ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் (ஜேஎன்யூஎஸ்யூ) தேர்தல்களில் ஒன்றுபட்ட இடது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் (ஏஐஎஸ்ஏ) தோழர் தனஞ்செய் ஜேஎன்யூஎஸ்யூ மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2,598 வாக்குகள் பெற்று 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஸ்எஃப்ஐ யின் அபிஜித் கோஸ் துணைத் தலைவராகவும், ஒன்றுபட்ட இடது கூட்டணியின் ஆதரவுடன் பாப்சாவின் ப்ரியான்சி ஆர்யா பொதுச் செயலாளராகவும், ஏஐஎஸ்எப் இன் தோழர் சஜித் இணைச் செயலாளராகவும்  வென்றனர்.  

 

பிஜேபியின் மாணவர் சங்கத்துக்கு மரண அடி கொடுத்த இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் தீர்ப்பு. ஜேஎன்யு வளாகத்தை காவிமயமாக்க கனவு கண்ட சங்கிக் கூட்டத்துக்கும் மோடி அரசுக்கும் மாணவர்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். ஜே என் யூ என்றென்றும் சிவப்பின் கோட்டைதான் என உணர்த்தி இருக்கிறார்கள். இந்த வெற்றிக்காக, இந்த தேர்தலுக்காக 4 ஆண்டுகளாக மாணவர்கள் எதிர்கொண்ட தாக்குதல்களும், நடத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் எண்ணற்றவை. இந்த வெற்றி இந்த நாட்டின் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மோடி தலைமையிலான ஆட்சியை ஒட்டுமொத்தமாக நிராகரித்த வெற்றியாகும்.

 

பொதுச் செயலாளராக போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டதால் ஏபிவிபி-ஐ தோற்கடிப்பதற்காக பாப்சா வேட்பாளர் பிரியான்சியை ஆதரித்தனர் இடதுசாரிகள். 

 

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, பல போராட்டங்களினூடாக நடந்த தேர்தல். வளாக ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, வளாகம் முழுவதும், தேர்தல் முழுவதும் ஜனநாயக வேட்கை கொந்தளித்தது. ஏபிவிபியும் ஜேஎன்யூ நிர்வாகமும் சேர்ந்து நடத்திய அனைத்து விதமான தாக்குதல்களையும், தடைகளையும்  மீறிப் பெற்ற வெற்றி இது. 

 

சிறப்பு பொதுப் பேரவை கூட்டத்தின் போது வளாகத்தினுள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஏபிவிபி. மாணவர்களுக்கான துறைத் தலைவரை அவரது அலுவலகத்தில் பணயக் கைதியாக்கியது. இடது கூட்டணியை முடக்குவதற்காக பொதுச்செயலாளரின் வேட்பு மனுவை ரத்து செய்தனர். திட்டமிட்டு சச்சரவுகளை ஏற்படுத்தி, தலைவர் வேட்பாளர் விவாதத்தில் இடையூறு செய்தனர். ரன்வீர் சேனாவை வளாகத்திற்குள் கொண்டு வந்து பிரம்மேஸ்வர் முக்கியாவைக் கொண்டாடினர். 'பஸ்தர்: நக்சல் கதை' யை திரையிட்டனர்; தேர்தல் பரப்புரை இயக்கத்தின் போது எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு விதிகளையும் மீறினர். இத்தகைய பிரிவினைவாத, மாணவர் விரோத சக்திகளின் அட்டகாசத்துக்கு எதிராக மாணவர்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்றனர். விவாதங்களை, விமர்சனபூர்வமான  சிந்தனை முறையை, வளாக ஜனநாயகத்தைப் பேணி வளர்க்கும் ஒரு ஜேஎன்யூஎஸ்யூ-வைத் தேர்ந்தெடுத்தனர்.

 

தலைவராக வென்ற தோழர் தனஞ்சய், இது மோடி அரசாங்கம் மீதான பொது வாக்கெடுப்பு என்று கூறினார். தெற்கு பீகாரின் நிலமற்ற தலித் கூலித் தொழிலாளர்களின் குரலாக நான் இங்கே நிற்கிறேன்; ரன்வீர் சேனாவின் கொடூரமான வெகுமக்கள் படுகொலையை எதிர்த்து அவர்கள்  போராடினார்கள். நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் தொடர்ந்து போராடினார்கள். நான் தோழர் மனோஜ் மன்சிலின் குரலாக இங்கே நிற்கிறேன். அவர் சிபிஐஎம்எல் கட்சியின் தலித் இளைஞர் தலைவராவார். பீகாரின் நிலப்பிரபுத்துவ பாசிச அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். உங்களது சிறைச்சாலைகளால் எங்களது குரல்வளையை நசுக்க முடியாது என இன்றைய பாசிச அரசாங்கத்திற்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்களது குரல்களை எழுப்புவோம்; நீதிக்காக போராடுவோம் என தோழர் தனஞ்சய் கூறினார்.

 

தோழர் தனஞ்சய் சிபிஐஎம்எல் கட்சியின் போராட்டப் பாரம்பரியத்தில் எழுந்து வந்தவர். டெல்லி பல்கலைக்கழகம் முதல் ஜேஎன்யு வரை மாணவர்களுடைய பல்வேறு போராட்டங்களிலும் முன்நின்றவர். தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய தொழிலாளர்களுடன் தோளோடு தோள் நின்று போராடியவர். அவர் ஒரு கலாச்சார செயல்வீரரும் ஆவர்.