கீன்சியனுக்குப் பிந்தைய காலகட்டத்தின் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான ஒரு சர்வரோக நிவாரணியாக உலக மூலதனத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நவதாராளவாதக் கொள்கை. அந்தக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்ததன் விளைவாக, ஒரு கண்ணியமான ஓய்வூதியத்திற்கான இயக்கம் பெரும் முக்கியத்துவமிக்க ஒன்றாகவும் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதாகவும் மாறியுள்ளது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அறிமுகத்துடன் மக்கள் நல அரசு என்ற கருத்தின் முடிவு தொடங்கியது. ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதால் ஓய்வூதிய நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட போதே, ஓய்வூதியம் என்பது வரையறுக்கப்பட்ட பயனளிப்பு என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஓய்வூதியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்புப் பொறுப்பும் தொழிலாளர்களின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுவிட்டது. தங்கள் ஊழியர்களை முதிய காலத்தில் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கமும் முதலாளிகளும் தட்டிக்கழிக்கின்றனர். ஓய்வூதியப் பிரச்சினை என்பது முதுமையில் வறுமை என்ற பிரச்சினையே தவிர வேறில்லை.
ஓய்வூதியம் ஓர் அரசியல் பிரச்சினை
நாட்டில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடியைத் தாங்க முடியாமலும், பாஜக ஆளும் மத்திய அரசுக்கு எதிரான ஒரு எதிர் நடவடிக்கையாகவும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற பாஜக அல்லாத சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) திரும்பக் கொண்டு வர முடிவு செய்துள்ளன. ஆனால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஓய்வூதிய நிதிக் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் அதே ஊழியர்களிடம் இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) என்ற பெயரில் 2004 முதல் வசூலித்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுத்து, இந்த செயல்முறைக்கு தடைகளை உருவாக்கி வருகிறது.
ஓய்வூதியப் பிரச்சினை ஓரஞ்சாரமான ஒரு பிரச்சினையாக இப்போது இல்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பூதாகரமான ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. உ.பி., இமாச்சலப் பிரதேசம் போன்ற பல சட்டமன்றத் தேர்தல்களிலும் கூட, இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக இருந்தது. பாஜகவும் வேறு சில கட்சிகளும் தவிர, பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசு ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதி களை அளித்தன. இந்த பின்னணியில் தான், நிதியமைச்சர் தனது கடைசி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் உரையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களையும், சாத்தியமான மேம்பாடுகளையும் ஆராய, நிதிச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அறிவித்தார். இது பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வர வேண்டுமென்ற தொழிலாளர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு எதிரானது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒப்பீட்ட ளவில் அதிக ஓய்வூதியத்துடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட என்பிஎஸ்ஐ, அறிவிக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன. ஓபிஎஸ்ஐ திரும்பக் கொண்டு வரப்போவதில்லை என்றும், தற் போதுள்ள என்பிஎஸ் திட்டத்தில் சில மேம்பாடுகள் மட்டுமே செய்யப்படும் எனவும் அரசு தனது நோக்கத்தை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
நவதாராளவாத தர்க்கமும் கொழுத்த லாபமும்
1947ல் சராசரி இந்தியரின் ஆயுட்காலம் 32 ஆண்டுகள் என இருந்ததை ஒப்பிடும்போது, 2020ல் ஆயுட்காலம் 70 ஆக உயர்ந்துள்ள பின்னணியில், ஓய்வூதியத்திற்கான கோரிக்கை முதுமையில் வறுமையை வெல்லும் முயற்சி யாகும். புதிய தாராளமய பொருளாதார தத்துவத்தால் வழிநடத்தப்படுகிற உலகெங்கிலும் உள்ள நாடுகள், ஒருபுறம் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமும், மறுபுறம் அதைப் பெருமளவுக்கு தொழிலாளர்கள் பங்களிக்கும் திட்டமாக ஆக்குவதன் மூலமும், ஓய்வூதியம் காரணமாக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் நிதிச் சுமையை குறைக்க முயற்சிக்கின்றன. அதிஉயர் இலாப நோக்கத்தால் உந்தப்படுகிற உலக மூலதனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இது சமூகப் பொறுப்பற்ற, அறிவியலற்ற அணுகு முறையாகும்.
வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகை
இந்தியாவில் மக்கள் தொகையின் சராசரி தற்போது ஒப்பீட்டளவில் இளமையாக உள்ளது. ஆனால் 2050ஆம் ஆண்டில் அதன் முதுமை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 30 சதவீதமும், இந்திய மக்கள்தொகையில் தோராயமாக 20 சதவீதம் பேரும் 2050 ஆம் ஆண்டளவில் ஓய்வூதியத்தை நம்பியிருக்க வேண்டியவர்களாக இருப்பார்கள் என சில மதிப்பீடுகள் கருத்துரைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் மக்கள்தொகையில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியம் பற்றிய கேள்வி உயிர்ப்புடன் இருக்கிற பிரச்சினையாகும்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, 1981 இல், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 5.6 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தனர்; ஆனால் 2021 இல், இந்த விகிதம் 10.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 'இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை கணிப்புகள் 2011' பற்றிய தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 13.8 கோடி முதியவர்கள் இருந்தனர் என்றும், 2031ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை மேலும் 5.6 கோடி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுவதாக கூறுகிறது.
ஓய்வூதியம் என்பது உதவிப் பணம் அல்ல;அது உரிமை
முதியோர் மக்கள்தொகை என்பது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஒரு சுமை என்று அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், அதன் சொந்த ஊழியர்கள் அவர்களுடைய முதுமையை எட்டும் போது அவர்களை பராமரிக்க வேண்டிய அதன் பொறுப்பு பற்றி எதுவும் கூறவில்லை. அரசாங்கத்திற்கு அதனுடைய ஊழியர்களின் முதுமை காலப் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர்கள் தங்கள் இளமையை நாட்டுக்காகவும், அரசுக்காகவும் செலவிட்டவர்கள். எனவே, அவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களுக்கு மரியாதைக் குரிய, கண்ணியமான வாழ்க்கையை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கமும் சுயநல நோக்கங்களால் உந்தப்பட்டு, நாட்டின் மீதும் மக்களின் வரிப்பணத்தின் மீதும் அவர்கள் சுமையாக உள்ளனர் என்கிறது.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுவனங்களிலிருந்தோ அல்லது அரசாங்கத்திலிருந்தோ வழங்கப்படும் தொண்டல்ல; மாறாக, அது அவர்களின் உரிமை என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் தெளிவாகக் கூறியுள்ளன. ஓய்வூதியம் என்பது அவர்களின் சொந்த உழைப்பின் முதலீட்டுக்கு கிடைக்கும் பலன். அதனை அவர்களின் ஒப்புதல் இன்றி மறுக்கவோ அல்லது வேறு எதற்கும் திசைதிருப்பி விடவோ முடியாது. ஓய்வூதியம் என்பது ஒரு ஊழியரின் சம்பளத்தில் அவர்கள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதி ஆகும். இருந்தபோதிலும், அரசாங்கம் 2004 முதல் ஊழியர்களுக்கும் அடுத்த தலைமுறை யினருக்கும் பாதுகாப்பற்ற எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட பயனளிக்கும் திட்டத்தை மாற்றியமைத்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வடிவ மைத்தது. அரசாங்கம் அவர்களின் உரிமையை மறுத்து, ஊழியர்களின் எதிர் காலத்தை வலுக் கட்டாயமாக அவர்களிடமிருந்து பறிக்கிறது
ஓபிஎஸ் எதிர் என்பிஎஸ் : பலன் எதிர் பங்களிப்பு
