பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்வதுதான் சிபிஅய்எம்எல் எம்எல்ஏக்களின் கலாச்சாரம்
தோழர் சுதாமா பிரசாத்
அரா (பிகார்) மக்களவைத் தொகுதி வேட்பாளர், தீப்பொறி முதன்மை ஆசிரியர் வீ. சங்கருக்கு அளித்த நேர்காணல்
அரா தொகுதி வேட்பாளர் என்ற முறையில் தங்கள் கருத்து என்ன?
அரா தொகுதி என்பது அடிப்படையில் போஜ்பூர் மாவட்டம். இங்கு கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மிக நீண்ட காலமாக போராடி வருகிறது. இது விவசாயம் மேலோங்கிய ஒரு தொகுதி. சோன் நதி இந்த மாவட்டத்தின் ஜீவ நதி. மழைக் காலத்தில் பாசன நீர் தட்டுப்பாடு இருக்காது. கோடைக் காலத்தில் நீர் குறைவாகத்தான் கிடைக்கும். ஆட்சியாளர்களுக்கு சோன் நதியை தனியாருக்குத் தாரை வார்ப்பது எனும் திட்டம் 2014, 2019களில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது இன்று வரை நடக்கவில்லை. மாவட்டத்தில் சோன் நதி பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு எதிராக நாம் போராடி வந்திருக்கிறோம்.
மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் நதிநீர்ப் பாசனம் நடைபெற்று வருகிறது. இதர பகுதிகளில் குழாய் நீர்ப் பாசனம் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதிகளில் விவசாயம் மிக மோசமடைந்து வருகிறது. எனவே, விவசாயத்தைக் காப்பது, வேலைவாய்ப்பு, உணவு ஆகியன முக்கிய பிரச்சனைகளாக முன்வந்துள்ளன. போஜ்பூர் மக்களின், விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின், இளைஞர், மாணவர்களின் கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படை விசயங்கள் விவசாய வளர்ச்சியோடு நெருக்கமான தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால், விவசாயம் மிகக் கடுமையாக நசிந்து கொண்டிருக்கிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இதற்கு எதிராகப் போராடுவதற்காகத்தான் போஜ்பூர் மக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தார்கள். விவசாயத்தைக் காப்பதற்காக, விவசாயத்தை லாபகரமாக்குவதற்காக போஜ்பூர் மக்கள் குரலை நான் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பேன். மக்களவைக்கு உள்ளும் வெளியிலும் மக்கள் போராட்டத்தை நடத்துவேன்.
இந்தத் தேர்தலில் பிஜேபி - தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைமை எப்படி இருக்குமென கருதுகிறீர்கள்?
கடந்த பத்தாண்டுகளில் பிஜேபி எம்பிக்கள் யாரும் மக்கள் பிரச்சனைகளை, போஜ்பூர் மாவட்டப் பிரச்சனைகளை மக்களவையில் எழுப்பவே இல்லை. இந்தத் தொகுதியிலிருந்து ஒரு ஒன்றிய அமைச்சர் இருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக அவர் என்றும் பேசியதே இல்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இங்கிருக்கும் பிரச்சனைகளை யாரும் தீர்க்கவே முடியாது. அப்படி ஒருவேளை அவர் ஏதாவது செய்திருந்தால் அவர் என்ன செய்தார், எந்தப் பிரச்சனையை எழுப்பினார் என்பதை மக்கள் மன்றத்தின் முன்னால் வைத்திட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் அவர் மக்களுக்காக ஆற்றிய பணிகளின் பட்டியல் என்ன என்பதை முன்வைத்திட வேண்டும். தொகுதிக்கு எவ்வளவு நிதி வந்தது? எவ்வளவு? என்ன காரணத்துக்காக செலவு செய்யப்பட்டது? என்பதை முன்வைத்திட வேண்டும். 17.5 கோடி நிதி செலவே செய்யப்படவில்லை. அப்படியானால், அவர் என்ன செய்து கொண்டிருந்தார், சோன் நதி தனியார்மயமாக்கத்துக்கு எதிராக, வேலைவாய்ப்புக்காக, விவசாயத்தைக் காப்பதற்காக என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை. மக்கள் கடும் துன்பத்திலும் துயரத்திலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடைக்காரர்கள், சிறுவியாபாரிகள் அவர்களுக்கும் கூட எதுவும் செய்திடவில்லை. கொரானா காலத்தில் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்தபோது, அவர்களுக்காக எந்த உதவியும் இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும், அமைச்சருமான அவர் எதுவும் செய்திடவில்லை.
