சமூக சமத்துவத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்ற இந்தியாவின் மிகச்சிறந்த இருவரின் பிறந்த நாட்கள் ஏப்ரல் 11 ம் 14 ம் ஆகும். ஒருவர் ஜோதிராவ் பூலே, மற்றொருவர் பாபாசாகேப் அம்பேத்கர். பூலேவின் 197 வது (11 ஏப்ரல் 1827 - 28 நவம்பர் 1890) பிறந்தநாளையும், டாக்டர் அம்பேத்கரின் 133 வது (14 ஏப்ரல் 1891 - 6 டிசம்பர் 1956) பிறந்த நாளையும் இந்த ஆண்டில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நவீன இந்தியாவில் இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட அடிப்படைகள் மிகக்கொடும் தாக்குதலை எதிர்கொண்டு வருவதைக் காண்கிறோம். நிலப்பரப்புத்துவ விழுமியங்கள், ஆணாதிக்கத் தளைகள் மீண்டும் தலைதூக்கி வருவதைக் காண்கிறோம். இத்தகைய தருணத்தில், பூலே - அம்பேத்கரின் கருத்துகள் முன்னெப்போதையும் விட கூடுதல் பொருத்தமுடையதாகவும் உத்வேகமூட்டக்கூடியதாகவும் மாறியுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் 1848 ஆம் ஆண்டினை கம்யூனிஸ்ட் அறிக்கை பதிப்பிக்கப்பட்ட ஆண்டாக நினைவு கூர்கின்றனர். அதே ஆண்டில், 21 வயதே நிரம்பிய இளைஞர் ஜோதிராவ் பூலேவும் (ஜோதிபா என பரவலாக அறியப்படுபவர்), 17 வயதே நிரம்பிய அவருடைய மனைவி சாவித்திரிபாய் பூலேவும் இணைந்து, இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை புனேவில் உள்ள பிடேவாடாவில் தொடங்கினர். அதே ஆண்டில் தான், அமெரிக்க தத்துவவியலாளர் தாமஸ் பெய்ன் எழுதிய "மனிதனின் உரிமைகள்" என்ற, பிரெஞ்சு புரட்சிக்கு ஆதரவளித்த புத்தகத்தை பூலே வாசித்தார். பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் கல்வி வழங்கும் இந்த முன்னோடி முன்முயற்சி, மனுஸ்மிருதியைக் கடைபிடிக்கும் பழமைவாத, மேல்சாதி மேட்டுக்குடியினரை கோபம் கொள்ள வைத்தது. பூலே தம்பதியினர் அக்கம் பக்கத்தார்களாலும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களாலும் கூட ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களுடைய இரண்டு முஸ்லிம் நண்பர்களான பாத்திமா ஷேக், அவருடைய தம்பி உஸ்மான் ஷேக் ஆகியோரின் பேராதரவுடன் மட்டுமே பெண்களுக்கான கல்வி இயக்கத்தை அவர்களால் தொடர முடிந்தது.
தோழமைக்கு இலக்கணம் வகுத்த இந்த நிகழ்வு ஒரு தொடக்கமாக அமைந்தது. நவீன இந்திய வரலாற்றில், சமூக நீதிக்கும், பெண் கல்விக்குமானதொரு மாபெரும் அத்தியாயத்தின் தொடக்கமாகவும் அது அமைந்தது. பெண்களுக்கான கல்வி, பெண்கள் அதிகாரத்தை அடைவதற்கான கருவியாக மாறியது. சிசுக் கொலைக்கு எதிராக, விதவைகளின் மறுமணத்திற்காக வலுவான குரலை அவர்கள் எழுப்பினர். இன்றைய பெண் வெறுப்பாளர்களின் பாசாங்குத்தனமான 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்னும் வெற்று முழக்கத்திற்கு முற்றிலும் மாறாக, பெண்களின் கல்விக்கான, சமத்துவத்திற்கான ஒரு உண்மையான இயக்கமாக அது அமைந்தது. அது நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையை உலுக்கியது. சாதிமுறை எனப்படும் இந்தியாவின் சமூக அடிமைத்தனமான சாதியடுக்கு முறைக்கு எதிராக 'குலாம்கிரி' (அடிமைத்தனம்) என்ற நூலை 1873-ல் பூலே எழுதினார். அவர் அந்த நூலை, அமெரிக்காவின் இனவெறி அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.
