நாடு முழுவதும் குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பாஜகவிற்குப் படையெடுக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, ஏற்கனவே பாஜகவில் இருப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதுவும் பாலியல் குற்ற வழக்குகளில் முதலிடத்தில் பாஜக உள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. மகள்களைப் பாதுகாப்போம் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றும் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கே பாதுகாப்பு இல்லை.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பிரிஜ் பூஷன் சிங் மீது தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வழக்கு சிறுவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு. அவரோ, தன்னை மோடியும் அமித்ஷாவும் பாஜக தலைவர் நட்டாவும் பதவி விலகச் சொன்னால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். கிட்டத் தட்ட ஒரு வார காலத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் விக்னேஷ் போகத், சங்கீதா போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்லயுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இகக(மாலெ) உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், மோடியும் அமித்ஷாவும் கண்டு கொள்ளவேயில்லை. குற்றவாளிகளை நடு ரோட்டில் கொல்ல வேண்டும் என்று சொல்லி சட்ட விரோதமாகச் சுட்டுக் கொல்லும் சாமியார் யோகியும்கூட சத்தமில்லாமல் இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதமே மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷன் மீது புகார் எழுந்தது. அப்போது மல்யுத்த கூட்டமைப்பு அமைதி காத்தது. அதனால் மல்யுத்த வீராங்கனைகள் போராட் டத்தில் குதித்தனர். உடனே மோடி அரசு, குத்துச் சண்டை வீரர் மேரிகோம் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் பிரிஜ் பூஷன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். பிரிஜ் பூஷன் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதன் பின்னரே டெல்லி காவல் துறை பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர் போட்டுள்ளது. ஆனால், குற்றவாளியான பிரிஜ் பூசனைக் கைது செய்யாத டெல்லி காவல்துறை மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகப் போராடிய டெல்லி பல்கலைக் கழக மாணவர்களைக் கைது செய்கிறது. இப்போது வரை பிரிஜ் பூஷன்தான் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அல்ல மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து கூட பதவி விலகச் சொல்வதற்கு மோடி அமித்ஷா-யோகி கூட்டம் தயாராக இல்லை.
பதவியில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் 363 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 83 பேர் பாஜகவினர் என்று 2021ல் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்கிற அமைப்பின் அறிக்கை கூறியது. அந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம் உன்னாவைச் சேர்ந்த குல்திப் சிங் செங்கார், வாரணாசியைச் சேர்ந்த பிரிஜேஷ் சிங், ஜான்பூரைச் சேர்ந்த தனஞ்சை சிங் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் ஆதரவாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில், கொள்ளையர்களும் கொலைகாரர்களும் பாஜகவில் இணைந்து விட்டால், புனிதர்களாக ஆகி விடுகிறார்கள். கூலிப்படைத் தலைவர் என்று சொல்லக் கூடிய சீர்காழி சத்யா பாஜகவில் இணைந்தார். சேலத்தில் குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளி பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு இளைஞர் அணியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. வட சென்னையைச் சேர்ந்த கல்வெட்டு ரவி, புளியந்தோப்பு அஞ்சலை, புதுச்சேரி தாதா எழிலரசி என பாஜகவில் சேர்ந்து புனிதர் பட்டம் பெறும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எழிலரசி. அவர் இப்போது பாஜகவில் இணைந்ததன் மூலம் சமூக சேவகர் ஆகிவிட்டார். கள்ளச்சாராயத்தை ஒழிக்கப் போராடியவர் மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார். அவரின் படுகொலைக்கு பின்னால் இருப்பவர் பாஜகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான மாணிக்கம். பல குற்றச் செயல்களில் தொடர்புடைய தஞ்சை பாம் பாலாஜி, சீர்காழி ஆனந்த் என பலரும் பாஜகவில் ஐக்கியம். பாஜகவில் சேர்ந்து விட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு. மோடி அரசு தன் கையில் உள்ள அமலாக்கத் துறை, சிபிஐ எல்லாவற்றையும் தன் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தி அவர்களை பாஜகவின் பிடிக்குள் கொண்டுவரும் யுத்தியைக் கையாண்டு வருகிறது. டெல்லியின் துணை முதல்வர் சிசோடியாவை மதுபான ஊழல் வழக்கில் கைது செய்தது மோடி அரசு. அப்போது கேஜிரிவால் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் சொன்னது ஒன்றுதான். சிசோடியா பாஜகவில் சேர்ந்துவிட்டால் அவர் மீதுள்ள வழக்கு காணாமல் போய்விடும் என்பதுதான்.
