தமிழ்நாட்டில், தலித்துகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்குச் சில....

புதுக்கோட்டை வேங்கைவயல்

2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் சாதியாதிக்க சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயற்சிக்கப் பட்டது. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. 

மதுரை காயாம்பட்டி

15.1.2023ல் மதுரை, ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கண்ணனும் அவரது மனைவியும் பொங்கல் அன்று பக்கத்து ஊரில் இருந்த உறவினர் களைப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள் ளனர். அவர்களை வழிமறித்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள், “இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய்?" எனக் கேட்டு தாக்கியுள் ளனர். கண்ணன் அணிந்திருந்த ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர்; அவரது மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்துள்ளனர். இந்த விவகாரத்தைத் தட்டிக்கேட்ட பட்டியலின மக்கள் தங்களைத் தாக்க வந்ததாக ஆதிக்க சாதியினர் கொடுத்த புகாரில் 26 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கண்ணன் கொடுத்தப் புகாரில், ஏழு பேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 

திருநெல்வேலி திசையன்விளை

திசையன்விளை, அப்புவிளையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முத்தையா, நாடார் சாதி பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக 23.7.2023 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் மாண்புமிகு அப்பாவு அவர்களின் தொகுதி. முத்தையாவின் தந்தை இது சாதியாதிக்கப்படுகொலைதான் என்று புகார் அளித்துள்ளார். முதலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது வெறும் கொலை வழக்காக மாற்றப் பட்டு சம்பந்தமே இல்லாத பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் 25.7.2023 அன்று கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார்கள். குண்டர் தடுப்புக் காவல் ஆலோசனைக் குழுவினரால் ரத்து செய்யப்பட்டு, தற்போது அவர்கள் பிணையில் உள்ளார்கள்.

நாங்குநேரி

தான் படிக்கும் பள்ளியில் தனக்கு இழைக்கப் படும் சாதியாதிக்கக் கொடுமை குறித்து புகார் அளித்ததற்காக நாங்குநேரியைச் சேர்ந்த தலித் - சமூகத்தைச் சேர்ந்த சின்னதுரை வீட்டிற்குள் புகுந்து ஆதிக்க சாதியைச் சேர்ந்த சகமாணவர்களால் கொலை வெறியுடன் வெட்டப்பட்டார். தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டினார்கள். பள்ளிகளிலேயே சாதியாதிக்க நச்சு விதைக்கப்படு கிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல் வேலி பள்ளிகளில் சாதி அடையாள வண்ணக் கயிறுகளும் ரிப்பன்களும் மிகவும் பிரபலம்.

சிவந்திப்பட்டி

பட்டியல் சமூக மாடசாமி தன் வேலை முடித்து வந்து கொண்டிருக்கிறார். அவரை இருவர் வழி மறித்து நீ எந்த ஊர்ல என்று கேட்க, அவர் நெத்தியம்பட்டி என்று சொன்னவுடன் அந்த சாதிப் பயலுக்கு இங்க என்ன வேலை என்று சொல்லி அடித்து உதைக்கிறார்கள். மாடசாமி சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் நடந்ததை அப்படியே எழுதி புகார் அளிக்கிறார். புகாரை வாங்கிய பெண் காவல் ஆய்வாளர், எஸ்.சி.எஸ்.டி சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யாமல், வெறும் அடிபிடி என்பதாகவும் எதிரிகள் யார் என்று தெரியவில்லை என்றும் எப்ஐஆர் போடுகிறார்.இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் போராட்டத்திற்குப் பின்னர் இப்போது எஸ்சி.எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தச்சநல்லூர்

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி தச்சநல் லூரை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் அருகே 31.10.23ல், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோரை இடைநிலை சாதியாதிக்க பேர்வழிகள் சாதியைச் சொல்லித் திட்டி, அசிங்கமாகப் பேசி கொடூரமாகத் தாக்கியது மட்டுமல்லாமல், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து, மாலை முதல் நள்ளிரவு வரை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களைச் சித்தரவதைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கினர். அந்த சாதி வெறியர்கள் தலித் இளைஞர்களின் செல்போன்கள், டெபிட் கார்டுகள், நகைகள் மற்றும் 5000 ரூபாய் பணத்தை இ-வாலட் மூலம் கொள்ளையடித்தனர். ஆடைகளைப் பறித்துக் கொண்டனர். அவமானப்பட்ட இளைஞர்கள் இருவரும் நிர்வாணமாக இரண்டு கிலோமீட்டர்தூரம் நடந்தே வீடு சென்று சேர்ந்துள்ளனர்.

