மோடி அரசாங்கத்திற்கு ஈபியும் (தேர்தல் பத்திரங்கள்), ஈடியும் (அமலாக்க இயக்குனரகம்) அதிகாரத்திற்கான இரண்டு மிகப்பெரிய ஊற்றாக வெளிப்பட்டுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களில் உண்மையிலேயே ஈடிதான் பாஜகவிற்கான நட்சத்திர பரப்புரையாளராக மாறியுள்ளது. ஈடியின் இருத்தல் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென்றால் தனது எதிர்ப்பாளர்களை இலக்காக்க அதனை ஆயுதமாக்கி யிருக்கிறது. கார்ப்பரேட்டு களிடமிருந்து கட்டுப் பாடற்ற, கணக்கில் வராத நிதி பெறுதலை எளிதாக்க, தேர்தல் பத்திரங்களை மோடி அரசாங்கம் தான் உருவாக்கியது; அறிமுகப்படுத்தியது. தேர்தல்களில் முன்னெப்போதும் கண்டிராத அளவு பணத்தின் அதிகாரம் பயன்படுத்தப்படுவதற்கு இது வழி வகுத்துள்ளது. அதன்மூலம் தனது அனைத்து எதிர்ப்பாளர்களையும் வெற்றிகொள்ள மாபெரும் நல்வாய்ப்பை பாஜகவிற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் ஈபி, ஈடி என்னும் இந்த இரண்டு ஆயுதங்களும் மாறுபாடான வழிகளில் பயன் படுத்தப் படுகின்றன. ஈடியின் ஒவ்வொரு திடீர்ச் சோதனைகளும் கண்காட்சியாக்கப்படுகிற அதே வேளையில், ஈபியோ இரகசியமாக மூடி மறைக்கப்படுகிறது. 

மோடியின் காலத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஈடியால், ஈடி என்பது அனைவரும் அறிந்த பெயராகிப் போனது. ஆயுதமயமாக்கப்பட்ட மத்திய நிறுவனங்களின் அவப்புகழ் பட்டியலில் தற்போது அது சிபிஐயையே ஒருவேளை தாண்டிச் சென்றிருக்கலாம். பிஎம்எல்ஏ அல்லது பணமோசடி தடுப்பு சட்டம், 2002; எஃப்ஈஎம்ஏ அல்லது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999; எஃப்ஈஓஏ அல்லது தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 போன்ற நிதி குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அமலாக்கப்படுவதை கண்காணிக்க சட்டப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்ட ஈடி, தற்போது பாஜக அல்லாத கட்சித் தலைவர்களின் வீடுகளையும் அலுவலகங்களையும் திடீர் சோதனையிடுகிற செய்திகளில் தான் அடிபடுகிறது. பிணையில்லா பிரிவுகளின் கீழ் கைது செய்வதற்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை பறி முதல் செய்வதற்கும் அசாதாரண அதிகாரங்களை ஈடி தற்போது பெற்றுள்ளது. மேலும் குற்றம் சாட்டப் பட்டவர்களிடமிருந்து அது பெறும் வாக்குமூலங்கள் ஏற்கத்தக்க ஆதாரங்களாகவும் கருதப்படுகின்றன.

இத்தகைய அசாதாரண அதிகாரங்களும் அளவுக்கு அதிகமான பயன்படுத்துதலும் இருந்த போதிலும், ஈடி வழக்குகளில் உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்படுகிற விகிதம் மிக மிகக் குறைவானதாகும். 2005 லிருந்து கிட்டத்தட்ட 6,000 வழக்குகளை ஈடி பதிவு செய்துள்ளது. ஆனால் 20 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 25 வழக்குகள் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளன. முற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு தரப்புக்கு சார்பானதாகவுமே ஈடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னாள் எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு அல்லது என்டிஏ முகாமுக்குள் தஞ்சமடைந்த பிறகு கைவிடப்பட்டன. அசாமின் ஹிமாந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தின் சுவேந்து அதிகாரி முதல் கர்நாடகாவின் பிஎஸ் எத்தியூரப்பா, மகாராஷ்டிரா வின் நாராயண் ரானே, பவன காவாலி, யஸ்வந்த் மற்றும் யாமினி ஜாதவ், மிகச் சமீபத்தில் அஜித் பவார், ஜகன் பூஜ்பால் வரை பாஜகவால் ஈடி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியல் மிக நீண்டதாகவும் பன்முகப்பட்டதாகவும் உள்ளது.

