தமிழ்நாட்டில் காலூன்றிட தன்னாலான அனைத்தையும் முயற்சித்து வருகிறது பிஜேபி. 

வீரவேல் - வெற்றிவேல் யாத்திரையை முன்னிட்டு முருகன் பெயரில் அரசியல் நடத்த முயற்சித்தது. பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. கருப்பர் கூட்ட  நிகழ்வை வைத்துக் கொண்டு கந்த சஷ்டி கவசத்தை அரசியலாக்க முயற்சித்தது. மதவெறியைத் தமிழ்நாட்டில் தூண்டுவதற்கான முயற்சிகள் பெருமளவில் பலனளிக்கவில்லை. சிறைகளில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்தி, ரவுடிகளைக் கொண்டு, பிள்ளையார் ஊர்வலத்தை வைத்து அரசியல் நடத்த முயற்சித்தது. அது ஓரளவே சில பயன்களைப் பெற்றுத் தந்தது. வடநாட்டைப் போல பெரும் கலவரத்தை உருவாக்க முடியவில்லை. சிவராத்திரியையும் பயன்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கோவில் கமிட்டிகளைக் கைப்பற்றி, கோவில்களை தனது பரப்புரை அரசியல் மையங்களாக மாற்ற முயற்சித்ததும் உடனடியாக பெரும் பலனளிக்கவில்லை. அந்த முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை அனைத்தும் நீண்ட கால நோக்கில் ஏதாவது பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்தியல் தளத்தில், பெரியார் கருத்துக்களைத் தகர்க்கும் நோக்கில், பெரியாரை அவமரியாதையாக பேசத் துவங்குவது அவர் சிலைக்குத் தார் பூசுவது, உடைப்பது போன்ற செயல்கள் எதிர்வினையை மக்கள் மத்தியில் உருவாக்கினவே தவிர எதிர்பார்த்த அளவு பெரும் பயனை அளிக்கவில்லை.

இப்போது, தமிழ் நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிரான, கருத்தியல், அரசியல் மாற்றணி பிஜேபிதான் என்பதைப் போல பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. திராவிட இயக்கம் என்பது பிஜேபியைப் பொறுத்தளவில் அதிமுகவையும் உள்ளடக்கியதுதான். ஆனால், அதிமுகவின் பெரும் தலைவர்களான எம் ஜி ஆர், ஜெயலலிதாவைப் புகழ்வதன் மூலம் அவர்களது அணிகளை வென்றெடுக்க முயற்சிக்கும் தந்திரத்தையும் கடைபிடிக்கிறது.

விஜயகாந்த் மறைவையொட்டி, அவரை வானளாவப் புகழ்ந்து அவரது அடித்தளத்தை வென்றெடுக்க முயற்சித்தது. குறைந்தபட்சம் தேமுதிகவோடு தேர்தல் உடன்பாடாவது காண முயற்சித்தது. அதுவும் இயலவில்லை.

நாம் தமிழரை மிரட்ட அமுலாக்கத் துறையைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனால், ஏனோ அதுவும் முடியவில்லை.

இதுபோல, ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சிகளோடு உறவாடுவது, அதன் மீது சவாரி செய்து தன் பலத்தைப் பெருக்குவது, மிரட்டுவது, அத்தோடு, தனது ஒன்றிய அதிகாரம் மற்றும் பணபலத்தைப் பயன்படுத்தி அந்தக் கட்சித் தலைவர்களைத் தன் பின்னால் இழுப்பது, அதைப் பலவீனப்படுத்துவது, உடைப்பது என நாடு முழுவதும் செய்கிறது. திடீரென தற்காலிகமாக அதிமுக சுதாரித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக, பிஜேபி கூட்டணியிலிருந்து விலகி இருப்பதற்கு முஸ்லீம் ஓட்டுகள் தனக்கு கிடைக்காமலே போய்விடுமோ, மாநில அரசியலில் எழ முடியாமல் போய்விடுமோ என்கிற பயமே முதன்மையானதாகத் தெரிகிறது. பிஜேபியின் இந்த ஜித்து விளையாட்டுக்கு தமிழகத்தில் பலியாகிப் போனவர்கள்தான் புதிய தமிழகமும், சரத் குமாரும். ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிமுகவும், பாமகவும் கூட அந்தப் பட்டியலில்தான் இருக்கிறது.

