ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோயில் தொடக்கவிழா அல்லது குடமுழுக்கை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பாஜக அரசாங்கங்களும் முதன்மை ஊடகங்களும் குறிப்பாக, இந்தி நாளேடு களும் தொலைகாட்சி அலைவரிசைகளும் விளம் பரங்களின் மின்னல் வேகத்தாக்குதலை மெய் யாகவே கட்டவிழ்த்து விட்டுள்ளன. நாடுதழுவிய ஒரு பேராரவாரத்தை உருவாக்கும் நோக்கில் சங்கிப் படையணியும் கூட, பரந்த மக்களை சென்றடைவ தற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. மதகுருமார்கள் இல்லாத நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வுகளை இத்தகைய கணக்கிடப்பட்ட, திட்டமிடப்பட்ட வகையில் அரசியலுக்குப் பயன்படுத்துவதை, அதுவும் பொதுத் தேர்தலுக்கு சற்று முன்னதாக பயன்படுத்துவதை இந்த உலகம் கண்ணுறுவது அரிதானது. முப்பத்தொரு ஆண்டு களுக்கு முன்னதாக அரசை மீறி பட்டப்பகலில் பாபர் மசூதியை சங்கிப்படையணி இடித்தது. இன்றோ அது ராமர் கோவிலை எழுப்ப அதே அரசை உச்சபட்ச அளவுக்குப் பயன்படுத்துகிறது. உடனடி பின்னணி யில் பார்க்கும் போது, வர இருக்கிற மக்களவைத் தேர்தல்களில் ராமர் கோவிலின் தொடக்கவிழா சங்கிப்படையணிக்கு நிச்சயமாக மிகப்பெரிய பேசு பொருளாக இருக்கும். சங்கிபாஜக நிறுவனத்துக்கு ராமர் கோவிலின் குறியீடு என்பது அதையும் தாண்டியதாகவும் இருக்கும். அவர்களைப் பொறுத்த வரை, இந்துராஷ்டிராவுக்கும் 'இந்து அடையாள'த் திற்கும் இதுவொரு மாபெரும் சின்னமாகும். விடுதலை பெற்றதை விட மிகச் சிறந்த முக்கியத் துவம் வாய்ந்ததாகுமென சங்கி கருத்தியலாளர்கள் இதனை விவரிக்கிறார்கள். அவர்களுக்கு 1947 என்பது அரசியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் அதேசமயம் அயோத்தியின் ராமர் கோவில் என்பது கலாச்சார விடுதலையின் வகைமாதிரியாக திகழ்கிறது. எனவே தான் ஐநூறு ஆண்டுகள் காத்திருப்பையும் 'அனைவருக்குமான ராமன்' என்ற பரப்புரை இயக்கக் கருவையும் குறிப்பதற்கு ஐந்து விளக்குகளை ஏற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்துத்வா கருத்தியலுக்கு சேவையாற்றவே இந்தக் கதையாடல் கட்டமைக்கப்படுகிறதெனவும் இதற்கு வரலாற்றில் எந்த வேர்களும் கிடையாது என்பதும் தெளிவாகவே தெரிகிறது. நிச்சயமாக,ராமாயணம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மிகவும் பரவலாக அறியப்பட்ட காவியம் தான்.ஆனால் பலதரப்பட்ட கலாச்சாரங்களிலும் பகுதிகளிலும் பலதரப்பட்ட புரிதல்களை அது கொண்டுள்ளது. இந்திய விடுதலை இயக்கம் என பொதுவாக அறியப்படும், நவீன இந்தியாவுக்கான வேட்கையின் அந்த நீடித்த, பல்லடுக்கு கொண்ட,பல் பரிமாண வரலாறான இந்தியாவின் காலனிய எதிர்ப்பு சமூக, அரசியல் கொந்தளிப்பின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரச்சனை ஒருபோதும் மெய்யாகவே எழவில்லை.உள்ளபடியே கூறினால், இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உச்சபட்ச வெளிப்பாட்டின் மூலம் குறிக்கும் 1857 எழுச்சியின் மய்யங்களில் ஒன்றாக உண்மையில் அயோத்தியும் இருந்தது. சுதந்திரம் பெற்றதையடுத்து, உடந்தையாக செயல்பட்ட அரசு அங்கங்களால் எளிதாக்கப்பட்ட, கள்ளத்தனமாக பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை அமைத்ததன் மூலம் அந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டு தக்கவைக்கப்பட்டது. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற கூற்றும் கூட, தொல்லியல் துறையின் எந்தவொரு அகழ்வாய்விலும் நிரூபிக்கப்படவில்லை. அயோத்தியில் கட்டப்படும் கோவில் கட்டுமானம் 2019 இன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது 'சட்டபூர்வமான அந்தஸ்தை' பெற்றுள்ளது.மசூதியை இடித்த செயல், இந்திய அரசியல் சாசன சட்டத்தை அருவருக்கத்தக்க விதத்தில் மீறியதாகும் என உச்ச நீதிமன்றம் கூறியபோதிலும் கூட,வழிபடும் இடத்தின் மீதான தாவா என்றென்றைக்குமாக முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்நிலத்தின் உரிமையை கோவிலின் அறக்கட்டளைக்கு வழங்கியது. அனைத்து வழிபாட்டு இடங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்தது போலவே தொடர்ந்து இருக்கும் என உத்தரவாதம் வழங்கிய 1991 சட்டத்திற்கும், சட்ட ரீதியாக பிரச்சினைக்குரிய கட்டிடமாக கருதப்படும் பாபர் மசூதியை விதிவிலக்கு என இந்த 'விதிவிலக்கு வாதம்' தான் குறிப்பிட்டது. வழக்கத்திற்கு மாறான இந்த விதிவிலக்கு, புனிதமாக கருதப்படும் அனைத்து இடங்களின் மீதும் உரிமை கொண்டாட 1991 சட்டத்தை நீக்குவதைப் பற்றி சிந்திக்கும் துணிச்சலைத்தான் சங்கிப்படையணிக்கு வழங்கியது.

