ஜனவரி 2ல் திருச்சி வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து சென்றார். அமைச்சர் உதயநிதியின் அழைப்பை ஏற்று ஜனவரி 19 அன்று சென்னை வந்த மோடி, விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) கோலாகல நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தபின்னர், தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், திருவரங்கம், ராமநாதபுரம், ராமேசுவரம், ராமர்பாதம், அரிச்சல்முனை என பல இடங்களுக்குச் சென்று தில்லி வழியாக 22ந் தேதி அயோத்திக்கு சென்றார்.
11 நாட்கள் கடும் விரதம், இளநீர் மட்டுமே உணவு, தரையில்தான் உறக்கம் என மோடியின் தவவாழ்க்கையை தினத்தந்தி சிலாகித்து தலையங்கம் எழுதியது. இந்துமத துறவிகள் போன்று தோற்ற மளிக்கும் மோடியை ஆகப் பெரிய இந்துமதத் தலைவராகவே ஊடகங்கள் சித்தரித்தன. திருவரங் கம் கோவிலில் வழிபட்ட, உத்திராட்ச மாலையுடன் கடலில் மூழ்கிய, புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய மோடியின் அசைவுகள் அனைத்தையும் ஊடகங்கள் படம் பிடித்துக்காட்டின. மோடியை வரவேற்று, திருவரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள பட்டர் குடும்பங்கள் உச்சிகுளிர மகிழ்ந்ததை வீடியோக்கள் காட்டின. அவர்களுக்கு பின்னால் பாஜக கொடி பறந்ததையும் காணமுடிந்தது. இது ஆன்மீக பயணமல்ல; அப்பட்டமான அரசியல் பயணம் என்பதை அந்தக் கொடிகள் உணர்த்துவதை எவரும் மறுக்கமுடியுமா? ஸ்ரீரங்கத்து திருவரங்கன் கோவி லுக்கு வந்த முதல் பிரதமர் மோடிதான் என்பதை கோவிலின் முதன்மை பூசாரி சுந்தர் பட்டர் உச்சகட்ட மகிழ்ச்சியுடன் கூறினார். மட்டுமின்றி, மோடியின் வருகையால் திருவரங்கனே மகிழ்ச்சியடைந்து விட்டதாக டெக்கான் கிரானிக்கள் நாளேட்டிடம் சுந்தர் பட்டர் கூறினார். திருவரங்கனுக்காக பல மணி நேரம் பிரதமர் பணியையே துறந்த(மறந்த) முதல் பிரதமர் என்றும் சுந்தர் பட்டர் சொல்லிக் கொள்ளலாம்! ஆனால், திருவரங்கனின் பக்தை, ஆண்டாளும் அவரது ஆயிரக்கணக்கான பக்தர்களும் வெளியில் நிற்கவைக்கப்பட்டதைக் கண்டு திருவரங்கன் மகிழ்ந்திருப்பாரா?
இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி ராமரைப்பற்றியும் அயோத்தி ராமர் கோயிலைப் பற்றியும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால், ஸ்ரீரங்கம் தொடங்கி இராமநாதபுரம், ராமேசுவரம், அரிச்சல்முனை என ராமர் கதை தொடர்புடைய இடங்களில் மட்டும் அவர் பயணம் செய்தார். ஆனால் இந்த பயணத்தின் மூலம், ஜனவரி 22 ராமர் கோவில் கொண்டாட்டம் பற்றி தமிழக மக்களின் பொதுநினைவில் உறைந்திருக்கும் ராமர் எண்ணங் களை பாஜகவுக்கு ஆதரவான எண்ணமாக உசுப்பிவிட முயன்றிருக்கிறார். மோடி வருவதற்கு முன்னதாகவே, பாஜகஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஒருகோடி பேருக்கு ராமர்கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு வீடுவீடாக சென்று அழைப்பு வழங்கியதையும் இணைத்து ராமர் அரசியலாக மாற்ற முனைந்திருக்கிறார். இதில் என்ன அரசியல் இருக்கிறது என்று கூட சிலருக்கு தோன்றலாம். 22ம் தேதி நடந்த சில நிகழ்வுகள் இதற்கு பொருத்தமாக விடையளிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்றோர் அயோத்தி செல்லவில்லை. ஆனால், அவர்கள் சும்மா இருக்கவில்லை. நிர்மலா, காஞ்சிபுரம் கோவிலுக்குச் சென்று, அங்கு அயோத்தி விழாவை நேரடியாக ஒளிபரப்ப திமுக அரசு அனுமதிக்க வில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பினார். அவரோடு அண்ணாமலையும் இணைந்து கொண்டார். ஆளுநர் ஆர்என். ரவி மாம்பலம் கோதண்டராமன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள தீட்சிதர்களின் கண்களில் பயம் குடிகொண்டிருப் பதை ஸ்கேன் செய்து வந்திருக்கிறார். மோடி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தபோது ரவிக்கு இந்தப் பணியைத்தான் வழங்கியிருப்பாரோ என்று பொது மக்களுக்கு கேள்வி எழுந்தால் அதற்கு மோடியும் ரவியும்தான் பொறுப்பு. திமுக ஆட்சிக்கெதிராக, இந்தியா கூட்டணிக்கெதிராக, இவர்கள் ராமர் விரோதிகள், இந்து விரோதிகள் என்று காட்டவும் மோடியின் 3 நாள் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள முயன்றுள்ளனர்; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை.
ஜனவரி 2 அன்று, திருச்சி வந்த மோடி தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக் கூறவில்லை. திருவள்ளுவர், பாரதி, தமிழ், வேட்டி சட்டை என்றெல்லாம் வித்தைகாட்டும் மோடி பொங்கல் வாழ்த்து கூறாததை எவரேனும் சுட்டிக் காட்டியி ருக்கலாம். தில்லியிலுள்ள அமைச்சர் முருகன் வீட்டில் தமிழ்நாட்டின் சினிமா பிரபலங்கள் சிலர் சூழ்ந் திருக்க வேட்டி சட்டையுடன் 'பொங்கி'யுள்ளார். பதினோரு நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த மோடி நாசிக்கின் காலாராம் கோவிலில் சுத்தம்செய்து வழிபாடு நடத்திவிட்டு தெற்கு நோக்கி பயணத்தை நடத்தியுள்ளார். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மாநிலங்களிலுள்ள ராமர் தொடர்புடைய தெய்வத் தலங்களை நோக்கி படையெடுத்துள்ளார். தமிழ் நாட்டு ஆதினங்களையும் செங்கோலையும் கொண்டு நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு அரசியல் நிகழ்வை மதமயமாக்கிய மோடி, மதநிகழ்வான ராமர் கோவிலை அரசியலாக்கியுள்ளார். இதில் இன்னும் குறிப்பாகக் காணவேண்டியது, பாஜகவுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் தென்மாநிலங்களைக் குறிவைத்து தனது ஆன்மீக அரசியல் பயணத்தை நடத்தியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மதத்தை அரசியலாக்கியதும் அரசியலை மதமாக்கியதும்தான் மோடி ஆட்சியின் ஆகப்பெரும் சாதனை!
கம்பராமாயணமும் அதன் கதை மாந்தர்களும் தமிழ்நாட்டு மக்களிடம் நன்கு பிரபலமானவர்கள் தான். ராமாயணம் அறநெறி தமிழ் இலக்கியமாகவே அறியப்படுகிறது. ராமன் நல்ல மகனாக இருந்திருக்க லாம். ஆனால், நல்ல அரசனாகவோ நல்ல கணவனா கவோ இருந்தானா? என்ற பகுத்தறிவு கேள்விகளும் தமிழக மக்களிடம் உண்டு. ராமனை அரசியலுக்கு பயன்படுத்துவது புதிதல்ல. சேதுசமுத்திர திட்டம் வந்தபோது ராமர் கட்டியபாலத்தை இடிக்கலாமா? என்று சங்கபரிவாரத்தினர் பெரும் கூச்சல் எழுப்பினர். ஆனால் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ராமர் எந்த இன்ஜியரிங் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பினார். அந்த சமயத்தில், "ராமரை வீட்டுக்குள் வைப்போம், சேதுவை பெட்டிக்குள் வைப்போம்" என்று அமைதிகாத்தனர். சங்கபரிவாரத்தின் உசுப்பலுக்கு இரையாகவில்லை. மதச்சார்பற்ற, சுற்றுச்சூழல் ஆதரவு நிலைப்பாட்டையே தமிழ் நாட்டு மக்கள் மேற்கொண்டனர்.