அரசுத்துறை, பொதுத்துறைகளில் 2004 ஆம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு தேசிய (புதிய) ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) பொருந்தும். ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் வரையறுக்கப்பட்ட பலனை பழைய ஓய்வூதியத் திட்டம் உறுதி செய்துள்ளது. 60 வயது வரை இந்தப் பணியில் அவர்கள் செலவழித்த உழைப்பு தான் ஓய்வூதியத்திற்கு அவர்களின் முதலீடாகும். ஓய்வூதிய நிதிக்கு தனியாக வேறு எந்த பங்களிப்பும் தேவையில்லை. ஊழியர்கள் பணிபுரியும் காலத்தில் அவர்கள் செய்த வேலைக்கு ஒரு பலனாக, ஒரு நிலையான தொகை ஓய்வூதியமாகக் கருதப்பட்டது. கடைசி மாதம் ரூ.30,000 சம்பளத்துடன் ஓய்வு பெற்ற ஒரு நபருக்கு ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயும் பணவீக்கத்துடன் இணைக்கப் பட்ட அகவிலைப்படியுடன் சேர்த்து, தோரா யமாக மாதம் ரூபாய் 20,000 வழங்கப்படலாம். இத்தொகை மூலம், ஒரு முதியவர் தனது முதுமைக் காலத்தில் வறுமையில் விழாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால், என்பிஎஸ்-புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஊழியர்கள் பங்களிப்பு செய்யும் திட்டமாகும். அதன்படி 2004ஆம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 சதவீதத்தை தங்களது பங்காகவும் அரசாங்கம் 14 சதவீதத்தை தனது பங்காகவும் செலுத்த வேண்டும். பதிலுக்கு, ஆண்டுத் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு பெறுகிறார்கள். இதுவும் கூட, வைப்புத் தொகையின் அளவு, நிதிச் சந்தையில் நிகழும் எதிர்பாரா மாற்றங்கள், பணி செய்த ஆண்டுகள், இதுபோன்ற இன்னபிற, பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
என்பிஎஸ் நிதிகள் உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தப் பணம் ஊக நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்படுகிறது. யூடிஐ (யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா) இன் சுமார் 27 சதவீத பங்குகள் அந்நிய நிதி நிறுவனங்களுக்கு சொந்தமானவை. மேலும் இது தொடர்பான பல்வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்துகள் வெளிவரத் தொடங்கி யுள்ளன. பங்குச் சந்தையில் இருக்கும் ஓய்வூதிய நிதியிலிருந்து திரும்பக் கிடைக்கும் தொகையின் அளவு மாறுபடுவதாலும், அதில் ஏற்படக்கூடிய இழப்புகளாலும், தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக இறுதியில் கிடைக்கும் ஊதியம் நிச்சயமான தாக்கத்திற்கு உள்ளாகும். நிதி மேலாண்மை நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில், அதன் சுமையை ஊழியர்கள் தாங்க வேண்டியிருக்கும். நிறுவனங்கள் சலுகைகளை அனுபவிக்கின்ற அதே நேரத்தில் இதனை எதிர்கொள்ள ஊழியர்களுக்கு அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காது.
அடிப்படையில், என்பிஎஸ்-ன் கீழான பங்களிப்பு வரையறுக்கப்பட்டுள்ள போது, அந்தப் பங்களிப்புகளில் இருந்து ஓய்வூதியம் என்பதாக திரும்பப் பெறப்படும் தொகை குறித்து வரையறை ஏதும் இல்லை. என்பிஎஸ் ஆனது அவர்களின் பணிக்காலத்தில் ஒவ்வொரு தனிப் பட்ட ஊழியர்களின் உண்மையான சேமிப்புகள் மற்றும் சம்பாதிப்புகளுக்கு விகிதாசாரமாக வழங்கப்படுமே தவிர, ஓய்வுக்குப் பிறகு அவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ளாது. என்பிஎஸ் இன் பல நிகழ்வுகளில், ஊழியர்கள் மாத ஓய்வூதியமாக வெறும் ரூ.1,000 அல்லது ரூ. 2,000 மட்டுமே பெறுவதையும் நாம் காண்கிறோம். பிப்ரவரி 2022 வரை 22.74 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.44 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் என்பிஎஸ் இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், குறிப்பாக இளம் தலை முறையினர், அவர்கள் ஓய்வுக்குப் பிறகான எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாவதன் காரணமாக, அதிலும் குறிப்பாக, என்பிஎஸ்-ன் கீழ் குறைந்த ஓய்வூதியம் பெறுவதன் பின்னணியில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பக் கொண்டு வருதற்கான கோரிக்கை என்பது அவர்களின் முதிய, "உற்பத்தியில் ஈடுபட முடியாத" வயதில் வறுமையைத் தணிப்பதற்கான கோரிக்கையே அன்றி வேறல்ல. அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை, அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுகட்டு வதற்காக வழங்கப்படும் அகவிலைப்படியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். தற்போது 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பக் கொண்டு வரும் இயக்கத்தின் முதுகெலும்பாக உள்ளனர். இந்த இளம் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்தால் அரசாங்கம் அவர்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டா யத்திற்கு உள்ளாகும்.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்)