மதச்சார்பின்மை என்னும் வார்த்தை தொடக்கத் திலிருந்தே சங்கிப்படையணிக்கு ஒவ்வாததாக இருந்து கொண்டிருக்கிறது. அவசர காலத்தின் போது சட்டத் திருத்தத்தின் வழியாக அரசியல் சாசன சட்டத்திற்கான முன்னுரையில் இந்த வார்த்தை சேர்க்கப்பட்டதிலிருந்தே இந்திய ஆட்சியமைப்பின், அரசியல் சாசன சட்டத்தின் மதச்சார்பின்மை பண்பை சட்டரீதியாகவே ஒழித்து விடலாம் என சங்கிப் படையணி நினைக்கிறது. மதத்தையும் அரசிய லையும் பிரித்து நிறுத்துவது, மத விவகாரங்களில் தலையிடுவதிலிருந்து அரசை விலக்கி வைப்பது, மதத்தை நிர்வகிப்பவர்கள் அரசின் விவகாரங்களில் தலையிடாமலிருப்பது என்ற அர்த்தத்திலான மதச்சார்பின்மையே ஒரு நவீன குடியரசின் கருத்தாக்கத்திற்கான மய்யமாகும். இந்தியா போன்ற பல்மத பன்மை கலாச்சார நாட்டின் ஜனநாயகத்துக்கு இதுவே மிக மிக அடிப்படையானதாகும். அனைத்து சாத்தியமான வழிகளிலும் இந்திய ஆட்சியமைப்பின் மதச்சார்பின்மை குணத்தை கீழ்மைப்படுத்த ராமர் கோவிலை மோடி அரசாங்கம் பயன்படுத்துகிறது. மதத்தையும் அரசியலையும் பிரித்து நிறுத்துவதற்கு மாறாக, மதமும் அரசியலும் மெய்யாகவே ஒருங்கி ணைக்கப்படுவதை நாம் தற்போது காண்கிறோம்.

இந்த ஒருங்கிணைப்பு, உண்மைக்கும் மக்களுக்கும் கடப்பாட்டுடன் ராமர் இருந்ததாக அறியப்படும் அயோத்தியின் போற்றுதலுக்குரிய 'ராம ராஜ்ய'த்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்லவில்லை. மாறாக, அது உரிமைகள் மறுக்கப் பட்டு, அதிகாரம் இழந்தவர்களாக குடிமக்கள் இருக்கிற, அரசாலும் சமூகத்தாலும் இழைக்கப் படுகிற ஒவ்வொரு கொடுமைக்கும் அநீதிக்கும் மதத்தின் மூலம் நியாயம் கற்பிக்கிற, மனுஸ்மிரிதி வழிமுறையிலான ஆட்சி நிர்வாகத்திற்கு இந்தி யாவைத் தள்ளுகிறது. நாடாளுமன்றத் துக்கும் மக்களுக்கும் பொறுப்பானவராக இருக்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி ஒரு ராமர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் உயர்நிலை பூசாரியாக ஆக்கப்படும்போது, அனைத்தும் இறையருளால் ஏற்படுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ளவும் வெறுப்பு, அநீதியின் பழங்கால பார்ப்பனிய ஒழுங்கிற்கு அடிபணியவும் மக்கள் உண்மையிலேயே உத்வேகமூட்டப்படுகிறார்கள். இது மதச்சார்பின்மைக்கு மட்டும் நேர் எதிரானதல்ல; மக்களிடமிருந்து அதிகாரத்தை பெறுகிற நவீன குடியரசு என்ற கருத்துக்கே எதிரானதாகும். இறை ஆசீர்வாதமாக மக்கள் மீது தன்னை தற்போது இந்த அரசாட்சி திணிக்க முயற்சிக்கும் அதேவேளையில் சமீபத்திய மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை தொடர்ந்து ஃபினான்சியல் டைம்ஸ் ஏட்டிற்கு அளித்த நேர்காணலில் மோடி குறிப்பிட்டது போன்று, 'முன்னேற்றத்தின் விளிம்பில்' இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக வெளி உலகிற்கு அது கூறுகிறது. அதே நேர் காணலில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து எவ்வித கவலைகளையும் அவை இந்திய மக்களின் அறிவாற்றலுக்கு ஒரு அவமானம் எனக் கூறி பிதற்றல்கள் என அவற்றை மோடி புறந்தள்ளுகிறார். பார்சி சமூகத்தினரான டாட்டா குழுமத்தை இந்திய சிறுபான்மையினர்களுக்கான விளம்பரமாக பயன்படுத்துகிறார். இந்தியாவிலிருந்து 'அறிவு வெளியேற்றம்' தொடர்ந்து நிகழ்வது குறித்து கேட்கப்பட்ட போது, கூகுள் மைக்ரோ சாப்ட் போன்ற பிரும்மாண்டமான உலக மென்பொருள் நிறுவனங் களின் இந்திய வம்சாவளி முதன்மை செயல் அதிகாரிகளை (சிஇஓ) காட்சிப்படுத்துகிறார். இந்தியாவில் சிவில் உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்த பிரச்சினைக்கு நீண்ட ஏளன சிரிப்பை பதிலாகத் தருகிறார். 'இந்தியாவில் தற்போதுள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி' எதிர்ப் பாளர்கள் இந்த அரசாட்சியின் மீது 'குற்றச்சாட்டு களை' அள்ளி வீசுவதாக அவற்றை புறந்தள்ளுகிறார்.

