நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மாலெ தீப்பொறி பத்திரிகை ஆசிரியர் ஜி.ரமேஷ் மற்றும் தீப்பொறி பத்திரிகைக் குழுவினர் தோழர் பாலசுந்தரம், தோழர் ரஞ்சனி, தோழர் ஜோஸ்வா ஆகியோர் சந்தித்துப் பேசிய உரையாடலின் முதல் பகுதி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 41 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, நான் தலைமை ஏற்றபிறகு, தொடக்கத்தில் ஒரு சமூக நீதிக்கான இயக்கமாக, சமூக இயக்கமாகவே பயணத்தைத் தொடங்கியது.

தலித் பாந்தர் இயக்கம் 1972ல் மராட்டிய மண்ணிலே தொடங்கப் பெற்றது. அதன் தமிழ்நாடு கிளை 1982லே மாவீரன் மலைச்சாமி அவர்களின் தலைமையில் தொடங்கப் பெற்றது. சவிதா அம்மையார், ராம்தாஸ் அத்வாலே, வை. பாலசுந்தரம் போன்ற தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நான் 1988 ஏப்ரலில் அரசு ஊழியராக மதுரைக்குச் செல்கிறேன். 1989ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு செய்யப் பட்ட காலத்தில், அண்ணன் மலைச்சாமி அவர்களின் நட்பு கிடைக்கிறது. 1989 மார்ச் அல்லது ஏப்ரலில் அவர் ஏற்பாடு செய்த ஓரிரு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றேன். 1989 செப்டம்பர் 14ல் அவர் உடல் நலிவுற்று காலமாகி விட்டார். ஒரு சில மாதங்களே அவரோடு பழகுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியதால் அந்த, இயக்கத்தைப் பற்றி அதிக விவரங்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மராட்டிய மாநிலத் தொடர்பும் கிடைக்கவில்லை. அண்ணன் மலைச்சாமி அவர் களின் மறைவுக்குப் பிறகு, மேலூரைச் சேர்ந்த சில தோழர்கள் இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று என்னிடத்திலே தோழமை உணர்வோடு ஒரு வேண்டுகோளை வைத்தார்கள்.

1989 டிசம்பரில், அண்ணன் மலைச்சாமிஅவர்களுக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தினோம். அந்த கூட்டத்தில் தான், அதிகாரபூர்வமாக தலித் பாந்தர் இயக்கத்தை, தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டுமென ஒருமித்த குரலில் என்னிடத்திலே வேண்டுகோள் வைத்தார்கள். அப்போதுகூட அதற்கு நான் உடன்படவில்லை. ஏனென்றால் எனக்கு தலித் அரசியல் பற்றி விவரம் தெரியாது. அம்பேத்கரை தெரியும்; பெரியாரை தெரியும். ஆனால் தலித் பாந்தர் இயக்கம் பற்றி தலித் அரசியல் பற்றி தெரியாதென்பதால் ஒரு தயக்கம் இருந்தது. பிறகு, 1990 ஜனவரி 21 ஆம் தேதி மதுரை பயணியர் விடுதியில் தோழர்கள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். 20 அல்லது 30 பேர் பங்கேற்ற கூட்டத்தில் அந்த அமைப்பினுடைய மாநில அமைப்பாளராக என்னை பொறுப்பேற்கும்படி வலியுறுத்தினார்கள். தற்காலிகமாக உடன்பட்டேன். உங்களில் யாராவது ஒருவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டால் விலகிக்கொள்கிறேன் என்றும் கூறினேன். ஏனென்றால் நான் அப்பொழுது ஒரு அரசு ஊழியராக, தடய அறிவியல் துறை ஊழியராக இருந்தேன். இப்படிதான், தலித்அரசியல் களத்தில் நான் அடியெடுத்து வைத்தேன்.'90களின் தொடக்கத்திலேயே இந்த இயக்கம் மதுரை மாவட்டமெங்கும், குறிப்பாக மேலூர் வட்டாரத்தில் மிக வேகமாக பரவத் தொடங்கியது.

