போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிமுக, திமுக ஆட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த 2023 டிசம்பர் 19 அன்று ஆளுங்கட்சியின் தொமுச தவிர்த்து மற்ற அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கின.

இதே கோரிக்கைகளுக்காக தொமுசவும் கடந்த காலங்களில் போராடி வந்திருந்தாலும், திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்ததாலும் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என நம்பி இருந்த தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் வேறு வழியின்றி 2024 ஜனவரி 9 முதல் வேலை நிறுத்தம் என அறிவித்தனர். அமைச்சர், அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசு தரப்பில் எந்த ஒரு கோரிக்கையையும் கூட ஏற்க தயார் இல்லை. கடந்த கால ஆட்சிகள் சொன்ன அதே 'நிதிநிலை சீரான பின் நிறைவேற்றப்படும்' என்ற பதிலே வந்தது. கடைசி கட்ட பேச்சு வார்த்தைகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்து கொள்வ தையும் தவிர்த்து விட்டார். நீதிமன்ற அவமதிப்பு உட்பட போக்குவரத்துத் துறை மீது தொழிற் சங்கங்கள் தொடுத்த பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற வழக்குகள் அரசாங்கத்தால் மேல்முறையீடு செய்யப் பட்டு உச்ச நீதிமன்றத்தில் உள்ளன.

முதன்முறையாக போக்குவரத்து துறையின் ஊழியர்கள் சங்கங்களும் அதுபோல் பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களும் போராட்டத்தில் இணைந்தி ருந்தன. பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த காரணத்தால் இது சாத்தியமாயிற்று. கோரிக்கை களில் நியாயம் இருந்தும் வேலை நிறுத்தத்தில் ஒரு தரப்பு தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் போனதற்கு தொழிற்சங்கங்களின் அரசியல் பின்புலமும் காரணமாகும்.

ஜனவரி 10 அன்று பண்டிகை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி நீதிமன்றம் கேட்டுக் கொண்டதை காரணம் காட்டி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை திரும்பபெற்றன. 10ஆம் தேதி ஆங்காங்கு நடைபெற்ற மறியல் போராட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் திரளாக கலந்து கொண்டனர். மின்வாரிய ஊழியர் சங்கங்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் பல பகுதிகளிலும் நடத்தினார்கள். திமுக அரசு காலம் தாழ்த்தி ஆயினும் 14வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கியது. மற்ற கோரிக்கைகள் படிப் படியாக தீர்க்கப்படும் என அறிவித்திருந்தது. தொழிற்சங்கங்கள் இறுதியாக பல்வேறு கோரிக்கை களை சுருக்கி 6 அம்ச கோரிக்கைகள் என்று வந்து அதிலும் குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வை வழங்கினால் கூட வேலை நிறுத்தத்தை தவிர்க்கலாம் என அறிவித் திருந்தன. ஆனால், திமுக அரசு அதைக் கூட செய்யத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக நின்றதன் மூலம் தமிழக தொழிலாளர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது. வெள்ள காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியுள்ளது.

அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் அரசியல் உறுதியும் திமுக அரசாங்கத்திடம் தென்படவில்லை.

ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம், அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று உலக முதலீட் டாளர் மாநாட்டில் பேசிவிட்டு கேந்திரமான போக்கு வரத்து துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கையை கூட ஏற்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் இந்த நிலைப் பாடு பாஜக எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு, சமூக சமத்துவத்திற்கான சக்திகளை ஒன்று திரட்டுவதில் பலவீனத்தையே ஏற்படுத்தும்.

தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.15வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். ஓய்வூதியதாரர் களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

முதலீட்டாளர்களை திருப்தி படுத்தினால் போதாது. உழைக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது கரிசனம் வேண்டும். அல்லது உழைக்கும் மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.