ஆருத்ரா நிதி நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.2438 கோடி மோசடி செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ரூசோவை வழக்கில் இருந்து விடு விக்க 13 கோடி ரூபாய் ஆர்.கே.சுரேஷ் பெற்ற தாகக் கூறியுள்ளார். இந்த ஆர்.கே.சுரேஷ் பாஜக வின் நிர்வாகி. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த ஆர்.கே.சுரேஷை தேடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.
ஆர்.கே.சுரேஷ் போன்று அப்பட்டமாக வெளியே தெரியும் படி செயல்படும் மோசடிப்பேர்வழிகள் மட்டுமல்ல, 2014க்கு முன்பு யார் என்றே தெரியாமல் இருந்து, இப்போது உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள அதானி வரை பாஜகவின் ஆதரவாளர்கள். இவர்கள் அறிவியல் ரீதியாக ஆட்சியாளர்களின் ஆதரவோடு மோசடி செய்பவர்கள். அண்மையில் அதானி குழுமத்தின் மோசடியை, அதானிக்கும் மோடிக்குமான உறவைக் கேள்வி கேட்டதால், ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பு. அதானியின் நவி மும்பை விமான நிலையத்தின் ரூ.12,770 கோடி கடனை, பாரத ஸ்டேட் வங்கி வராக் கடன் - என்று சொல்லி தள்ளுபடி செய்துவிட்டுள்ளது. இப்படி மக்களைக் கொள்ளையடிக்கும், நாட்டு வளங்களைச் சூறையாடும், கொலை, கொள்ளைகளை சாதாரணமாகச் செய்யும் குற்றவாளிகள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருப்பது பாஜக. இந்தக் குற்றவாளிகள் ஒன்று பாஜகவில் ஐக்கியமாகி இருப்பார்கள் அல்லது பாஜகவின் ஆசியோடு இருக்கும் அதன் ஆதரவாளர்கள்.
பாஜகவின் மகளிர் அணியின் தலைவராக உள்ள வானதி சீனிவாசனிடம் பத்திரிகையாளர் ஒருவர், பாஜகவில் குற்றவாளிகளாகச் சேர்ந்து | கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, எவ்வளவு பேர் எங்கள் கட்சியில் சேர்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள், அவர்களுடைய பின்னணியை எல்லாம் ஏன் பார்க்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டார். மல்யுத்த வீராங் கனைகள் போராட்டம் நாடெங்கிலும் அதிர்வுகளை உருவாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவில் இருந்த பெண் தலைவர்கள் எல்லாம் பாஜகவில் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று அக் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில், வானதி சீனிவாசன், 'தங்கள் குடும்பத்தில் பாதுகாப் போடு இருப்பதுபோல் பாஜகவில் இருப்பதாக பெண்கள் உணர்கிறார்கள்' என்று கொஞ்சம்கூட கூருணர்வு இல்லாமல் கூறுகிறார். இப்படிப்பட்ட குற்றவாளிகள், மோசடிப் பேர்வழிகளின் , புகழிடமாக இருக்கும் ஆர்எஸ்எஸ-பாஜக அதை மறைக்க, மக்களிடத்தில் இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு, சாதி ஆதிக்கத்தைத் தூண்டிவிட்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது. கர்நாடகாவில் மக்கள் பாஜகவினரை விரட்டிய டிப்பதுபோல் நாடெங்கிலும் மக்கள் பாஜக விற்குப் பதிலடி கொடுப்பார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)