நான் அந்த காலத்தில் அதிகமாக ஈழத் தமிழர் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். விடுதலைப் புலிகளின் இயக்க முன்னணி தலைவர் களுடனும் எனக்கு நெருக்கம் இருந்தது. அந்த தாக்கத்தின் விளைவாக, ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் இருந்த இயக்கத்தை விடுதலை சிறுத்தைகள் என மாற்றி அழைக்கத் தொடங்கினேன். பிறகு உத்தங்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இனி இந்த இயக்கம் 'விடுதலை சிறுத்தைகள் இயக்கம்' என்றே அழைக்கப்படும். தேர்தல் புறக்கணிப்பு இயக்கமாகவே செயல்படும். தேர்தல் அரசியலில் ஒருபோதும் ஈடுபடாது என்று நான் முன்மொழிந்ததை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படி விடுதலை சிறுத்தைகள் என்ற பெயரில் இயங்கத் தொடங்கினோம். இடதுசாரி இயக்கங்களோடும் குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கங்களோடு அவ்வப்போது ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். இப்படி ஒரு பத்தாண்டு காலம் தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டோம். அப்போதும் நான் அரசு ஊழியன்தான், திருமாவளவன் என்ற பெயரில்தான் இயங்கினேன். அரசு ஆவணங்களிலும் அரசியல் ஆவணங்களிலும் திருமாவளவன்தான்.

அதன் பிறகு எங்கள் இயக்கத்திற்கு பல்வேறு நெருக்கடிகள். குறிப்பாக விடுதலை புலிகளோடு தொடர்புபடுத்தி கடுமையான நெருக்கடிகள் வந்தன. தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த நக்சல்பாரி களைத் தேடும் முயற்சியில் க்யூ பிரிவு போலிசார் இறங்கினார்கள். அவர்களில் பலரும் விடுதலை சிறுத்தைகளிடம் அடைக்கலமாகி இருக்கிறார்கள் என்று க்யூ பிரிவு போலிசார் சந்தேகித்தார்கள். என்னையும் சந்தேகப்பட்டார்கள். அந்தச் சமயத்தில், மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினோம். அந்தப் பொதுக்கூட்டமே க்யூ பிரிவு போலீஸ் எங்களை பின்தொடர்ந்து அச்சுறுத்துவதைக் கண்டித்து நடத்தப்பட்ட கூட்டம்தான். பொதுக்கூட்டத்தில், பேசிவிட்டு புதூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, காவல்துறை எங்களை வழிமறித்தது. என்னையும் பரமக்குடியைச் சேர்ந்த நண்பர் பூ.சந்திரபோஸ் உள்ளிட்டவர்களையும் பள்ளத்தூர் போலீசார் பலவந்தமாக தூக்கிச் சென்றார்கள். நாங்கள் பள்ளத்தூர் காவல்நிலையத்தில் அடைக்கப் பட்டோம். இந்தச் சம்பவம், இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அய்யா பழ.நெடுமாறன், மருத்துவர் சேதுராமன், சிவகங்கை யைச் சேர்ந்த பி.அரப்பா, பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த, அன்றைக்கு மதுரை மாவட் டத்தின் பொறுப்பில் இருந்த தோழர்கள், புரட்சிக் கவிஞர் பேரவையைச் சார்ந்த தோழர்கள், சிபிஐ (எம்எல்) இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இன்னும் பல இயக்கங் கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், கலெக்டர் அலுவலகம் முற்றுகை எனப்பல போராட் டங்கள் வெடித்ததால் எங்களை விசாரிக்காமலேயே கொண்டுவந்து விட்டு விட்டார்கள். இப்படி, இந்த இயக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. பலருக்கும் அறிமுகமானது. அதன் பிறகு வட மாவட்டங்களுக்கும் பரவியது.

1992 சென்னகரம்பட்டி படுகொலை, 1997 மேலவளவு படுகொலை, சத்திரப்பட்டி அருகே, அருகே கடவூர் தீ வைப்புச் சம்பவம், அதே கால கட்டத்தில், மதுரையில் அம்பேத்கர் சிலை உடைப்பு, மேலவாசலில் துப்பாக்கிச் சூடு, அதில் ஒரு தம்பி பலியானார்; பந்தல்குடியில் வைக்கப்பட்டிருந்த அரை உருவ அம்பேத்கர் சிலையை உடைத்து, வைகை ஆற்று மணலில் புதைத்தார்கள். இப்படி, தலித் மக்களுக்கு எதிரான சாதி வெறியாட்டங்கள், வன்கொடுமைகள் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வன்முறைகளை எதிர்த்து, தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து, அங்குள்ள தலித் இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்களை ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்தினோம். அவ்வப்போது பேரணிகள், போராட்டங்கள் நடத்துவது என்று எங்களது பயணம் 1999 வரையுல் நீடித்தது.