வருங்கால வைப்பு நிதியின் (பிஎஃப்) கீழ் உள்ள மற்றொரு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) ஆகும். இது முக்கியமாக ரூ.15,000 வரை ஊதியம் பெறும் தனியார் துறை ஊழியர்களை உள்ளடக் கியது. அவர்கள் தங்கள் ஊதியத்தில் 12 சதவீதத்தை பிஎஃப்க்காக செலுத்துகிறார்கள். அதற்கு சமமான தொகையை முதலாளியும் அவர்களின் கணக்கில் செலுத்துகிறார். தொழிலாளர்களும் நிர்வாகத்தினரும் சேர்ந்து செலுத்தும் மொத்த பங்களிப்பான 24 சதவீதத்தில், 8.33 சதவீதம் ஓய்வூதிய நிதிக்கு செல்கிறது. மீதமுள்ள தொகை தொழிலாளி ஓய்வுபெறும் போது வட்டியுடன் சேர்த்துத் திருப்பித் தரப்படுகிறது. இத்திட்டத்தில் பெரும்பான்மை யானவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 1,000 மட்டுமே பெறுவதால், அவர்கள் முதுமையில் வறுமையை சமாளிக்கப் போராடு கிறார்கள் என இறுதிப் பகுப்பாய்வில் நாம் காண்கிறோம். அவர்கள் ஒரு கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை நடத்தத் தேவை யான அளவுக்கு அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.
அடல் பென்ஷன் யோஜனா (ஏபிஒய்)
அடல் பென்ஷன் யோஜனா என்பது மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யும் ஓய்வூதியத் திட்டமாகும். முறைசாரா துறையைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூ தியத்தை வழங்க, ஒவ்வொருவரின் பங்க ளிப்பைப் பொறுத்து, 1,000த்தின் மடங்குகளில் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. 18 வயது முதல் 39 வயது வரை உள்ள தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் ஓய்வூதியத்திற்காக மாதந்தோறும் அவர்கள் பங்களிக்க வேண்டும். 40 மற்றும் அதற்கு மேல் வயதுடைய ஒரு தொழிலாளி இத்திட்டத்திற்குத் தகுதியற்றவராவார். ஒருவர் ஓய்வூதியமாக ரூ. 5,000 பெற வேண்டுமெனில், அவர் மாதம் ரூ. 210 (18 வயதுப் பங்களிப்பாளர் 42 ஆண்டு களுக்கு) முதல் ரூ.1,318 வரை (39 வயதுப் பங்களிப்பாளர் 21 ஆண்டுகளுக்கு) பங்களிக்க வேண்டும். என்பிஎஸ்-லைட் என்பது அதே பிரிவை உள்ளடக்கும் நோக்கத்தில் உள்ள மற்றொரு திட்டமாகும்.
இந்தத் திட்டங்களின் கீழ் பங்களிப்பவர்கள் ஜூலை 2018 நிலவரப்படி 1.57 கோடியாக உயர்ந்துள்ளனர். இருப்பினும், நாட்டில் உள்ள மொத்த அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையான 39.14 கோடியில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) இது வெறும் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.
வேலையில் இருக்கும் போதும் வறுமை
நாட்டில், பாதுகாப்பான அல்லது சிறந்த வேலைகளோ அல்லது அவர்களின் எதிர்கால ஓய்வூதியத்திற்கு பங்களிக்க ஊதியமோ இல்லாத, 93 சதவீத தொழிலாளர்களின் முறைசாரா வேலைகளின் அபாயகரமான அதிகரிப்பு மிகுந்த கவலையளிக்கிறது. மிகக் குறைவான ஊதியத்தை யும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தீர்ப்பதன் மூலம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஏழ்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். போதுமான கால அளவுக்கு வேலையின்மை என்பது அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சனையாகும். மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படை பிரச்சனை களை சரிசெய்ய அரசாங்கம் முயற்சித்தால் ஒழிய, சமூக, பலன் அல்லது பங்களிப்பு ஓய்வூதியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. உழைக்கும் வயதில் வறுமையைக் குறைப்பதற்கான ஒரு உத்தி மட்டுமே முதிய, ஓய்வூதியம் பெறும் வயதில் வறுமைக்கு தீர்வாக இருக்கும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய மூலதனம் இரண்டுமே, நாட்டையும் மக்களையும் வளம்பெறச் செய்வதற்கான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டன.
