நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பிரதிமா எங்கீபி (கர்பி ஆங்லாங் இககமாலெ தலைவர், மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக துணைத் தலைவர்), பிபேக் தாஸ் (இகக மாலெ அஸ்ஸாம் மாநிலச் செயலாளர்), சுசேதா தே (இகக மாலெ மத்தியக் குழு உறுப்பினர், டெல்லி), கிளிஃப்டன் டி ரோஜாரியோ (இகக மாலெ கர்நாடகா மாநிலச் செயலாளர்), அவனி சோக்சி (இகக மாலெ தலைவர், கர்நாடகா), மதுலிகா டி (அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்) டு சரஸ்வதி (தலித் மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர், கர்நாடகா) மற்றும் கிருஷ்ணவேணி (அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், தமிழ்நாடு) ஆகிய 8 பேர் கொண்ட குழு கடந்த ஆகஸ்டு 10 முதல் 14 வரை பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசினோம். மணிப்பூர் முழுவதும் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டோம். மணிப்பூரிலும் மத்தியிலும் உள்ள இரட்டை எஞ்சின் பாஜக அரசாங்கங்கள் உருவாக்கியுள்ள அரசியல் குழப்ப நிலை கண்டு இந்தக்குழுவினர் அதிர்ச்சியடைந்தோம். இம்பால் பள்ளத்தாக்கு, காங்போக்பி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களையும் நிவாரண முகாம்களையும் குழுவினர் பார்வையிட்டோம். அந்தக் குழுவினர் மணிப்பூர் கவர்னர் திருமதி அனுசுயா உய்கே அவர்களை சந்தித்து மணிப்பூரில் நிலவும் ஆபத்தான நிலைமைகளை எடுத்துரைத்தோம்.
அக்குழுவினர் கண்டறிந்த உண்மைகள்...
மணிப்பூரின் பள்ளத்தாக்கிலும் மலைப்பகுதி களிலும் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையேயான முன்னெப் போதுமில்லாத இந்த இனப் பிரிவினையானது இந்தியாவின் 75வது சுதந்திர நாளில் நாட்டிற்கு பாஜக வழங்கியுள்ள பரிசாகும். பொது சமூகங்கள் இடையேயான சமூக இழைகளை ஊடறுத்து, ஒரு மாநிலத்திற்குள் இருந்த அனைத்து சமூக மக்களும் இரு இனப் பிரிவினைக்குள் அடங்கிவிட்ட நிலையினை வேடிக்கைப் பார்க்கும் ஒரு அரசாங்கத்தை இந்திய வரலாற்றில் இதுவரை பார்த்ததில்லை. இதற்கு முன்பும் கூட இனக்கலவரங்கள் நடை பெற்றுள்ளது. அப்போது எல்லாம் கலவரம் அடங்கியவுடன் அக்கம் பக்கமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழவே முடியாதென்று சூழலை உருவாக்கியது இந்த இரட்டை என்ஜின் அரசாங்கங்கள்தான்.
மலைகளில் வாழும் குகி இன பழங்குடிகள் அனைவருமே கிறிஸ்துவர்களாக இருக்கி றார்கள். பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் மெய்தேய் இன மக்கள் பெரும்பகுதி இந்துக்களாகவும், சிறு பகுதியினர் கிறிஸ்துவர்களாகவும்,இஸ்லாமிய யர்களாகவும் இருக்கிறார்கள். மெய்தேய் இன மக்களின் பழங்குடிகளாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பும், பிரேன்சிங் அரசாங்கத்தின் நிலைபாடும் இரு இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மே 3ஆம் தேதி கலவரம் தொடங்கியது. அதற்குப் பிறகு இரு இன மக்களிடையே பெரும் பிரிவினை ஏற்பட்டுள்ளது. எந்தளவிற்கு என்றால் குகி இன ஆண் மெய்தேய் இன பெண் ஆகிய இருவரும் கணவன்மனைவியாக இருந்தால் அவர்கள் ஒன்றாக வாழ அனுமதிக்கப் படவில்லை. அவரவர் இனத்தோடுத் தான் வாழ நிர்ப்பந்திக்க படுகிறார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. கிறிஸ்துவர்களாக இருக்கும் மெய்தேய் இன மக்கள் 'தாய் மதத்திற்கு திரும்புதல்' என்ற சடங்குகளை செய்யவும், இல்லையென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று சங்கிகளால் அச்சுறுத்தப் படுகிறார்கள். மூன்று மாதங்களாக தொடரும் இந்த வன்முறையை கட்டுப்படுத்தாதன் மூலம் தான் ஒரு திறமையற்ற முதலமைச்சர் என்பதை பிரேன்சிங் நிரூபித்திருக்கிறார் என்றால் பிரதமர் மோடி அவர்களோ பற்றி யெரியும் மணிப்பூரை தவிர்த்து விட்டு பிரான்ஸ்க்கும், அமெரிக்கா விற்கும் பறந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னைக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பரிதாபகரமான பதில் என்பது ஒரு விரிவான அரசியல் தீர்வினை கொடுப்பதில் அவர்கள் திவாலாகி இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நிவாரண முகாம்களில் உள்ள நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. பள்ளத்தாக்கு முழுவதும் மலைகளிலும் உள்ளூருக் குள்ளேயே இடம்பெயர வேண்டிய நெருக் கடிக்கு ஆளான ஆயிரக்கணக்கான மக்கள் விரக்தியான சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். அடிப்படை தேவைகளுக்கான சேவைகள் போதுமான அளவிற்கு இல்லை.போதிய ஏற்பாடுகள் எதையும் செய்துதராமல் பாதிக்கப்பட்ட மக்களை இந்த அரசாங்கம் கை கழுவி விட்டுவிட்டது
