப்பும், சாதிச் சுவர்களும் தடுக்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் வீட்டுமனைக்கான தேவை அதிகரித்தும் வீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது. வீட்டுமனை கேட்டு தாசில்தார் அலுவலகங்களை மக்கள் அணுகும்போது, "புறம்போக்கு இல்லை, இருந்தால் பார்க்கிறோம்.. நீங்கள் கூட புறம்போக்கை அடையாளம் காட்டுங்கள்" என்று வருவாய் துறை அதிகாரிகள் கதைப்பது வழக்கம். ஆனால், அவர்கள்தான் நிலத்தைக் காக்கும் காவலர்கள். இந்த காவலர்களின் உதவியோடு அரசு நிலங்களை செல்வாக்குள்ள தனி நபர்கள் மடக்கிப்போடுவது நடக்கிறது. நிலத்தைத் திருடும் சமூக விரோதிகளுக்கு வருவாய் துறையே உதவியாக இருந்திருக்கிறது. இத்தகைய சூழலில்,

1) ஆதி திராவிட மக்கள் வீட்டுமனை வாங்குவதில் உள்ள சமூக சிக்கலையும் கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்குவதற்கு தமிழக அரசு அதிகாரிகளை நியமனம் செய்திருக் கிறது. அதன்படி, மதுரை மாவட்டம், வாடிப் பட்டி வட்டம் தெத்தூரில் வாழும் ஆதி திராவிடர்களுக்கு ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு, கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், ஒன்றரை ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் வாங்கப்பட்டு மனையாக்கி பட்டா அளிக்கப் பட்டது. ஆனால், நிலத்தை விற்ற ஆதிக்க சாதி நபர், அதே நிலத்தை வேறு ஒருவருக்கும் விற்றுவிட்டதாக ஆவணப் பதிவு செய்தார். நிலத்தில் யாரும் நுழைந்துவிடாதிருக்க நுழைவுப் பகுதியில் பழ மரங்களை நட்டு விவசாயமும் செய்தார். சாதி ஆதிக்கத்திற்குப் பயந்த மக்கள் நிலத்தின் மீதான கோரிக்கையைத் தங்கள் மனதில் புதைத்துக்கொண்டனர். 20 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய தலைமுறைகளின் வருகையின் காரணமாக, வீட்டுமனை தேவை அதிகரித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர். திமுகவில் இருந்த அந்த மக்கள், அதிலிருந்து விலகி, சிபிஐஎம்எல் கட்சியின் இணைந்தனர்.

கட்சியின் வழிகாட்டுதலின்படி, சட்ட விரோதமாக விற்கப்பட்ட நிலத்தின் விற்பனை பதிவை ரத்து செய்ய மக்கள் போராடினர். நிலமீட்பு இயக்கம் என்று சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறையின் முயற்சியில் விற்பனை பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், புதிய தாசில்தார் நில மீட்பு, ஆதி திராவிடர் நலத்துறை, நிலத்தை அளந்துகொடுப்பதற்கு மறுத்தது மட்டுமல்லாமல் அலைக்கழித்து விலகச் செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

குடியிருப்பாளர்களின் (பட்டா பெற்றவர்களின்) சங்கம் ஒன்றை கட்சி உருவாக்கியது. வரப்போகும் குடியிருப்புக்கு அம்பேத்கார் நகர் என்று மக்கள் முடிவு செய்தனர். சங்கத்திற்கான நிதி உருவாக்கப்பட்டது. நிலத்தை அளந்து எடுப்பதற்கான நடவடிக்கைகளை சங்கம் மேற்கொண்டது. பழ மரங்கள் வெட்டி சாய்க்கப் பட்டு காடாக இருந்த பூமியை குடியிருப்புக்கு ஏற்ற நிலமாக்குவதற்கு மக்கள் இறங்கினர்.

நில உடமையாளர் தரப்பு புகார் கொடுத் தனர். கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரி தலைமையில், கிளைச் செயலாளர் விக்கி, அய்சா உறுப்பினர் நவீன் காவல் துறையைச் சந்தித்து ஆவணங்களை அளித்தனர். காவல்துறை அதை ஏற்றுக்கொண்டு விலகிக் கொண்டது. இருந்தபோதும், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் இறங்கிவரவில்லை. அவரின் மக்கள் விரோத போக்கை அம்பலப் படுத்தி சுவரொட்டி வெளியிடப்பட்டு ஊடகங் களுக்கு செய்தி அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் என்று அறிவிக்கப்பட்டது. விளைவாக, தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிலத்தை அளந்து கொடுப்பதாக உறுதி அளித்து அதற்கான வேலைகளை உடனடியாகத் துவங்கினார். தற்போதைக்கு போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என்றும் தேவைப்பட்டால் போராட்ட ஆயுதத்தைக் கையிலெடுப்பது என்றும் குடியிருப்போர் சங்கம் தீர்மானித்துள்ளது.

2) வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி மலையடிவாரத்திற்கும் வாடிப்பட்டி நான்கு வழிச் சாலைக்கும் இடைப்பட்ட கிராமம். விவசாய நிலம், வீட்டுமனை விரிவாக்கத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாத ஊர். தலைமுறைகளின் வளர்ச்சியில் வீட்டு மனை தேவை அதிகரித்துள்ள தமிழக கிராமங்களில் ஒன்று.

அந்த ஊருக்கும் மலைக்கும் இடைப்பட்ட சர்வே எண் 127 என்ற அரசு நிலத்தை (ஓடையை ஒட்டியுள்ள நிலம்) தனியார் ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கு, முந்தைய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வாங்கியிருக்கிறார். பொது நிலத்தின் பரப்பு 10.95 ஏக்கர். அதனைச் சுற்றி வேலி எழுப்பினார்.இதனால், கோப மடைந்த மக்கள் சிபிஐ எம்எல் கட்சியை அணுகினர். கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சிய ருக்கு 24.01.2023 அன்று புகார் அளிக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. வருவாய் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் வேலியை அகற்றினார். புறம்போக்கின் தெற்குப் பகுதியில் அவரது ஆக்கிரமிப்பு வேலி நீடிக்கிறது என்று கருதிய மக்கள் மீண்டும் நில அளவை கோரி, கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் ஒச்சா தேவர் முன்முயற்சியில் வருவாய் துறைக்கு நெருக்கடி கொடுத்தனர். நில அளவைக்கு பணம் கட்டும்படி ஊராட்சியை நிர்ப்பந்தம் செய்தனர். நில ஆக்கிரமிப்பாளருக்குத் துணையாக இருந்த உள்ளாட்சி தலைவரும் அவரின் கணவரும் முதலில் மறுத்தனர். மக்களின் கோபத்தைச் சமாளிக்க முடியாமல், வேறுவழியின்றி, பணத்தைக் கட்டினர். இருந்தாலும், நில அளவை செய்யாமல் வருவாய் துறை இழுத்தடித்தது.

நிலத்தை அளந்துகொடுக்கும்படி வருவாய்த் துறைக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. வேறுவழியின்றி, 3 பேர் வந்து நிலத்தை அளந்தனர். இகக(மாலெ) மாவட்ட செயலாளரும் கிளை செயலாளரும் பொது மக்களுடன் நின்று அளவைக் கண்காணித்தனர். ஆக்கிரமிப்பாளர் அமைத்துள்ள வேலி பொது நிலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை வருவாய் துறையின் அளவை காட்டியது. ஆனால், புதிய எல்லைக்கான கல்லை நாட்டாமலும் ஆக்கிர மிப்பு வேலியை அகற்றாமலும் வருவாய் துறை கையைக் கட்டிக்கொண்டது.

அதன்பின் கிராம மக்கள் அனைவரும் சாதிய பாகுபாடு இன்றி ஒன்றிணைத்து தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு நில மீட்பு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய் துறையை நிர்ப்பந்திக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால், ஆக்கிரமிக்கப் பட்ட புறம்போக்கு நிலப்பகுதிக்குள் "விராலிப்பட்டி சமத்துவபுரம் பொதுமக்கள் மீட்பு" என்றும், "சிபிஅய் எல்எல் கட்சி" என்றும் எழுதப்பட்ட பலகையை 28.09.23 அன்று ஊன்றினர். இதற்காக, ஆக்கிரமிப்பாளரின் வேலிகளைத் தாண்டிச் சென்றனர். மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் முத்துராக்குவும் சண்முகமும் மக்களை வழி நடத்தினர்.

இதனால் கோபமுற்ற ஆக்கிரமிப்பாளர் தன் சாதி ஆட்களைத் திரட்டவும், போலீசில் புகார் கொடுக்கவும் மிரட்டவும் முயன்று வருகிறார். இகக(மாலெ) கட்சியினர் மீது லட்சங்களில் லஞ்சம் பெற்றதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், 30.09.2023 அன்று விராலிப்பட்டியில் கட்சி கிளைச் செயலாளரின் முயற்சியில் நில மீட்பு கமிட்டி கூட்டம் நடந்தது. அனைத்து சாதிகளையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட அக்கூட்டம் பொது நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பதை வேடிக்கை பார்க்கும், துணைபோகும் வருவாய் துறைக்கு எதிராக கட்டம் கட்டமான போராட்டங்களைக் கட்ட மைக்கத் தீர்மானித்துள்ளது. தனியார் ஆக்கிர மிப்பு செய்து வைத்துள்ள அரசு நிலங்களின் பட்டியல் வெளியிடுவது என்றும் மக்களுக்கான புதிய குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களில் அரசு அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை பிரச்சார இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.