காஸாவின் ரஃபாவை விட்டு இஸ்ரேலே வெளியேறு!
உலகெங்கும் மாணவர்கள் போராட்டம்
-சங்கரந்தம்பி
கொடுங்கோலன் ஹிட்லரால் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட யூதர்கள், இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, இஸ்ரேல் என அதற்குப் பெயரிட்டு, ஹிட்லரைவிடக் கொடூரமாக பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்ததையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வருகிறது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகளே இஸ்ரேலின் இலக்காக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்கள் கொடுத்து, ஆயுத வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன. இது வரை இல்லாத மிகக் கொடூரமான இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் 128 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர் என்று காஸாவில் முதலில் தாக்குதல் நடத்தி குழந்தைகளையெல்லாம் கொன்றது. கடந்த மே 5ம் தேதி ஹமாஸ் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியதாகச் சொல்லி, காஸாவின் அருகில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் தன்னுடைய கோர தாண்டவத்தை ஆரம்பித்தது. பிற நாடுகளில் இருந்து காஸாவிற்குள் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் ரஃபா வழியாகத்தான் சென்று கொண்டிருந்ததையும் தடுக்கும் நோக்குடன் இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. காஸாவில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடம் என ரஃபாவிற்குள் வந்த நிலையில், அவர்களை அங்கிருந்தும் வெளியேறி கடற்கரைப் பகுதியான அல்-மகாஸிற்குச் சென்று விடுங்கள் என்கிறது இஸ்ரேல்.
21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மாணவர் போராட்டங்கள்
இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதைக் கண்டித்தும் உலகெங்கும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அம் மாணவர்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. அதற்கெதிராகவும் மாணவர்கள் உலகெங்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, கனடாவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான் என போராட்டம் பரவிக் கொண்டிருக்கின்றன. நியூயார்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் கோஹென், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மாணவர் போராட்டம் இது என்கிறார். அதேபோல், ஏபிசி7 நியூஸ் செய்தியாளர், 21ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப் பெரிய மாணவர் போராட்டம் இது என்கிறார்.
அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய மாணவர் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களைக் கொல்வதும் அதற்கு அமெரிக்கா ஆயுதங்கள் கொடுத்து வருவதும் அமெரிக்க மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நிர்வாகம் மாணவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தது. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. கொலம்பியாவில் படித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு, கோவை மாணவரும் இதில் உண்டு. ஆனால், அமெரிக்க அரசும் நிர்வாகமும் நினைத்ததற்கு மாறாக, அமெரிக்காவில் 130 பல்கலைக்கழகங்களில் மாணவர் போராட்டம் வெடித்தது. ஹார்வேர்டு, ஸ்டேன்போர்டு, யேல், எம்ஐடி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் இப் போராட்டம் பரவியது. அரசும் நிர்வாகமும் அடக்குமுறையை ஏவிவிட்டு, மாணவர்களைக் கைது செய்தது. அமெரிக்காவிலுள்ள 61 கல்லூரிகளிலிருந்து சுமார் 2900 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்களும் ஆசிரியர்களும் களமிறங்கினர். எதற்கும் அஞ்சாத மாணவர் போராட்டத்தின் முன்னால் மண்டியிட வேண்டிய நிலை அமெரிக்காவின் அரசிற்கும் நிர்வாகத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
கனடா, மெக்சிகோ, ஐரோப்பா நாடுகளில் மாணவர் போராட்டம்
கனடா பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வளாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கியுபெக்கில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும் காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அம் மாணவர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க அங்குள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. அது மாணவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் மன உறுதியையும் தந்துள்ளது. கால்கேரி, டொரோண்டோ ஒட்டாவா, பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எட்மாண்டனில் உள்ள அல்பெர்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களும் மக்களும் மெக்சிகோ அரசு இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
லண்டனில் உள்ள நியூகாஸ்டில், பிரிஸ்டல், வார்விக், லீட்ஸ், செப்பீல்டு மற்றும் செப்பீல்டு ஹாலம் உள்ளிட்ட லண்டன் பல்கலைக் கழக மாணவர்கள், இஸ்ரேலுக்கு நிதி உதவி செய்து வரும் நிறுவனங்கள், வங்கிகள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளது. இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் இங்கிலாந்து இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
அயர்லாந்திலுள்ள டப்ளின் டிரினிடி கல்லூரியில் மாணவர்கள் கொட்டகை அமைத்து பாலஸ்தீனக் கொடி ஏற்றி, “இஸ்ரேல் ஒரு பயங்கரவாத அரசு”, “இனப் படுகொலையை உடனே நிறுத்து,” “ஆறு முதல் கடல் வரை பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்ற பதாகைகளுடன் போராடி வருகிறார்கள்.