ஈடியால் இலக்காக்கப்பட்டு துன்புறுத்தப்படும் எதிர்கட்சித் தலைவர்களின் பட்டியலும் நீண்டதாக, பன்முகப்பட்டதாக இருப்பதில் எந்தக் குறைவும் இல்லை. பல்வேறு தலைவர்கள் சிறையில் வாடுகின்றனர். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த 2024 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு மேலும் சிலர் தற்போது இலக்காக்கப்படுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் கூட, ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் கெடுநோக்குடைய திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன எதிர்கட்சிகள் மீது அவதூறுகளை வீசவும் ஊழலுக்கு எதிராக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் மோடி அரசாட்சிக்கு ஊக்கம் அளிக்கவும் சங்பாஜக பரப்புரை பொறியமைவு இந்தத் திடீர் சோதனைகளை பயன்படுத்தி கொள்ளும் வேளையில், ராஜஸ்தான் அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புத் துறை இரண்டு ஈடி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகப் பிடித்தது. சத்தீஸ்கரில் எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்வதற்கு முன்பாகவே, அரசாங்கத் தரப்பு சாட்சியாக மாறியவர்களின் சரிபார்க்கப்படாத தகவல் என்னென்ன அதற்கு கிடைத்ததோ அவற்றை வெளியிட்டதன் மூலம் தற்பொழுது பதவி வகிக்கும் காங்கிரஸ் முதலமைச்சருக்கு எதிராக அவதூறிழைக்கும் இயக்கத்தை மேற்கொள்வதில் ஈடி சுறுசுறுப்பாக செயல்படுகிறது. ஈடி, சிஆர்பிஎஃப் போன்ற மத்திய நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகளைத் தடுக்க முழுமையாக சோதனையிடப்பட வேண்டும் என சத்திஸ்கர் முதலமைச்சர் சரியாகவே கோரியுள்ளார். 

மோடி அரசாட்சியால் கொடிய முன்னணி தேர்தல் ஆயுதமாக ஈடி பயன்படுத்தப் படுகிறதென்றல், தேர்தல் பத்திரங்கள் பணத்தின் அதிகாரத்தைப் பெருக்கிக்கொள்ள எவரும் அறிந்துகொள்ள இயலாத வழிமுறையாகும். கார்ப்பரேட் நன்கொடையாளர்களுக்கு முழுமையான அடையாள மறைப்பை உறுதி செய்ய, நிறுவனங்கள் சட்டம் முதல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வரை தொடர்ச்சியாக பல சட்டங்கள் திருத்தப்பட்டு இந்தப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. யார் நன்கொடை வழங்கலாம் (அந்நிய சக்திகளும் ஷெல் நிறுவனங்களும் தற்போது சுதந்திரமாக இந்தியத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தலாம்), எவ்வளவு வழங்கலாம் (ஒரு நிறுவனம் வழங்கும் நண்கொடையின் அளவுக்கு எந்த வரம்பும் கிடையாது) என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. இரகசியமாகவும் தண்டனையின்றியும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க எளிதான, நிச்சயமான வழியாக இந்தத் தேர்தல் பத்திரங்கள் மாறியுள்ளன. ஈபி திட்டத்தின் அரசியல் சாசன செல்லுபடிக்கு சவால்விடும் மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணையில் ஒரு கட்சியினுடைய தேர்தல் நிதியின் மூலத்தையும் தன்மையையும் அறிந்து கொள்ளும் எந்த உரிமையும் வாக்காளர் களுக்கு கிடையாது என்றும் கூட இந்த அரசாங்கம் சொன்னது. 

இந்தியாவில் தொழில்துறைஅரசியல் பிணைப் புக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றி கொண்ட கார்ப்பரேட்டுகளுக்கும் மிகவும் வெட்கக்கேடான உதாரணம் இந்த தேர்தல் பத்திர முறை தான். அதன் தாக்கம், விளைவு குறித்து தீவிர அச்சத்தை வெளிப்படுத்திய, இந்திய ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் இந்தத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பை எழுப்பியுள்ளனர். இருப்பினும், மோடி அரசாங்கம் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, இந்தியத் தேர்தல் முறைமையின் திட்டங்களிலேயே மிகவும் நேர்மை குன்றிய இத்திட்டத்தை திணித் துள்ளது. மோடி அரசாங்கத்தின் கைகளில் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரம், தேர்ந்தெடுக்கப் பட்ட சில கார்ப்பரேட்டுகளின் கைகளில் சாதனை யளவு செல்வமும் இலாபமீட்டும் வாய்ப்புகளும் குவிதல்,அதற்குக் கைம்மாறாக பாஜகவிற்கு முற்றிலும் மறைவான செயல்முறையில், முழுவதும் மய்யப்படுத்தப்பட்ட அரசியல் நிதிகள் என்ற இந்த மும்முனை தாக்குதலின் கீழ் இந்தியத் தேர்தல் ஜனநாயகம் தடுமாறுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை இப்படி அப்பட்டமாக கேலிக் கூத்தாக்கி,தேர்தல் முறைமையை மோசடியாக கையாளுவதன் அடிப்படையில் சங்கிப் படை யணியின் பாசிசத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. சில அரசியல் நோக்கர்கள் இதனை தேர்தல் எதேச்சதிகாரம் என்கின்றனர். இந்த முறைமையின் அச்சாணியாக ஈடிஈபி இணைப்பு செயல்படுகிறது. தேர்தல் பத்திரங்களின் மெய்யான நோக்கம், தன்மையை உச்ச நீதிமன்ற விசாரணை அம்பல மாக்கியுள்ளது. இதற்குப் பிறகும் இந்தப் பத்திரங்கள் அரசு நிர்வாகக் கொள்கையின் புனிதம் எனக் கூறி உச்ச நீதிமன்றம் இதனை தொடர விட்டு விடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! வர இருக்கிற தேர்தல்களில் மோடி அரசாட்சியை நிச்சயமான தோல்வியுறச் செய்தால் மட்டுமே ஈடிஈபியின் அரசாட்சியை மாற்றியமைக்க முடியும். அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இந்தத் திசையில் பயணிப்பதற்காக வழி வகுக்க வேண்டும்.