ஆனால், நாங்கள், சிபிஐஎம்எல் கட்சியினர் மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தோம். அதைத் துடைத்திடுவதற்காக பணியாற்றினோம். பயன்களைப் பெற்றுத் தந்தோம். கொரானா நோயைக் கண்டு அனைவரும் பயந்து வீடுகளில் அடைந்து கிடந்தபோது நாங்கள் மருத்துவமனைகளுக்கு வரும் கொரானா நோயாளிகளுக்கு உதவினோம். மருத்துவமனைகளில் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகிலேயே தங்கி இருந்து மக்களுக்கான பணிகளைச் செய்தோம். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தோம். மருத்துவமனைப் பணியாளர்களுக்கு உதவி செய்தோம். வேலைதேடி டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் ஆதரவற்ற குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவினோம். மக்கள் மத்தியில் வசூல் செய்து, துன்பப்படும் குடும்பங்களுக்கு கோதுமை மாவு, அரிசி, சமையல் பொருட்கள் கொடுத்து உதவினோம். போஜ்பூர் மாவட்ட சிபிஐஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் அத்தகைய மக்கள் நல்வாழ்வுப் பணிகளை ஆற்றியிருக்கிறோம். ஆனால், அத்தகைய துன்ப காலத்தில் தொகுதியின் மக்களவை உறுப்பினாரென்றே தெரியவில்லை. போஜ்பூர் நாளன்றோ, பீகார் நாளன்றோ கூட அவரைக் காண முடியவில்லை.
1942ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போஜ்பூரில் நடந்த கலகத்தில் 7 பேர் தியாகியானார்கள். அவர்கள் நினைவாக தோழர் ராம் நரேஷ் ராம் நினைவுத் தூண் எழுப்பினார். அங்கு ஒருநாள் கூட அரா தொகுதி மக்களவை உறுப்பினர் சென்றதே இல்லை. யாரையும் சந்திப்பதே இல்லை. மக்களின் துன்ப துயரங்களில் பங்கேற்றதே இல்லை. விவசாயிகள் கடும் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைச் சந்திப்பதே இல்லை. மக்கள் பிரதிநிதி என்பவர் இது போல ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின், விவசாயிகளின் துன்ப துயரங்களில் பங்கேற்க வேண்டும். இது ஒரு மக்கள் பிரதிநிதிக்கான குறைந்த பட்ச தகுதியாகும். அதை இந்த தொகுதியின் எம்.பி ஒரு போதும் செய்ததில்லை.
கடந்த தேர்தலில் பீகாரில் பிஜேபி பெரும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் நிலைமை என்ன?
2019ல் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த தேர்தலில் பிஜேபி கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும். காலம் மாறி விட்டது. 40 தொகுதிகளில் 25-30 தொகுதிகள் இந்தியா கூட்டணி வெல்லும். பிஜேபி கூட்டணிக்கு 12 தொகுதி கூட கிடைப்பது பெருத்த சந்தேகம்தான். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்; அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறுவோம், மூன்று கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம், குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டம் கொண்டுவருவோம் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்படும்.
