தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது, கடந்த 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை வழக்கில் தர்மபுரி அமர்வு நீதிமன்றம் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 215 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைகளை வழங்கியது. அதன் மீது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வாச்சாத்தி பழங்குடியினருக்கு நீதி பெற்றுத்தர விடாப்பிடியாக பாடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரையும் சிபிஐஎம்எல் கட்சி பாராட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள் தனது தீர்ப்பில், உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக, அப்பாவி பழங்குடி மக்களை பலிகடாக்களாக்கிய, "அப்போதைய தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்பதையும் வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், அப்போது பொறுப்பில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; அதன்வழியாக வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கான நீதியை முழுமைப்படுத்தப்பட வேண்டும் என சிபிஐஎம்எல் கட்சி கோருகிறது.