சமூக ஓய்வூதியம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை நீட்டித்ததாக மோடி தலைமை யிலான பாஜக அரசு கூறுகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் அனைத்தின் கீழும் வழங்கப்படும் ஓய்வூதியம் சில ஆயிரங்களுக்கு மேல் இல்லை. பெரும்பாலும் ஆயிரம் மட்டுமே. இது நாட்டிலுள்ள எந்தவொரு தனி மனிதனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தத் தேவையான அளவிற்கும் மிகக் குறைவானது.
மறுபுறம், அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்படுவதற்குத் தயாராக உள்ள சமூகப் பாதுகாப்புச் சட்டம் சமூகப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் அல்லது அரசாங்கத்திடம் இருந்து விலக்கி. அதனை ஒவ்வொரு தொழிலாளியின் மீதே சுமத்துகிறது.
நாட்டில் உள்ள வறுமை, வேலையின்மை, ஊதியங்களின் அளவு ஆகியவற்றுடன் சிக்கலான முறையில் ஓய்வூதியம் குறித்த பிரச்சனை இணைக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அதன் போக்கில் பாதிக்கிறது. ஒவ்வொரு தொழிலா ளிக்கும் குறைந்தபட்ச அளவுக்காவது ஓய்வூதி யத்தை வழங்கும் சமூக ஓய்வூதியத்திற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது. அரசாங்கங்கள் முறை யாக உத்திகளை வகுத்தால், நாட்டில், பொருளா தாரத்தில் மற்றும் தனிப்பட்ட ஓய்வூதிய தாரர்களின் வாழ்வில் வளர்ச்சியை இந்த முற்போக்கான சமூக ஓய்வூதியம் ஏற்படுத்தும் என்பதற்கான பல படிப்புகளும் ஆய்வுகளும் உள்ளன.
தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத காலத்தில், முதிய வயதில் அவர்களின் நலனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் அவசியம் திட்டமிட வேண்டும். கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான, கண்ணியமான ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் செய்யாமல் அந்தச் சுமையை தொழிலாளர்கள் மீது ஏற்றினால், அது நாட்டின் பொருளா தாரத்தின் மீது நெருக்கடியை அதிகரிக்கும்.
உலக ஓய்வூதியக் குறியீடு
இந்த விசயத்தில் இந்தியாவின் நிலையா னது மிகவும் மோசமாக உள்ளது. மெர்சர் மற்றும் சிஎஃப்ஏ நிறுவனம், 44 நாடுகளை உள்ளடக்கிய, தனது 14வது வருடாந்திர மெர்சர் சிஎஃப்ஏ நிறுவன உலக ஓய்வூதியக் குறியீட்டை (எம்சிஜிபிஐ) 2022 அக்டோபரில் வெளியிட்டது. அதில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்த அதேவேளை தாய்லாந்து கடைசி இடத்தைப் பிடித்தது. 44 நாடுகளில் கடைசி நிலையில் 41வது இடத்தை இந்தியா பிடித்தது. ஐஸ்லாந்து (1) நெதர்லாந்து (2), டென்மார்க் (3), இஸ்ரேல் (4), பின்லாந்து (5) ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன. துருக்கி (40), இந்தியா (41), அர்ஜென்டினா (42), பிலிப்பைன்ஸ் (43), தாய்லாந்து (44) ஆகியவை கடைசி 5 இடங்களைப் பிடித்தன.