பிஜேபியின் கார்ப்பரேட் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக நீங்கள் வீட்டுக்கு 20 ரூபாய் நிதி சேகரிக்கும் இயக்கத்தை துவங்கி இருக்கிறீர்கள். அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
வீட்டுக்கு 20 ரூபாய் இயக்கம் மக்கள் மத்தியில் பெருத்த உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இது ஒரு புதிய விசயம் அல்ல. சிபிஐஎம்எல் கட்சி எப்போதுமே மக்களை மட்டுமே சார்ந்து செயல்படும் மக்கள் கட்சியாகும். அது எப்போதுமே விவசாயத் தொழிலாளர், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள் போன்ற சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்துதான் செயல்பட்டு வருகிறது. அதுபோன்ற உழைக்கும் மக்களைச் சார்ந்து தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் சிபிஐஎம்எல் கட்சித் தோழர்களை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதே போல அத்தகைய பணியைத் தொடர்வதற்காக மக்களவைக்கும் கண்டிப்பாகத் தேர்ந்தெடுப்பார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றிருக்கிறது பிஜேபி. அதற்கு எதிராக நாங்கள் துவங்கி இருக்கும் வீட்டுக்கு 20 ரூபாய் இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது.
இந்தத் தேர்தலில் மக்களின் முக்கிய பிரச்சனைகள் என்ன?
மிகப்பெரும் பிரச்சனை என்பது நாட்டின் ஜனநாயகம் குறித்தது ஆகும். அடுத்தது அரசமைப்புச் சட்டம். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் முக்கிய பங்காற்றி இயற்றிய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்து விடவேண்டுமென பிஜேபி மும்முரமாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. இதுவே முக்கிய பிரச்சனை. பாபாசாகேப் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தினால்தான் நாம் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறோம். வாக்கு பெறுவதற்காக அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் செல்கின்றன. ஆனால், மக்களுக்குக் கிடைத்துவரும் குறைவான வேலைவாய்ப்பையும் உணவு, உடை இருப்பிடத்தையும் பறிப்பதற்கான வேலையைத்தான், விலைவாசியை அதிகரிக்கும் வேலையைத்தான், விவசாயத்தைச் சீரழிக்கும் வேலையைத்தான், கார்ப்பரேட்டுகளுக்கு, அதானி-அம்பானிகளுக்கு சேவை செய்யும் வேலையைத்தான் ஒரு நாளில் 24 மணி நேரமும், வருடத்தில் 12 மாதங்களும் பிஜேபி செய்து வருகிறது. இதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அந்தப் போராட்டத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தேர்தல் பரப்புரையின் போது நீங்கள் கண்ட குறிப்பிடத்தக்க விசயம் ஏதாவது..?
போஜ்பூரின் ஒரு கிராமத்துக்கு பிஜேபிகாரர்கள் சென்று எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால், மக்களோ நாங்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பவர்கள் அல்ல, தேர்தலுக்காக பணமும் கொடுத்து, வாக்கும் அளிப்பவர்கள் என பதில் அளித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். இது ஒரு சுவையான அனுபவம். இது ஒரு கிராமத்தில் மட்டுமல்ல, இதுபோல பல கிராமங்களிலும் நடந்து வருகிறது. இது கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை, இது ஒரு மக்கள் கட்சி என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
நாங்கள் 20 ரூபாய் கூப்பன் அச்சடித்திருக்கிறோம். வீடுவீடாகச் சென்று மக்கள் மத்தியில் வசூல் செய்கிறோம். 20 ரூபாயில் என்ன நடக்கும் என சிலர் யோசிக்கலாம். ஆனால், யார் பசியால் வாடிக்கொண்டிருக்கிறார்களோ, யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த நிதியை வழங்குகிறார்கள். ஏனென்றால் இது மக்கள் கட்சி. கார்ப்பரேட்டுகளின் கட்சி அல்ல.
கார்ப்பரேட் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுகிறார்கள். அந்த கார்ப்பரேட்டுகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அரசு கஜானாக்களில் சேரும் மக்கள் வரிப்பணம்தான், கடன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கார்ப்பரேட்டுகளிடம் செல்கிறது. இந்த ஆட்சியாளர்கள் வரிப்பணத்தை எடுத்துக் கார்ப்பரேட்டுகளுக்கு கடனாக கொடுப்பார்கள். பின்னர் அந்த கடனை ரத்து செய்வார்கள். இப்படிப்பட்ட எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மோடி அரசாங்கம் என்னென்ன மக்கள் நலத் திட்டங்களை எப்படி எல்லாம் நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள், எதையெல்லாம் ரத்து செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை அனைத்தும் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகள் என்பதை மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள். வேலைவாய்ப்புப் பிரச்சனை முதல் விவசாயப் பிரச்சனைகள் வரை மோடி அரசு என்னவெல்லாம் சீரழித்து வருகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக, பிஜேபிக்கு எதிராக, தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.
