தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் முறியடித்த பின்னணியில் மே 7,8-2023 இரு நாட்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு கூட்டமும் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர்கள் இரணியப்பன், கோவை பாலசுப் பிரமணியன், கரூர் பால்ராஜ், சேலம் வேல் முருகன் ஆகியோர் கொண்ட குழு தலைமை தாங்கி நடத்தியது. நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள், அழைப்பாளர்கள் என சுமார் 70 பேர் இரு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், சென்னை, தர்மபுரி, நாமக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், மயிலாடு துறை, தேனி மாவட்டங்களிலிருந்து மின் வாரியம், போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக் கழகம், சுகாதாரத்துறை, தோல் மற்றும் தோல் பொருள், கட்டுமானம், ஜவுளி, விசைத்தறி, ஆட்டோ ஓட்டுநர், பொதுத்துறை, கன்டெய்னர் லாரி ஓட்டுநர், சுமைதூக்குவோர், தரைக்கடை வியாபாரிகள், இதர அமைப்புசாரா தொழிலாளர்கள் என முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

முதல் அமர்வில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன் உள்ள சவால்கள் (மாறி வரும் சேர்க்கை, எழுந்து வரும் சவால்கள் மற்றும் நமது அணுகுமுறை) என்ற தாள் மாநிலத் தலைவர் தோழர் சங்கர பாண்டியன் அவர்களால் முன்வைக்கப்பட்டது

இந்தத் தாள் குறிப்பாக 92 சதவீத தொழி லாளர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்களாக இருக்கும்போது அதிலும் கணிசமான பிரிவினர் சுய தொழில் முனைவோராக, சிறு வியாபாரம் முதல் சிறு முதலீடு கொண்டு தொழில் செய்பவர்களாக இருக்கும் சூழல் சவால்கள் நிறைந்ததாகவும் அதே சமயம் வாய்ப்புகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஊதி பெருகியுள்ள சேவைத் துறையில் ஓலா, உபர் டிரைவர்கள் முதல் உணவு விநியோகம், கிக்(gig) தொழிலா ளர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் வரை தொழிலாளர் சேர்க்கை உள்ளது. விவசாயம், கூலி வேலை என்று இரட்டைத் தன்மை உள்ள தொழிலாளர்களா கவும் உள்ளனர். அரசின் பல்வேறு திட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான இளை ஞர்கள் வேலை செய்யும் ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் நாம் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் ஆகும். இந்த தொழிலாளர்களை அமைப்பாக்க ஒற்றை சூத்திரம் கிடையாது. புதிய உத்திகள் தேவைப் படுகின்றன என்பதையும் தாள் விரிவாக விவரித் திருக்கிறது. முதலாளி-தொழிலாளி உறவு தெளிவாக இல்லாத போது அரசாங்கத்துக்கு எதிரான கோரிக்கைகள், போராட்டங்கள் என்பதாக இயக்கம் இருக்கும். இத்தகைய சவால் மிக்க பணியை செய்வதற்கான பல்வேறு மரபார்ந்த மற்றும் மரபுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறைகள் பற்றியும் தாள் எடுத்துக் கூறி இருக்கிறது.

முன்வைக்கப்பட்டுள்ள தாளின் பல்வேறு பரிமாணங்கள் மீது தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இரண்டாவது அமர்வில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக பாத்திரமும் அதனை அரசியல் படுத்துதலும் என்னும் தாள் முன் வைக்கப் பட்டது.

மாமேதை லெனின் என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் எழுதிய, தொழிற்சங்க தலைவரிலிருந்து மாறுபட்டு சோசலிச தலைவரின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்ற மேற்கோளிலிருந்து தாள் துவங்குகிறது. வர்க்கம் இறந்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி வர்க்கப் பார்வைக்கு புது வெளிச்சம் காட்டுகிறது. தாராளமய காலகட்டத்தில் அமைப்புசாராத் தொழிலாளர் களின் பெருக்கம் எப்படி வலதுசாரி கருத்தியலின் எழுச்சிக்கு உதவியது என்பதை குறிப்பிட்டு, தொழிலாளர்களை அரசியல் படுத்த சிறப்பு முயற்சிகள் தேவை என்கிறது. நகர பொருளா தரத்தின் முறை சார்ந்த துறையில் இருந்து பெருமளவில் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டதற்கும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வன்முறை வெடித்ததற்கும் இடையே ஒரு இயல்பான நேரடி உறவு இருந்தது என எழுத்தாளர் ஜான் பிரேமன் குறிப்பிடுவதை தாள் சுட்டிக்காட்டியது. 