1890-ல் பூலே இறந்து விட்டார். அது கிட்டத்தட்ட அம்பேத்கர் பிறந்த அதே காலமாகும். 1920 களில், சமூக நீதி இயக்கம் அம்பேத்கரின் வடிவில் மாபெரும் ஒரு புதிய செயல்வீரரைக் கண்டது. அவர் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பொருளாதாரத்தையும் சட்டத்தையும் படித்து, பட்டங்களை வென்று, அப்போது தான் இந்தியா திரும்பினார். புத்தருக்கும் கபீருக்கும் அடுத்தப்படியாக பூலேவை, தன்னுடைய மிகச் சிறந்த ஆசிரியராகவும் உத்வேகத்திற்கான தோற்றுவாயாகவும் அம்பேத்கர் கண்டார். 1927 குறிப்பிடத் தக்கதோர் ஆண்டாகும். அந்த ஆண்டில், அம்பேத்கர் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஒன்று, மார்ச் 1927 இல் நடைபெற்ற மகத் சத்யாகிரகம் ஆகும். பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் பயன்படுத்தத்தக்க ஒரு பொருளான தண்ணீர் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்கான இயக்கம் அது. மற்றொன்று, டிசம்பர் 1927-ல் சமூக அடிமைத்தனத்தின் சட்டமான மனுஷ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தும் இயக்கமாகும். 1936-ல் அம்பேத்கர் 'சாதியை அழித்தொழித்திட' அறைகூவல் விடுத்தார். அதே ஆண்டு அவர் சுதந்திர தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சி, பிராமணீயத்தையும் முதலாளித்துவத்தையும் தனது இரட்டை இலக்குகளாக அடையாளப்படுத்தியது.
அடுத்த இருபது ஆண்டுகளில், தொடர்ச்சியாக சமூக மாற்ற கருத்துகளை முன்வைப்பவராகவும், அதற்கான முன்முயற்சிகளை வடிவமைப்பவராகவும் அம்பேத்கர் திகழ்ந்தார். காலனிய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்தபோது அம்பேத்கர் உருவாக்கிய சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை அவர் தலைமை தாங்கிய அரசமைப்பு அவை அதை ஏற்றுக்கொண்டது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அம்பேத்கரின் பயணம் முடிவுக்கு வந்துவிடவில்லை. புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்குமான போராட்டம் தொடர்ந்தது. இந்து பெண்களுக்கான சம உரிமையை உறுதி செய்ய, இந்து தனிநபர் சட்டத்தை நவீனமயமாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான போராட்டம்தான் அவரது கடைசி போராட்டமாகும். அது அவர் புத்த மதத்தைத் தழுவுவதற்கு முன்னால் நடந்த கடைசி போராட்டமாகும். ஒருவர் தனது மதத்தைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் வழங்கிய மத சுதந்திரத்தை பயன்படுத்தி அவர் புத்த மதத்தை தழுவினார்.
இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் போராட்டத்தை இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இதில் இந்திய அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் எதிர்காலமே பணயமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பூலே - அம்பேத்கர் ஆகியோருடைய சமூக மாற்றத்தின் மரபிலிருந்து நாம் நமக்குத் தேவையான வலுவையும் உத்வேகத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு அரசமைப்புச் சட்டத்தையும் இட ஒதுக்கீட்டையும் மட்டும் வழங்கிச் செல்லவில்லை. அரசியலில் தனிநபர் துதிபாடலின் அபாயகரமான விளைவுகள் குறித்தும் நம்மை அவர் எச்சரித்து விட்டுச் சென்றிருக்கிறார். அது கண்டிப்பாக நம்மை சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் ஓர் வழிமுறையாகும் என அவர் கூறியிருக்கிறார். ’இந்து ராஷ்டிரா’ யதார்த்தமாகுமானால் அது மாபெரும் பேரழிவாக மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். பூலே - அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அம்பேத்கரின் அறிவுக் கூர்மையுடைய வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியாவின் ஜனநாயக எதிர்காலத்தையும் காக்க நம்முடைய அனைத்து ஆற்றலையும் ஒன்று திரட்டி பணியாற்றிட வேண்டும்.
(எம்எல் அப்டேட் தலையங்கம் 9-15 ஏப்ரல் 2024)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)