வெற்றிப் பரப்புரையைத் தாங்கள் என்ன வடிவங்களில் செய்து வருகிறீர்கள்?
நான் சுமார் 46 ஆண்டுகளாக சிபிஐஎம் எல் கட்சியில், மக்கள் மத்தியில் பணியாற்றி வருகிறேன். கலாச்சார அரங்கில், இளைஞர் அரங்கில், இந்திய மக்கள் முன்னணியில், விவசாயிகள் அரங்கில், கட்சியில் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றி இருக்கிறேன். இப்போது சட்டமன்ற அரங்கிலும் பணியாற்றி வருகிறேன். சட்டமன்ற அரங்கம் தவிர வேறு பல்வேறு அரங்குகளிலும் இன்றும் பணியாற்றி வருகிறேன். கிராமங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கூட்டங்கள் நடத்துகிறோம். அவர்கள் பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்கிறோம். அவர்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புகிறோம். அந்தப் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களிலும் பங்கேற்கிறோம். நாங்கள் தேர்தல் சமயத்தில் மட்டுமே மக்களிடம் செல்பவர்கள் அல்ல, மக்கள் பிரச்சனைகளை அன்றாடம், ஆண்டு முழுவதும் எழுப்பி வருகிறோம். போராடி வருகிறோம். கட்சிப் பதாகையின் கீழ் செயல்பட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மோடி அரசு எந்த நிதி உதவியும் செய்ய மறுத்துவிட்டது. ஆனால், தாங்கள்உள்ளிட்டபீகார்மாநிலசிபிஐஎம்எல்கட்சிஎம் எல் ஏ க்கள் தமிழ்நாட்டுமக்களுக்குவெள்ளநிவாரணஉதவி செய்தீர்கள்…?
வெள்ளத்தின் காரணமாக மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவிப்பார்கள், அனுபவித்தார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பீகார் மக்கள் வெள்ளத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்களோ அதைப் போலத்தான் தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் சிபிஐஎம் எல் கட்சியின், கட்சி எம் எல் ஏ க்களின் கலாச்சாரம். பாதிக்கப்படும் அனைவரையும் எமது மக்களாகவே காண்கிறோம். அதனால்தான், பீகார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென வழங்கப்படும் சம்பளத்திலிருந்து எங்கள் சொந்தப் பணத்தை நாங்கள் தமிழ்நாட்டு மக்கள் வெள்ள நிவாரணத்திற்கென கொடுத்து உதவினோம். அதே கடமையை ஆற்றி இருக்க வேண்டிய மோடி அதைச் செய்யவில்லை என்பது மோடியின், பிஜேபி அரசின் குரூரத் தன்மையைத்தான் சுட்டிக்காட்டுகிறது. மோடி ஒரு ஜனநாயக அரசின், கூட்டாட்சி அரசின் பிரதம அமைச்சராக நடந்து கொள்வதில்லை. அவர் ஒரு சங்கிப் படையின், மதவெறி அரசின் மன்னராக, சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அரசமைந்திட வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பணியாற்றிட வேண்டும் என்பதே தமிழக மக்களுக்கு நான் சொல்லும் செய்தி.
கடந்த பத்தாண்டு கால பிஜேபி கூட்டணியின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றிட வேண்டும், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய, இந்திய மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் போடுகிறேன் எனச் சொல்லி ஏமாற்றிய, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் எனச் சொல்லி ஏமாற்றிய மோடி ஆட்சியை விரட்டியடிப்போம். இந்த நாட்டை மீண்டும் அழகானதாக, பலம் பெற்றதாக, சுயசார்பு கொண்டதாக மாற்றிடுவோம். அதற்காக கரம் கோர்த்திடுவோம் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பிகார் மக்கள் சார்பாக நான் சொல்ல விரும்பும் செய்தி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)