தோழர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தாள் மீது விவாதம் கட்டமைக்கப்பட்டது. 

ஒவ்வொரு குழுவின் விவாதங்களையும் தொகுத்து குழுவின் சார்பில் ஒருவர் அவையில் முன் வைத்தார். சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி இந்த தாள் மீது தனது விரிவான கருத்துக்களை முன் வைத்தார்.

தொழிலாளர்களை அரசியல் படுத்த. 'மன்றம்' என்ற வடிவத்தை பயன்படுத்துவது பற்றியும் பாசிசக் கருத்தியலை எதிர்கொள்ள மன்றம் போன்ற அமைப்புகளின் அவசியம் பற்றியும் தாள் பேசுகிறது. உள்ளூர் மட்ட தோழர்களின் ஆற்றல் மிக்க படைப்பாற்றலுடன் புதிய சிந்தனையுடன் மன்றங்களை செயல்படுத்த வேண்டும் என்கிறது. அரசியல் அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றுவதன் அவசியத் தையும் அதற்கான உத்திகளையும் இந்தத் தாள் முன்வைக்கிறது.

மூன்றாவதாக தமிழக தொழில், தொழி லாளர் வர்க்க நிலைமைகள் பற்றிய தாளை ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் முன் வைத்தார்.

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நீண்ட கால ஊதிய உயர்வு உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக் கான ஓய்வூதியப் பயன்கள், ஓய்வூதியம், மருத்துவ வசதி ஆகியவற்றில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. போக்குவரத்தில் தனியார் மயமாக்கம் எனும் கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி அமல்படுத்தப் படவில்லை. அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதாக நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் கொள் முதல், சேமிப்பு, விநியோகத்தை தனியார் மயப்படுத்த தொடர் முயற்சிகள் நடக்கின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், தற்காலிக செவிலியர் கள், டாஸ்மாக் ஊழியர்கள் பணி வரன்முறை, பணி நிரந்தரம் கோரிக்கை நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அரசு செவி மடுப்பதாய் தெரியவில்லை. மின்சாரத் துறையில் ஊழியர்கள், பொறியாளர் களின் சக்தி வாய்ந்த சென்னை பேரணிக்குப் பிறகு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துரிதமாக நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்தத் தொழி லாளர் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகள் கண்டு கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. மின்சார துறையை தனியார்மயமாக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

டாஸ்மாக்கில் விற்பனையாளர்களின் உயிர் பாதுகாப்பு முதல் பணி நிரந்தரம் வரை கோரிக்கை உள்ளது. அனைத்து சங்கங்கள் சார்பில் அமைச்சர் சந்திப்புக்கு பிறகு சொற்ப ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பிற சங்கங்களுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை தொடர்கிறது.

தூய்மைப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை மாநிலம் முழுவதும் எழுந்து வருகிறது. தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி வரும்போது ஒட்டுமொத்த தூய்மை பணியையும் அவுட்சோர் சிங் மூலம் செய்வது என்பதை நோக்கி அரசாங்கம் நகர்கிறது. தூய்மைப் பணியாளர்களை மாநிலம் முழுவதும் அமைப் பாக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்திய விசைத்தறி போராட்டத்தில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போராட்டத்தை குமாரபாளையம், பள்ளிப் பாளையம் பகுதிகளில் தொடர வேண்டியுள்ளது. தோல் மற்றும் தோல் பொருளில் தொழிற்சாலை கலைப்புக்கு எதிராக தொழிலாளர்களின் பாக்கிகளை பெறுவதற்கான போராட்டம் தொடர்கிறது. கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் சட்டரீதியாகவும் வீதிகளிலும் போராட்டத்தை தொடர்கிறோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினையில் தொடர்ந்து தலையிடுகிறோம். சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கரும்பு வெட்டும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதில் சிறப்பான பங்காற்றியிருக்கிறோம். கட்டுமானத் தொழிலாளர்களை அரசியல் சக்தியாக அறுதியிடச் செய்யும் தொழிற்சங்க இயக்கமாக்க “சங்கம் முதலில், வாரியம் இரண்டாவதாக" என்ற முழக்கத்துடன் செல்ல வேண்டும். அதே சமயத்தில் வாரியப் பயன்களை அதிகரிக்கவும் விரிவுபடுத்தவும் நமது போராட்டங்களைத் தொடர வேண்டும். கார்ப்பரேட் நலனிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 மணி நேர வேலை சட்டம் தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தால் முறியடிக்கப்பட்டி ருக்கிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கமும் டெல்டா மாவட்டங்களில் புதிய சுரங்கங்களுக்கான அறிவிப்பும் மக்கள் இயக்கங் களால் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிற போதே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. புரட்சிகர தொழிற்சங்கம் விழிப்போடு செயல்பட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது

இரண்டாம் நாள் அமர்வு நடைமுறை வேலைகள் பற்றியதாக இருந்தது. 

1) உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துக

தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதே அவர்களை அரசியல் படுத்துதலில் முதல் படி என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5,000 உறுப்பினர் இலக்கை அடைய வேண்டும் கட்டுமானம், விசைத்தறி பீடி, அமைப்புசாரா தொழிலாளர்கள் புதிய வகை கிக் தொழி லாளர்கள், ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதோடு நமது அமைப்பாக்கப்பட்ட மாநில சங்கங்களான மின்வாரியம், போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக் கழகம், டாஸ்மாக் சங்கங்களை விரிவாக்குவதும் பலப்படுத்துவதும் செய்யப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட அமைப்புகள் அதற்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

2) ஜூலை 7 தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க 4 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெறும். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதுமிருந்து திட்டமிட்டபடி வேன், பேருந்துகளில் தொழிலாளர்களை அணிதிரட்டிட வேண்டும். பெருந்திரள் பொது மாநாடாக மாநில மாநாடு நடைபெறும்.

3) ஜூலை 8 - 9 இரண்டு நாட்கள் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (AICWF) அகில இந்திய மாநாடு பிரதிநிதிகள் மாநாடாக கன்னியாகுமரியில் நடைபெறும். இந்தியா முழுவதுமிருந்து சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக்க எல்லா வகையிலும் உதவுவது என பொதுக்குழு முடிவு செய்தது.

4) மாவட்ட மாநாடுகள்

ஜூலை 20ஆம் தேதிக்குள், தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைக் கொண்டு மாவட்ட மாநாடு களை நடத்தி முடித்திட வேண்டும். தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பு ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரையிலான மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் ஆகஸ்டில் வெள்ளை யனே வெளியேறு நாள் இயக்கத்தையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.

5) ஆகஸ்ட் மாத இயக்கம் ஆகஸ்ட் 9ஆம் தேதி, சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் அணி திரட்டும் "பெருந்திரள் அமர்வு" இருக்கின்ற காரணத்தால், மாவட்டங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிக எண்ணிக்கையில் அணிதிரட்டலுடன் மாவட்ட மட்ட நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். சென்னை நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு மாவட்டங்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

6) செப்டம்பர் அக்டோபர் மாத வாக்கில் ஏஐசிசிடியு மாநில மாநாட்டை கரூரில் நடத்தலாம் என பொதுக்குழு முடிவு செய்தது.

7) நவம்பர் டிசம்பர் மாத வாக்கில் கன்னி யாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழக தொழிலாளர் கோரிக்கையின் மீது பிரச்சார இயக்கத்தை நடத்திட பொதுக்குழு முடிவு செய்தது. 

தீப்பொறி

தொழிலாளர்கள் மத்தியில் தீப்பொறி பத்திரிகை கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் பற்றி ஏஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவரும் தீப்பொறி ஆசிரியருமான தோழர் ஜி.ரமேஷ் வலியுறுத்திப் பேசினார்.

ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர் தனது உரையில்...

புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி எழுப்புவதில் பல்வேறு மாநிலங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு, கூலிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என்ற முக்கிய அம்சங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். மே நாள் என்பது தொழிலாளர்களின் தியாக வரலாற்றை குறிக்கின்ற நாள். அன்றைய நாள் அன்னதானம் வழங்குவது, விருந்து படைப்பது போன்ற நிகழ்வுகள் நமது அமைப்புக்கு உசிதமானது அல்ல என்றார்.

தொழிலாளர்களிடம் புரட்சிகர அரசியலை கொண்டு செல்ல ‘மன்றங்கள்' என்ற அமைப்பு வடிவத்தின் தேவை பற்றியும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கார்ப்பரேட் ஆதரவு கட்சிகள் தான். ஆனால், பாஜக மத வெறி பாசிச கட்சி. அதனால்தான் எப்பாடு பட்டாகினும் 2024 தேர்தலில் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அகில இந்திய அளவில் துறை சார்ந்த பல்வேறு சம்மேளனங்களின் மாநாடுகள், போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி குறிப்பிட்டு சொன்னார்.

தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிக்க அறைகூவல் விடுத்தார்.

இரண்டு நாள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தர்மபுரி தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்து கூட்டம் நிறைவடைந்தது.