திருப்பணி கரிசல்குளம்

இடைநிலைச் சாதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத இளைஞர் பட்டியல் சாதியைச் சேர்ந்த சந்தியா தன்னை காதலிக்க மறுத்ததால், பட்டப்பகலில் அவர் வேலை பார்க்கும் குடோனி லேயே வெட்டிக் கொலை செய்தார். காவல்துறை இப்பிரச்சினையை அப் பையன் புத்தி சரியில்லாமல் செய்துவிட்டதுபோல் மாற்ற முயற்சித்தது மட்டு மின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆதரவான தலித் அமைப்புகளிடம் வெளிப்படை யாகவே கூறியுள்ளது. 

சோக்கடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோக்கடி கிராமத்தில், கோயில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட அசுத்தம் தொடர்பாக, 29.10.23ல் தலித்துகள் புகார் செய்ய, அதிமுக பிரமுகர்கள் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதி கும்பலால் கொடூரமாக தலித்துகள் தாக்கப் பட்டனர். ஒரு சிறு தகராறு காரணமாக தலித் வீடுகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களைப் பாது காப்பதற்குப் பதிலாக, காவல்துறை சாதியாதிக்க சக்திகளின் பக்கம் நின்றது.

தென்காசி புளியங்குடியைச் சேர்ந்த தலித் தங்கசாமி பாளையங்கோட்டை சிறையில் மர்ம மரணம், தென்காசி தலித் போலீஸ்காரர் தினேஷ், ஆதிக்க சாதியினரால் தாக்குதல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் அருந்ததியர் சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு போராடினார்கள் என்பதற்காக அவர்களை சாதியாதிக்க மனோபாவத்துடன் தாக்கிய காவல்துறை 5 பொய் வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் 13.11.2023 அன்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணி என்பவர் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார். அன்றாடம் தலித்துகள் மீதான தாக்குதல்கள், வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு எதிரான கொடுமைகள் நீடிக்கின்றன:

தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் கூடுதலான கிராமப் பஞ்சாயத்துகளில் (குறிப்பாக திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, புதுக் கோட்டை, தேனி, கோயம்புத்தூர், திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங் களில்) தலித் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தொடர்ந்து பிரச்னை நிலவுகிறது. அவர்கள் ஊராட்சி அலுவலகங்களில் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் உடல்ரீதியான தாக்குதல்களுக்கும் தீண்டாமைக்கும் உள்ளாகிறார்கள். தலித் பெண் ஊராட்சி தலைவர்கள் பாலின பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். தலித் ஊராட்சித் தலைவர்கள் முடிவெடுப்பதற்கு பிற சாதி உதவித் தலைவர்கள் ஒத்துழைப்பதில்லை. அரசு அதிகாரிகளாலும் அவமதிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய பல்வேறு வன்கொடுமைகள் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும் ஊடகங் களில் செய்திகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆய்வறிக்கைகள் வெளிவந்தும் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்கள் மீது, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ததாகவோ, தண்டனைகள் வழங்கப்பட்டதா கவோ செய்திகள் இல்லை. இத்தகைய படுமோசமான நிலையை மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தகவல்கள் இல்லை.

திமுக அரசாங்கத்தின் பாராமுகத்தால்தான் இத்தகைய வன்கொடுமைகள் நடக்கிறதா?

கடந்த பத்தாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் பட்டியல் சாதிகள் மத்தியில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஊடுருவல் நடைபெற்றது; அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதி யாதிக்க சக்திகள், அமைப்புகள் வலுப்பெற்றன. தலித் வெறுப்பு அரசியல் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்பட்டு, பொதுச் சமூகத்தில் சாதி மறுப்பு கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முந்தைய வன்கொடுமை நிலைமையை என்சிஆர்பி 2021 அறிக்கை (தேசிய குற்ற ஆவண மைய 2021 ம் ஆண்டுக்கான 'கிரைம் இன் இந்தியா'அறிக்கை) வெளிப்படுத்தியது. 29.8.2022ல் அறிக்கை வெளியானது.

'தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்துள்ளன. அது 2020ஆம் ஆண்டில் 1274 ஆக அதிகரித்தது. 2021இல் அது 1377 ஆக உயர்ந்திருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 68 தலித்துகள் படுகொலை செய்யப் பட்டார்கள். அது தென்னிந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாகும். 2021இல் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலை செய்ய முயற்சி நடந் துள்ளது.' என்றும் 'தலித் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் 123 தலித் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித் தது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர் களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங் களில் இந்தியாவிலேயே 5ஆவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. 2021ஆம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிராக 66 கலவரங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் 85 பேர் பாதிக்கப்பட்டனர்' என்றும் 'தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாகவே உள்ளது. 2020இல் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694. கடந்த 2021இல் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகளின் எண்ணிக்கை 1377. மறு விசாரணைக்கு எடுக்கப் பட்ட வழக்கு 2. இவை எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 2073 வன்கொடுமை வழக்குகள். அவற்றில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 825 வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது' எனவும் அறிக்கை கூறியது.