மன்னராட்சி காலங்களில் மதமும் மடாதிபதிகளும் மன்னர்களை வழிநடத்தினர். வைணவமும் சைவமும் மாறி மாறி அரசமதம் என்றே அழைக்கப்பட்டன. மதமும் அரசியலும் தனித்தனி. மதம், வழிபாடு மக்களின் தனிப்பட்ட நம்பிக்கை. அரசிய லில் மதமும் மதத்தில் அரசியலும் தலையிடக்கூடாது என்பதே விடுதலைப் போராட்ட காலத்தில் எழுந்த நவீன அரசியல் கோட்பாடு. இந்த மரபுதான் தமிழ்நாட்டு மரபு. இந்த மரபை, மாண்பை சிதைக்க மதவெறி அரசியலை திணித்து, திராவிட அரசியலை பின்னுக்குத் தள்ளி தன்னை வளர்த்துக் கொள்ள பாஜகஆர்எஸ்எஸ் கூட்டணி முயலுகிறது. வட இந்தியாவுக்கு எதிராக தமிழ்நாட்டை நிறுத்துவது, அதேசமயம்,தமிழ்நாட்டு ஆளுமைகளான வள்ளுவர், வள்ளலார், பாரதி போன்றவர்களை சனாதன அடையாளத்துக்குள் இழுப்பது, மாநிலத்தின் உரிமைகளை பறிப்பது என கருத்தியல், அரசியல், அரசாங்க வழிமுறைகளைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் வளர பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி முயலு கிறது. இதற்காகவே, அண்ணாமலை-ஆர்.என்.ரவி- தமிழிசை -நிர்மலா சீதாராமன் அணி தலைகீழாகத் தாண்டவமாடுகிறது. இந்த திட்டத்தின் மற்றொரு முயற்சியாகத்தான் இவர்களின் தலைவர் மோடி, 3 நாள் தமிழ்நாடு பயணம் நடத்திப்பார்த்தார். அயோத்தி ராமனை சுமந்து வந்த அரசியல் ராமன் என அவரது கட்சியினர் ரகசியமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முயற்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மோடி, ராமரை வைத்து அரசியல் விளையாடி சென்றிருக் கிறார். தமிழ்நாடு சொல்லும் செய்தி, ”இந்தியாவோடு (தமிழ்நாட்டோடு) விளையாடாதே” என்பதுதான்.
ஜனவரி 21 அன்று சேலத்தில் கூடிய, மாபெரும் திமுக இளைஞரணி மாநாடு, மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உரத்து தீர்மானம் வடித்தது. மோடிவந்து சென்ற ஸ்ரீரங்கத்துக்கு பக்கத்திலுள்ள சிறுகனூரில் வெள்ளமாய் திரண்ட சிறுத்தைகள் சனாதனம் தோற்கும்; ஜனநாயகம் வெல்லும், என உறுதிபட பிரகடனம் செய்தது. பிப்ரவரி 1, அன்று கம்யூனிச இயக்கத்தின் வரலாற்று தலைநகரான தஞ்சையில் கூடிய உழைக்கும் மக்கள், பாசிசத்தை வீழ்த்தும் உறுதிப்பாட்டுடன் "வீழ்க பாசிசம்; வெல்க இந்தியா! என்று முழங்கினர். இதுதான், தமிழ்நாட்டின் மரபு; தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு. வரலாற்றை பின்னோக்கி இழுக்கும் பாசிச வலதுசாரி சக்திகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்த பாஜக எதிர்ப்பு அரசியல் அணி திரட்டல்கள் அறுதியிட்டு முழங்கியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)