டிசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலின் இருபத்திரண்டாவது நினைவு நாளில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிர்ச்சி தரும் புகை பீதிக்கு சாட்சியமாகியது. சாகர் சர்மா என அடையாளம் காணப்பட்ட லக்னோ இளைஞர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென குதித்து, மேஜைகள் மீது தாவிச்சென்று மஞ்சள் புகையை வெளியேற்றும் புட்டியைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் முன்பு, ஜீரோ நேரம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இதனைத் செய்தார். சாகருடன் மைசூரின் மனோரஞ்சன் என்ற கூட்டாளியும் இருந்தார். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடியே அவரும் மற்றொரு புகைப் புட்டியைத் திறந்து மஞ்சள் புகையைப் பரவச் செய்தார்.
சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஹரியானா, ஹிசாரின் நீலம் தேவி, மஹாராஷ்டிரா, லத்தூரின் அமோல் ஷிண்டே ஆகிய வேறு இரு இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வண்ணப் புகைப் புட்டிகளை வெடிக்கச் செய்து, வேலையின்மை, பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராகவும் தாய்நாட்டை புகழ்ந்தும் சர்வாதிகாரத்தை கண்டித்தும் முழக்க மிட்டனர். இந்தப் புகைப் புட்டி நிகழ்வில் அவரது குர்கான் வீட்டில் இந்தக் குழுவினருக்கு அடைக்கலம் கொடுத்த லலித் ஜா, அதே குர்கானைச் சேர்ந்த விக்கி சர்மா என்ற மேலும் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். மனோரஞ்சனும் சாகர் சர்மாவும் 2014 லிலிருந்து மைசூரின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் கீழ் பார்வையாளர் நுழைவு அட்டையை பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரியாக அறியப்படும் மனோ ரஞ்சன் அவரது குடும்ப விவசாயத்தில் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். நீலம், ஹரியானா மாநில சிவில் சேவைகளுக்கான தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தவர் எனத் தெரிகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது, பகத்சிங்,பட்டுகேஷ்வர் தத் ஆகியோரால் 1929 ஏப்ரல் 8 அன்று நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மத்திய சட்டமன்ற குண்டு வீசுதலை நினைவுபடுத்தும் வகையில் இந்த புகைப் புட்டி நிகழ்வு வடிவமைக் கப்பட்டது போல் தெரிகிறது. பிரிட்டிஷாரின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட அநீதிகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்பிய பகத்சிங், பட்டுகேஷ்வர் தத் போல நீலம், மனோரஞ்சன், அவர்களது கூட்டாளிகள் இன்றைய இந்தியாவில் தீவிரமாகி வரும் வேலையின்மைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க முயற்சித்துள்ளது போல இந்நிகழ்வு வெளிப்படுகிறது. ஆனால், எதிர்ப்பாளர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த நாடாளு மன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
என்னவாகிலும் இந்த புகை பீதி நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் உள்ள பெரும் இடைவெளியை அம்பலப்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அதிகளவு பேசப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டால் புகைப் புட்டிகள் இந்தக் கட்டிடத்திற்குள் எவ்வாறு கொண்டு செல்லப் பட்டது என்பது, தவிர்க்கவியலாமல் மிகுந்த முக்கியத்துவம் மிக்க கேள்விகளை எழுப்புகிறது. பாதுகாப்பை மீறி உள்ளே சென்ற சாகரும் மனோ ரஞ்சனும் எவ்வித தீங்கையும் மேற்கொள்ளும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வண்ணப் புகைகளை மட்டுமே கொண்டு சென்றுள்ளனர் என்பதும் பெரும் நிம்மதி தருகிற செய்தியாகும். மோடியின் செல்ல ஊடகங்களுக்கு இந்தப் புகைப் புட்டி நிகழ்வு பரபரப்பு செய்திகளை வெளியிடும் போட்டியில் ஈடுபடுவதற்கான மற்றொரு நிகழ்வாக ஆனது. செய்தியாளர்கள் அந்த புகைப் புட்டியை பரப்புரை போரின் வெற்றிச் சின்னமாக கருதி அதனை கைப்பற்ற உண்மையில் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டனர்.
ஏதாவதொரு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னரின் பரிந்துரையைப் பயன்படுத்தி அந்த பார்வை யாளர் நுழைவு அட்டை பெறப்பட்டிருந்தாலோ அல்லது அந்த அறுவர் குழுவில் ஏதோ ஒரு முஸ்லிம் பெயர் இருந்திருந்தாலோ ஊடகத்தின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்வதொன்றும் நமக்கு கடினமானதல்ல. நிச்சயமாக,இதுவொரு பெரும் பயங்கரவாத சதி எனவும் ஹமாஸால் நிகழ்த்தப்பட்ட 'ஜிஹாத்' என்பதாகக் கூட இருக்கலாம் எனவும் கண்டுபிடிப்பதில் ஊடகங் கள் கொஞ்சமும் நேரத்தை வீணடித்திருக்காது. இப்போதும் கூட இந்தப் புகைப் புட்டி நிகழ்வை பயன்படுத்தி விவசாயிகள் இயக்கத்தின் மீது அவப் பெயர் உண்டாக்க ஊடகங்களும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் ஒருங்கிணைந்த பரப்புரை இயக்கம் மேற்கொள்வதை தற்போது நாம் காண்கிறோம்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வு மற்றும் அது எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து மோடி அரசாங்கம் மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க நிச்சயமாகக் கடமைப்பட்டுள்ளது. ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய நாடாளு மன்ற கணக்கைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறார். நெறி முறைகள் கமிட்டியின் நிகழ்வுகளைப் பொது வெளியில் விமர்சித்ததற்காக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கடிந்துரைக்கப்பட்டார். தற்போது மக்களவைக்குள்ளேயே புகை பீதிக்கு காரணமான பார்வையாளர்களின் நுழைவுக்கு பாஜக நாடாளு மன்ற உறுப்பினரே பரிந்துரை செய்திருக்கும் போது அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
ரைக்ஸ்டேக் தீ விபத்து எவ்வாறு ஹிட்லரின் ஆட்சியை வலுப்படுத்தவும் நாஜி ஜெர்மனியின் பேரச்சத்தை கட்டவிழ்த்து விடவும் அவரால் பயன் படுத்தப்பட்டது என வரலாறு நமக்குக் கூறுகிறது. அந்த ரைக்ஸ்டேக் தீ விபத்து கம்யூனிஸ்ட் போராட்டக்காரர்கள் மீது பழி சுமத்த அரசாங்கத்தால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னாளில் அம்பலப்படுத்தப்பட்ட ஏமாற்று வேலையாகும். அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகளும் தொழிற் சங்கவாதிகளும் பெருமளவுக்கு கைது செய்யப் பட்டனர். இந்த புகைப் புட்டி நிகழ்வும் இதே போன்று இந்தியாவில் மக்கள் போராட்ட இயக்கங்களை மேலும் நசுக்க பயன்படுத்தப்படாத வண்ணம் ஜனநாயக இந்தியா கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)