என் மண் - என் மக்கள் யாத்திரையைப் பல மாதங்களாக நடத்தி, தன் சொந்த செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியில், இறுதியில் தனது அரசியல் கூட்டாளியான அதிமுகவையும் இழந்து விட்டது. ஆனால், பாமகவை மிரட்டியும், ஒன்றிய அமைச்சர் பதவியையும் காட்டி வளைத்துப் போட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படியொரு வாய்ப்பை நாம் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.

பல்லடத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அதில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் வரவழைத்து, தன்னை தமிழ்நாட்டில் எழுந்துவரும் ஒரு சக்தியாக காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால், பிஜேபியின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அதன் சாதி அரசியலில் (சோசியல் இஞ்சினீயரிங்) காணப்படுகிறது என்று சொல்ல முடியும். மீனாட்சி புரம் - மண்டைக்காடு கலவரங்கள் பழங்கதையாகி விட்டது என்றாலும், அதன் மூலம், ஆர் எஸ் எஸ் தமிழ்நாட்டில் வேரூன்றத் துவங்கியது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மாவட்டவாரியாக பேரணிகள் நடத்தி, தமிழ்நாட்டில் தன்னை அறுதியிட்டுக் கொள்ள முயற்சித்தது. வடநாடு போல பெரிய வலைப்பின்னல் இல்லையென்றாலும் முன்னைவிட தனது வலைப்பின்னலைத் தமிழ்நாட்டில் விரிவுப்படுத்தி இருக்கிறது என சொல்ல முடியும்.

கரூர்காரர் அண்ணாமலையை மாநிலத் தலைவராக்கி, கொங்கு வேளாளர் மத்தியில் தனது செல்வாக்கைப் பெருக்க முடியும் என கருதுகிறது. தென்மாநிலத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட வணிக சமுதாய மக்கள் மத்தியில் இன்னும் கூட தனது செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. எல். முருகனை மாநிலத் தலைவராக்கி, பின் ஒன்றிய அமைச்சராக்கி அதன் மூலம் மேற்கு மாவட்ட அருந்ததியர் மத்தியில் காலூன்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தென்மாவட்ட பட்டியலின மக்கள் மத்தியிலுள்ள மேல்தட்டினரை பட்டியலிலிருந்து வெளியேறும் கோரிக்கைக்கு ஆதரவாக ஓரளவு திரட்ட முடிந்துள்ளது. அதற்குப் பெருமளவு உதவியது புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் ஜான் பாண்டியனும். தென் மாவட்ட பட்டியலின மக்களை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றியது. தேவேந்திரருக்கும் நரேந்திரருக்கும் (மோடி) நெருக்கமான உறவு உண்டு என சவடால் அடித்தது. ஆனால், தேவேந்திரரை பட்டியலில் இருந்து நீக்கினால் அந்தச் சமூக மக்களின் எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என மதிப்பிட்டு கவனமாக அதை மட்டும் செய்யவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், வன்னியருக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி நடந்த பெரியதொரு பித்தலாட்டத்துக்கு தனது ஆசியை வழங்கியது. அது எவ்வளவு பெரிய அண்டப்புளுகு என்பதை அதற்குப் பின்னால் நடந்த நிகழ்வுகள் தெளிவுபடுத்தி விட்டன. உச்சநீதி மன்றமும் கூட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

அதிமுகவுடனான கடந்த கால கூட்டணியால் மேற்கு மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு பெறத் துவங்கி இருக்கிறது எனலாம். அதற்கு அதிமுகவின் முன்னாள் - இந்நாள் தலைவர்கள் ஒரு முக்கிய காரணம்.

இப்போது, மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறையைக் காக்க வேண்டுமானால், அது பிஜேபியால்தான் முடியும் என்கிறது. அதற்கு நிதி ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதிகளும் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசில் ஆட்சியிலிருக்கும் கட்சி மட்டுமே மேற்கு மண்டல தொழில் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும், எனவே பிஜேபிக்கு வாக்களியுங்கள் என வலம் வருகிறது.

