(தஞ்சாவூரில் 11.8.23ல் நடந்த விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில், ஏஐகேஎம் மாநிலத் தலைவர் சிம்சன், மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, அயர்லா மாநில நிர்வாகி வளத்தான், கன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில ஊழியர் கூட்டமும் நடைபெற்றது. விவிமு மாநாட்டில் எஸ்கேஎம் தேசிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், ஏஐகேஎம் தேசிய செயலாளர் தோழர் புருசோத்தம் சர்மா அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்)
அன்பிற்கினிய தோழர்களே! விவசாயிகளே!
அகில இந்திய விவசாயிகள் மகாசபை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக உங்கள் அனைவருக்கும் வணக்கம்! லால் சலாம் -செவ்வணக்கம்!
எனக்கு தமிழ் பேசத் தெரியாது. எனது ஆங்கிலமும் சுமாராகவே இருக்கும். எனவே எனது மொழி பயன்பாட்டில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் நாம் அனைவரும் நமது பொதுவான பார்வையாலும் குறிக்கோளாலும் ஒன்றுபட்டுள்ளதால், நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும், தோழர்களே!
நான் 1982-ல் இந்திய மக்கள் முன்னணியில் (ஐபிஎஃப்) இருந்தபோது, தண்ணீர், வணக்கம், மக்கள், முன்னணி போன்ற சில தமிழ் வார்த்தை களைக் கற்றுக்கொண்டேன். ஐபிஎஃப் மற்றும் அதன் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட போது, தந்தை பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான திராவிட இயக்கம் பற்றியும் படித்தேன்.
பார்ப்பனியத்திற்கும் சாதிய அமைப்புக்கும் எதிராக தமிழகத்தில் நடந்த இந்த இயக்கங்கள், இந்தியா முழுமைக்குமான பெரும் உத்வேகத்தை அளித்து வருகின்றன. இந்த இயக்கம் தென்னிந்திய மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிரதிநிதியான ஆர்எஸ்எஸ்- பாஜக தனது முழு வலிமையை உபயோகித்த பின்பும் தென்னிந்தி யாவில் வேரூன்ற முடியாமல் போனதற்கு இதுவே காரணமாகும். தோழர்களே!
இன்று நாம் அனைவரும் விவசாயிகளின் ஒன்றுபட்ட மேடையான ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற பதாகையின் கீழ் நாடு முழுவதும் ஒன்றுபட்டுள்ளோம். நாட்டிலுள்ள விவசாய அமைப்புகள் ஒரே மேடையில் வர வேண்டுமென்ற உந்துதலை தமிழக விவசாயிகள் கொடுத்தனர். 2017ம் ஆண்டு விவசாயிகள் சந்தித்த இழப்புகள் மற்றும் விவசாயிகளின் தற்கொலைகள் என்ற பிரச்சினையின் மீது பி.அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் டெல்லியில் இயக்கம் நடத்தினர். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் ஒரே மேடையில் அணி திரள்வது குறித்து ஆலோசித்தனர்.
இன்று இந்தியாவின் விவசாயம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க கார்ப்பரேட் வகை மாதிரியை நோக்கி இந்திய விவசாயம் தள்ளப்படுகிறது. இந்த வகைமாதிரி நமது நிலம், சாகுபடி, உணவு சேமிப்பு, விநியோக முறையை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்காகவே மோடி அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் நாட்டின் விவசாயி கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட இயக்கம் விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களை திரும்பிப் பெறுவதற்கு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. பசுமைப் புரட்சியின் போதுதான் நமது விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இன்று நமது விதை சந்தையில் 75 சதவீதத்தை மான்சாண்டோ போன்ற இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றி யுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது விதைச் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. விதைகள் கார்ப்பரேட்மயமாக்கப் பட்டதால் நமது பாரம்பரிய விதைகள் அழிந்துவிட்டன. இதே போன்ற கார்ப்பரேட் ஏகபோகம் பூச்சிக்கொல்லி கள், விவசாய இயந்திரங்கள் விஷயத்திலும் காணப்படுகிறது. கார்ப்பரேட் ஏகபோகமும் கொள்ளையடிப்பும்தான் நமது விவசாயச் செலவு அதிகரிப்பதற்குக் காரணமாகும்.
2000 ஆம் ஆண்டில், பாஜக தலைமையி லான வாஜ்பாய் அரசாங்கம் விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கியது. இது மானிய விலையில் இறக்குமதி செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்களை கொண்டு வருவதற்கு வழிவகுத்தது. இதனால், நமது விவசாயிகள் தங்கள் விலையை விட மிகக் குறைவான விலை யில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது, இந்தியாவில் உள்ள விவசாயி கள் இயக்கம் உலகெங்கிலும் உள்ள மக்கள் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் ஆகியவற்றின் போராட்டங்களுக்கான ஒரு கூட்டு மேடையை யும், விவசாயிகள் இயக்கம் அமைத்துக் கொடுத்தது. வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம், லக்கிம்பூர் விவசாயிகள் கொலையின் முக்கிய சதிகாரரான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் பதவி நீக்கம், விவசாயிகள் இயக்கத் தின் போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது, விவசாயிகள் கிராமப்புற தொழிலாளர் களின் கடன் தள்ளுபடிகள், புதிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
மேலும் குத்தகைதாரர்களுக்கு விவசாயி களின் அந்தஸ்து வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 200 நாள் வேலையும் நாள் கூலி ரூபாய் 600 வழங்குதல், நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களுக்கு வீடும் விவசாய நிலமும் வழங்குதல், நாட்டின் அனைத்து ஏழை மக்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்தும் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றையும் நாம் கோருகிறோம். இப் பிரச் னைகளில் நமது போராட்டம் தீவிரமடையும்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்துக்காக நமது விவசாய நிலங்கள், வனங்கள், ஆறுகள் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். தமிழகத்தின் சென்னை-சேலம் விரைவுச்சாலைக்கு எதிராக நமது விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக் காக அதை செய்து முடிக்கவுள்ளது அரசாங்கம். தமிழகத்திலும் கூட நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ரயில்பாதைகள், நெடுஞ் சாலைகள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அறிவியலற்ற, சுற்றுச்சூழலுக்கு எதிரான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆகஸ்ட் 29ம் தேதி தமிழகத்திலும் எஸ்கேஎம் மாநில கருத்தரங்கம் நடக்கிறது. நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் விவசாயிகளின் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். எதிர்வரும் நாட்களில் இந்தப் போராட்டங்களில் நமது போராடும் தமிழக விவசாயிகளும் தீவிரமாகப் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோழர்களே! மோடி ஆட்சியில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பாசிச தாக்குதலின் கீழ் உள்ளது. இந்த பாசிச தாக்குதலுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி சக்திகளும் ஒரு பொது மேடையில் ஒன்றுபட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பாசிசத்தை தோற்கடிப்பதற்கான இந்த இயக்கத்தில் இந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போதுள்ள பாசிச அமைப்பை வேரோடு அகற்றுவதில் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னணிப் பங்காற்றுவார்கள் என்பதில் நாம் உறுதியாக நம்பிக்கையுடன் இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் நன்றி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)