1997 மேலவளவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஒரு மாபெரும் பேரணி நடந்தது.'95 ல் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் கொடியேற்று வதில் தகராறு ஏற்பட்டு மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்தது, துப்பாக்கிச் சூட்டில் மூன்றுபேர் காயம் அடைந்தனர் ஏராளமான பேர் போலீஸ் தடியடியில் காயமானார்கள். ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள். அது கடலூர் மாவட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பத்தாண்டு காலம் போராட்டம், வழக்குகள், சிறை நெருக்கடிகள். இவற்றைக் கண்டிப்பதற்கான பேரணிகள், மாநாடுகள், கோரிக்கைப் பேரணிகள், மண்ணுரிமை கோரிக்கை என்ற பெயரிலே பேரணிகள், போராட்டங்கள் என்று எங்கள் பயணம் தொடர்ந்தது. 1999ல் ஏராளமான எங்கள் இயக்கத் தோழர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தோழர்கள் பாண்டுரங்கன், பால்ராஜ், திருவள்ளுவன் போன்றோர் அடுத்தடுத்து இன்னும் பல தோழர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

1997 மேலவளவு படுகொலைக்கு காரணம் உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்ற கேள்வி வந்தது. நாம் தேர்தலை ஏன் புறக்கணிக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. ஒரு விவாதத்தை நடத்தினோம். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு உத்தியே தவிர அது ஒரு கொள்கையாக இருக்க முடியாது. நாம் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் எந்த இடத்திலும் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தவில்லை. - நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் இந்த மக்களை மீட்டெடுக்க முடியும் என்றே நம்பினார். ஆகவே, நாம் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட வேண்டும். தேர்தல் புறக்கணிப்பால் எந்த பயனும் இல்லை. மக்கள் வாக்களிக்காமல் இல்லை. மக்கள் வாக்களிப் பார்கள் மேலவளவிலே அதுதான் நடந்தது. எனவேதான் வாக்களித்த மக்களுக்கு துணையாக இருப்பது என்பதுதான் அரசியல் களத்தில் பணியாற்றுவது என்பதை எங்கள் கடமை என்று நாங்கள் விரிவான விவாதத்தை பெரம்பலூரில் நடத்தினோம். அதைத் தொடர்ந்து, திருமாந்துறை, விழுப்புரம் என மூன்று அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் பாதையில் பங்கேற்பது என்று முடிவுக்கு வந்தோம். 'கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டுவோம்; தேவையெனில் கொள்கை சிதையாமல் உத்தியை மாற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பாதையில் அடி எடுத்து வைத்தோம்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருவள்ளுவனை கடலூர் நாடாளுமன்ற தொகுதி அல்லது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவெடுத்தோம். இதை அறிந்து கொண்ட மூப்பனார், எங்களை அணுகி எங்களைச் சமாதானப்படுத்தி அவரது மூன்றாவது அணியில் இணைந்து கொள்ளுமாறு 5 கேட்டுக்கொண்டார். 1990ல் தேர்தலில் பங்கு பெற்றோம். இப்படித்தான் பத்தாண்டு கால சமூக இயக்கத்திலிருந்து அரசியல் கட்சியாக, தேர்தல் பு புறக்கணிப்பு இயக்கத்திலிருந்து தேர்தல் பங்கெடுப்பு இயக்கமாக அடி எடுத்து வைத்தோம். 2002ல் தேர்தலில் வெற்றி பெற்று நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனேன். இரண்டரை ஆண்டுகள் கழித்து அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.அதுவரையிலும் விடுதலை சிறுத்தை கட்சிகள் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக இல்லை. 2002ல் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரிலே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகள் நின்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இடதுசாரிக ளோடும் திராவிட இயக்கங்களோடும் இணைந்து வலதுசாரி எதிர்ப்பில் தீவிரமாகக் களமாடி வருகிறோம்.