டபிள்யு ட்டி டபிள்யு மற்றும் திங்கிங் அஹெட் நிறுவனம் நடத்திய 'உலக ஓய்வூதிய சொத்துகள் ஆய்வு 2023', ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, யுகே,யுஎஸ் உள்ளிட்ட ஏழு பெரிய சந்தைகள் உலகின் மொத்த ஓய்வூதிய சொத்துக்களில் 92 சதவீதத்தை கொண்டுள்ளன என்று கூறுகிறது. உலகின் ஓய்வூதிய சந்தைகளின் பெரும்பகுதி இந்த ஏழு பெரிய சந்தைகளில் குவிந்துள்ளது. மேலும் மீதமுள்ள ஓய்வூதிய சந்தைகளை நோக்கிய விரிவாக்கத்தையும் ஊடுருவலையும் உலக மூலதனம் திட்டமிட்டுள்ளது. எனவே, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள், ஓய்வூதிய மூலதனத்தை திரட்டுவதில் கவனம் குவிப்பதன் மூலம், ஓய்வூதிய சந்தைகளை விரிவுபடுத்த முனைகின்றன. இதற்கான முதன்மைப் பட்டியலில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இடம் பெற்றுள்ளன. மிகப் பெரும் பான்மையான அமைப்புசாரா தொழிலாளர்களை ஓய்வூதியம் மற்றும் இதர சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் வலைக்குள் கொண்டுவரும் மோடி அரசாங்கத்தின் முயற்சியானது, நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் கடினப்பட்டு சேர்த்த சிறுசேமிப்புகளைப் பிடுங்கி மூலத னத்தைக் குவித்து, அதன் மூலம் நிதிக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை எல்லாருக்கும் விரிவுபடுத்தியுள்ளோம் என்று வாய்ச்சவடால் பேசுகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு என்பது அமைப்புசாரா தொழிலாளர் களைப் பயன்படுத்தி பணக்காரர்களுக்கும் அதிகாரவர்க்கத்தினரும் பயன்பெற மூலத னத்தைக் குவிப்பதற்கான ஒரு கருவியே தவிர வேறல்ல.
எழுந்துவரும் போராட்ட அலைகள்
இன்று தொழிலாளர் வர்க்கம் கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை ஓய்வூதிய எதிர் சீர்திருத்தங்களாகும். மிகச் சமீபத்தில், ஓய்வு பெறும் வயதை அதிகரித்து, ஓய்வூதியப் பலன் களை குறைத்ததற்கு எதிராக பிரான்சில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட் டத்தில் இறங்கினார்கள். அதில் வன்முறை வெடித்தது. ஓய்வூதியப் பிரச்சினையில் ஒட்டு மொத்த ஐரோப்பாவும் பதற்றத்தில் உள்ளது.
இந்தியாவிலும், என்பிஎஸ்-புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பக் கொண்டு வரவும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங் கள் நடத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில ஆண்டுகளாக ஓய்வூதியப் போராட்டத்தின் முன்னோடியான எஃப்ஏஎன்பிஎஸ்ஆர் (ரயில்வேயில் என்பிஎஸ் ஸிற்கு எதிரான முன்னணி) உள்ளிட்ட என்எம்ஓபிஎஸ் (ஓபிஎஸ் க்கான தேசிய இயக்கம்), அக்டோபர் 1 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அறிவித்து, பீகாரில் உள்ள சம்பரானில் இருந்து தனது யாத்திரையைத் தொடங்கியுள்ளது. இரயில்வே ஊழியர்களின் மாற்று இடதுசாரி கூட்டமைப்பான ஐஆர்ஈஎஃப் இந்திய இரயில்வே ஊழியர் கூட்டமைப்பு), என்எம் ஓபிஎஸ்க்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங் களின் மேடை, இந்த இயக்கத்தில் தாமதமாக நுழைந்த போதிலும், ஜேஎஃப்ஆர்ஓ பி எஸ் (ஓபிஎஸ்ஐ திரும்பக் கொண்டு வருவதற்கான கூட்டு மன்றம்)-ன் கீழ் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லியில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தியது.
நாட்டின் மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு ஒருங்கிணை வாகவும், அக்கம் பக்கமாகவும் இபிஎஸ் ஓய்வூதியர் அமைப்புகளும் விரைவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யத் தயாராகி வருகின்றன. 2023 டிசம்பரில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய இயக்கம் நாட்டில் சீராக எழுந்து வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் முதிய குடிமக்கள் கௌரவமான ஓய்வூதியத்துடன் பாதுகாப்பான எதிர்காலத்தையும் கண்ணியமான வாழ்வையும் பெற, 2024 தேர்தலில் மோடியை தோற்கடிக்கும் புள்ளியில் ஓய்வூதியம் கோரும் பெரும்பான்மையான இயக்கங்கள் ஒன்றாக சங்கமிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)