மணிப்பூர் பள்ளத்தாக்கில் இடம்பெயர்ந்த மெய்தி இன மக்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்த்தால் அதிர்ச்சியளிக்கிறது. இம்பாலின் மையப் பகுதியில் உள்ள ஷியாமசாகி உயர்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில், அரிசி மற்றும் பருப்பு வழங்குவதோடு கூடுதலாக மாநில அரசால் ஒரு நபருக்கு ரூ.80/- மட்டுமே வழங்கப்படுகிறது. இது நிச்சயம் போது மானதல்ல. தற்போது ஒரு சந்தையில் அமைக்கப்பட்டுள்ள மொய்ராங் நிவாரண முகாமில் முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்பதையும் குழுவினர் கவனித்தனர். இந்த முகாமில் உள்ள மக்க ளுக்கு இன்று வரை ஒரு நபருக்கு ரூ.500/- மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. அகம்பாட்டில் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நிவாரண முகாமும் கூட போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. சுராசந்த்பூரில் உள்ள இளைஞர் விடுதியில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் நிவாரண முகாம்களில் உள்ள அறைகளில் நெரிசல் அதிகமாக இருப்பதால், தொற்று நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. இந்த முகாமில் அம்மை, சின்னம்மை, வைரஸ் காய்ச்சல் ஆகியவை அன்றாடம் நிகழும் யதார்த்தமாக மாறியுள்ளது. சுகாதாரமும் மோசமாக உள்ளது. இந்தக் குழு பார்வை யிட்ட முகாம்கள், ஒவ்வொன்றிலும் 500 பேர் வரை உள்ளூருக்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. பெரும்பாலான நிவாரண முகாம்கள் தங்கியிருப்பவர்களுக்கு சத்தான உணவு வழங்க முடியவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசியும் பருப்பும் மட்டுமே வழங்கப்படுகிறது. காங்போக்பியில் உள்ள நிவாரண முகாமிலும் மக்களுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு வழங்காமலும், சுகாதாரம் இல்லாமலும் இதேபோன்ற சூழ்நிலையே நிலவுகிறது. இந்த மாவட்டத்தில் ஒரேயொரு தரமுயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே உள்ளது. அது மாவட்ட மருத்துவமனையாக்கப்பட்டும், அங்கு போது மான மருத்துவர்களோ பணியாளர்களோ அல்லது மருந்துகளோ இல்லை.
பள்ளத்தாக்கிற்கும் மலைகளுக்கும் இடையே உள்ள எல்லையாலும் அறிவிக்கப் படாத முற்றுகையாலும் அடிப்படை தேவைகளுக் கான நிவாரண உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால், மலை மாவட்டங்களில் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள நிவாரண முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான குக்கி இன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பள்ளத்தாக்கிற்கு வெளியே மெய்திகளின் செயலியக்கத்தையும் பாதிக்கிறது.
இந்த வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் உடைமை இழப்புகளுக்கும் அரசாங்கமே முழுப் பொறுப் பாளியாகும். இந்த கொடூரமான, மனிதாபி மானமற்ற குற்றங்களை விசாரிப்பதற்கு தேவை யான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்படு வதைக்கூட உறுதி செய்ய உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது என்பது வெட்கக் கேடானது.
இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு சாத்திய மான எந்தவொரு அரசியல் தீர்வையும் நோக்கிய பயணத்தின் முதல் படியாக திரு.பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மோதல் போக்கைக் கைவிட்டு, தற்போதைய முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வை காணும் நோக்கில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கான அறிகுறியாக, நிவாரண முகாம்களில் துன்பப்படும் மக்கள் உரிய முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, அனைத்து எதிர்ப்பு மனோபாவத் தையும் விட்டொழிக்க வேண்டுமென பாதிக்கப் பட்ட சமூகங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் குழு மணிப்பூர் கவர்னர் திருமதி அனுசுயா உய்கே அவர்களை சந்தித்து நிவாரண முகாம்களில் நிலவும் அனைத்து பற்றாக்குறை களையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தோம். அதுமட்டுமன்றி எந்த விதமான அரசியல் தீர்வும் செயல்படுத்தப்பட வேண்டுமானால் முதல்வர் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய தேவை பற்றி எடுத்துரைத்தோம்.
இந்தியாவின் அழகான ஒரு மாநிலம், ஆளும் வர்க்கத்தின் பேராசைகளாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும் பிளவுபட்டு கிடப்பதை பார்த்து கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)