'இந்தியா:த மோடி கொஸ்டின்' என்ற பிபிசியின் ஆவணப்படத்தில், 2002 குஜராத் படுகொலைகளை பொறுத்தவரையில் தனது ஒரே வருத்தம் என்னவென்றால் தான் ஊடகத்தை சரியாக கையாள முடியவில்லை என்பதுதான் என குஜராத் முதலமைச்சராக மோடி சொல்வதை கேட்கிறோம். அவருடைய அரசாட்சி தற்போது கொண்டிருக்கும் ஊடக கட்டுப்பாட்டை போன்று 2002 லும் கொண்டிருந்தால் குஜராத் குறித்த பெரும்பாலான உண்மைகள் ஒரு போதும் வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கும். அதேபோன்று அவரது விமர்சகர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் 'இந்தியாவில் இருக்கும் சுதந்திரம்' குறித்து பதிலளிக்கையில் தெளிவான ஒரு வருத்த உணர்வு அவரிடம் வெளிப்படுகிறது. தேசிய தண்டனைச் சட்டம், சாட்சிய சட்டம், இணைய வலைதளங்களுக்கும் எண் கணித தளங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ள புதிய ஊடக கட்டுப்பாடுகள் என முழுமையாக 2023 டிசம்பரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புதிய சட்ட வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் மிச்சமிருக்கும் சுதந்திரத்தின் நாட்களும் எண்ணப்படுகின்றன என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது. உச்ச நீதிமன்றம் அதன் பயன்பாட்டை தடுத்து நிறுத்தியதற்கு முன்பாக கண்மூடித்தனமாக 2022 வரை அதனை செயல்படுத்திக் கொண்டிருந்த காலனிய கால தேச துரோகச் சட்டத்தை விட்டொ ழிப்பது என்னும் பெயரில் எதிர் கருத்தின் ஒவ்வொரு சாத்தியமான வடிவத்தையும் அல்லது வெளிப் பாட்டையும் குற்றமாக்கிடும் வகையில் இந்த அரசாங்கம் பயங்கரவாதத்தின் வரையறைகளை விரிவுபடுத்தியுள்ளது.

1950 ஜனவரி 26 இல் அமலுக்கு வந்த அரசியல் சாசன சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதிப்பீடு களையும் இலக்குகளையும் அப்பட்டமாக மீறியதை அரசு கொண்டாடுகிற போது, சங்கிப் படையணிக்கு, மெய்யான புதிய குடியரசு நாளாக ஜனவரி 22 குறிக்கப்படும். குடியரசு நாள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் சாசன சட்ட அடிப்படைகளின் மீள்திறனை கொண்டாடுவதற்கு மாறாக, இந்தியாவின் இராணுவ வலிமையை கொண்டாடுவதாக நீண்ட காலமாகவே சுருக்கப்பட்டு விட்டது. நவீன இந்தியாவின் அரசியல் சாசனசட்ட பிடிமானங்களை மீட்டெடுப்பதற்கான சவால்கள், வர இருக்கிற 2024 குடியரசு நாளை விட வேறெப்போதும் தெட்டத் தெளிவாக இருக்கப்போவதில்லை. இந்தியக் குடியரசு மதச்சார்பற்ற ஜனநாயகமாக மட்டுமே உயிர்த்திருக்க முடியும். 1950 ஜனவரி 26 இல் நமது சுதந்திர குடியரசின் பிறப்பை அறிவித்தவர்களை முன்னோர்களாக கொண்ட இந்திய மக்களாகிய நாம் நமது அனைத்து வலிமை,துணிவு, மன உறுதி ஆகியவற்றைக் கொண்டு அந்தக் கனவைப் பேணி பாதுகாக்க வேண்டும்.