இவ்வாறாக, சாதி அரசியலும், திராவிட இயக்கத்துக்கு மாற்று எனும் முழக்கங்களும், தொழில்துறை வளர்ச்சி நாயகன் எனும் முன்வைப்பும் அத்தோடு அதன் ஜனரஞ்சக நலத் திட்டங்களையும் உயர்த்திப் பிடித்து வாக்கு கேட்டு வலம் வருகிறது. இதன் மூலம் தமிழ் நாட்டில் தனது வாக்குகளை 20 சதவீதமாக உயர்த்த முடியும் என நம்புகிறது.

இந்தப் பின்னணியில்தான், இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

பல்லடம் கூட்டத்தில் பேசிய மோடி, தனது வீரதீர பராக்கிரமங்களை விளக்கிட தான் எப்படி காஷ்மீரைத் துண்டாட முடிந்தது என்று பேசினார். காசி - தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசி தனக்கும், தன் மதவெறி அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால், அவருக்குத் தெரியாதோ என்னவோ அதே காசியில்தான் பெரியார் தனது பிராமண எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு அரசியலை வளர்ப்பதற்கான ஞானத்தையும் பெற்றார் என்பது.

இப்படி, பல்வேறு முனைகளிலும், வெவ்வேறு விதமான முயற்சிகள் எடுத்ததனால் கண்டிப்பாக நாம் தமிழ்நாட்டில் இன்று காணும் பிஜேபி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்த பிஜேபி அல்ல. இன்றைய காலகட்டத்தில் பிஜேபி தமிழ்நாட்டில் முன்வைக்கும் அரசியல் கண்டிப்பாக சில பலன்களை அதற்குப் பெற்றுத்தர வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவீதம்  அதிகரிக்கலாம் என தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்களும் ஆய்வாளர்களும் கூட கணிக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் பிஜேபி அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவது அரசியல் புத்திசாலித்தனமல்ல. இன்று இல்லாவிட்டாலும், நாளைய கட்சியாக பிஜேபி பயணித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போது தேர்தல் மூலமாக மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களைச் சிதைத்து, முற்போக்குப் பாரம்பரியத்தை தகர்த்து அதன் அடிப்படையில்தான் வளர முடியும் என நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை சொல்வது நமக்கு இன்று நகைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், 50 சட்டமன்றத் தொகுதிகளை வெல்வது எனும் பிஜேபியின் குறிக்கோளைத்தான் அவர் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களுக்கே மாபெரும் அபாயம் பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் தான். அதனை மனதில் வைத்து இந்த மக்களவைத் தேர்தலிலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பிஜேபிக்குத் தக்க பாடம் புகட்டுவது தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமையாகும்.

இந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப்பது தமிழ்நாட்டு மக்களின் தலையாய கடமையாகும். அது ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது என்பது மட்டுமல்ல, அதன் வாக்கு சதவீதம் உயர்வதும் கூட தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானதே. எனவே, பிஜேபியைத் தேர்தலில் தோற்கடிப்பது, வாக்குகளைக் குறைப்பது என்பதை நமது முதன்மையான கடமையாகக் கொண்டு செயலாற்றிட வேண்டும்.

இந்திய நாட்டை இந்து ராஜ்யமாக மாற்றிட, அரசமைப்புச் சட்டத்தை அகற்றிட, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்திட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது பிஜேபி. அதேபோல, தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களைச் சிதைத்திடுவதை, மூடநம்பிக்கைகளை வளர்த்திடுவதை, கூட்டமைப்புத் தத்துவத்தைத் தகர்த்திடுவதை, தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டை, இந்தி, பிராமண, மதவெறி தேசியவாதத்துக்கு அடிமைப்படுத்துவதை, மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்துக்குப் புத்துயிர் கொடுப்பதை, தமிழ்நாட்டைப் பிற்போக்குப் பாதையில் கொண்டு செல்வதை, தமிழ்நாட்டு வரலாற்றுச் சக்கரத்தை, வளர்ச்சி சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ளிடுவதைத் தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆகவேதான்,

பிஜேபியைத் தோற்கடிப்போம்!

இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்!

என முழங்கி களம் காண்கிறது சிபிஐஎம்எல்.