பிரான்ஸில் பாரிஸ் இன்ஸ்டியுட் ஆப் பொலிடிக்கல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பட்டினிப் போராட்டத்தில் அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. அதேபோல் சர்போர்ன் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. பிரஞ்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பெர்லின், ஃபிராங்க்பர்ட், லீப்சிங் உள்ளிட்ட ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 125 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உச்ரெட், டெல்ப் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
இத்தாலியில் உள்ள பொல்னொ பல்கலைக்கழகம், சபியன்ஸா மற்றும் ரோமில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஸ்பெயினில் உள்ள வெலன்சியா, போர்சிலோனா, மலாகா, மட்ரிட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் சுவிட்சர்லாந்த், ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்த் உள்ளிட்ட பல நாடுகளிலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். பக்கத்து நாடான பங்களாதேஷத்திலும் தென்கொரியாவிலும் ஜப்பானிலும் இஸ்ரேலைக் கண்டித்து மாணவர் போராட்டங்கள் நடக்கின்றன..
இந்தியாவில் உள்ள மாணவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அகில இந்திய மாணவர் கழகம், ஜேஎன்யு மாணவர் சங்கம் உட்பட பல இந்திய மாணவர் அமைப்புகள் தமது ஒரும்மைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் கூட ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இஸ்ரேல் அரசு, எவரின் உதவியும் இல்லாமல் நாங்கள் தனியாகவே போரை நடத்துவோம் என்று கொக்கரிக்கிறது.
இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று ஐநாவின் அமைதிப் படையில் பணிபுரிந்து வந்த கர்னல் வைபவ் கேல் காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார். காஸாவில் அய்நா அமைதிப்படையின் நகர்வு பற்றி இஸ்ரேல் ராணுவத்திற்கு முன்னரே தெரிவித்து இருந்தும் கூட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு இவர்கள் மீது குண்டு போட்டுள்ளது.
மிகக் கொடூரமாக இந்திய ராணுவ அதிகாரியைக் கொன்றுள்ள நிலையிலும்கூட இந்திய அரசு, இஸ்ரேலைக் கண்டிப்பதற்குத் தயாராக இல்லை. மாறாக, இஸ்ரேலிருந்து பாலஸ்தீன தொழிலாளரை வெளியேற்றியுள்ள இனவெறி அரசுக்கு உதவியாக, இந்தியத் தொழிலாளரை ஏற்றுமதி செய்து வரும் மோடி அரசு, மீண்டும் ஆட்சி அரியணையில் ஏறுவதற்காக, இந்திய மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதிலேயே மும்முரமாக இருக்கிறது. தேர்தல் ஆணையமும் கூட இதுபோன்ற இனப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தேர்தல் விதிகளைக் காட்டி ஜனநாயகத்தை மறுக்கின்றது.
இத்தகைய மோடி அரசுக்கு தக்க பாடத்தை இந்திய மக்கள் தேர்தல் களத்தில் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் உலகம் முழுவதும் போராடிவரும் மாணவர்களோடு இந்திய மக்கள், இடது, முற்போக்கு , ஜனநாயக சக்திகள் தங்கள் ஒருமைப்பாட்டுக் குரலை உரத்து எழுப்புகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)