ஒடுக்குமுறை, புறக்கணிப்பலிருந்து தமிழ் நாட்டு அரசியலில், தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக, வெற்றிகரமான ஜனநாயக அரசியல் இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, முன்வந்திருக்கிறது என்று கூறுகிறீர்கள். ஆனால், இந்தியாவின் மற்ற பல பகுதிகளில் தலித் அமைப்புகள் அப்படி முன்வரவில்லை; தேக்கத்தில் இருக்கின்றன. இந்த வேறுபாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீண்ட காலமாகவே, கருத்தியல் அடிப்படை யிலான பரப்புரையோ, விழிப்புணர்வோ இல்லாமல் சாதி பார்த்து அரசியல் செய்வதை மட்டும் முன்னெடுத்துப் போனதன் விளைவாக அது ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாமல் தேங்கி நிற்கிறது. பல மாநிலங்களில், தலித் இயக்கங்களின் போக்கு குறிப்பிட்ட ஒரு கட்டத்திற்கு மேல் முட்டுச் சந்தில் போய் நின்று விடுகிறது. அதற்குக் காரணம் பலதரப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளாமல் போனதுதான்.உதாரணத்திற்கு சொன்னால் மொழி வழி தேசிய இன இயக்கத்தில் தலித் அமைப்புகள் ஈடுபடுவதில்லை. மொழி உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. மாநில உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. கூட்டாட்சி பற்றி பேசுவதில்லை. விவசாயிகள் பிரச்சனை களைப் பற்றி பேசுவதில்லை ஏகாதிபத்தியத்தின் தாக்கங்கள் பற்றிப்பேசுவதில்லை. கார்ப்பரேட்டின் கொள்ளைகளைப் பற்றி பேசுவதில்லை. பெண்க ளுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. இவ்வளவு தளங்களில் பேசாமல் நாமெல்லாம் எஸ்.சி, அம்பேத்கர் தலைமையில் ஒன்றிணைய வேண்டும்; நமக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற ஒரு பரிமாண அரசியலில் தேங்கிவிட்டன. நீண்ட காலமாக விளிம்பு நிலை மக்களுக்கான இயக்கம் என்ற புரிதலோடு எல்லா தளங்களிலும் நம் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற புரிதலோடு இயங்கும்போது நமக்கான செயல்பாட்டு வெளி இருந்து கொண்டே இருக்கும். தேக்கம் ஏற்படாது. ஒரு இடத்துல தேக்கம் ஏற்படும் போது ஒரு அரசியல் நெருக்கடி வந்தால் செயல் இழந்து விடுவது என்பதாக உள்ளது. என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை தொடக்க காலத்தில் இருந்து ஒரு இடதுசாரி இயக்கம் என்ற புரிதலோடுதான் இயங்கி வருகிறது. தலித் பிரச்சனைகளுக்கு எவ்வளவு முன்னுரிமை கொடுக்க முடியுமா அவ்வளவு முன்னுரிமை கொடுத்துதான் இந்த இயக்கம் முன்னுக்கு வந்தது. ஆனால் நாங்கள் எல்லா நிலைமைகளிலும் நின்று இருக்கிறோம். இஸ்லாமிய சமூகத்தை சந்திப்பது குடியுரிமை திருத்தச்சட்ட விஷயத்துல மற்ற தலித் இயக்கங்கள் பெரிய அளவில் தலையிட்டதா எனக்கு தெரியல. விடுதலை சிறுத்தைகள் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தோம். பல போராட்டங்களை நடத்தினோம். கடைசியாக, திருச்சியில் 'தேசம் காப்போம்' என்று பெரிய பேரணி நடத்தினோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங் களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறுபான்மை சமூகத்தினரோடும் இடதுசாரி இயக்கங்களோடும் இணைந்து இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். பொதுவாக, அம்பேத்கர் இயக்கங்கள்,இதுபோன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை.சாதி அடையாளங்களில் மட்டுமே நின்று கொள்கின்றன. இதுதான் தேக்கத்துக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

 ( தொடரும் ... )