திமுக அரசாங்கம் மே, 2021 ல் ஆட்சி பொறுப் பேற்ற பின்னர் நடைபெற்ற குற்றங்களையும் உள்ளடக்கியது என்பதால், என்சிஆர்பி 2021 அறிக்கையை தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொண்டு, தலித்துகளை வன்கொடுமைக் குற்றங் களில் இருந்து காப்பதற்கும், குறைப்பதற்கும், அவசியமான வன் கொடுமைத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மேலோட்டமான ஒரு சில நடவடிக்கை களே மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் திருநெல் வேலிக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலருக்கு அரசு வேலைக்கான உத்தரவை வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறையில் நிலவும் தலித் விரோத மனப்பான்மை:

திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பரமானந்தம் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து, மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, தமிழ் நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் பரமானந்தம் புகார் அளிக்க, அந்தப் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 10.06. 2022ல் கடிதம் அனுப்பப்படுகிறது. பதில் இல்லை. தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்யாமல் அறிக்கை அனுப்புவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்ததால்,27.10.2022ல் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்படுகிறது. அதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. மீண்டும் 30.11.2022 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாரிராஜன் என்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய செயல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பற்றிய அவரது குற்றமய அலட்சிய மனோபாவத்தையே வெளிப்படுத்தியது. எனவே, மேற்படி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளரைக் கைது செய்து, ஆணையத்தின் முன் 28.12.2022 அன்று ஆஜர்படுத்துமாறு பிடி ஆணை தென் மண்டல காவல் துறை தலைவருக்கும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூல் செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக் கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல், திசையன் விளை முத்தையா வழக்கிலும் எஸ்சி.எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை நீக்கிவிட்டு குற்றவாளிகளை மாற்றி வெறும் கொலை வழக்காகப் பதிவு செய்ததில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

தன்னாட்சி கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையச் செயல்பாடுகள் 

2021ம் ஆண்டு மே மாதம் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் 15.10.21இல் உருவாக்கப்பட்டது. மாநிலஅளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியி னருக்கான சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சிவக்குமார் தலைமையில், ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் 7 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. இது பலதரப்பிலும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனைகள், பரிந்துரைகள், நடவடிக்கைகள் பற்றிய விரிவான விவரங்கள் எதுவும் கண்கூடாகத் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடி யினர் நல ஆணைய தலைவர் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சிவக்குமார் அவர்கள், 'காவல்துறை சாதிய மனப்பான்மை மிக்கதாக செயல்படுகிறது' எனவும், 'பட்டியல் சமூக மக்கள் காவல்துறையில் தரும் புகார்களுக்கு எதிர் புகார்களை குற்றவாளிகளிட மிருந்து பெற்று காவல்துறை பதிவு செய்யும் அளவுக்கு சீரழிந்திருக்கிறது' எனவும் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந் தார். தமிழ்நாடு அரசு இதன் மீது செயல்பட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை.

சமூக நீதி கண்காணிப்பு குழுவின் வரம்புகளும் செயல்பாடும் !

"தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சமூகநீதி எவ்வாறு செயல் படுகிறது" என்பதைக் கண்காணிக்க 23.10.2021ல் "சமூக நீதி கண்காணிப்பு குழு" ஒன்றும் அறிவிக்கப் பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இக் குழுவின் வரம்புகள், நோக்கங்கள், சமூகநீதி வரையறைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் சுருங்கிவிட்டது. “சமூகநீதி" பற்றிய திமுக அரசாங்கத்தின் குறுகிய பார்வையையும் அது சுட்டிக் காட்டியது.

சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் நோக்கங் களில், நிலம் உள்ளிட்ட பொருளாதார நீதி சார்ந்த அம்சங்கள் இல்லை; வன்கொடுமைகளைத் தடுப்ப தற்கு அரசு இயந்திரத்தின் கண்காணிப்பை உயர்த்து வதற்கு, பொதுச் சமூகத்தில் சமத்துவம் உருவாக்க வழிவகுக்கும் அணுகுமுறைகள் பற்றி எதுவும் இல்லை. மாறாக, திரு. சுப.வீரபாண்டியன் தலைமை யில் அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், சாதியாதிக்க மனப்பான்மையுடன் செயல்பட்டவர் எனச் சர்ச்சை களில் பெயர் பெற்ற ஐஏஎஸ் மேனாள் அதிகாரி திரு.கே.தனவேல் இடம் பெற்றிருந்தார்.

ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதி வேண்டும்; வாக்கு அரசியல் கடந்த சமூக நீதிப்பார்வை வேண்டும்!

சமூகநீதிப் பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் இன்றளவும், 'பொதுச்சமூகத்தில் சாதீயம் தலைவிரித் தாடுகிறது என்பதும் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய காவல்துறையில் சாதி ரீதியான பாரபட்சம் நிலவுகிறது' என்பதும் உண்மை தான்! ஆனால், தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள் மீது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாத தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது.

தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள் பற்றிய நீதி விசாரணை கமிஷன்களின் அறிக்கைகள் மற்றும் உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் உள்ளன; பொதுத் தளத்திலும் கிடைக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இனிமேலும், இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான, கொடூரமான வன்முறைகளில் இருந்து தலித்துகளைக் காக்க, தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமைப் புகார்கள் மற்றும் வழக்குகளில் சாதிய பாரபட்சம் கடைபிடிக்கும் காவல்துறையினர், நிர்வாகத் துறையினர் சட்டத்தின் படி, அரசுப் பணிகளில் தொடர்வதற்கு தகுதி யற்றவர் ஆவர்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். வாச்சாத்தி வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ஆட்சியர், கண்காணிப்பாளர், வன அலுவலர் உள்ளிட்டோரை தண்டிக்க உத்திர விட்டது குறிப்பிடத்தக்கது. தலித்துகள், பழங் குடிகள், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக ளுக்கும் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பொறுப்பாக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

தலித்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப் பட்ட இத்தகைய வன்கொடுமை அட்டூழியங்கள், வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, காலங்காலமாக பொதுப் புத்தியில் நிலவும் சாதிய மனப்பான்மை மட்டுமல்ல! 'அப்பட்டமான தலித் விரோத வெறுப்பு அரசியலின் விளைபொருள்' என்பதையும் நாட்டில் காவிப் பாசிசம் தலை விரித்தாடும் சூழலில் இது மேலும் அதிகரிக்கிறது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும். கல்வியறிவு மற்றும் உயர்கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் இயல்பான தாக, ஒரு அரசியல் கலாச்சாரமாக மாறியுள்ளன. இதற்கு ஒரு அரசியல் ரீதியான பார்வையும், தீர்வும் அவசியமாகிறது. பொதுப் புத்தியில் நிலவுகிற சாதீய மனப்பான் மையை தகர்ப்பதற்கு இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் காத்திரமான நடவடிக்கைகள் அவசியமாகிறது. பள்ளி, கல்லூரி பாடங்களில் சாதி ஒழிப்பு பாடத்திட்டங்கள் சேர்க்கப்படவேண்டும்.

காவல்துறை, வருவாய்த் துறை, ஆட்சித் துறைக ளிலும் சாதி ஒழிப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்பவர்கள் துறை ரீதியாகவும் சட்டரீதியாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.

தலைவர்கள் முதற் கொண்டு அனைத்தையும் சாதிய முறைக்குள் கொண்டுவரும் சாதிப் பெருமிதம் பேசும் அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள், சாதி காழ்ப்புணர்வுக்கும் அதனால் விளையும் பாகுபாடுகளுக்கும் காரணமாகும். இது தலித்துகள் மீதான வன்முறையாக வளர்கிறது.

கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அரசாங்க நிறுவனங்கள் இவற்றிலிருந்து "சாதியை விலக்கி வைக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மானுட உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும்" கருத்துப்பரவல் சமூகம் முழுவதும் விதைத்து வேரூன்றச் செய்ய வேண்டும். இவை, 'சமூகநீதிப் பெரியார், சமத்துவ அம்பேத்கர் விழுமியங்கள் பேசுகிற ஆட்சி' உடனடியாக செய்ய வேண்டிய அவசரப் பணிகளாகும்.

பொதுவாக, பல்வேறு வன்கொடுமை சம்பவங் களிலும் ஈடுபட்டவர்கள் அதிமுக, திமுக கட்சி யினராக உள்ளனர். ஒரு சிலவற்றில் சாதி கட்சிகள், சாதி அமைப்புகளும் இணைந்துள்ளன. "தலித்துகள் மீது வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!" என கட்சித் தலைமை கள் துணிவுடன் அறிவிக்க வேண்டும். இல்லை எனில், சமூக நீதி பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் வெற்று ஆரவாரங்களே என்பது அம்பலமாகும். மற்றொரு வகையில், இது தலித்துகளின் வாழ்வுரிமை பிரச்சினை என்பதாலும், திராவிட கட்சிகளுக்கு "சமூக நீதி" கோட்பாடு சார்ந்த விஷயம் என்பதாலும், அனைத்துக் கட்சி கூட்டம் உடனே கூட்டப்பட்டு தீர்வுக்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

அனைத்துக்கும் கூடுதலாக, தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகளை முடிவு கட்டுவதற்கு, வாக்கு அரசியல் கடந்த அரசியல் உறுதி ஆட்சியாளர் களிடம் தேவைப்படுகிறது. தமிழ் சமூகத்தின் கால் பங்கு மக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவத்தையும், கண்ணியமான வாழ்க்கையையும் உறுதி செய்வது சமூக நீதி கொள்கை கொண்ட ஆட்சியாளர்களுக்கு முதல் கடமையாகும்.